இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சத்திய வேதம் - ஆயத்த சிந்தனைகள்

1. போதகமாவது ( Dogma), நாம் விசுவசித்து ஈடேறும் பொருட்டு நம்முடைய திருவேதமானது படிப்பிக்கின்ற சத்தியங்களின் தொகுதியாம்.

சத்தியம் என்றாலும் உண்மை என்றாலும் பொருந்தும். வேத சத்தியங்களுட் சில, நமது புத்தியாற் கண்டுபிடிக்கக் கூடியவைகளாய் இருக்கின்றன.

உதாரணம்: சருவேசுரன் உண்டு, ஆத்துமம் அழியாது எனும் சத்தியங்கள். வேறு சில, மது யுத்திக்கு எட்டாதனவாயும், சருவேசுரனால் நமக்கு வெளிப்படுத்தப்பட வேண்டியனவாயும் இருக்கின்றன. உதாரணம்: சருவேசுரன் ஏகராயும் திரித்துவராயும் இருக்கிறார், சருவேசுரன் மனிதனாய் அவதாரஞ் செய்தருளினார் எனும் உண்மைகள்.

ஆதலால், வேதத்தோடு பொருந்திய சத்தியங்களை எல்லாம் நாம் அறிந்துகொள்ளக்கூடிய வழிகள் இரண்டு. அவை:- புத்தி யும் (Reason) தேவவெளிப்படுத்தலும் (Revelation) என்னப்படும்.

தேவ வெளிப்படுத்தலின் உதவி இன்றி நாம் கண்டுபிடிக்கக் கூடிய சத்தியங்களும் உண்டு என்றோம். இச்சத்தியங்கள் சுபாவ முறைச் சத்தியங்கள் எனப் பெயர்பெறும். தேவ வெளிப்படுத்தலாவது: சருவேசுரன் சுபாவமுறையில் உள்ளவைகளும் சுபாவத்திற்கு மேலானவைகளுமான சத்தியங்களைத் தமது திருவுளத்தின் படி நமக்குத் தெரிவித்து, நாம் தமது தவறாத திரு வாக்கையே நம்பி அவைகளை விசுவாசித்துக் கைக்கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதேயாம்.

2. சுபாவமுறை ஆவது (Order of Nature) என்னவெனில், சருவேசுரன் மனிதனை ஒரு புத்தியுள்ள சிருட்டியாக உண்டாக்கத் திருவுளங் கொண்டபோதே, அந்தப் புத்தியுள்ள சிருட்டிக்கு அவசியமாய் வேண்டப்பட்ட அந்தஸ்தும் நியமமுமாம்.

சுபாவத்திற்கு மேலானமுறை ஆவது (Order of Grace) என்னவெனில், சருவேசுரன் ஆதியிற்றானே மனிதனைத் தமது திருக்கருணையால் மோட்ச பேரின்ப பாக்கியத்துக்கு உரியவனாய் இருக்கும்படி அமைத்த அந்தஸ்தாம். ஆதலால், அசுபாவத்திற்கு மேலான அந்தஸ்தானது சருவேசுரன் தமது சுயாதீனமான திருச் சித்தத்தினால் மனிதனுடைய சுபாவமுறையோடு சேர்த்தருளிய மேலான அந்தஸ்தாம் என்று அறிந்துகொள்ள வேண்டும். இத் தேவதிருச்சித்தத்தினால் மனிதன், ஓர் சுத்த சிருட்டியாகிய அளவில், அடைதற்கு உரிமையில்லாதவனாயிருந்த மேலான அந்தஸ்துக்கு உயர்த்தப் பெற்றான். அன்றியும், புத்தியுள்ள சிருட்டியாகிய அளவில் தனக்கு அகத்தியமாய்க் கிடைக்க வேண்டிய கொடைகளிலும் மேலான கொடைகளையும் அடைகிறவனானான்.

சுபாவமுறையும் சுபாவத்திற்கு மேலான முறையும் ஆகிய இரண்டையும் நோக்கி, வேதத்தையும், இயல் வேதம் என்றும் அருள்வேதம் என்றும் இரண்டாய் வகுக்கலாம். இயல் வேதமா வது, மனிதன் உள்ளபடியே தேவ வெளிப்படுதல் காரணமாக அறிந்து கொண்டவைகளாயினும், தன் சொந்தப் புத்தியாலும் அறிந்துகொள்ளக் கூடியவைகளாகிய சத்தியங்களையும் கடமைகளையும் அடக்கிய வேதமாம். அருள்வேதமோ வெனில், சருவேசுரன் மனிதனை ஞானகதிக்குச் செலுத்தும் உபாயங்களாக அவனுக்கு வெளிப்படுத்திப் போதித்தருளிய சத்தியங்களும் கற்பனைகளும் அடங்கிய வேதமாம்.

