இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் இந்த மறு நிகழ்வு, சர்வ வல்லபரான சர்வேசுரனுக்கு எப்படி ஏற்புடையதாக இருக்கிறது?

கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளின் இந்த மறு நிகழ்வு, சர்வ வல்லபரான சர்வேசுரனுக்கு எப்படி ஏற்புடையதாக இருக்கிறது என்பதை மனித மனத்தால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, மனித நாவாலும் அதைப் போதுமான அளவுக்கு எடுத்துரைக்க முடியாது. என்றாலும் இதை ஓரளவாவது புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும். 

கிறீஸ்துநாதர் இவ்வாறு திவ்விய பலிபூசையில் தமது திருமரணத்தைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு முன்பாக வைக்கும்போது, தாம் முன்பு அவருக்குக் காண்பித்த அதே உத்தமமான கீழ்ப்படிதலை இப்போதும் அவருக்குக் காண்பிக்கிறார். அவரது கீழ்ப்படிதல் எல்லா வகையிலும் உத்தமமானதாக இருக்கிறது. 

ஆனால் சிலுவையின் மீது மரணத்திற்குத் தம்மைக் கையளித்தபோது, அவரது மனித சுபாவம் இந்தக் கீழ்ப்படிதலுக்கென மிகப் பெரிய விலையைச் செலுத்தியது போல, வேறு ஒருபோதும் செலுத்த வேண்டியிருக்கவில்லை. 

கிறீஸ்து நாதரின் இச்செயலைப் பற்றி அர்ச். சின்னப்பர் கூறும்போது, "தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டுக்கும் அதாவது சிலுவை மரணமட்டுக்கும் கீழ்ப்படிதலுள்ளவரானார்'' என்கிறார். 

மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் மிகவும் கடினமானதாக இருந்த அவரது இந்தக் கீழ்ப்படிதல் எந்த அளவுக்குப் பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமானதாக இருந்தது என்பதையும், அதற்குப் பிதா எந்த அளவுக்கு ஒரு மிகச் செழிப்பான கைம்மாறு அளித்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளும்படி, அப்போஸ்தலர் தொடர்ந்து: "அதன் நிமித்தம் சர்வேசுரனும் அவரை உயர்த்தி, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்தார்' என்று கூறுகிறார் (பிலிப். 2:8-9). 

திவ்விய பலிபூசையில் இந்த உத்தம் கீழ்ப்படிதலையும், அத்துடன் தமது திருப்பாடுகள் மற்றும் மரணத்தோடு தொடர்புள்ள வீரத்துவமுள்ள புண்ணியங்களான தமது கறைதிரையற்ற மாசற்றதனம், ஆழ்ந்த தாழ்ச்சி, வெல்லப்பட முடியாத தமது பொறுமை, தம் பிதாவுக்கு மட்டுமின்றி, தம்மைக் கொலை செய்தவர்களுக்கும், தமது எதிரிகளுக்கும், நம்மைப் போன்ற நன்றியற்ற பாவிகளுக்கும் கூட தாம் காட்டிய ஆர்வமுள்ள சிநேகம் ஆகியவற்றையும் அவர்தம் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறார்.

இது மட்டுமின்றி, அவர் தாம் அனுபவித்த வேதனையையும், தமது திரு இருதயம் பெற்ற தாக்குதல்களையும், தம்மை அமைதியற்றவராகச் செய்த மரண பயத்தையும், தமது எலும்புகள் அனைத்தும் பிசகிப் போனதையும், இறுதியாக, தம் திருவிலாவைத் துளைத்த ஈட்டியின் தாக்குதலையும் அவர் தம் பிதாவுக்கு ஒப்புக் கொடுக்கிறார். 

இவை அனைத்தையும், அவை இப்போது மீண்டும் நிகழ்வது போல உயிரோட்டமான முறையில் அவருக்கு முன்பாக வைத்து, அதன் மூலம், சிலுவைப் பாடுகளின் போது பிதாவின் கோபத்தைத் தாம் தமது பரிகாரப் பலியால் தணியச் செய்தது போலவே, இப்போதும் அதைத் தணிந்து போகச் செய்கிறார். 

தம்மீது தமது திருச்சுதன் கொண்ட அன்பின் காரணமாகவும், தமது மேலான மகிமைக்காகவும் எவ்வளவு மன உவப்போடு மரணத்தின் கசப்பைத் தாங்கிக் கொண்டார் என்பதைப் பிதாவானவர் கண்டபோது, பாவத்தின் மீதான அவரது கடுஞ்சினம் சாந்தப்படுத்தப்பட்டது. 

இவ்வாறு கிறீஸ்துநாதர் தமது பிதாவின் மன்னிப்பைப் பாவிகளுக்குப் பெற்றுத் தந்தார். உலகத்தைக் கடவுளோடு மீண்டும் ஒன்றிக்கச் செய்தார். இதையே அவர் ஒவ்வொரு பூசையிலும் செய்து, நமக்குப் பிதாவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருகிறார். இந்த ஆசீர்வாதங் களுக்காக நாம் போதிய அளவுக்கு ஒருபோதும் அவருக்கு நன்றி செலுத்த இயலாது.

