இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தமது தாழ்ச்சியிலும், சுய தாழ்மையிலும் சேசுக் கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் அதை நிறைவேற்றுபவருக்குக் கீழ்ப்படிபவராக ஆகிறார்

மேலும், தமது தாழ்ச்சியிலும், சுய தாழ்மையிலும் சேசுக் கிறீஸ்துநாதர் திவ்விய பலிபூசையில் அதை நிறைவேற்றுபவருக்குக் கீழ்ப்படிபவராக ஆகிறார். 

நல்லவர்களும், பக்திப் பற்றுதல் உள்ளவர்களுமான குருக்களுக்கு மட்டுமல்ல, மாறாக ஞான வெதுவெதுப்பும், அசட்டைத்தனமுமுள்ள குருக்களுக்கும் கூட அவர் கீழ்ப்படிகிறார்; தங்கள் விருப்பப்படியெல்லாம் தம்மைக் கையாள அவர் அவர்களை அனுமதிக்கிறார். 

அதை விட மேலாக, இன்னும் அதிக அதிசயத்திற்குரிய முறையில், "ஆனால் சிறியவன் தனக்கு மேற்பட்டவனால் ஆசீர்வதிக்கப்படுகிறான் என்பதில் ஆட்சேபனை இல்லை" (எபி.7:7) என்று அர்ச். சின்னப்பர் கூறினாலும், குருக்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள அவர் மறுப்பதில்லை. 

அப்படியானால், குருவானவரை விட ஒப்பற்ற விதமாகப் பெரியவராயிருக்கும் கிறீஸ்துவானவர், அளவற்ற விதமாகத் தம்மை விடத் தாழ்ந்தவராக இருக்கும் ஒருவரின் ஆசீர்வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்றாலும், குருவானவர் அப்பத்தை தேவ வசீகரத்திற்கு முன் மட்டுமல்லாமல், தேவ வசீகரத்திற்குப் பின்னரும் பதினைந்து தடவைகளுக்குக் குறையாமல் ஆசீர்வதிக்கிறார். 

அந்த அளவுக்கு நம் ஆண்டவரின் சுய தாழ்ச்சி ஆழ்ந்ததாக இருக்கிறது.

கிறீஸ்துநாதர் அர்ச். ஸ்நாபக அருளப்பரின் கையால் ஞானஸ்நானம் பெறுவதற்காக அவரிடம் வந்தபோது, "அருளப்பர் அவரைத் தடுத்து: தேவரீரால் நான் ஞானஸ்நானம் பெற வேண்டிய தாயிருக்க, நீர் என்னிடத்தில் வருகிறதெப்படி?" என்று கேட்டார் என்று பரிசுத்த சுவிசேஷம் கூறுகிறது (மத். 3:14). 

இதே முறையில், குருவானவர் அச்சத்தோடு சுருங்கியபடி, "ஆ என் ஆண்டவரே, நான் தேவரீருடைய ஆசீர்வாதத்தைப் பெற வேண்டியவனாயிருக்க, தேவரீர் பரிதாபத்திற்குரிய பாவியாகிய என் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி?" என்று கேட்க வேண்டியவராக இருக்கிறார். 

உண்மையாகவே இது மிகவும் அதிசயத்திற்குரியது, கிறீஸ்து நாதர் ஏன் தம்மை இவ்வளவு தாழ்மையாக்கிக் கொள்கிறார் என்று யோசிக்கும்படி நாம் தூண்டப்படுகிறோம்.

இதற்குரிய முக்கியக் காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்படுவது: அதீதமான அளவுக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்வதால், கடுங்கோபமுள்ள சர்வேசுரனுடைய சீற்றத்தைத் தணிப்பதற்காகவும், பாவிகளாகிய மனிதர்களின் அக்கிரமங்களுக்குரிய நீதியான தண்டனையை அவர்களிடமிருந்து விலக்கும்படியாகவுமே அவர் இவ்வாறு தம்மைத் தாழ்த்திக் கொள்கிறார். 

எதிரிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு, அவனது மன்னிப்பை இரந்து கேட்பதை விட, அவனோடு ஒப்புரவாக அதிக நிச்சயமான வழி வேறு எதுவுமில்லை. 

