இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரணத்தில் உள்ள அதோ இதோ என்ற சந்தேகத்தில் பயங்கரம்.

மரணத்தில் உள்ள சந்தேகத்தை நான் ஒரு பயங்கரமாக எடுத்துச் சொல்வது உங்களுக்கு விபரீதமாகத் தோற்றலாம். நாம் சாவோம் என்றதும் சந்தேகமா என்று நீங்கள் கேட்கக்கூடும். பிறந்தவர்கள் எல்லாம் இறந்தே தீரவேணும் என்றதிற் சந்தேகம் இல்லை என்றது மெய்தான். சென்ற காலம் அதற்கு அத்தாட்சி. ஏன்? உங்களுடைய பேரன், பீட்டன், கொப்பாட்டன், கோந்துரு எல்லாம் எங்கே? இறந்தே போனார்கள்!

பழைய ஏற்பாட்டிலே, ஆதி பிதாப்பிதாக்களைப் பற்றி வரைந்திருக்கிற இடத்திலே, சொல்லியிருக்கிறதாவது: ஆதாம் தொளாயிரத்து முப்பது வருஷம் சீவித்தார். அவரும் மரித்தார். சேத்து தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம் சீவித்தார். அவரும் மரித்தார். ஏனோசு தொளாயிரத்து ஐந்து வருஷம் சீவித்தார். அவரும் மரித்தார் என்று இப்படியே வரிசை வரிசையாய் மரித்தவர்களுடைய இடாப்பே காட்டியிருக்கிறது. (சனிப்பாகமம், 5-ம் அதி).

உங்களுக்குள்ளே சாவு இல்லாத குடும்பம் எது? மரணம் வராத வீடு எது? வீடெல்லாம் சாவீடு தானே. புத்த சமயம் என்கிற மதத்தை உண்டாக்கின கவுதம புத்தர் என்கிறவர் இருந்த காலத்தில், ஒரு நாள் தன்னுடைய ஒரே ஒரு மகனைச் சாகக் கொடுத்த ஒரு கைம் பெண்சாதி அந்தக் கல்விமானிடத்திலே வந்து: சுவாமி என் ஏக மகன் இறந்துபோனான்; அவனுக்கு உயிர்ப்பிச்சை தர வேணும் என்று மன்றாடினாள். மனுஷனாய்ப் பிறந்து வந்த கடவுளாகிய எம்முடைய ஆண்டவர் ஒரு விதவைக்கு இறந்த மகனை உயிர்ப்பித்துக் கொடுத்தருளினது போல, பொய்ம் மார்க்கத்தை ஸ்தாபித்த ஒரு வெற்று மனுஷனாலும் செய்ய முடியுமா? மரித்தோரை உயிர்ப்பிக்கும் வல்லமை தனக்கு இல்லை என்று கவுதம புத்தருக்கு நல்லாய்த் தெரியும். ஆனாலும், தன்னாலே அது முடியாது என்று வெளிப்படையாய்ச் சொல்லிவிட மனம் இல்லாமல், அந்த ஸ்திரிக்கு தந்திரமான ஒரு மறுமொழியைச் சொன்னாராம். அதாவது : நீ ஊருக்குள்ளே போய் எங்கேயாவது இதற்கு முன்னே ஒருவரும் சாகாத வீடு பார்த்து அந்த வீட்டிலே கொஞ்சம் கடுகு வாங்கிக்கொண்டு வா, உன் மகனை எழுப்பிவிடுகிறேன் என்று சொல்லி அனுப்பினாராம். மனுஷியும் வீடு வீடாய்ப் போய்: இங்கே முன் ஒருவரும் சாகவில்லையோ? சாகவில்லையோ? என்று கேட்டுக் கொண்டு போனாள். ஒரு வீட்டிலாவது இங்கே முன்னே ஒருவருஞ் சாகவில்லை என்று சொல்லுவார் இல்லை. அப்போது தான் அவளுக்குக் காரியம் விளங்கினது. எல்லாருஞ் சாக வேண்டும் என்ற முறையின்படியே தன் மகனுஞ் செத்தான்; அவனை உயிர்ப்பிக்க மகா சாஸ்திரியான கவுதம புத்தராலும் இயலாது என்று அறிந்துகொண்டாள்.

