இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பூசையில் கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளைப் புதுப்பிப்பதற்கான மற்றொரு காரணம், சிலுவையின் மீது தம்மைத் தாமே பலியாக்கியதன் பலன்களை நமக்குத் தருவதாகும்

பூசையில் அவர் தமது திருப்பாடுகளைப் புதுப்பிப்பதற்கான மற்றொரு காரணம் என்னவெனில், சிலுவையின் மீது தம்மைத் தாமே பலியாக்கியதன் பலன்களை நமக்குத் தருவதாகும். அவர் தமது வாழ்வு முழுவதும், முக்கியமாகத் தாம் சிலுவையின் மீது இருந்த போதும், பேறுபலன்களின் அளவற்றதாகிய திரட்டு ஒன்றை சம்பாதித்தார். 

அவற்றைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்களாகக் காணப்பட்ட ஒரு சில பக்தியுள்ள மனிதர்கள் மட்டுமே இந்தப் பேறுபலன்களின் திரட்டில் அப்போது பங்கடைந்தார்கள். இப்போது அவர் இந்தப் பேறுபலன்களின் பொக்கிஷங்களை தினமும், பல சந்தர்ப்பங்களில் பகிர்ந்தளிக்கிறார். ஆயினும் முக்கியமாக, திவ்விய பலிபூசையின் போதுதான் அவற்றை அவர் ஏராளமாக நமக்குப் பகிர்ந்தளிக்கிறார்.

ஒரு பக்தியுள்ள நூலாசிரியர் இப்படிக் கூறுகிறார்: ''சிலுவையின் மீது பொதுவான இரட்சணியப் பலியாக இருந்தது, திவ்விய பலிபூசையில், தனிமனிதர்களுக்கான பலியாக இருக்கிறது. இதன் மூலம் சிலுவைப் பலியின் பலனும், வல்லமையும், ஒவ்வொருவனுக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது." இவை பாவிகளுக்கு மகிழ்ச்சியும், உறுதியும் தரும் வார்த்தைகள். 

கல்வாரியில் சிலுவையினடியில் நின்று, அந்த வாக்குக் கெட்டாத திவ்விய பலியின் கனிகளில் பங்குபெற நமக்குக் கொடுத்து வைக்கவில்லை, என்றாலும், நாம் பக்தியோடும், கவனத்தோடும் பூசை கண்டால், சிலுவைப் பலியின் பலனும் வல்லமையும் நம் ஆத்துமங்களுக்கு வழங்கப்படும்--ஆயினும் உண்மையில் அதே முறையில் அல்ல, மாறாக, ஒவ்வொருவனுடைய பக்தியின் ஆழத்திற்கு ஏற்ப, தனிப்பட்ட முறையில் அவனவனுக்கு அவை வழங்கப்படும்.

இனி, நம் நிமித்தமாக, திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதர் தமது திருப்பாடுகளைப் புதுப்பித்து, அதன் பேறுபலன்களை நம்மீது பொழிவதும், அவற்றை நமக்கு வழங்குவதும் நமக்கு எப்பேர்ப்பட்ட மாபெரும் நன்மை என்பதைப் பாருங்கள்! அவர் ஏன் இதைச் செய்கிறார் என்று நினைக்கிறீர்கள்? 

முதலாவதாக, அந்தத் திருப்பாடுகளின் பேறுபலன்களை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, அவற்றை நம் ஆன்மாக்களின் மாபெரும் ஆதாயத்திற்காக சர்வ வல்லப சர்வேசுரனுக்கு நாம் ஒப்புக்கொடுப்பதற்காக அவர் இப்படிச் செய்கிறார். 

அர்ச். மெட்டில்டா இந்த ஒப்புக்கொடுத்தல் நமக்கு எவ்வளவு பெரும் அனுகூலம் என்று கூறுகிறாள். கிறீஸ்துநாதர் ஒரு முறை அவளிடம் : "இதோ, என் கசப்பான பாடுகள் அனைத்தும் உனக்குச் சொந்தமாயிருக்குமாறும், நீ அவற்றை எனக்குத் திரும்பவும் ஒப்புக்கொடுக்குமாறும் நான் அவை அனைத்தையும் உன் மீது பொழிகிறேன்" என்று கூறினார். 

