இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் அன்னையின் சிற்றாலயத்தைக் கிறீஸ்துநாதர் தாமே அர்ச்சித்தார்

திவ்விய பலிபூசையின் உன்னத மகத்துவத்தை நம் மனங்களில் ஆழமானப் பதித்துக் கொள்ளும்படி, ஐன்ஸிடென் என்னுமிடத்திலுள்ள தேவாலயத்திலுள்ள நம் அன்னையின் சிற்றாலயத்தைக் கிறீஸ்துநாதர் தாமே எப்படி அர்ச்சித்தார் என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்வோம். 

அர்ச். மைன்ராட் (இறப்பு 861) என்பவரின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. இந்த பக்தியுள்ள வனவாசியின் மரணத்திற்குப் பின் எண்பது ஆண்டுகள் கழித்து, உயர்குடிப் பிறந்தவரான எபெர்ஹார்ட் என்பவரின் வேண்டுகோளின்படி, கொன்ஸ்தான்ஸ் பட்டணத்தின் மேற்றிராணியாரான அர்ச். கான்ராட் என்பவர் அர்ச். மைன்ராடின் சிற்றாலயத்தை அபிஷேகம் செய்ய வந்தார். 

இந்தச் சடங்கிற்காகக் குறிக்கப்பட்ட நாளுக்கு முந்தின இரவில், ஜெபிப்பதற்காக ஆலயத்திற்குள் சென்ற கான்ராட், அங்கே, தேவாலயங்களின் அர்ப்பணிப்பிற்குரிய சடங்கின் பிரவேச வாக்கியங்களையும், பதில் வாக்கியங்களையும் சம்மனசுக்களின் அணிகள் பாடிக் கொண்டிருப்பதை அவர் கேட்டார். 

ஆலயத்திற்குள் பிரவேசித்ததும், ஆண்டவராகிய கிறீஸ்து நாதரை அவர் அங்கே கண்டார். அவர் குருத்துவ உடுப்புகள் அணிந்தவராக, அர்ச்சியசிஷ்டவர்கள் மற்றும் சம்மனசுக்களின் பெரும் படை ஒன்று தமக்கு உதவிகள் செய்து கொண்டிருக்க, அந்தச் சிற்றாலயத்தை அபிஷேகம் செய்யும் சடங்கை நிகழ்த்திக் கொண்டிருந்தார். 

இந்த அற்புதமான காட்சியைக் கண்ட இந்தப் புனித மேற்றிராணியாரால் தமது புலன்களையே நம்ப முடியவில்லை. என்றாலும் அங்கே நிகழ்ந்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் தெளிவாகக் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருந்தார். 

மேலும் கிறீஸ்துநாதர் ஒரு தேவாலயப் பிரதிஷ்டையின் போது மேற்றிராணிமாரால் பயன்படுத்தப்பட வேண்டிய அதே ஜெப வடிவங்களையும், சடங்குகளையும் மிகத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததையும் அவர் கவனித்தார். 

அர்ச்சியசிஷ்டவர்களில் சிலர் பரிசாரகர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சிற்றாலயமும், பீடமும் தேவமாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுக் கொண்டிருக்க, நம் திவ்விய அன்னை பீடத்திற்கு மேலாக, பரலோக மகிமையால் சூரியனை விட அதிகப் பிரகாசத்துடனும், ஒளியை விட அதிகமாகக் கண்ணைப் பறிக்கும் பேரொளியோடும் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். 

சிற்றாலய அர்ப்பணச் சடங்கு முடிந்தது, நம் ஆண்டவர்தாமே அங்கே திவ்விய பலிபூசை நிறை வேற்றி ஒப்புக்கொடுத்தார்.

பூசை முடிந்த போது, ஆண்டவரோடும், மாதாவோடும், பரலோக சேனைகள் முழுவதும் பார்வையிலிருந்து மறைந்து விட, மேற்றிராணியார் மகிழ்ச்சியாலும், ஞானப் பேரின்பத்தாலும் நிரப்பப்பட்டவராகத் தனிமையில் விடப்பட்டார். 

தமது பரவச நிலையிருந்து அவர் விழித்தெழுந்தபோது, தரை மீது தூவப் பட்டிருந்த சாம்பலில் பதிந்திருந்த கால்தடங்களையும், க்றீஸ்மா தைலத்தால் பூசப்பட்ட சுவர்களையும் கண்டார். இவை அவர் கண்ட காட்சிகள் உண்மைதான் என்று சாட்சியமளிப்பவையாக இருந்தன. 

மறுநாள் காலையில், குருநிலையினரும், மக்கள் அங்கு கூடி, திருச்சடங்கு தொடங்குவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மோட்சவாசிகளால் ஏற்கனவே தேவாலயம் அர்ப்பணிக்கப்பட்டு விட்டதால், அந்தச் சடங்கை மீண்டும் தம்மால் செய்ய முடியாதென மேற்றிராணியார் அறிவித்தார். ஆயினும், அவர் ஏதோ மாய்கையில் அகப்பட்டிருக்கிறார் என்று எல்லோரும் நினைத்ததால், வேறு வழியின்றி, அவர் திருச்சடங்கைத் தொடங்கினார். 

ஆனால் உன்னதத்திலிருந்து வந்த ஒரு குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது : அங்கு கூடியிருந்த அனைவரும் கேட்கும் விதமாக அந்தக் குரல்: "சகோதரரே, நிறுத்தும், சிற்றாலயம் ஏற்கனவே தெய்வீகமான முறையில் அர்ப்பணிக்கப்பட்டு விட்டது!'' என்று மும்முறை கூறியது. அதன்படி, அர்ச். கான்ராட் தாம் செய்யத் தொடங்கியதை நிறுத்தி விட்டு, இந்தப் புதுமையான நிகழ்வு பற்றி உரோமைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

இந்த அற்புதமான நிகழ்வு திவ்விய பலிபூசையின் புனிதத்துவத்திற்கு மேலும் சான்று பகர்கிறது. ஏனெனில் நமதாண்டவர் தாமே இந்தத் திருச்சடங்கை நிறைவேற்றத் தயை புரிந்தார். அச்சமயத்தில் நாம் மட்டும் மேற்றிராணியாரான கான்ராடோடு இருந்து, அவர் கண்டவற்றையெல்லாம் நாமும் காண முடிந்திருந்தால்! நம் பிரமிப்பும், நம் இன்பமும், நம் பக்தியும் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்கும்! 

ஆனால் எது எப்படியிருந்தாலும், கத்தோலிக்கக் குருக்கள் திவ்விய பலிபூசை நிறைவேற்றும் அதே முறையில் கிறீஸ்து நாதரும் பூசை நிறைவேற்றினார் என்பதை அறிந்து நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.