இப்படியே, மனிதனுக்குச் சாவு நிச்சயம் என்றதற்குச் சென்ற காலம் சாட்சி; நிகழ்காலமும் சாட்சி. நாலு புறமும் சாவை அல்லாமல் வேறு என்னத்தைக் காண்கிறோம்! புல் பூண்டு மரஞ் செடிகளைப் பார்த்தால், அவைகள் முளைத்து வளருகிறவைகளும், வளர்ந்து சாகிறவைகளுமாகவே இருக்கிறது. மாடு ஆடு கொக்கு குருவி எல்லாஞ் சாகிறது. நம்மைச் சூழ இருக்கிறவர்களிலே எத்தனையோ பேர் சாகக் காண்கிறோம்; சாவுக்கு உரிய நோயோடு இருக்கக் காண்கிறோம். நம்முடைய அயலிலே மாத்திரம் சாவல்ல, உலகம் முழுதும் சாவு நடக்கிறது. இப்போது, நான் பேசிக்கொண் டிருக்கிற இந்த வேளையிலே, இந்தப் பிரசங்கம் முடியுமுன்னே , உலகத்திலே மூவாயிரம் பேர் வரையிற் செத்துப் போவார்கள். நாள் தோறும் உலகத்திலே ஒரு லட்சம் பேருக்கு அதிகமாய்ச் சாகிறார்கள் என்று அறிவாளிகளாற் கணக்குப் பூட்டப்பட்டிருக்கிறது.

உள்ளபடி, உலகம் ஒரு பெரிய கொலைக்களம். மரணத்தின் நடுவேதான் நாம் சீவிக்கிறோம். ஆனபடியால், நாமும் சாவோம் என் பதில் சந்தேகம் இல்லை. மரணத்தை வெல்ல எவராலும் முடியாது. சுவாலித்து எழுந்துவரும் நெருப்பை மனுஷன் நூர்த்து அதை வெல்லுகிறான். மலைபோல் புரண்டு மோதுகிற அலையை வெல்லுகிறான். வாட்படையை, குதிரைப் படையை, யானைப் படையை வெல்லுகிறான். ஆனால் மரணத்தை வெல்ல நால்வகைச் சேனைகளாலும் முடியாது; அட்ட ஐசுவரியமும் நிறைந்த அரசனாலும் முடியாது; உலகம் முழுதுக்கும் மகா குருப்பிரசாதியாகிய பாப்பானவராலும் முடியாது.

மனுஷனுடைய வாழ்வென்ன? தாய் உதரத்திலே அருவாகி, உருவாகி, குழந்தையாகி, இளந்தாரியாகி, சிறியவனாகி, பெரியவனாகி, குடியானவனாகி, அரசனாகி, குருவாகி, பாப்புவாகி தப்பாமல் சவமாகிறான். மரணமோ சருவேசுரனால் அமைக்கப்பட்ட ஒரு மாறாத முறை வேத வாக்கியம் இதைத் தெளிவாக வெளிப்படுத்தும்: ''மனிதர் ஒரே தரம் மரிக்க வேணும் என்றும் அதன்பின் நடுத்தீர்வை என்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபிரே. 9; 27 )

மரணம் நிச்சயம். எனக்கு மரணத்தீர்வை இடப்பட்டாயிற்று. நான் சாகவே வேணும் என்று உணர்ந்துகொண்டு, நல்ல மரணத்துக்கு ஆயத்தமாய் எப்போதும் நடந்துவருவோமானால் இதிலே பயங்கரம் ஒன்றும் இராது. எல்லாம் ஆறுதலும் இன்பமுமாகவே இருக்கும். ஆனால் சாகும் காலம், சாகும் இடம், சாகும் விதம் என்ற இவைகள் எவருக்கும் தெரியாதானபடியால், சத்துராதித்தனமான ஒரு சந்தேகம் உண்டாகிறது. இதிலே தான் நான் சொன்ன பயங்கரம் அடங்கியிருக்கும்.

