இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது பிறப்பைப் புதுப்பிக்கிறார்

''அந்நாளில் பர்வதங்கள் (மலைகள்) இனிமையைப் பொழியும்; குன்றுகளினின்று அமுதம் வடியும்” (யோவேல். 3:18). இவ்வாறு பரிசுத்த திருச்சபை உலகம் முழுவதும் நம் இரட்சகரின் பிறப்பின் இனிய பரம இரகசியத்தைப் பற்றிப் பேசுகிறது. 

உண்மையாகவே சர்வேசுரனுடைய ஏக பேறான திருச்சுதன் மனித சரீரத்தால் உடுத்தப்பட்டவராக இந்த உலகில் வந்து பிறந்த அந்த உன்னதமான நாளில், மலைகள் இனிமையைப் பொழிந்தன, குன்றுகள் பாலும் தேனும் வடித்தன என்று உண்மையாகவே சொல்ல முடியும். 

ஏனெனில் தேனையும், பாலையும் விட பாரதூரமான அளவுக்கு அதிக இனிமையானவர், தம்மிலேயே சகல இனிமைகளுக்கும் பூரண ஊற்றாயிருப்பவர், உலகில் தமது பிரவேசத்தால் எல்லாவற்றையும் இனியதாக்கினார்; அவர் பரலோகத்தினின்று மெய்யான மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார்; அவர் நல்ல மனதுள்ள மனிதர்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வந்தார்; அவர் கஸ்திப்படுவோருக்குத் தேற்றரவையும், உலகிற்கு ஒரு புதிய, அதிகப் பிரகாசமான நாளின் விடியலையும் கொண்டு வந்தார்.

ஓ, பரலோகப் பிதா அந்த இரவில் தமது பூரண பிரியத்திற்குரியவரும், நித்தியத்திலிருந்து தம்மால் ஜெனிப்பிக்கப் படுபவருமாகிய தமது திருச்சுதன், மகள் என்னும் பிரியமுள்ள பெயரால் அழைக்கப்படத் தாம் தயைகூர்ந்த மாசற்ற கன்னிகையிடமிருந்து பிறந்ததைக் கண்டபோது, அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாக இருந்தது! தேவ திருச்சுதன் நம் மனுஷீகம் என்னும் உடை தரித்தவராகவும், பரலோகத்தில் ஒரு பிதாவை மட்டுமின்றி, பூலோகத்தில் ஒரு தாயையும் இப்போது கொண்டிருப்பவராகவும் தம்மைக் காண்பதில் எவ்வளவு உவகையடைந்தார்! 

இஸ்பிரீத்து சாந்துவானவர், உத்தம சிநேகத்தின் பந்தனத்தைக் கொண்டு தம்மால் பிதாவோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த தேவ சுதன், இப்போது தமது செயலால், தேவமனிதர் என்னும் ஒரே ஆளில், தேவ, மனித சுபாவங்கள் தனித்தனியாகவும், வேறுபட்டவையாகவும் இருந்தாலும் இந்த இரு சுபாவங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் அளவுக்கு மனித சுபாவத்தை மிக அந்நியோந்நியமாகத் தம்மோடு இணைத்துக் கொண்டதைக் கண்டபோது, இந்த தேவசிநேக ஆவியானவர் அடைந்த திருப்தி எவ்வளவு பெரிதாக இருந்தது! 

புதிதாய்ப் பிறந்த தன் உதரத்தின் கனியாகிய தேவ சுதனை உற்று நோக்கிய திவ்விய கன்னிகை, தன் கரத்தில் இப்போது தான் சுமந்திருக்கும் இந்தக் குழந்தை தன் திருமகன் மட்டுமல்ல, மாறாக, அவர் மகா உன்னத சர்வேசுரனாகிய நித்திய பிதாவின் திருச்சுதனாகவும் இருக்கிறார் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட போது, அவர்களுடைய ஆத்துமத்தை நிரப்பிய இனிமை எவ்வளவு பெரிதாயிருந்தது!

மேலும், சகல மனிதக் குழந்தைகளிலும் அதிக அழகுள்ளவரைத் தங்கள் கண்களால் காணவும், தங்கள் அரவணைப்பில் அவரை ஏந்திக் கொள்ளவும் பாக்கியம் பெற்ற மனிதர்களின் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருந்தது! 

அர்ச். குப்பர்த்தினோ சூசையப்பருக்கு ஒரு வெளிப்பாடு அருளப்பட்டது என்று நாம் அவருடைய சரித்திரத்தில் வாசிக்கிறோம். அதன்படி, மூன்று அரசர்களும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிய பின், புதிதாய்ப் பிறந்துள்ள யூதர்களின் அரசரைக் காணவும், அவரது அற்புத அழகைக் கொண்டு தங்கள் கண்களுக்கும், மனதிற்கும் விருந்தளிக்கவும், அந்நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் திருயாத்திரிகர்கள் கூட்டங்கூட்டமாக பெத்லகேமுக்கு வந்தார்கள். 

