© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தவஞ் செய்யாவிடில் நீங்கள் எல்லோரும் கெட்டுப் போவீர்கள் (லூக்.13:3, 5)

திருச்சபையின் வரலாற்றில் என்றும் இல்லாத ஒரு மிக நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இப்போது வாழ்கிறோம். கடவுள் நம்மை நேசிக்கிறாரா, வெறுக்கிறாரா என்று அநேக உள்ளங்கள் தத்தளிப்பான கேள்விகளை எழுப்புகின்றன. உலகமே ஸ்தம்பித்து விட்டது. திருச்சபையின் அதிகாரிகளும் குருக்களும் சேசுவின் வரப்பிரசாதத்தை மக்களுக்குக் கொடுக்க முடியாமலும் (திவ்ய பலிபூசை, தேவ நற்கருணை, தேவத்திரவிய அனுமானங்கள்), மக்களும் ஆண்டவரின் வரப்பிரசாதத்தைப் பெற முடியாமல் இருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

21 நாள் ஊரடங்குக்குப் பின், மறுபடியும் அரசாங்கம் 15 நாள் ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாம் உயிர் பிழைக்க வேண்டும்: நாமும் மற்றவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ஆனால் ஒன்றை நாம் தெரிந்திருக்க வேண்டும்: நமக்கு ஓர் ஆன்மா உள்ளது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அநேக முயற்சிகள் எடுக்கும் நாம், அதைவிட முக்கியமான நம் ஆன்மாவைக் காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறோம். மரணம் எந்த வயதிலும், எந்த நோயாலும், விபத்தாலும் வரலாம். இறப்பு நிச்சயம். நாம் இறந்தபின் மறுவுலக வாழ்வுக்கு (நித்திய வாழ்வுக்கு) நம் ஆத்துமத்தைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்திருக்கிறோம்? கடந்த மூன்று வாரங்களில் நாம் பயப்பட்ட அளவுக்கு, புத்தி விபரம் அறிந்த நாளிலிருந்து நாம் ஏன் கடவுளுக்குப் பயப்படவில்லை? நித்தியத்திற்கும் (அதாவது முடிவே இல்லாமல் பல்லாயிரங்கோடிக்கணக்கான ஆண்டுகளாக) நரகத்தில் நம் ஆன்மா தண்டிக்கப்படுமோ என்ற பயம் ஏன் நம்மிடம் இல்லை? நோய்கள், குறிப்பாக கொள்ளை நோய்கள், பாவத்திற்குத் தண்டனையாகவே கடவுளால் அனுப்பப்படுகின்றன. '... தேசம் தேசத்தின் மேலும், இராச்சியம் இராச்சியத்தின் மேலும் விரோதமாய் எழும்ப, கொள்ளை நோய்களும், பஞ்சங்களும், இடத்துக்கிடம் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும். இவையெல்லாம் துயரங்களின் துவக்கமே" (மத். 24:7,8). உலகம் முழுவதும் ஆண்டவரின் வார்த்தையின்படி ஒருநாள் அழியும் எனினும், தனி மனிதனைப் பொறுத்தவரை, அவனது மரணமே அவனுக்கு உலகமுடிவாக இருக்கிறது.

கடந்த காலங்களில் நாம் செய்த கொடிய பாவங்களாலும், கத்தோலிக்க நாடுகளின் பிரமாணிக்கக் கேட்டினாலும், விசுவாசமின்மையாலும், திருச்சபையின் உயர் அதிகாரிகளின் கடவுள் மறுப்புக் கொள்கையாலும், உலக மக்களாலும் விசேஷமாக குருக்களாலும் கட்டிக்கொள்ளப்பட்ட கற்புக்கெதிரான கொடிய பாவங்களாலும், கத்தோலிக்கர்கள் பகிரங்கமாக தேவ கட்டளை (பத்துக்கற்பனைகளும், திருச்சபைக் கட்டளைகளும்) மீறியதாலும் தூண்டப்பட்ட தேவ கோபத்தின் விளைவுகளில் ஒன்றுதான் இன்றைய கொரோனா என்னும் கொடிய கொள்ளை நோய்! இந்த தேவ கோபத்தினின்று கடவுளாலும், அவருடைய திருத்தாயாராலும் பாதுகாக்கப் படும்படியாக, முதலில் நாம் நம் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு, வாழ்வைத் திருத்த முன்வர வேண்டும்; இரண்டாவது, அவசியமான போதெல்லாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்; மூன்றாவது, தேவசிநேகத்தோடு, அதாவது, நம் பாவங்களால் வேதனைப்படுத்தப்படும் சேசு மரியாயின் திரு இருதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும்படியாக, நாம் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