சாகுங் காலம் குறித்திராதபடியால் ஒவ்வொருவரும் ''நான் இப்போது சாகப்போகிறேனோ? மரணம் எனக்கு அவ்வளவு சுறுக்கில் வருமோ? நான் இன்னும் பல நெடும் வருஷங்களுக்கு இருப்பேன். இப்போது நான் ஏன் தவம் பண்ணுவான் ? ஏன் மரணத்துக்கு ஆயத்தப்படுத்துவான் ? பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம்'' என்று வாயினாற் சொல்லாவிட்டாலும் மனதிற்குள்ளே எண்ணிக்கொள்ளுகிறோம். அதுமட்டோ, சாவு நிச்சயம் என்ற உண்மையை மனதின் ஆக அடித்தளத்துள்ளே தள்ளி வைத்துக்கொண்டு, நமக்கு சாவு வரும் என்ற நினைவை அதில் நுழைய விடாமல் முற்றாக அப்புறப்படுத்திக் கொண்டு, காரியத்தளவிலே நாம் ஒரு போதுஞ் சாகாதவர்கள் என்றபடி இருந்துவிடுகிறோம்.

அதினாலே தான் மரணம் என்ற சொல்லைக் கேட்கும்போதும் சில வேளைகளிலே திடுக்காட்டம் உண்டாகி விடுகிறது. காதிலே விழுந்த ஒரு சொல்லினால் வரும் திடுக்காட்டம் என்ன திடுக்காட்டம்! நாம் சாவதில்லை என்றது போல ஒரு ஆயத்தமும் நினைவும் இல்லாமல் நித்திய கேட்டுக்கு உரிய பாவ நிலையிலே இருக்கும் வேளை, மெய்மெய்யாக, சற்றும் காத்திராத நேரத்திலே, சடுதியாய்ச் சாவு வரும் போது கொள்ளும் திடுக்காட்டம் அல்லவோ பயங்கரமானது!

சாவுமோ சடுதியாகத்தான் வரும் என்று ஆண்டவர் திருவுளம் பற்றியிருக்கிறார். ''நீங்கள் நினையாத நேரத்திலே மனுஷ குமாரன் வருவார். ஆதலால் நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்'' (மத். 24; 44 ) இது தான் சாவிலே உள்ள சந்தேகப் பகுதி. சீவியத்துக்கும் மரணத்துக்கும் அதிபதியானவர் தெட்டத்தெளிவாய் திருவுளம் பற்றியருளியதை நம்பாதவர்கள் போல நாம் அற்பமேனும் ஆயத்தம் இல்லாதிருக்கும் வேளையிலே சாவு வருமானால் பயங்கரம் இல்லாமற் போமா?

அது காத்திராத நேரத்திலே மாத்திரம் அல்ல காத்திராத இடத்திலேயும், காத்திராத விதமாயும் வரும்போது மரணத்தின் பயங்கரம் இன்னும் அதிகம் ஆகும். நேரத்தைப் பற்றிய சந்தேகத்தைப் போலவே இடத்தையும், விதத்தையும் பற்றிய சந்தேகமும் சதிமானம் நிறைந்தது.