3. வேதமானது முற்றும் இயல்வேதமாய் ஒருபோதும் இருக்கவே இல்லை. ஏனெனில், சருவேசுரன் ஆதியிற்றானே தம்மை மனிதனுக்கு வெளிப்படுத்தி, அவன் தம்மை எவ்வாறு வழிபட வேண்டும் என்று போதித்தருளினார். அவர், ஆதாமுக்கும் அவருடைய சந்ததியாருக்கும், அவர்கள் அனுசரிக்கவேண்டிய ஒரு வேதத்தைக் கற்பித்தருளினார். இவ் இயல்வேதமானது (Primitive Religion) சுபாவமுறையான சத்தியங்களையும் கற்பனைகளையும் அடக்கியதாயினும், உள்ளபடியே தேவவெளிப்படுத்தலான வேதமேயாம். 

மனிதருக்குள்ளே பெரும்பாலார் நெடுங்காலமாக இயல் வேகத்தைச் சுத்தமாய் அநுசரித்துவந்தார்கள். பின்போ வெனில், அதனோடு அநேக தப்பறைகளையும் வீண் அநுசாரங்களையுங் கூட்டிக் கொண்டதினால், ஆதாமுக்குப் பின் பல ஆயிரம் வருஷங்கள் சென்றளவில், இயல்வேதமானது உலகத்தில் முழுதும் அற்றுப்போனது போலிருந்தது. அப்போது சருவேசுரன் ஒரு புதிதான வெளிப்படுத்தலைச் செய்து, தாம் தெரிந்து கொண்ட இசிறவேல் சாதியாருக்கு, மோசேசு என்பவர் மூலமாக, ஒரு புதிதான பிரமாணத்தைத் தந்தருளினார். இப்பிரமாணத்துக்கு மோசேசின் பிரமாணம் (The Mosaic Law) அல்லது வரிவேதம் என்று பெயர்.

ஆயினும், உலகத்திலுள்ள மற்றச்சாதியார் எல்லாரும் தங்கள் சிருட்டிகர்த்தாவையும் அவருக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளையும் முழுதும் மறந்துவிட்டதினால், கானான் தேசமொன்றுமே நீங்க, உலகம்முழுதும் அஞ்ஞான அந்தகாரத்தில் அமிழ்ந்திப்போயிற்று. அப்போது, சருவேசுரன் தம்முடைய திருக்குமாரனும் மெய்யான நாதேவனுமாகிய யேசுக்கிறிஸ்துவை உலக இரக்ஷகராகவும் தேவ போதகராகவும் அனுப்பியருளினார். 

யேசுக்கிறிஸ்துவானவர், சகல சாதியாருக்கும் மெய்யான கடவுளையும் அவருக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளையும் தெரிவிக்கும்பொருட்டு, மிகப்பரிசுத்தமும் மிகப்பூரணமுமான ஒரு வேதத்தைப் பிரசித்தப்படுத்தி, அது உலகம் அடங்கலும் தம்முடைய அப்போஸ்தலர்களாற் போதிக்கப்படச் செய்தருளினார். 

இந்தவேதம் கிறிஸ்துவினின்று உண்டானதான படியால் கிறிஸ்துவேதமென்று அழைக்கப்படும். இக் கிறீஸ்து வேதமானது, மனிதர் விசுவசிக்க வேண்டிய சத்தியங்களையும் அது சரிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் படிப்பித்து, உலகாந்த மட்டும் நிலைநிற்கும். கிறிஸ்துவேதம் வரிவேதத்திற்கு விரோதமானதல்ல. இயல்வேதமானது விரிவும் நிறைவும் பெற்று வரிவேதமானதுபோல, வரிவேதம் விரிவும் நிறைவும் பெற்றுக் கிறீஸ்துவேதமாயிற்று,

ஒரு வித்தானது முன்பு முளையாகி, பின்பு கன்றாகி, ஈற்றில் மரமாகிச் செழித்தோங்குவதுபோல, வேதமும் முன்பு இயல்வேதமாகவும், பின்பு வரிவேதமாகவும், ஈற்றில் கிறீஸ்துவேதமாகவும் விளங்கும்படி கடவுளே திருவுளங்கொண்டார்.

இனி வேதசத்தியங்களைப் பற்றிக் கூறுவோம்.

வேதமொன்று இருத்தல் அவசியம்

1-வது சருவேசுரன் ஒருவர் உண்டு.
2-வது. சருவேசுரனுடைய இலக்ஷணங்கள்.
3-வது. சருவேசுரனுக்கு அகத்தாராதனையும் புறத்தாராதனையும் செய்யவேண்டும் என்னுங்கடமை.