பக்தியற்ற அரசனாகிய ஆக்காபின் உதாரணத்திலிருந்து நாம் இதை அறிந்து கொள்கிறோம். வேதாகமத்தில் கூறப் பட்டுள்ளபடி, இசையாஸ் தீர்க்கதரிசி கடவுளின் கட்டளைப்படி, ஆக்காபின் தீய செயல்களின் காரணமாக, ; ஆண்டவர் அவனது மனைவியையும், மக்களையும் தண்டிப்பார் என்றும், அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படாமல், நாய்களுக்கும், வானத்துப் பறவைகளுக்கும் உணவாகும் என்றும் அவனுக்கு தீர்க்கதரிசனம் கூறினார். 

"(தீர்க்கத்தரிசியின்) வார்த்தைகளைக் கேட்ட பிற்பாடு ஆக்காப் தன் வஸ்திரங்களைக் கிழித்துப் போட்டுத் தன் சரீரத்தின்மேல் பருமனான இரட்டைக் கம்பளியைப் போட்டுக் கொண்டு உபவாசமாயிருந்து கோணிச் சாக்கிலேயே படுத்துக் கொண்டான்; (வெளியே போனால்) அவன் சிரசு கவிழ்ந்தே நடந்தான். அப்போது தெஸ்பேயனான எலியாசுக்குக் கர்த்தர் திருவுளம் பற்றினதாவது: நமக்கு முன்பாக ஆக்காப் தன்னைத் தாழ்த்தினபடியால் நாம் அவனுக்கு உயிர்க்காலத்தில் அந்தத் தீமைகளை வரச்செய்யாமல் அவனுடைய குமாரன் நாட்களிலே அவன் சந்ததியின் மேல் வரச் செய்வோமென்றார்" (3 அரசர். 21:27-29).

இனி, தேவ பக்தியற்றவனும், தனக்கு முன்பாக இருந்த யாரையும் விட அதிகமான தீமை செய்தவனுமாகிய ஆக்காப் அரசனும் கூட, தனது தாழ்ச்சி மற்றும் சுய மறுதலிப்பின் மூலம் சர்வ வல்லபரான கடவுளின் தயவைப் பெற்றுக் கொண்டான், தன்னை அச்சுறுத்திய தண்டனையைத் தன் தவ முயற்சிகளால் தடுத்து நிறுத்தினான் என்றால், பீடத்தின் மீது கிறீஸ்துநாதரின் அசாதாரணமான தாழ்ச்சி பரலோகப் பிதாவிடமிருந்து அவருக்கு எதைத்தான் பெற்றுத் தராதிருக்கும்? 

தங்கள் ஆங்காரத்தாலும், துர்ப்புத்தியாலும் நீதியுள்ள கடவுள் தங்களைப் பழிவாங்கும்படி அவரைத் தூண்டும் பாவிகளின் நிமித்தம், ஆக்காப் செய்ததை விடப் பாரதூரமான அளவுக்கு அதிக ஆழமாகக் கிறீஸ்துநாதர் தம்மையே தாழ்த்திக் கொண்டார். 

ஏனெனில் கிறீஸ்துநாதர் தமது மகிமையுள்ள உடைகளை ஒதுக்கி வைத்து விடுகிறார்; திவ்விய அப்பத்தின் குணங்களுக்குள் தம்மை மறைத்துக் கொள்கிறார்; அவர் வெறுமனே, ''தம் தலையைக் கவிழ்ந்து கொண்டு மட்டும் நடக்கவில்லை. அவர் பொறுமையுள்ள பலிப் பொருளாக பீடத்தின் மீது கிடத்தப்பட் டிருக்கிறார், தமது திரு இருதயத்தின் அடியாழத்திலிருந்து அவர் பிதாவாகிய சர்வேசுரனைக் கூவியழைத்து, அவர் பாவியை மன்னித்து, அவனைத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு அவரை மன்றாடுகிறார். 

இது இப்படியிருக்க, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசியிடம் முன்பு தாம் கூறிய அதே விதமாக, "என் திருக்குமாரன் எனக்கு முன்பாக எப்படித் தம்மைத் தாழ்த்திக் கொண்டார் என்று நீங்கள் காணவில்லையா?" என்று தமது தூதர்களிடம் கேட்பார். அவர்கள் அவருக்குப் பதில் மொழியாக, "ஆம், எங்கள் ஆண்டவரும், தேவனுமானவரின் இந்த ஆழ்ந்த தாழ்ச்சியைக் கண்டு நாங்கள் அதிசயித்துப் போகிறோம்'' என்பார்கள். அப்போது கடவுள், "என் தேவ சுதன் பாவிகளுக்காக மன்றாடும்படி எனக்கு முன்பாகத் தம்மையே இவ்வாறு அழித்துக் கொண்டதாலும், தம்மைத் தாழ்த்திக் கொண்டதாலும், நான் அவர்களை மன்னித்து, அவர்களுடைய பாவங்களுக்குத் தகுதியுள்ள தண்டனையை அவர்களிட மிருந்து விலக்கி விடுவேன்' என்பார்.

