இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதர் தமது ஜெபத்தின் வல்லமையை அதிகரிக்குமாறு, அவர் தம்மைத்தாமே கடவுளுக்குப் பலியாக்குகிறார்

மேலும், கிறீஸ்துநாதர் பீடத்திலிருந்து, கூடியிருக்கும் அனைவருக்காகவும் மன்றாடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை, மாறாக, தமது ஜெபத்தின் வல்லமையை அதிகரிக்குமாறு, அவர்களுக்காக அவர் தம்மைத்தாமே கடவுளுக்குப் பலியாக்குகிறார். இந்தப் பலியின் வல்லமையையும், நற்பயனையும் சரியாக மதிப்பிட யாரால் முடியும்? 

அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளின் வெளிப்பாடுகளில், கூறப்பட்டுள்ளதாவது: திவ்விய அப்ப எழுந்தேற்றத்தின் போது, கிறீஸ்துநாதரைக் கண்டாள். அவர் தம் சொந்தக் கரத்தால் தமது திரு இருதயத்தை ஒரு பொற்கிண்ணத்தின் வடிவில், உன்னதத்தை நோக்கி உயர்த்தி, அதைத் தம் பரலோகப் பிதாவுக்குக் கையளித்தார், தமது திருச்சபைக்காக வாக்குக்கெட்டாத முறையில் அவர் தம்மையே ஒப்புக்கொடுத்தார். இது மனித புத்திக்கு எட்டாததாக இருக்கிறது.

திவ்விய பலிபூசை எத்தகைய பக்திக்குரிய பரம இரகசியமாக, எவ்வளவு உயர்ந்ததும், தெய்வீகமானதுமான பலியாக இருக்கிறது என்பதை நன்கு சிந்தித்து, இருதயத்தில் பதித்துக் கொள். சகல விசுவாசிகளுடையவும் நன்மைக்காக ஒவ்வொரு பூசையிலும் நம் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகர் புத்திக்கெட்டாத விதத்தில் தம்மையே பலியாக்குவதை நன்கு சிந்தித்து, அதை ஆழ்ந்த விதமாக வியந்து பாராட்டுவாயாக. 

எந்த அர்ச்சியசிஷ்டவரும், தேவதூதரும், ஏன் கடவுளின் திருமாதாவும் கூட, இந்தப் பரம இரகசியத்தை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாது. (ஏற்கனவே சொல்லப் பட்டுள்ளது போல), சிருஷ்டிக்கப்பட்ட எந்த அறிவும் தம்மைக் கொண்டு தாமே நிறைவேற்றுகிற இந்த அன்றாடப் பலியை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று நமதாண்டவர் தாமே அர்ச். மெட்டில்டாவிடம் கூறினார். 

அவருடைய வார்த்தைகளிலிருந்து, அவர் எவ்வளவு ஆர்வத்தோடும் வல்லமையோடும் தம் மக்களுக்காகவும், குறிப்பாக பூசையில் பங்குபெறுவோருக்காகவும் மன்றாடுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். அவர் மன்றாடுவது மட்டுமல்ல, மாறாக, பரலோகத்திலிருக்கிற அனைத்திலும் மேலான வல்லமைகளும் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வாக்குக் கெட்டாத பக்திக்குரிய ஒரு முறையில் அவர் தம்மைத் தாமே பலியாக்கவும் செய்கிறார். இந்தப் பலியில் நமக்குத் தயவுகூர்ந்து தந்தருளப்படுகிற வரப்பிரசாதமும், இரட்சணியமும் எவ்வளவு மேன்மை மிக்கவையாக இருக்கின்றன!

இது தவிர, திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது தெய்வீக மகத்துவப் பேரொளியில் தம்மை ஒப்புக்கொடுக்காமல், ஈடு இணையற்ற ஒரு தாழ்மையான நிலையில் தம்மை ஒப்புக்கொடுக்கிறார் என்பதையும் நாம் நம் நினைவில் கொள்ள வேண்டும். 

ஏனெனில், பீடத்தின் மீது அவர் முழுமையான, பிட்கப்படாத அப்பத்தில் மட்டுமல்லாமல், அதன் மிகச் சிறிய துணுக்கிலும் கூட இருக்கிறார். "நான் மனிதனல்ல, புழுவாயிருக்கிறேன், நான் மனிதர்களாலே நிந்திக்கப்பட்டு, மக்களுக்கு அசங்கியப் பட்டவனாயிருக்கிறேன்'' (சங். 21:6) என்னும் தாவீதின் வார்த்தைகளை அவர் தமக்குத் தாமே மிக நன்றாகப் பொருத்திக் கூற முடியும்.

