இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரின் மரணம் புதுப்பிக்கப்படுகிறது

''ஒருவன் தன் சிநேகிதர்களுக்காகத் தன் பிராணனைக் கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை" என்ற கிறீஸ்துநாதர் கூறினார் (அரு.15:13). 

ஒரு மனிதனுக்கு அவனது ஆத்துமத்தை, அல்லது அவனது உயிரை விட அதிக விலை மதிக்கப்படாதது அல்லது அதிகப் பிரியமானது வேறு எதுவுமில்லை. ஆகவே, அவன் இதைத் தன் நண்பனுக்காகக் கையளிக்கும்போது, தனக்கு அனைத்திலும் அதிக மதிப்புள்ளதை அவன் அவனுக்குக் கையளிக்கிறான். 

ஆனால் கிறீஸ்துநாதர் இந்த நிலையையும் கடந்து சென்றார். மனுக்குலத்தின் மீது தாம் கொண்ட அன்பின் காரணமாக, அவர் தம் நண்பர்களுக்காக மட்டுமின்றி, தம் மிகக் கொடிய எதிரிகளுக்காகவும் கூட தம் உயிரைக் கையளித்தார். ஆகவே, அவருடைய ஆன்மா சாதாரணமானது அல்ல, மாறாக அது பரிசுத்தமானதாக, எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு மேன்மையுள்ளதாகவும் இருந்தது. 

அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில் நம் ஆண்டவர், "நான் என் ஆடுகளுக்காக என் உயிரைக் கையளிக்கிறேன்'' (அரு. 10:15) என்று கூறுகிறார். இந்த வார்த்தைகள் ஒரு விசேஷமான அர்த்தம் கொண்டுள்ளன என்பது வெளிப்படை. எனெனில், "நான் என் ஆடுகளுக்காக என் உயிரைக் கையளிப்பேன்" என்றோ , அல்லது "கையளித்தேன்'' என்றோ நம் ஆண்டவர் சொல்லவில்லை, மாறாக, "நான் என் ஆடுகளுக்காக என் உயிரைக் கையளிக்கிறேன்" என்று சொல்கிறார். 

அதாவது, "நான் விசுவாசிகளுக்காகத் தொடர்ந்து என் உயிரைக் கையளித்துக் கொண்டிருக்கிறேன்" என்ற அர்த்தத்தில் இப்படி அவர் சொல்கிறார். தமது திருமரணம் புதுப்பிக்கப்படுகிற திவ்விய பலிபூசையில் அவர் இதைத் தினமும் செய்கிறார். இது செய்யப்படும் விதத்தை இப்போது விளக்குவோம். 

முற்காலங்களில் தவக்காலத்தில் திருப்பாடுகளின் நாடகம் ஒன்றை நடத்துவது வழக்கமாக இருந்தது. கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளை அதிக தத்ரூபமாக மக்களின் மனங்களுக்கு முன்பாக வைப்பது அதன் நோக்கமாக இருந்தது. அதில் ஓர் இளைஞர் ஒரு சிலுவையோடு சேர்த்துக் கட்டப்படுவார். அதில் சற்று நேரம் தொங்கிக் கொண்டிருந்த பிறகு, நெருங்கி வரும் மரணத்தின் வெளி அடையாளங்களை நடித்துக் காட்டுவார். 

மிகக் கடுமையான மரண அவஸ்தையில் அவர் மரித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியைக் கண்டு பார்வையாளர்கள் கண்ணீர் சிந்தத் தொடங்குவார்கள். இப்போது திவ்விய பலிபூசையில், இரட்சகரின் பாகத்தை வேறு யாரும் நடித்துக் காட்டுவதில்லை, மாறாக, அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுக்கிறார், தம் ஆள்தன்மையில் அவர் தம்மை அழித்துக் கொள்கிறார். 

தமக்குப் பதிலாக வெறுமனே நடிக்கும்படி ஒரு சம்மனசானவரையோ, ஒரு புனிதரையோ அவர் நியமிப்பதில்லை. ஏனெனில் அவர் செய்வதை அவர் செய்வது போல அவர்களால் செய்ய முடியாது. ஒவ்வொரு நாளும் அவர் பரலோக, பூலோகத்தின் பார்வையில் தமது திருப்பாடுகளைப் பீடத்தின் மீது மீண்டும் நிகழ்த்துகிறார். 

கல்வாரியின் மீது நிகழ்த்தப்பட்ட பலி கடவுளின் நினைவில் இருப்பது போல, பூசைப் பலியும் இருக்குமாறு அவர் இதைச் செய்கிறார். இதை விளக்கும்படி நாம் ஓர் உண்மைக் கதையை விளக்கிக் கூறி, வேத வல்லுனர்களின் போதகத்தைக் கொண்டு அதை உறுதிப்படுத்துவோம்:

ஹைஸ்டர்பாக்கின் சீஸர் என்பவர் விவரிப்பதாவது: அவரது மடத்தில் காட்ஸ்சாக் என்னும் பெயருள்ள ஒரு குரு இருந்தார். அவர் கிறீஸ்துமஸ் திருநாளன்று மிகுந்த பக்தியோடு திவ்விய பலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தேவ வசீகரத்திற்குப் பிறகு அவர் தம் கரங்களில் திவ்விய அப்பத்திற்குப் பதிலாக, அற்புத அழகுள்ள ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். அவர் திவ்விய குழந்தையைத் தம்மோடு சேர்த்து அணைத்து, அவரை முத்தமிட்டார். 

