இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பக்தியோடு பூசை காண்பதால் பெற்றுக்கொள்ளப்படும் 77 வரப்பிரசாதங்களும், பலன்களும் (01-20)

1. உன் இரட்சணியத்திற்காக, பிதாவாகிய சர்வேசுரன் தம் நேசத்திற்குரிய திருச்சுதனைப் பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்புகிறார்.

2. உன் இரட்சணியத்திற்காக, இஸ்பிரீத்து சாந்துவானவர் அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் கிறீஸ்துநாதருடைய மெய்யான திருச்சரீரமாகவும், இரத்தமாகவும் மாற்றுகிறார்.

3. உன் நிமித்தமாக, தேவ சுதன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, பரிசுத்த அப்பத்தின் வடிவத்தின் கீழ் தன்னை மறைத்துக் கொள்கிறார்.

4. திவ்விய அப்பத்தின் மிகச் சிறிய துண்டிலும் கூட தாம் பிரசன்னமாயிருக்கும் அளவுக்கு அவர் தம்மைத் தாழ்த்திக் கொள் கிறார்.

5. உன் இரட்சணியத்திற்காக, அவர் இரட்சணியத்தின் மனிதாவதாரப் பரம இரகசியத்தைப் புதுப்பிக்கிறார்.

6. உன் இரட்சணியத்திற்காக, திவ்விய பலிபூசை நிறைவேற்றப்படும் போதெல்லாம் அவர் பரம இரகசியமான முறையில் உலகில் மீண்டும் பிறக்கிறார்.

7. உன் இரட்சணியத்திற்காக, தாம் பூமியிலிருந்தபோது நிகழ்த்திய அதே வழிபாட்டுச் செயல்களை அவர் பீடத்தின் மீது நிகழ்த்துகிறார்.

8. உன் இரட்சணியத்திற்காக, தமது பாடுகளில் நீ பங்குபெறும்படியாக, அவர் தமது கசப்பான பாடுகளைப் புதுப்பிக்கிறார்.

9. உன் இரட்சணியத்திற்காக, அவர் பரம இரகசியமான முறையில் தமது மரணத்தைப் புதுப்பிக்கிறார். உனக்காகத் தமது விலை மதியாத உயிரைப் பலியாக்குகிறார்.

10. உன் இரட்சணியத்திற்காக, பரம இரகசியமான முறையில் அவர் தம் இரத்தத்தைச் சிந்தி, அதை உனக்காகத் தேவ மகத்துவத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்.

11. இந்த விலைமதிக்கப்படாத திரு இரத்தத்தை அவர் உன் ஆத்துமத்தில் தெளித்து, ஒவ்வொரு கறையினின்றும் அதைச் சுத்திகரிக்கிறார்.

12. உனக்காக, கிறீஸ்துநாதர் ஓரு உண்மையான தகனப்பலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து, தெய்வீகத்திற்கு உரியதாக இருக்கிற உன்னத மகிமையை அதற்குச் செலுத்துகிறார்.

13. கடவுளுக்கு இந்த ஆராதனைச் செயலை ஒப்புக்கொடுப்பதன் மூலம், அவருக்கு நீ தரத் தவறிய மகிமைக்கு உரிய பரிகாரம் செய்கிறாய்.

14. உனக்காகக் கிறீஸ்துநாதர் கடவுளுக்குத் தம்மையே புகழ்ச்சிப் பலியாக ஒப்புக்கொடுத்து, அவரது திருநாமத்தைத் துதிக்கத் தவறிய உன் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்கிறார்.

15. கிறீஸ்துநாதர் ஒப்புக்கொடுக்கும் இந்தப் பலியை நீ கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம், சம்மனசுக்கள் அவருக்குச் செலுத்துவதை விட அதிகமான ஸ்துதி புகழ்ச்சியை நீ செலுத்துகிறாய்.

16. உனக்காகக் கிறீஸ்துநாதர் உத்தமமான நன்றியறிந்த தோத்திரப் பலியாகத் தம்மையே ஒப்புக்கொடுத்து, நீ நன்றி செலுத்தத் தவறிய பாவங்களுக்குப் பரிகாரம் செய்கிறார்.

17. கிறீஸ்துநாதரின் இந்த நன்றியறிதலைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம், அவர் உன் மீது பொழிந்துள்ள நன்மைகள் அனைத்திற்கும் நீ போதுமான அளவுக்கு நன்றி செலுத்துகிறாய்.

18. உனக்காகக் கிறீஸ்துநாதர் சர்வ வல்லபமுள்ள பலிப் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்து, நீ நோகச் செய்த கடவுளோடு உன்னை மீண்டும் ஐக்கியப்படுத்துகிறார்.

19. உன் அற்பப் பாவங்களை விட்டு விடுவதாக நீ உறுதியான பிரதிக்கினை செய்யும் பட்சத்தில், அவர் உன் அற்பப் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார்.

20. நீ கடமையில் தவறிச் செய்த பல பாவங்களுக்கும், நீ செய்திருக்க வேண்டியிருந்தும் செய்யாமல் விட்டுவிட்ட நன்மைகளுக்கும் அவர் பரிகாரம் செய்கிறார்;