இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (41-60)

41. இந்தப் பலியால் நீ மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு அளவற்ற பரிகாரத்தைச் செலுத்துகிறாய்.

42. நீ இந்த மகிமையுள்ள பலியை உன் சொந்தப் பரிசாக ஒப்புக்கொடுக்கலாம். ஏனெனில் கிறீஸ்துவானவர் தாமே அதை உனக்குத் தந்திருக்கிறார்.

43. சரியான முறையில் நீ பூசை காணும்போது, அனைத்திலும் உயர்வான வழிபாட்டுச் செயல் ஒன்றை நீ செய்கிறாய்.

44. பூசை காண்பதன் மூலம் நமதாண்டவரின் பரிசுத்த மனுஷீகத்திற்கு மிக ஆழ்ந்த வணக்கத்தையுயம், மிகப் பிரமாணிக்கமுள்ள சங்கை மரியாதையையும் செலுத்துகிறாய்.

45. இது கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளை வணங்கவும், அதன் கனிகளில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்ளவும் மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.

46. கடவுளின் ஆசீர்வதிக்கப்பட்ட திருமாதாவை வணங்குவதற்கும், அவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கும் கூட இது மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.

47. பல ஜெபங்களைச் சொல்வதை விட, பூசை காண்பதன் மூலம் தேவதூதர்களுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், அதிகமான சங்கை மரியாதையைச் செலுத்த உன்னால் முடியும்.

48. உலகிலுள்ள வேறு எதைக் கொண்டும் நீ உன் ஆத்துமத்தை வளப்படுத்திக் கொள்வதற்கும் மேலாக, பக்தியோடு பூசை காண்பதன் மூலம் நீ அதை அதிகமாக வளப்படுத்திக் கொள்ள முடியும்.

49. ஏனெனில் இந்தச் செயலில், நீ அனைத்திலும் உயர்ந்த மதிப்புள்ள ஒரு நற்செயலைச் செய்கிறாய்.

50. இது பரிசுத்தமான விசுவாசத்தின் ஒப்பற்ற செயல்பாடாக இருக்கிறது. இது ஒரு பெரும் சம்பாவனையைப் பெற்றுத் தரும்.

51. திவ்விய அப்பத்தின் முன்னும், திருக்கிண்ணத்தின் முன்னும் நீ பணிந்து வணங்கும்போது, நீ ஓர் உன்னதமான ஆராதனை முயற்சியைச் செய்கிறாய்.

52. திவ்விய அப்பத்தை வணக்கத்தோடு உற்றுநோக்கும் ஒவ்வொரு முறைக்கும், மோட்சத்தில் நீ ஒரு சம்பாவனையைப் பெற்றுக் கொள்வாய்.

53. மனஸ்தாபத்தோடு நீ உன் மார்பில் பிழைதட்டிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும், உன் சில பாவங்கள் உனக்கு மன்னிக்கப்படுகின்றன.

54. சாவான பாவ நிலையில் நீ பூசை காண்பாய் என்றால், மனந்திரும்பும் வரத்தைக் கடவுள் உனக்குத் தருகிறார்.

55. தேவ இஷ்டப்பிரசாத நிலையில் நீ பூசை காண்கிறாய் என்றால், கடவுள் வரப்பிரசாதத்தில் அதிகரிக்கும் வரத்தை உனக்குத் தருகிறார்.

56. திவ்விய பலிபூசையில் நீ கிறீஸ்து நாதரின் திருச்சரீரத்தைப் புசித்து, அவரது திரு இரத்தத்தைப் பானம் செய்கிறாய்.

57. தேவத்திரவிய அனுமானமாகிய திரையின் கீழ் மறைந்திருக்கும் கிறீஸ்துநாதரை உன் கண்களால் காணவும், அவரால் காணப்படவும் நீ சலுகை பெறுகிறாய்.

58. குருவின் ஆசீர்வாதத்தை நீ பெறுகிறாய், அது மோட்சத்தில் கிறீஸ்துநாதரால் உறுதிப்படுத்தப்படுகிறது.

59. பூசை காண்பதில் அக்கறையாயிருப்பதன் மூலம், நீ சரீர ரீதியானவையும், உலக ரீதியானவையுமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கிறாய்.

60. மேலும், பூசை காணாதிருந்தால் உனக்கு நேரிடக் கூடிய பல நிர்ப்பாக்கியங்களிலிருந்து, பூசை காண்பதன் மூலம் நீ பாதுகாக்கப்படுவாய்.