இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (61-77)

61. வேறு வகையில் உன்னை மேற்கொண்டிருக்கக் கூடிய சோதனைகளுக்கு எதிராக நீ காணும் பூசையால் நீ பலப்படுத்தப் படுவாய்.

62. திவ்விய பலிபூசை ஒரு பரிசுத்த மரணத்திற்கான வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாகவும் உனக்கு இருக்கும்.

63. திவ்விய பலிபூசைக்கு நீ காட்டியுள்ள நேசம், உன் இறுதி கணங்களில் தேவதூதர்கள் மற்றும் அர்ச்சியசிஷ்டவர்களின் விசேஷ உதவியை உனக்கு உறுதியாகப் பெற்றுத் தரும்.

64. உன் வாழ்நாளில் நீ கண்ட பூசைகளின் ஞாபகம் உன் மரண வேளையில் உனக்கு ஓர் இனிய ஆறுதலாக இருந்து, தேவ இரக்கத்தின் மீது நீ ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

65. கண்டிப்பான நீதிபரருக்கு முன்பாக நீ நிற்கும் போது, அவை மறக்கப்படாது, உனக்குத் தயவு காண்பிக்கும்படி அவை அவரைத் தூண்டும்.

66. அடிக்கடி பூசை காண்பதன் மூலம் நீ ஏற்கனவே பெருமளவுக்கு உன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்திருந்தால், ஒரு நீண்ட பயங்கரமான உத்தரிக்கிற ஸ்தலத்தைப் பற்றி நீ பயப்படத் தேவையில்லை.

67. மிக மிகக் கடுமையான எந்த ஒரு தவ முயற்சியையும் விட அதிகமாக பக்தியோடு பங்குபெறும் ஒரே ஒரு பூசை உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனையைக் குறைத்து விடும். 

68. உன் வாழ்நாளில் நீ காணும் ஒரே ஒரு பூசை, உன் மரணத்திற்குப் பிறகு உனக்காக ஒப்புக்கொடுக்கப்படும் பல பூசைகளை விட அதிகமான நன்மைகளை உனக்குப் பெற்றுத் தரும்.

69. மோட்சத்தில் நீ ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொள்வாய். அது நித்தியம் முழுவதும் உன்னுடையதாக இருக்கும்.

70. மேலும், பரலோகத்தில் உன் மகிழ்ச்சி, பூமியில் நீ கண்ட ஒவ்வொரு பூசையாலும் அதிகரிக்கப்படும்.

71. உன் நண்பர்களுக்காக நீ ஒப்புக்கொடுக்கும் எந்த ஜெபங்களும், அவர்கள் நிமித்தமாக நீ கண்டு ஒப்புக்கொடுத்த ஒரே ஒரு பூசையின் அளவுக்கு அவர்களுக்கு நன்மை பயக்காது.

72. உன் உபகாரிகளின் கருத்துக்காக நீ பூசை காணும் போது, அவர்கள் அனைவருக்கும் தாராளமாக உன் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாய்.

73. கஸ்திப்படுவோருக்கும், வியாதியஸ்தருக்கும், மரிக்கிறவர்களுக்கும் நீ தரக்கூடிய அனைத்திலும் சிறந்த உதவி, அனைத்திலும் மேலான ஆறுதல், அவர்களுக்காகப் பூசை கண்டு ஒப்புக் கொடுப்பதே.

74. இதே வழியைக் கொண்டு, நீ பாவிகளுக்கு மனந்திரும்பும் வரத்தையும் கூட பெற்றுக்கொடுக்கலாம்.

75. பிரமாணிக்கமுள்ள கிறீஸ்தவர்கள் அனைவருக்கும் இரட்சணிய வரப்பிரசாதங்களையும், நன்மை பயக்கும் வரப்பிரசாதங்களையும் நீ சம்பாதிக்கலாம்.

76. உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள துன்புறும் ஆத்துமங்களுக்கு நீ அபரிமிதமான இளைப்பாற்றியைப் பெற்றுத் தரலாம்.

77. உலகை விட்டுப் பிரிந்த உன் நண்பர்களுக்காக பூசை செய்விப்பது உன் சக்திக்குட்பட்டதாக இல்லை என்றால், பக்தியோடு பூசை காண்பதன் மூலம், வாதிக்கிற தீச்சுவாலைகளில் இருந்து நீ அவர்களை விடுவிக்கலாம்.

ஓ கிறீஸ்தவனே, இப்போது நீ திவ்விய பலிபூசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 

இவ்வளவு அதிகமான வரப்பிரசாதங்களும், பலன்களும் நம் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கப்படும்படி செய்யக் கூடிய வேறு ஏதாவது ஒரு நற்செயல் உலகம் முழுவதிலும் இருக்க முடியும் என்று நினைக்கிறாயா? 

''கிறீஸ்தவர்கள் மட்டும் திவ்விய பலிபூசையால் ஆதாயம் பெறுவது எப்படி என்பதை அறிந்திருந்தார்கள் என்றால், கடவுள் படைத்துள்ள சகல காரியங்களிலும் காணப்படுவதை விட அதிகமான செல்வ வளங்களை அவர்கள் அதில் சம்பாதித்துக் கொள்வார்கள்" என்ற சுவாமி சாஞ்செஸின் வார்த்தைகளிலுள்ள உண்மையை சந்தேகிப்பது இனியும் சாத்தியமில்லை. 

பூசையில் நாம் உண்மையாகவே விலையேறப் பெற்ற ஒரு சேமிப்பறையைக் கொண்டிருக்கிறோம்: மிகக் கொஞ்சமான முயற்சியைக் கொண்டு இவ்வளவு பெரிதான செல்வ வளங்களைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடியவன் பாக்கியவான்! இவற்றை அறிந்த எவன்தான் மனமுவந்து பூசை காணத் தவறுவான்? அதைக் காண்பதில் யார்தான் இன்பம் காணாதிருப்பார்கள்? நம் ஜீவிய அந்தஸ்தின் கடமைகளுக்கு இடையூறின்றி, திவ்விய பலிபூசை காணும் ஒரு வாய்ப்பைக் கூட நாம் ஒருபோதும் இழந்து விட மாட்டோம் என்று உறுதியான பிரதிக்கினை செய்வோம்.

வெறும் அலட்சியம் அல்லது சோம்பலின் காரணமாக, அனுதினமும் பூசை காணும் வாய்ப்பைத் தவற விடுவது, அதில் அடங்கியுள்ள தெய்வீகப் பொக்கிஷங்களை நாம் ஒன்றில் அறியாதிருக்கிறோம், அல்லது அவை பற்றி நாம் அலட்சியமாய் இருக்கிறோம் என்பதற்கான நிரூபணமாக இருக்கிறது. 

இந்த நூலை வாசிப்பவர்கள் எதிர்காலத்தில், விலை மதிக்க முடியாத இந்த முத்தை அதிக முழுமையாக மதித்துப் போற்றி, அதிக அக்கறையோடு அதைத் தேட கடவுள் அவர்களுக்கு அருள்வாராக!