இந்தக் கொடை எல்லாவற்றிற்கும் மேலாக திவ்விய பலிபூசையில்தான் நமக்கு வழங்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கும்படியாக, நமதாண்டவர் தொடர்ந்து: "அவன் நூறுமடங்காகப் பெற்றுக் கொள்வான், நித்திய ஜீவியத்தையும் கொண்டிருப்பான் என்று நான் கூறியுள்ளது போல, என்னால் தனக்குச் சொந்தமாக்கப்பட்ட என் பாடுகளை எனக்கு ஒப்புக் கொடுப்பவன் எவனோ, அவன் எனக்குத் தரும் எல்லாவற்றையும் இரு மடங்காகப் பெற்றுக்கொள்வான்.''

இந்த வார்த்தைகள் உண்மையாகவே ஆறுதல் அளிப்பவையாக இருக்கின்றன. பூசையில், விலையேறப்பெற்ற பொக்கிஷங்களைக் கிறீஸ்துநாதர் நம்மீது பொழிகிறார் என்பதால், அதைச் சொந்தமாகக் கொண்டிருப்பதில் நாம் அளவற்ற பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறோம். இவற்றை அதிகரிப்பது நம் சக்திக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. 

நாம் நமதாண்டவரிடம், "சேசுவே, உமது கசப்பான திருப்பாடுகளை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்" என்று சொன்னால் மட்டும் போதும், அப்போது அவர், "என் குழந்தாய், நான் அதை உனக்கு இரு மடங்காகத் திருப்பித் தருகிறேன்'' என்று பதில் சொல்வார். 

அவரது விலை மதியாத திரு இரத்தத்தை நாம் அவருக்கு ஒப்புக்கொடுத்தாலும், அவர் இதே பதிலைத்தான் தருகிறார். ஏனெனில், அவருடைய திருப்பாடுகளில் என்ன பாகத்தை நாம் அவருக்கு ஒப்புக்கொடுத்தாலும், அதை அவர் நமக்கு இருமடங்காகத் திருப்பித் தருகிறார். 

அவரது திருப்பாடுகளின் எந்த ஒரு பங்கையும் நாம் அவருக்கு ஒப்புக்கொடுக்கும் போதெல்லாம் அவர் இப்படியே இருமடங்காகத் திருப்பித் தருகிறார். உண்மையிலேயே இது ஒரு நல்ல அறவட்டியாக இருக்கிறது! இது ஞான செல்வங்களைச் சம்பாதிப்பதற்கு மிகச்சிறந்த, மிக எளிதான வழியாக இருக்கிறது!

கிறீஸ்துநாதர் பூசையில் தமது திருப்பாடுகளைப் புதுப்பிப் பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சிலுவைப் பலியில் பங்கு பெற இயலாத விசுவாசிகள், அதே பக்தியோடு பூசையில் பங்கு பெறுவதன் மூலம், சிலுவையின் அடியில் உண்மையாகவே நின்று கொண்டிருந்தவர்கள் சம்பாதித்துக் கொண்ட அதே வரப்பிரசாதங்களையும், பேறுபலன்களையும் தாங்களும் சம்பாதித்துக் கொள்ளும்படியாக அவர் இப்படிச் செய்கிறார். 

"எங்களுடையது எவ்வளவு பெரிய பலி என்று பாருங்கள்!" என்று நாம் பெருமை பாராட்டிக் கொள்ளலாம்! இது முன்பு சிலுவையின் மீது ஒப்புக்கொடுக்கப்பட்ட பலியின் வெறும் ஞாபகம் அல்ல, மாறாக இது (அதனோடு) ஒரே பலியாக இருக்கிறது, எப்போதும் அப்படியே இருக்கும். மேலும் இது விளைவிக்கும் பலன்கள், சிலுவைப் பலி விளைவித்த பலன்களுக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. இந்த உறுதிப்பாடு ஏறக்குறைய நம்ப முடியாதது போலத் தோன்றுகிறது. திவ்விய பலிபூசை கல்வாரியின் மீது ஒப்புக்கொடுக்கப்பட்ட அதே பலியாக இருக்க முடியுமா? இருக்க முடியும் என்றால், பூசைப் பலி எவ்வளவுவியப்புக்குரியதும், பலன் மிக்கதுமான பலியாக இருக்கிறது! இக்காரியத்தில் மோலினாவின் வார்த்தைகளைக் கேளுங்கள்:

"தாம் சிலுவையின் மீது ஒப்புக்கொடுத்த அதே பலியைத் தமது திருச்சபை நிரந்தரமாக ஒப்புக்கொடுத்து வர வேண்டும் என்று கிறீஸ்துநாதர் நியமம் செய்திருக்கிறார். பூசைப் பலியும், சிலுவைப் பலியும் ஒன்றுதான் என்றாலும், பூசைப் பலி இரத்தம் சிந்தாத முறையில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. அதே பலி என்று நான் சொல்கிறேன், என்றாலும் பூசைப்பலி தன்னில் அளவிட முடியாதபடி அதிக வரப்பிரசாதங்களையும், மிகச் சிறந்த நன்மைகளையும் கொண்டுள்ளது. 