அடுத்து, உலக மக்களால் கட்டிக்கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாக நம்மால் இயன்ற பரிகாரம் செய்ய வேண்டும். பழைய ஏற்பாட்டில் நினிவே நகர மக்கள் செய்த பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவார்கள் என்று யோனாஸ் தீர்க்கதரிசியின் மூலம் கடவுள் அவர்களை எச்சரிக்கிறார். ஆனால் அரசன் முதல் குடிமக்கள் வரை அனைவரும் சாக்கு உடை அணிந்து, சாம்பலைப் பூசிக்கொண்டு தவம் செய்ததால் தேவ கோபமும், அதன் தண்டனையும் அவர்களை விட்டு விலகி, அந்நகரம் காப்பாற்றப்பட்டது. அதே போல நாமும் இந்த உலகமும் திருச்சபையும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு கத்தோலிக்கக் கிறீஸ்தவனும் தன்னாலியன்ற ஜெபங்களும், ஜெபமாலைகளும், சிறு சிறு ஒறுத்தல், பரித்தியாக முயற்சிகளும் செய்து தங்களையும், தங்களைச் சேர்ந்தவர்களையும் இந்தத் தேவ தண்டனையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

மேலும் நம் ஆண்டவர் தவஞ் செய்யாவிடில் நீங்கள் எல்லோரும் கெட்டுப் போவீர்கள்" (லூக்.13:3, 5) என்று நம்மை எச்சரிக்கிறார். இப்போது கத்தோலிக்கத் திருச்சபையின் மக்கள் செபம், தவம், பரித்தியாகத்தைக் கைவிட்டு விட்டதாலேயே இன்று இந்தத் துன்பங்களுக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். மேலும், பாத்திமாவில் தேவமாதா, "கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவர் உங்களுக்கு அனுப்பவிருக்கும் எல்லாத் துன்பங்களையும் அவருக்கு ஒப்புக்கொடுங்கள் " (பாத்திமா முதல் காட்சி) என்று கூறினார்கள். மேலும் பாத்திமா தூதர், "நீங்கள் செய்யும் யாவற்றையும் ஒறுத்தல் முயற்சிகள் ஆக்குங்கள். கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவைகளை ஒப்புக்கொடுங்கள்" என்கிறார். மேலும் நம் கத்தோலிக்கத் திருச்சபையும், மனிதனின் இரட்சணியத்திற்காக தினமும் ஜெபமும், தவ முயற்சிகளும் செய்யத் தூண்டுகிறது. புத்தி விபரம் அறிந்தது முதல், மரணம் வரையில் நமக்கு வரும் துன்பங்களைப் பரித்தியாகமாக ஒப்புக்கொடுக்க நம்மை அழைக்கிறது.

ஆனால் நாமோ, நம்மால் எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவுக்கு சுகபோகத்தோடு ஆடம்பரமாக வாழ்கிறோம்; நமக்குப் பரலோக வரப்பிரசாதங்களைத் தருகிற சிறியவையும், பெரியவையுமான அன்றாடத் துன்பங்களை வெறுக்கிறோம்; சிலுவையின் (துன்பங்களின்) வழியாகவே மீட்பு உண்டு என்ற இரகசியத்தை உணராமல் வாழ்கிறோம். நவீன கண்டுபிடிப்புகளின் காரணமாக, கடவுள் தேவையில்லை, வாழத் தேவையான எல்லாம் நம்மிடம் இருக்கின்றன என்ற கர்வமுள்ள எண்ணத்தோடு வாழ்கிறோம். இதன் விளைவாகவே கடவுள், இயற்கைப் பேரழிவுகள், கொள்ளை நோய்கள், போர்கள், பஞ்சம் ஆகியவற்றைக் கொண்டு, தாம் மெய்யாகவே இருக்கிறவர் என்பதையும், தாமே இவைகளைக் கட்டுப் படுத்துகிறவர் என்பதையும் உறுதிப்படுத்தி, இவற்றைக் கொண்டு மனுக்குலத்தைத் தண்டிக்கிறார்.