இப்போது, கிறீஸ்துநாதரின் மரணம் இப்படிப் புதுப்பிக்கப் படுவதால் நமக்கு வரும் அளவற்ற பலன்களை மதிக்கும் விதமாக, தேவ பக்தியில் சிறந்தவர்களும், அறிஞர்களுமான மனிதர்கள் சொல்லும் காரியங்களை நாம் கேட்போம். 

முதலாவதாக, பாப்பரசர் அர்ச். கிரகோரியார்: "இந்த திவ்விய பலி ஆத்துமங்களை ஒரு விசேஷ முறையில் நித்திய அழிவிலிருந்து பாதுகாக்கிறது. ஏனெனில் அது கடவுளின் ஏக பேறான திருச்சுதனின் திருமரணத்தின் மறு நிகழ்வாக இருக்கிறது'' என்று அவர் கூறுகிறார். தங்கள் பாவங்களின் காரணமாகத் தங்கள் நித்திய இரட்சணியத்தைப் பற்றி பயப்படுபவர் களுக்கு இந்த வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட ஆறுதலைத் தருகின்றன! 

ஏனெனில், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் கீழ் தமது நூல்களை எழுதியவரான அர்ச். கிரகோரியார், திவ்விய பலிபூசை கிறீஸ்து நாதரின் திருமரணத்தை ஞான முறையில் மீண்டும் நிகழச் செய்வதால், அதன் மூலம் அது நித்திய மரணத்திலிருந்து ஒரு விசேஷமான முறையில் ஆத்துமங்களைப் பாதுகாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார். ஆகவே, பூசை காண்பதில் நாம் அதிக அக்கறை காட்டுவோம். கிறீஸ்துநாதரின் திருமரணத்தை நாம் மதித்து வணங்கி, நித்திய அழிவினின்று நாம் தப்புமாறு, பிதாவாகிய சர்வேசுரனுக்கு அதைக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்போம்.

அறிஞரான மான்ஸி இதைப் பின்வரும் முறையில் எடுத் துரைக்கிறார்: "சிலுவைப் பீடத்தின் மீது தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தவராகிய கடவுளின் ஏக பேறான திருச்சுதன், பூசையில் புதிதாக மீண்டும் பலியிடப்படுகிறார் என்பதால், சிலுவைப்பலி கொண்டுள்ள அதே மாபெரும் மதிப்பைப் பூசைப் பலியும் கொண்டுள்ளது என்பது விளங்குகிறது." இந்த வார்த்தைகளிலுள்ள உண்மையையும், அது எப்படிச் சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் இப்போது விவரிப்போம்.

கர்தினால் ஓசியுஸ் என்பவர் ஆணித்தரமான முறையில் கூறுவதாவது: "திவ்விய பலிபூசையில் நாம் கிறீஸ்துநாதரைப் புதிதாகச் சிலுவையில் அறைவதில்லை என்றாலும், அதுதான் உண்மை என்பது போல, அவரது திருமரணத்தில் நாம் பங்குபெறுகிறோம். சிலுவைப் பலியில் இரத்தம் சிந்துதலோடு அவரது மரணம் நிகழ்ந்தது. பூசைப் பலியில் அது இரத்தம் சிந்தாமலும், ஞான முறையிலும் நிகழ்கிறது. என்றாலும் இரத்தப் பலி இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பது போல, பூசைப் பலியும், இரத்தப் பலி விளைவிக்கும் அதே பலன்களை விளைவிக்கிறது." 

காணக் கூடாத முறையில் கிறீஸ்துநாதரின் திருமரணம் மீண்டும் நிகழ்வது, அவரது உண்மையான, காணக்கூடிய மரணம் கொண்டிருந்த அதே விளைவு களை உண்டாக்குகிறது என்பது விசித்திரமானதாகத் தோன்ற வில்லையா? என்றாலும் கர்தினால் இதை இப்படியே அறிக்கை யிடுகிறார். ஏனெனில் அவரே தொடர்ந்து, "ஏனெனில், கிறீஸ்துநாதர் நம் கண்களுக்கு முன்பாக மரித்துக் கொண்டிருப்பது போலவே, பூசையில் அவரது மரணத்தின் பலன்களில் நாம் பங்குபெறுகிறோம்" என்று கூறுகிறார். 

இது உண்மையாக இருப்பதால், திவ்விய பலிபூசையின் வல்லமையையும், அதன் நன்மை பயக்கும் தன்மையையும், அதில் பக்தியோடு பங்கு பெறுவோருக்காக அதில் அடங்கியுள்ள ஆசீர்வாதங்களையும் யாரால் மதிப்பிட முடியும்?