இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையின் மட்டில் மேலதிகமான பக்தியைத் தூண்ட உதவும் அற்புதமான சம்பவம்

பின்வரும் அற்புதமான சம்பவம் இதுவரை சொல்லப்பட்டுள்ளவற்றை விளக்கவும், வாசகரின் மனதில் திவ்விய பலிபூசை யின்மட்டில் மேலதிகமான பக்தியைத் தூண்டவும் உதவும். 

அர்ச் அகுஸ்தினார் சபையின் குறிப்பிடத்தக்க உறுப்பினரான அர்ச். ஃபாக்குந்தோ அருளப்பரின் வாழ்வில், எந்தக் காரணத்திற்காகவும் பூசை வைப்பதை அவர் தவிர்த்ததேயில்லை என்றும், உண்மையில், திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுக்கவும், நமதாண்டவரைப் பெற்றுக் கொள்ளவும் தமக்கிருந்த மாபெரும் ஏக்கத்தால் தூண்டப்பட்டு, ஒவ்வொரு நாளும் முடிந்த வரை வெகு அதிகாலையிலேயே அவர் பூசைப்பலியை நிறைவேற்றினார் என்றும் நாம் வாசிக்கிறோம். 

ஆயினும், எந்த அளவுக்கு அவர் மிக மெதுவாகப் பூசை வைப்பார் என்றால், பீடப் பரிசாரகன் மிகவும் சோர்வடைந்து, பீடத்தில் அவரைத் தனியாக விட்டு விட்டுப் போய்விடுவது வழக்கமாக இருந்தது. இறுதியில், அவருடைய பூசைக்கு உதவி செய்ய யாரும் கிடைக்க மாட்டார்கள். 

அதன் பின் இந்த அர்ச்சியசிஷ்டவர் மடத்து சிரேஷ்டரிடம் சென்று, தமது பூசைக்கு உதவி செய்ய சகோதரர்களுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் சிரேஷ்டர் கோபத்தோடு: "மிக நீண்ட நேரம் பூசை வைப்பதால், சகோதரர்களுக்கு ஏன் இவ்வளவு தொல்லை தருகிறீர்கள்? நீங்கள் கேட்பதைச் செய்வதை விட இனி மற்ற குருக்களைப் போலத்தான் நீங்களும் பூசை வைக்க வேண்டும் என்றுதான் நான் உங்களுக்கு உத்தரவிடுவேன்'' என்றார். அருளப்பர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார். 

ஆனால் இந்தக் கீழ்ப்படிதலின் காரணமாக அவர் எவ்வளவு துன்பப்பட்டார் என்றால், அவர் மீண்டும் சிரேஷ்டரிடம் வந்து, அவரது பாதங்களில் விழுந்து, தமது உத்தரவை அவர் விலக்கிக் கொள்ளும்படி இரந்து கேட்டுக் கொண்டார். 

அதிக விரைவாகத் தம்மால் ஏன் பூசை வைக்க முடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பாவசங்கீர்த்தனத்தில் அருளப்பர் தம் சிரேஷ்டருக்கு விளக்கிக் கூறும் வரை, அவர் தமது உத்தரவை விலக்கிக் கொள்ள சம்மதிக்கவேயில்லை. அந்தக் காரணங்களைக் கேட்டபின், அவர் தம் சகோதரர்களிடம், அவர்களது பொறுமை எவ்வளவுதான் சோதிக்கப்பட்டாலும், சுவாமி அருளப்பரின் பூசைக்கு அவர்கள் உதவி செய்துதான் ஆக வேண்டும் என்று கூறத் தயங்கவில்லை. 

மேலும், சிரேஷ்டர் நம் அர்ச்சியசிஷ்டவரிடமிருந்து அனுமதி பெற்று, அவரது இரகசியத்தை மற்றொரு குருவுக்கு அறிவித்தார். அவர் அவரிடம்: ''நம் சுவாமி அருளப்பர் ஏன் இவ்வளவு மெதுவாகப் பூசை வைக்கிறார் என்பதற்கான காரணத்தை நான் உங்களுக்குச் சொல்லும்போது நீங்கள் அதை நம்ப வேண்டும். அது ஏனெனில் பூசையில் நிறைவேற்றப்படும் ஆழ்ந்த பரம இரகசியங்களைக் கடவுள் அவருக்கு வெளிப்படுத்துகிறார்; இந்த இரகசியங்கள் எவ்வளவு பக்திக்குரியவை என்றால் எந்த மனித புத்தியாலும் இவற்றைப் புரிந்து கொள்ளவே முடியாது. அவைகளைப் பற்றி அவர் என்னிடம் வெளிப்படுத்திய இரகசியங்கள் எவ்வளவு அதியற்புதமானவை என்றால், நான் கடும் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட மயக்கநிலைக்குச் சென்று விட்டேன். 

கிறீஸ்துநாதர் அடிக்கடி இந்த குருவுக்குக் காணக்கூடிய விதமாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். ஒரு நண்பனோடு பேசுவது போல அவரோடு பேசுகிறார், தமது ஐந்து திருக்காயங்களையும் அவருக்குக் காட்டுகிறார், அவற்றிலிருந்து அளவுகடந்த பிரகாசமுள்ள ஓர் ஒளி புறப்பட்டு, நம் புனிதரின் மீது வீசி, அவரது சரீரத்தையும், ஆன்மாவையும் வீரியமுள்ளதாக்குகிறது. 

இதனால் உலகத்தன்மையான போஷிப்பின் அவசியம் எதையும் அவர் உணர்வதில்லை. நண்பகல் சூரியனைப் போல் ஒளிவீசும் கிறீஸ்துநாதரின் திருச்சரீரத்தையும் அவர் பார்க்கிறார், அதன் அளவற்ற அழகையும், மகிமையையும் கண்டுணர்கிறார். அவர் அறிந்து கொள்ள சலுகை பெற்றுள்ள உயர்வான, தெய்வீக இரகசியங்கள் இத்தகையவையே, இவை மனிதன் கண்டு பிடிக்கும்படி அவனுக்கு அருளப்படாதவை, அவற்றைப் பற்றிப் பேசவோ மனிதன் அனுமதிக்கப்படுவதேயில்லை. 

பூசை வைப்பதால், அல்லது அதில் பங்கு பெறுவதால் மனுக்குலத்திற்கு வழங்கப்படும் அளவற்ற நன்மைகளைப் பற்றி இவ்வாறு எனக்கு அறிவிக்கப்பட்டிருப்பதால், பூசை வைக்கவோ, அல்லது காணவோ தவறுவதேயில்லை என்றும், மற்றவர்களும் இப்படியே செய்ய அவர்களைத் தூண்ட என்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன் என்றும் உறுதியான பிரதிக்கினை எடுத்திருக்கிறேன்" என்றார். 

இந்தக் குறிப்பிடத்தக்க வார்த்தைகளிலிருந்து, திவ்விய பலிபூசையில் மிகுந்த மகத்துவமுள்ள பரம இரகசியங்கள் அடங்கியுள்ளன என்றும், அதன் பேரில் மிக ஆழ்ந்த சங்கை வணக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றும் நாம் தெளிவாகக் காண்கிறோம்.