இந்த இழிவானதும், அளவுக்கு மீறி தாழ்மையானதுமான இந்த நிலையில், அவர் பீடத்திலிருந்து எவ்வளவு வல்லமையுள்ள குரலில் பேசுகிறார் என்றால், அவரது குரல் மேகங்களை ஊடுருவி, வானங்களைக் கிழித்து, தேவ இரக்கத்தை விழித்தெழச் செய்கிறது. 

நாற்பது நாட்களில் நினிவே நகரம் அழிக்கப்படும் என்பதைக் கேள்விப்பட்டவுடன் அதன் அரசன் தன் சிம்மாசனத்தை விட்டு இறங்கி, தன் அரச ஆடைகளை அகற்றிவிட்டு, தவத்தின் ஆடையை அணிந்து கொண்டதுமன்றி, தன் குடிகள் தங்கள் பலங்கொண்ட மட்டும் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டுக் கதறியழும்படி தன் குடி மக்களுக்கும் கட்டளையிட்டான் என்று யோனாஸ் ஆகமத்தில் நாம் வாசிக்கிறோம். 

அரசன் இவ்வாறு தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டதும், அவன் செய்த தபசும் கடவுளின் கோபத்தை அமர்த்தி, அவர் தாம் நிறைவேற்ற நினைத்திருந்த தண்டனையிலிருந்தும் நினிவே நகரத்தைக் காப்பாற்றியது. தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டதன் மூலம் இந்த அஞ்ஞான அரசன் தன் நகரத்திற்குத் தேவ இரக்கத்தைப் பெற்றுத் தந்தான் என்றால், பூசையில் அவனை விடப் பாரதூரமான அளவுக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்ளும் சேசுநாதர் கடவுளிடமிருந்து நமக்கு எதைத்தான் பெற்றுத் தர மாட்டார்? 

ஏனெனில் அவர் தம் பரலோக சிம்மாசனத்தை விட்டு இறங்குகிறார், தமது அரச மகிமையை ஒதுக்கி வைக்கிறார்; தேவ அப்பத்தின் அற்பமான தோற்றத்தின் கீழ் தம்மை மறைத்துக் கொண்டு, பின்வரும் வார்த்தைகளில் தம் பிதாவாகிய சர்வ வல்லப தேவனை நோக்கித் தம் முழு பலத்தோடும் கூக்குரலிட்டு அவரை அழைத்துத் தம் மக்களின் மீது இரக்கம் கொள்ளும்படி அவரை மன்றாடுகிறார்:

"ஓ பரலோகப் பிதாவே, மனிதனுக்கு அல்ல, ஒரு புழுவுக்குச் சமமாகி, எத்தகைய ஆழ்ந்த தாழ்ச்சியோடும், ஆழமான தாழ்மையோடும் என்னை நான் உமக்கு முன்பாகக் கையளிக்கிறேன் என்று பாரும். இந்தப் பரிதாபத்திற்குரிய பாவிகளின் சார்பாக நான் உம்மிடம் விண்ணப்பிக்கிறேன், அவர்களை மன்னித்து, உமது தண்டனையிலிருந்து அவர்களை விடுவிக்கும்படி உம்மை மன்றாடுகிறேன். அவர்கள் உமக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், ஆனால் நானோ உமக்கு முன்பாக என்னைத் தாழ்த்துகிறேன். அவர்கள் தங்கள் அக்கிரமங்களால் உம் கடுஞ்சினத்தைத் தூண்டினார்கள்; நானோ என் தாழ்ச்சியைக் கொண்டு உம்மை சாந்தப்படுத்த விரும்புகிறேன். அவர்கள் உமது நீதியுள்ள பழிவாங்குதலுக்குத் தங்களைத் தகுதியானவர்களாக ஆக்கிக் கொண்டார்கள்; என் ஏக்கமுள்ள விண்ணப்பங்கள் அந்தப் பழிவாங்குதலை அவர்களிடமிருந்து அகற்றி விடுவனவாக. 