''நான் நெடும் நெடும் காலத்தின் பின், வருஷா வருஷங்கள் சென்ற பின், அதுவும் வீட்டிலே, எனது குசாலான அறையிலே, இனசனங்கள் சூழ, மனைவி மக்கள் கால் கை பிடித்து உதவி செய்யப் பாக்கியமாய் மரிப்பேன், அவ் வேளை என் பாவங்களுக்காக நல்ல நல்ல பாவசங்கீர்த்தனங்கள் பண்ணி, ஒறுத்தல் உபவாசங்கள் முடித்து, பூரண ஆயத்தத்தோடு அவஸ்தைப் பூசுதல் பெற்று, வழித்துணை நற்கருணை உட்கொண்டு, வலது கையில் குருசு செபமாலை ஒளிர, இடது கையில் மெழுகுதிரி எரிய, யேசு மரியாயி சூசை என்ற திரு நாமங்களை உச்சரித்துக் கொண்டு, நல்லறிவோடே இருந்து மரண நித்திரையாவேன் '' என்ற ஒரு மாயமான, பேய்த்தேர் போன்ற எண்ணம், இன்றைக்கே நன்மாணத்துக்கு ஆயத்தப்படாமல் பின் போட்டு பின் போட்டுக் கொண்டு வருகிற நம்முடைய மனதிற்குள்ளே கடந்து மறைந்து கிடக்கிறது அல்லவா?

இந்த மனக் கோட்டை எல்லாம் புகைப் போலப் பறந்து போகும்படியாக, வீட்டிலே அல்ல, பிறதேசத்திலேயோ காடுகரம்பையிலேயோ தெருவிலேயோ கடல்மேலேயோ வேலைத் தலத்திலேயோ விளையாட்டிடத்திலேயோ எனக்கு மரணம் வராதா? வருத்தமாய்ப் பாயிற் படாமற் திடீரென்று சடுதி மரணம் நேரிடாதா ? பாவசங்கீர்த்தனத்துக்கு நேரம் இல்லாமல், அவஸ்தைப் பூசுதலுக்கு இடம் இல்லாமல், மனஸ்தாபப்படவும் நினைவு வராமலிருக்கும் வேளையிலே, அசுப்பிலே, சாக வேண்டி வராதா?

''நீங்கள் நினையாத நேரத்திலே மனுஷ குமாரன் வருவார்'' என்ற திரு வாக்கியம் ஒரு வேளை எனக்குத் தான் பொருந்துவதாகாதா? எத்தனை பேர் கொண்டாட்டங்களின் நடுவே, இருந்தாற்போல சாகிறார்கள்! எத்தனை பேர் றெயில் வண்டியிலே, மோட்டர்கார் விபத்திலே அகப்பட்டு திடீரென்று மரணம் அடைகிறார்கள்! எத்தனை பேர் வழியிலே தெருவிலே எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்!

''நேற்று இன்னாரை நல்ல சுகத்தோடே நிற்கக் கண்டேனே, அவரும் செத்துப் போனாரா? இதை நம்புவது எப்படி?'' என்று சொல்லத் தக்கதாக, எத்தனை பேர் சிமிக்கிடாமல் மரணத் திரைக்குள் மறைந்து போகிறார்கள்! எத்தனை பேர் வீட்டோடேதான் வியாதியாயிருந்து மரித்தாலும், மரணத்தை நினைத்து மனந்திரும்பும் முன் திடீரென்று அறிவிழந்து கிடந்து சாகிறார்கள்!

இப்படி, காத்திராத நேரத்திலே, இடத்திலே, காத்திராத விதமாக மரணம் வரும்போது உண்டாகும் பதகளிப்பையும் அங்கலாய்ப்பையும் திடுக்காட்டத்தையும் திகிலையும் என்னென்று விபரிப்போம்! ''ஐயோ, நான் இப்படி வருமென்றிருந்தேன் இல்லையே! இது வரையும் நான் எனக்கு ஏதோ நிலையான நன்மை என்று நம்பி இருந்த உலகம், பார்த்திருக்க மின்னி மின்னி மறைந்து போகிறதே! மறுலோகப் பயணத்துக்கு ஒரு ஆயத்தமும் இல்லாமல் சாகிறேனே ! ஐயோ, இதுவரையும் நான் நினைக்கவும் மனமில்லாமல் எவருக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு வந்தேனோ, அவருக்கு முன்னாலே தானே போக வேண்டியிருக்கிறதே! நான் கெட்டேன்! கெட்டேன்!'' என்று உள்ளடங்கிச் சமித்து, கலங்கி, மலங்கி, நெஞ்சழிந்து நெருப்பாய்ப் பற்றி எரிகிறது போலிருக்குமே.