இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் மீட்பர் எப்படித் தமது கொடூர மரணத்தைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும் வைக்கிறார்?

நம் மீட்பர் திவ்விய பலிபூசையில் எப்படித் தமது கொடூர மரணத்தைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு முன்பாகவும் வைக்கிறார் என்பதை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நமக்குக் காட்டுகிறது. 

பரலோக அரூபிகள் தம்மைச் சூழ்ந்திருக்க அவர் இதைச் செய்கிறார். அப்போது, அவர்களுக்குத் துயரம் தரும் முறையில் அல்ல, மாறாக, உலக மீட்பிற்காக இந்த அளவுக்குத் துன்பப்பட அவரைத் தூண்டிய தமது அளவற்ற நேசத்தை அவர்கள் அறியச் செய்யும் விதமாக அவர் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறார். 

அந்தக் குருவானவரைப் போல மரிக்கிற நம் ஆண்டவரைத் திவ்விய அப்பத்தில் காண ஒரு முறை நாம் அனுமதிக்கப்பட்டோம் என்றால், எவ்வளவு மன உவப்போடும், கவனத்தோடும் நாம் பூசை காண்போம்! நம் இரட்சகரின் அவஸ்தையில் அவரைக் கண்டு எந்த அளவுக்கு நாம் அவர் மீது பரிதாபம் கொள்வோம்! 

நமக்குச் சித்தமானால், நம் சரீரக் கண்களைக் கொண்டல்ல, மாறாக விசுவாசக் கண்களைக் கொண்டு அதை நாம் காணலாம். இத்தகைய விசுவாசத்தை நமக்குள் நாம் தூண்டிக் கொள்ளும் போதெல்லாம் நாம் நம் ஆண்டவரை மகிழ்விப்பதோடு, நமக்கென ஒரு பெரும் வெகுமானத்தையும் சம்பாதித்துக் கொள்வோம். 

அதிக உறுதியாக விசுவசிக்க நமக்கு உதவும் நோக்கத்தோடு பூசையிலும் கிறீஸ்துநாதர் தமது மரணத்தின் சில தெளிவான, அப்பட்டமான அடையாளங்களை நமக்குத் தருகிறார். இவை மிகச் சிறந்த தேவ ஞானமுள்ளவர்களால் நமக்குப் பின்வருமாறு விளக்கப்படுகின்றன:

கடைசி இராப்போஜனத்தின் போது, சேசுநாதர் அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் தமது திருச்சரீரமாகவும், திரு இரத்தமாகவும் மாற்றினார். அவர் ஒரே நேரத்தில் இவ்விரண்டையும் செய்யவில்லை, ஒரே வடிவத்திலும் இதைச் செய்யவில்லை. மாறாக, அவர் ஒவ்வொன்றையும், தனித்தனியாக, இரண்டு வேறுபட்ட வடிவங்களில் செய்தார். 

"இது என் சரீரமும் என் இரத்தமுமாயிருக்கிறது" என்று அப்பத்தின் மீது அவர் கூறியிருக்கலாம். அப்படி அவர் கூறியிருந்தால் என்றால், அப்பம் உண்மையாகவே அவரது உயிருள்ள சரீரமாகவும் இரத்தமாகவும் இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு தெளிவான ஒரு முறையில் அவர் தம் மரணத்தை நமக்கு வெளிப்படுத்தியிருக்க மாட்டார். 

ஆகவே முதலில் அப்பத்தை மட்டும் தேவ வசீகர வார்த்தைகளைக் கொண்டு தமது திருச்சரீரமாக மாற்றி, அதைத் தம் சீடர்களுக்கு உணவாகத் தருவதையும், அதன்பின் இரசத்தைத் தம் திரு இரத்தமாக மாற்றி, அதைத் தனியாகத் தம் சீடர்களுக்கு அளிப்பதையும் அவர் தேர்ந்து கொண்டார். 

மேலும் குருவானவர் முதலில் அப்பத்தைத் தமது திருச்சரீரமாக மாற்றி, அதை எழுந்தேற்றம் செய்தபின் தொடர்ந்து இரசத்தைத் தமது திரு இரத்தமாக மாற்றி அதையும் தனியாக எழுந்தேற்றம் செய்து, இவ்வாறு மக்களின் மனங்களுக்கு முன்பாகத் தமது மரணத்தை அதிக உறுதியான முறையில் நிகழச் செய்ய வேண்டும் என்று அவர் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலைக் கொண்டு தம் திருச்சபைக்குக் கற்பித்தார்.

இக்காரியத்தைப் பற்றி லான்சிஸியுஸ் கூறுவதாவது: "இயற்கை ஒழுங்கில் உடலிலிருந்து இரத்தம் முழுமையாகப் பிரிக்கப்படும்போது மரணம் நிகழ்கிறது என்பதால், இதுவே சிலுவையின் மீது கிறீஸ்துநாதரின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது என்பதால், திவ்விய பலிபூசையில் தமது பலியை நிறைவேற்றவும் அவர் இதே முறையைத் தேர்ந்து கொண்டார். 

அவரது மரணம் இவ்வாறே அவரது திருச்சரீரத்திலிருந்து திரு இரத்தம் பிரிக்கப்படுவதால் நமக்கு முன்பாக நிகழ்த்தப்படுகிறது. இவ்வாறு, தேவ வசீகர வார்த்தைகளால், அவரது திருச்சரீரம் அப்ப வடிவத்திலும், அவரது திரு இரத்தம் இரசத்தின் வடிவத்திலும் பிரசன்னமாகின்றன. இவை இரண்டும் தனித்தனியாகவும், ஒன்றுக் கொன்று அப்பாற்பட்டும் இருக்கின்றன.' 

(பூசையில் நம் ஆண்டவரின் திருச்சரீரத்திலிருந்து திரு இரத்தம் அடையாள முறையில் பிரிக்கப்பட்டாலும், அப்பத்தின் தோற்றத்திலும், இரசத்தின் தோற்றத் திலும் அவரது திருச்சரீரமும், இரத்தமும், ஆத்துமமும், தெய்வீகமும் முழுமையாகப் பிரசன்னமாகியிருக்கின்றன.) இது கிறீஸ்துநாதரின் ஓர் உண்மையான பலியாக இருக்கிறது. இதில் அப்பம் மற்றும் இரசத்தின் பதார்த்தங்கள் (பொருண்மைகள்) மாற்றப்பட்டு, அழிக்கப் படுகின்றன.

இதன் விளக்கமாக ஜெர்வாசி என்பவர் கூறுவதாவது: "திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரே ஒப்புக்கொடுக்கப்படும் பலியாக இருக்கிறார், உண்மையில் மோட்சத்தில் இப்போது தாம் அணிந்திருக்கும் வடிவத்தில் அல்ல, மாறாக, அப்ப இரசத்தின் வடிவத்தில், இறந்து விட்டவரைப் போல அவர் இருக்கிறார், ஏனெனில் அவர், சரீரத்தின் சக்திகள் அனைத்தையும் பொறுத்த வரை, அசைவற்றவராகவும், செயலற்றவராகவும் இருக்கிறார். ஆனாலும் அதே நேரத்தில், அவர் புத்தி, சித்தம், போன்ற ஆன்மாவின் சகல சத்துவங்களையும் பயன்படுத்த வல்லவராக இருக்கிறார்."