ஓ என் பிதாவே, என் நிமித்தமாக அவர்களை உமது தண்டனையிலிருந்து விடுவியும், அவர்களுடைய குற்றங்களுக்குத் தக்கபடி அவர்களைத் தண்டியாதேயும். சாத்தானிடம் அவர்களைக் கையளித்து விடாதேயும்; அவர்கள் நித்திய அழிவிற்குள் செல்லாதிருப்பார்களாக. அவர்கள் இழக்கப்பட நான் விட்டு விட முடியாது; அவர்கள் என்னுடையவர்கள், என் சொந்த இரத்தமாகிய மாபெரும் கிரயத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள்; இங்கே கூடியிருப்பவர்களுக்காக நான் விசேஷமாக உம்மை மன்றாடுகிறேன், என் திரு இரத்தம் மற்றும் கொடூரமரணத்தின் பேறு பலன்களின் வழியாக, அவர்கள் நித்திய சாவினின்று பாதுகாக்கப் படும்படியாக, நான் என் திரு இரத்தத்தைச் சிந்தி, என் உயிரைக் கையளிக்கிறேன்."

ஓ என் சேசுவே, எங்கள் மீது தேவரீர் கொண்டுள்ள சிநேகம் எவ்வளவு தூரத்திற்கு உம்மை இழுத்துச் செல்கிறது. அது எந்த அளவுக்கு எங்கள் மீது நீர் இவ்வளவு ஆழமாக ஏக்கமுள்ள அக்கறை கொள்ளவும், எங்களுக்காக இவ்வளவு அதிகமாய்ச் செய்யவும், எங்கள் நிமித்தமாக இவ்வளவு நேசப் பற்றுதலோடு பரிந்து பேசவும் உம்மைத் தூண்டுகிறது! 

பாவியானவன் கிறீஸ்துநாதர்தாமே தன்னுடைய இரட்சணியத்திற்காக மன்றாடுகிறார் என்பதை மட்டும் அறிவான் என்றால் -- அதுவும் வெறும் வார்த்தைகளைக் கொண்டு மட்டுமல்லாமல், தமது மன்றாட்டிற்கு வலுச் சேர்க்கும்படியாக, அவர் பீடத்தின் மீது தம்மையே ஒப்புக்கொடுத்து, பரம இரகசிய முறையில் தம் திருப்பாடுகளைப் புதுப்பிக்கிறார் என்றால் -- அவன் மகிழ்ச்சியோடு பூசை காணச் செல்ல மாட்டானா? 

இப்பேர்ப்பட்ட ஒரு பரிந்து பேசுகிறவரில் யார்தான் நம்பிக்கை கொள்ளத் தவற முடியும்? இப்படிப்பட்ட ஒருவரை சொந்தமாகக் கொண்டிருக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்? இந்த ஆசை எளிதாக நிறைவேறக் கூடியதுதான். பக்தியோடு பூசை காண்பதே போதும், இவரை நம் சொந்தமாக்கிக் கொள்வதற்கு! 

கிறீஸ்துநாதர், சிலுவையின் மீது தொங்கிக் கொண்டிருந்தபோது, சிலுவையின் அடியில் நின்ற தம் சீடர்களை விசேஷமான முறையில் தம் பரலோக பிதாவுக்குக் கையளித்து, தமது திருப்பாடுகளின் பலன்களை அவர்களுக்கு அளித்தார்; தமது வலது பக்கத்திலிருந்த கள்ளனுக்குப் பரகதியைக் கூட அவர் வாக்களித்தார். 

பூசை காண்பவர்கள் தங்களுக்காகப் பரிந்து பேசும்படியும், தமது சொந்தப் பலியில் தங்களுக்கு ஒரு பங்கு தரும்படியும் தம்மை மன்றாடுவார்கள் என்றால், எல்லோருக்கும் மேலாக அவர்களுக்காக கிறீஸ்துநாதர் இதையே செய்கிறார் என்பது எந்த வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. 

சிலுவையில் தம் எதிரிகளுக்காகத் தாம் மன்றாடியது போல, பூசையிலும் அவர் வல்லமையோடு மன்றாடுகிறார். இப்படிப்பட்ட ஜெபத்தின் நன்மை பயக்கும் தன்மை பற்றி நாம் சந்தேகப்பட முடியுமா? சர்வேசுரனுடைய ஒரே பேறான திருச்சுதன் அனுதினமும் நமக்காகப் பரிந்து பேசத் தயை புரிகிறார், நம் இரட்சணிய விவகாரத்தைத் தம்முடையதாக அவர் ஆக்கிக் கொள்கிறார் என்ற அறிவை விட அதிகமாக நம் நம்பிக்கையைப் பலப்படுத்த உதவுவது வேறு எதுவுமில்லை .