இந்தத் துன்பம் தரப்பட்டுள்ளதற்கான ஒரே காரணம் நாம் அனைவரும் ஒரே நம்பிக்கையோடு மரியாயின் மாசற்ற இருதயத்திடம் திரும்பி வர வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதே. மேலும் ரஷ்யாவைப் பாப்பரசர் ஐக்கிய அர்ப்பணமாக மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது, மாதா வெற்றி பெறுவார்கள், திருச்சபையில் பாரம்பரியம் திரும்பி வரும். இந்த வெற்றியின் வழியாக, நம் இரட்சணியத்திற்கும், அர்ச்சிப்பிற்கும் அவசியமான பாரம்பரிய திவ்ய பலிபூசையும், பாரம்பரிய போதனைகளும் மீண்டும் விசுவாசிகளுக்குக் கிடைக்கும். 

இவற்றைப் பெற்றுக்கொள்ள, (1) மேற்சொன்ன பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். (2) மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரமாக, முதல் சனி பக்தியை நாம் அனுசரிக்க வேண்டும். (3) தவறாமல் பக்தியோடு அனுதின ஜெபமாலையும், குடும்ப ஜெபமாலையும் சொல்ல வேண்டும். மேலும் உத்தரியமும், அற்புத சுரூபமும் பக்தியோடும், உரிய நிபந்தனை களோடும் நாம் அணியும்போது, குறிப்பாக கற்புக்கு எதிரான பாவங்களிலிருந்த நாம் காப்பாற்றப்படுகிறோம். மேலும், அர்ச். லூயிஸ் மோன்போர்ட்டின் முறைப்படி 33 நாள் தயாரிப்பு செய்து, மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக, சேசுவின் திரு இருதயத்திற்கு நம்மை முழு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

இப்போது, நாம் நம் வாழ்வின் இறுதி சந்தர்ப்பத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இன்றைய சூழ்நிலையில், அநேகருக்கு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வாய்ப்பில்லை. இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன? முதலில் நாம் செய்த சகல பாவங்களுக்காகவும் உத்தம மனஸ்தாபப்பட வேண்டும். ஆண்டவரின் திருப்பாடுகளை தியானிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தம மனஸ்தாபப்படும் போதே கடவுள் நம் பாவங்களை மன்னிக்கிறார் என்பது திருச்சபையின் போதனை. ஆயினும் முதல் வாய்ப்புக் கிடைக்கும்போது, நாம் கட்டாயம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். ஒருவேளை பாவ சங்கீர்த்தனம் செய்ய வாய்ப்புக் கிடைக்காமலே போனாலும், நாம் அவநம்பிக்கைக்குள் விழுந்து விடாமல், தேவ இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அவர் நம் பாவங்களை மன்னித்து, தமது பரலோகப் பேரின்பத் திற்குள் நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய எல்லாவற்றையும் தேவசிநேகத்தோடு செய்ய நாம் கவனமாயிருக்க வேண்டும். அர்ச். மரிய மதலேனம்மாள் அதிகம் நேசித்ததால், அவளுக்கு மிகுந்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (காண்க. லூக்7:47) என்கிறார். அர்ச். குழந்தை சேசுவின் தெரசம்மாளோ: "தேவசிநேகத்தோடு தரையில் கிடக்கும் ஒரு குண்டூசியைக் குனிந்து எடுப்பதும்கூட ஓர் ஆத்துமத்தை இரட்சிக்க வல்லதாக இருக்கிறது” என்கிறாள். எனவே தேவசிநேகம் நம் அற்பமான காரியங்களைக் கூட கடவுளின் பார்வையில் மிக விலையேறப் பெற்றவையாகவும், ஞானப் பலன்களை மிகுதியாக நமக்குப் பெற்றுத் தருபவையாகவும் ஆக்குகிறது.

எனவே சகோதரர்களே, வீண் பயத்தை விலக்கி, விசுவாச உறுதியோடு வாழ்வோம். அரசாங்கத்தின் நியாயமான முடிவுகளுக்குக் கட்டுப்படுவோம். கொரோனா நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் குணமாகும்படியாகவும், இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், இந்த நோய் மேற்கொண்டு பரவாதிருக்கும்படியாகவும் நம் ஆண்டவருடைய இரக்கத்தைக் கேட்டு மன்றாடுவோம். இனியாவது நல்ல கத்தோலிக்கர்களாக வாழ்ந்து, இன்றைய ஆபத்திலிருந்தும், இனி வரவிருக்கும் ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்வோம். சேசு மரிய இருதயங்கள் உங்கள் அடைக்கலமாக இருப்பார்கள்! சேசு மரிய சூசை, உங்களை நேசிக்கிறேன், ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்!