இதனிடையே அவரது ஆன்மா வாக்குக் கெட்டாத இனிமையால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு சில கணங்களுக்குப் பிறகு, தேவ குழந்தையானவர் மறைந்து விட, குருவானவர் பூசையைத் தொடர்ந்து நிறைவேற்றி முடித்தார். சிறிது காலத்திற்குப் பின் தாம் மரணப் படுக்கையில் இருந்தபோது, அவர் தாம் கண்ட இந்தக் காட்சியைத் தம் ஆயருக்கு விவரித்துக் கூறினார். 

ஆயர் இந்தக் காட்சி பற்றிய விவரத்தால் வெகுவாகத் தாக்கப்பட்டு, தம் குருக்களில் தமது குருத்துவ அலுவலை அற்பமானது என்று எண்ணிக் கொண்டிருந்த ஒரு குருவுக்குக் கூறினார். இந்தக் குரு தமது ஆயர் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தபின், இறுதியில் ஒரு பெருமூச்சோடு: "கடவுள் ஏன் இந்தக் காரியங்களைப் புனிதர்களுக்கும், விசுவாசத்தில் உத்தமமானவர்களுக்கும் வெளிப்படுத்துகிறார்? அதற்குப் பதிலாக, பீடத்தின் பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் அவரது பிரசன்னத்தைப் பற்றி சந்தேகம் கொண்டிருக்கும் என்னைப் போன்ற பாவிகள் தம்மைக் காண அவர் அனுமதிக்கலாம்” என்றார்.

சிறிது காலத்திற்குப் பிறகு, ஒரு நாள் அவர் பீடத்தருகில் நின்று கொண்டிருந்தபோது, நல்ல குருவாகிய சுவாமி காட்ஸ்சாக் கண்ட அதே காட்சி இவருக்கும் அருளப்பட்டது. ஆஞ்ஞஸ் தேயிக்கு முன்பாக அவர் திவ்விய அப்பத்தைப் பிட்கும் செயலில் ஈடுபட்டிருந்தபோது, மெய்மறக்கச் செய்யும் பேரழகுள்ள ஒரு குழந்தையைத் தம் கரங்களில் அவர் கண்டார். 

இந்தக் காட்சியால் பெரும் குழப்பத்திற்கு உள்ளான அவர், மீண்டும் பழைய நிலைக்கு மாறிய திவ்விய அப்பத்தைத் திருப்பிய போது, இதோ, சிலுவையின் மீது இருக்கும் கிறீஸ்துநாதரை அவர் கண்டார். ஆண்டவரின் திருச்சிரசு மரிக்கும் தறுவாயில், கீழ்நோக்கிக் கவிழ்ந்திருந்தது! 

குருவானவர் ஆழமாகத் தொடப்பட்டார்; அவர் கிட்டத்தட்ட மயக்கமடையும் நிலைக்கு உள்ளானார்; மரித்துக் கொண்டிருக்கும் இரட்சகரின் உருவத்தை உற்றுநோக்குகையில் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழியத் தொடங்கியது. பூசையைத் தொடர்ந்து நிறைவேற்றுவதா வேண்டாமா என்ற குழப்பம் அவரை ஆட்கொண்டது. ஆனால் விரைவில் காட்சி மறைந்தது. 

திவ்விய அப்பம் தனது முந்திய நிலையை அடைந்தது. கண்ணீர்ப் பெருக்கின் இடையே பூசை முடிந்தது. பூசை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தங்கள் பங்குக் குருவுக்கு என்ன நேர்ந்தது, ஏன் அவர் பூசையை முடிக்க இவ்வளவு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார், ஏன் இவ்வளவு அதிகமாக அவர் கண்ணீர் சிந்தினார் என்பதையெல்லாம் அறிய மிகுந்த ஆவலாயிருந்தார்கள். 

இதை அறிந்த அவர் உடனே போதக மேடையில் ஏறி, தாம் கண்ட சேசு பாலன் மற்றும் மரிக்கிற இரட்சகரின் காட்சிகளை அவர்களுக்கு விவரமாகக் கூறினார். இந்தக் காட்சி அவரில் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானதாகவும், நிரந்தரமானதாகவும் இருந்தது. 

அவர் தம் வாழ்வைத் திருத்தினார், தமது முந்தைய அசட்டைத்தனத்திற்குப் பரிகாரமாக, கடுமையான தவமுயற்சிகளில் ஈடுபட்டார், தமது மரண நாள் வரை அவர் தம் பங்கு மக்களுக்கு எல்லா வகையிலும் மிகச் சிறந்த முன்மாதிரிகை யாக விளங்கினார்.