இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையின் உன்னத மகத்துவம்

திவ்விய பலிபூசை எந்த அளவுக்கு அனைத்தையும் கடந்த உன்னத மகத்துவமுள்ளது என்றால், பக்திச்சுவாலகர்களும், பத்திராசனருமான சம்மனசுக்களும் கூட அதை முறையான விதத்தில் புகழ முடியாது. 

தமது பக்திநெறி வழிகாட்டியில் அர்ச். பிரான்சிஸ் சலேசியார் இதுபற்றிக் கூறுவதாவது: "பூசை சகல ஞான முயற்சிகளின் சூரியனாகவும், அர்ப்பணமுள்ள தேவசிநேகத்தின் ஊற்றுக் கண்ணாகவும், தேவபக்தியின் ஆத்துமமாகவும், தேவசிநேகத்தின் நெருப்பாகவும், தேவ இரக்கத்தின் பாதாளமாகவும், கடவுள் தமது வரப்பிரசாதங்களை வழங்குகிற மதிப்பு மிக்க வழியாகவும் இருக்கிறது." 

இந்த அழகிய வார்த்தைகளின் பொருளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும், இந்த அர்ச்சியசிஷ்டவர் பயன்படுத்துகிற மகிமையுள்ள சிறப்புப் பண்புகளை விளக்குவதற்கும் நீண்ட நேரம் பிடிக்கும். அவர் சொல்ல வருவது இதுதான்: உண்மையாகவே பக்தியும், அர்ப்பணமும் உள்ளவனாக விரும்பும் எவனும், திவ்விய பலிபூசை காண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவானாக, ஏனெனில் இதுவே தேவ வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தரும் மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.

அறிஞராகிய சுவாமி ஓஸோரியுஸ் என்பவர் திவ்விய பலி பூசையைப் பரிசுத்த வேதத்தின் மற்ற சகல பரம இரகசியங்களுக்கும் முன்பாக வைக்கிறார், ஏனெனில், "திவ்விய பலிபூசையை விட அதிக பக்திக்குரியதும், ஆழங்காண முடியாத மதிப்புள்ளதுமான வேறு எதுவும் பரிசுத்த திருச்சபையில் இல்லை, ஏனெனில் அதில் பீடத்தின் ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானம் வசீகரம் செய்யப் பட்டு, மகா உன்னத சர்வேசுரனுக்கு ஒரு மகா பரிசுத்த பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார். 

சிறிது காலம் பார்பெர்க்கின் மேற்றிராணியாராக இருந்த ஃபோர்னேருஸ் என்பவரும் இவ்வாறே கூறுகிறார்: "திவ்விய பலிபூசை தனது மகத்துவத்தில் மற்ற சகல தேவத்திரவிய அனுமானங்களையும், திருச்சபையின் திருச்சடங்குகளையும் பாரதூரமான அளவுக்கு விஞ்சி நிற்கிறது" என்று அவர் கூறுகிறார். 

அவரே தொடர்ந்து: "தேவத் திரவிய அனுமானங்கள் பக்திக்குரியவை, ஆனால் திவ்விய பலிபூசை இன்னும் பாரதூரமான அளவுக்கு மேலான பக்திக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அவை ஜீவியருக்கு இரக்கத்தின் பாத்திரங்களாக இருக்கின்றன. ஆனால் பூசையோ ஜீவியருக்கும், மரித்தோருக்கும் தேவ வரப்பிரசாதத்தின் வற்றாத பெருங்கடலாக இருக்கிறது'' என்கிறார். இந்த ஆசிரியர் எந்த அளவுக்கு திவ்விய பலிபூசையை மகிமைப்படுத்துகிறார் என்று பாருங்கள். 

இனி, திவ்விய பலிபூசை இப்படி அனைத்திற்கும் மேலான உன்னத மகத்துவமுள்ளதாக இருப்பதன் காரணங்களை நாம் தியானிப்போம்.

எல்லாவற்றிற்கும் முதலாவதாக, திவ்விய பலிபூசையின் மாபெரும் உன்னத மகத்துவத்தை ஆலயங்களையும், பீடங்களையும் மந்திரிப்பதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள ஜெபங்களிலிருந்தும், சடங்குகளிலிருந்தும் நாம் ஊகித்துக் கொள்ளலாம். 

ஒரு தேவாலய அர்ப்பண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் ஜெபங்களைக் கூர்ந்து கவனித்து, மேற்றிராணியார் பயன்படுத்திய சடங்குகளைப் புரிந்து கொண்ட எவனும், தான் கண்ட காரியங்களால் தனது பக்தி தூண்டப்படாமல் இருந்திருக்கவே முடியாது. 

தேவாலயங்கள், பீடங்களின் அர்ப்பணச் சடங்குகளில் ஒருபோதும் பங்குபெற்றிராதவர்களின் நன்மைக்காக, அத்தோடு தொடர்புள்ள திருச்சடங்குகளை இங்கே சுருக்கமாக விளக்குவோம்.