இந்த அழகிய குழந்தையைத் தங்கள் கரங்களில் ஏந்திக் கொள்ளவும், தங்கள் இருதயத்தோடு அவரை அணைத்துக் கொள்ளவும் சேசுவின் திருத்தாயாரிடம் அவர்கள் அனுமதி கேட்டார்கள். மகா பரிசுத்த இராக்கினியும் தயவோடு அவர்களுக்கு அனுமதியளித்தார்கள், அப்போது இந்த மென்மையான திருக்குழந்தையானவர் நல்லவர்களை அன்போடு வருடி சீராட்டுவதையும், தீயவர்களிடம் செல்ல விரும்பாமல் தம்மைத் தூர விலக்கிக் கொள்வதையும் கண்டு, பாக்கியவதியான திவ்விய கன்னிகை அதிசயித்தார்கள் என்றும் இந்த அர்ச்சியசிஷ்டவர் கூறுகிறார்.

தேவ சலுகை பெற்ற இந்த மனிதர்கள் பேறுபெற்றவர்கள் என்று நாம் சரியாகவே மதித்தாலும், நாம் அவர்களை விடவும் அதிக சலுகை பெற்றவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் நாம் நம் விசுவாசக் கண்களைக் கொண்டு அதே தேவ குழந்தையானவரைத் தினமும் உற்று நோக்கி, அவரது பிறப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம். 

பாப்பரசர் முதலாம் சிங்கராயர் கூறுவதைக் கேளுங்கள்: "சுவிசேஷகர்கள் எழுதி வைத்துள்ள காரியங்களாலும், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளாலும் நம் மனங்கள் ஒளிர்விக்கப்பட்டும், நம் அன்பு தூண்டப்பட்டும் இருக்க, கிறீஸ்துநாதரின் பிறப்பு ஒரு கடந்த கால நிகழ்ச்சி என்று நாம் மதிப்பதாகத் தோன்றவில்லை, மாறாக, அது நம் கண்களுக்கு முன்பாக நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது. 

ஏனெனில், "இதோ, எல்லா ஜனத்துக்கும் மகா சந்தோஷத்தை வருவிக்கும் சுப செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதேதெனில்: இன்று.... கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்" (லூக். 2:10-11) என்று சம்மனசானவர் இடையர்களுக்கு அறிவித்த அதே வார்த்தைகள் நமக்கும் அறிவிக்கப்படுவதை நாம் கேட்கிறோம்." 

ஒவ்வொரு நாளும் இந்த மகிழ்ச்சியான பிறப்பின்போது நாமும் அங்கே இருக்கிறோம், நாம் பூசைக்குப் போனால் போதும், அங்கே ஒவ்வொரு நாளும் நம் கண்கள் இந்தப் பிறப்பைக் காணலாம். ஏனெனில் அப்போது அந்த தெய்வீகப் பிறப்பு உண்மையாகவே புதுப்பிக்கப்படுகிறது. அதன் வழியாக நம் இரட்சணிய அலுவல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மடாதிபதியான ஹில்டகார்டின் வெளிப்பாடுகளிலும் இதே காரியம் நமக்குக் கூறப்படுகிறது: "பூசையில் அப்பமும், இரசமும் கிறீஸ்துநாதரின் திருச்சரீரமாகவும், இரத்தமாகவும் மாறும் நேரத்தில், அவரது மனிதாவதாரம் மற்றும் பிறப்பின் சூழ்நிலைகள், தேவசுதன் இவ்வுலகில் இருந்தபோது இந்தப் பரம இரகசியங்கள் எப்படி அவரால் நிறைவேற்றப்பட்டனவோ, அதே அளவுக்குத் தெள்ளத் தெளிவாக நமக்கு முன்பாகப் பிரதிபலிக்கப்படுகின்றன." 

இந்த சாட்சியம் திருச்சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறீஸ்துநாதருடைய பிறப்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்தது போலவே, மோட்சத்தின் பார்வையில், பூசையில் அது புதுப்பிக்கப்படுகிறது, புதிதாக மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. 

எந்த முறையில், யாருடைய செயலால் கிறீஸ்துநாதர் திவ்விய பலி பூசையில் கிறீஸ்துநாதர் பிறக்கிறார் என்பதைப் பின்வரும் வார்த்தை களில் அர்ச். எரோணிமுஸ் நமக்குக் கூறுகிறார்: "குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்ட தமது உதடுகளால் கிறீஸ்துநாதரை மீண்டும் பிறக்கச் செய்கிறார்." அதாவது, குருவானவர் உத்தரவிடும் போது, அவர் தேவ வசீகர வார்த்தைகளை உச்சரிக்கும் போது, கிறீஸ்துநாதர் உலகில் வந்து பிறக்கிறார். 

குருவானவர் பூசை நிறை வேற்றுவதற்கு முன்பாகச் சொல்லும்படி தாம் இயற்றித் தந்த ஜெபத்தில் பாப்பரசர் 15-ம் கிரகோரியாரும் இதே காரியத்தை அறிக்கையிடுகிறார்: "நான் இப்போது திவ்விய பலிபூசை நிறைவேற்றவும், நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரை பிறக்கச் செய்யவும் போகிறேன்."