அது சிலுவைப் பலியோடு ஒரே பலியாக இருப்பதால், சிலுவைப் பலிக்குள்ள அதே வல்லமையையும் அதே பேறுபலனையும் இதுவும் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பலியைப் போலவே, இதுவும் அதே அளவுக்கு கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். பலிப் பொருள் ஒன்றுதான், குருவானவரும் ஒருவரே; ஒரே கடவுளுக்கு, ஒரே நோக்கத்திற்காக, இரண்டு பலிகளுமே ஒப்புக்கொடுக்கப்படுகின்றன என்பதால், இவை இரண்டும் உண்மையாகவும், அடிப்படையிலும் ஒரே பலியாகத்தான் இருக்கின்றன. 

ஒப்புக்கொடுக்கப்படும் முறையில் மட்டுமே இவை இரண்டும் மாறுபடுகின்றன. ஏனெனில் சிலுவை யின் மீது கிறீஸ்துநாதர் வேதனையோடும், இரத்தம் சிந்துதலோடும் பலியாக்கப்பட்டார், ஆனால் இப்போது, அவர் வேதனையற்றதும், இரத்தம் சிந்தாத முறையிலும் பலிபீடத்தின் மீது பலியாக்கப் படுகிறார்."

ஆகவே, ஓ கிறீஸ்தவனே, இந்த ஆணித்தரமான வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்; திவ்விய பலிபூசையின் விலை மதிக்கப்படாத மதிப்பையும், அதன் மாபெரும் மேன்மையையும், அதன் மிகப் பெரிய வல்லமையையும் பற்றிச் சிந்தித்துப் பார். பக்தியும் ஞானமும் உள்ள மனிதர்களின் போதகங்களிலிருந்து மட்டும் இதை நாம் அறிந்து கொள்வதில்லை: மாறாக, சிலுவைப் பலியும், பூசைப் பலியும் ஒன்றே என்று திருச்சபையே கூட நேரடியாகப் பிரகடனம் செய்கிறது.

இவ்வாறு, நாம் கல்வாரியின் மீது இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டுமோ அதுபோல, அதற்கு சற்றும் குறையாத பக்தியிலும், ஞான ஒடுக்கத்திலும் பூசை காண்போம் என்றால், சிலுவைப் பலியில் நேரடியாகப் பங்கு பெற்றவர்களைப் போலவே நாமும் அதே அளவு பேறுபலன்களை நமக்காக சம்பாதித்துக் கொள்வோம். 

தினமும் திவ்விய பலிபூசையில் கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளைக் காணவும், அவற்றில் பங்குபெறவும், அவற்றின் கனிகளை நம் ஆன்மாக்களின் நன்மைக்கென பெற்றுக் கொள்ளவும் நம்மால் முடியும் என்பதால், நாம் எந்த அளவுக்கு உன்னத பாக்கியம் பெற்றவர்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? 

பூசையின் போது, ஞான ரீதியாக நாம் மரித்துக் கொண்டிருக்கும் இரட்சகரின் சிலுவையின் அடியில் நின்று கொண்டிருக்க முடியும் என்பதாலும், சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்தவர்களைப் போலவே நாமும் நம் கண்களால் அவரைக் காண முடியும், அவரோடு பேச முடியும், நம் பிரச்சினைகளை அவரிடம் கூற முடியும், அவரிடமிருந்து உதவியும் ஆறுதலும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற முறையில் நாம் உண்மையாகவே பேறுபெற்றவர்களாக இருக்கிறோம். 

இவ்வாறு கிறீஸ்துநாதர் அனுதினமும் நம் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கிற நன்மைகளை மதித்துப் போற்ற நாம் எந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்! அவர் இவ்வாறு நம்மை நோக்கி நீட்டுகிற வரப்பிரசாதங்களில் ஒரு பங்கை சுதந்தரித்துக் கொள்ள நாம் எவ்வளவு ஏக்கமும் ஆவலும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்!