ஆகவே, ஓ பாவியே, உன் தேவனாகிய ஆண்டவர் உன்னிடம் கூறுவதைக் கேள், அப்போது, உன் வாழ்வு எப்படி இது வரைக்கும் நீட்டிக்கப்பட்டது என்பதையும், உன் கொடிய அக்கிரமங்களின் அளவுக்குத் தக்கபடி நீ ஏன் இது வரை தண்டிக்கப்படவில்லை என்பதையும் நீ புரிந்து கொள்வாய். 

நீ காப்பாற்றப்பட்டதன் காரணம் முதலாவதாக நீ அடிக்கடி பூசை கண்டிருக்கிறாய் என்பதும், அதன் மூலம் கிறீஸ்துநாதரின் பரிந்துரையில் நீயும் பங்கு பெற்றிருக்கிறாய் என்பதும்தான் என்று நான் நினைக்கிறேன். 

பீடத்தின் மீது அவர் உன் ஆவல்களைத் தம் ஆவல்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்; உன் நிமித்தமாக அவர் சர்வேசுரனுக்கு முன்பாகத் தம்மையே தாழ்த்தியிருக்கிறார்; உனக்குத் தகுதியுள்ள தண்டனையை அவர் உன்னிடமிருந்து விலக்கியிருக்கிறார். 

ஆகவே, பாவியே, உனக்காகப் பிரமாணிக்கத்தோடு பரிந்து பேசுபவருக்கு உன் தாழ்ச்சியுள்ள நன்றியறிந்த தோத்திரங்களைச் செலுத்து. உன் இருதயத்திலிருந்து அவருக்கு நன்றி கூறு.

"ஓ மகா மதுரமுள்ள சேசுவே, தேவரீருடைய அளவற்ற நேசத்திற்காக, உமக்கு ஸ்துதியும் மகிமையும் உண்டாகக் கடவது. இந்த நேசத்தின் நிமித்தமாக, தேவரீர் அப்ப, இரசத்தை உமது திருச் சரீரமாகவும் திரு இரத்தமாகவும் மாற்றவும், இந்தக் கீழான தோற்றங்களுக்குள் உம்மை மறைத்துக் கொள்ளவும், உமது இந்த மட்டற்ற தாழ்ச்சியைக் கொண்டு கடவுளின் நீதியுள்ள கடுஞ்சினத்தை சாந்தப்படுத்தி, எங்கள் பாவங்களுக்குரிய தண்டனைகளிலிருந்து எங்களை விலக்கிக் காப்பாற்றவும் திவ்விய பலிபூசையில் தேவரீர் பரலோகத்திலிருந்து இறங்கி வரத் தயை புரிந்தீர். 

இந்த அளவிட முடியாத நன்மைக்காக நாங்கள் எங்கள் முழு இருதயங்களோடும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் ஆன்மாவின் முழு பலத்தோடும் நாங்கள் தேவரீரைத் துதித்துப் போற்றி, உம்மை மகிமைப்படுத்துகிறோம். பரலோக சேனைகள் தங்கள் குரல்களை எங்கள் குரல்களோடு இணைத்து, நன்றி செலுத்துவதில் எங்களிடம் குறைவுப்படுவதை நிவிர்த்தி செய்யும்படி நாங்கள் அவர்களிடமும் மன்றாடுகிறோம். 

தேவரீர் அனுதினமும் எங்கள் பீடங்களின் மீது நிகழ்த்துகிற இரட்சணியத்தின் பரம இரகசியங்களை நாங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தக்கதாகவும், சரியானபடி இந்தப் பரம இரகசியங்களுக்கு உரிய வணக்கம் செலுத்தி, அவற்றைக் கொண்டு எங்கள் நித்திய இரட்சணியத்தை நாங்கள் பெற்றுக் கொள்ளத் தக்கதாகவும், தேவரீர் எங்கள் மனங்களை ஒளிர்விக்கும் படியாக உம்மைத் தாழ்ச்சியோடு மன்றாடுகிறோம். ஆமென்.''