© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த பாப்பரசர் கடவுளின் இரக்கத்தை மன்றாட நம்மை அழைக்கிறார்!

பாப்பரசர் பிரான்சிஸ் இந்த ஆண்டு மே மாதத்திற்கென விசுவாசிகளுக்கு ஒரு சுருக்கமான செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார். ஜெபமாலையின் முடிவில் ஜெபிக்கும்படியாக இரண்டு ஜெபங்களும் அவரால் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன.

பாப்பரசர் மார்ச் 11 அன்று வெளியிட்ட முதல் ஜெபத்தின் மூலம் அவர் இத்தாலியையும் உலகத்தையும் நம் பரிசுத்த மாதாவின் பாதுகாவலில் ஒப்படைக்கிறார்.

இரண்டாவது ஜெபம் இந்தக் கொள்ளை நோய் முடிவதற்கான விசேஷ மன்றாட்டுக்களைக் கொண்டுள்ளது.

பாப்பரசரின் குறிப்பு:

பிரியமுள்ள சகோதர சகோதரிகளே,

மே மாதம் நெருங்கி வருகிறது, இம்மாதம் கடவுளின் மக்கள் மகா பரிசுத்த கன்னி மாமரிக்குத் தங்கள் விசேஷ அன்பையும் பக்தியையும் தனிப்பட்ட விதமாக வெளிப்படுத்தும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் (கத்தோலிக்க) வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து ஜெபமாலை ஜெபிப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. நம்மைப் பாதித்து வரும் கொள்ளை நோயின் கட்டுப்பாடுகள், ஒரு ஞானக் கண்ணோட்டத்திலும், இந்தக் ""குடும்பம்'' என்னும் அம்சத்தை இன்னும் அதிகமாக நாம் மதிக்கும்படி செய்திருக்கின்றன.

இக்காரணத்திற்காக, மே மாதத்தில் வீடுகளில் ஜெபமாலை ஜெபிக்கும் அழகிய பாரம்பரிய வழக்கத்தை விசுவாசிகள் மீண்டும் கைக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன். இது குடும்பமாகவோ, தனியாகவோ செய்யப்படலாம்; உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்களே உங்கள் ஜெபமுறையைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள், முடிந்த வரை இந்த இரண்டு முறைகளிலும் ஜெபிக்க முயலுங்கள்....

நான் தேவ மாதாவை நோக்கி ஜெபிக்க வேண்டிய இரண்டு ஜெபங்களையும் உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் ஜெபமாலையின் இறுதியில் இவற்றைச் சொல்லலாம். இந்த மே மாதத்தில் உங்கள் அனைவரோடும் ஞான விதமாய் இணைந்து நானும் இவற்றை ஜெபிப்பேன். இந்த ஜெபங்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி அவற்றை இந்த மடலுடன் நான் இணைக்கிறேன்.

பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, நம் அன்புத் தாயாரான மரியாயின் மாசற்ற இருதயத்தோடு  கிறீஸ்துநாதருடைய திருமுகத்தை ஆழ்ந்து தியானிப்பது ஒரு ஞானக் குடும்பமாக நாம் மேன்மேலும் ஒன்றாக இணைய நமக்கு உதவுவதோடு, இந்தத் துன்ப நேரத்தின் மீது வெற்றி கொள்ளவும் நமக்கு உதவியாக இருக்கும். உங்கள் எல்லோருக்காகவும் நான் ஜெபிக்கிறேன், குறிப்பாக உங்களில் மிக அதிகமாகத் துன்பப்படுபவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன், தயவு செய்து, என்னோடு ஜெபிக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நன்றி, மிகுந்த அன்போடு உங்களுக்கு என் ஆசீர்வாதங்களை அனுப்புகிறேன்.
உரோமை, அர்ச். லாத்தரன் அருளப்பர் பேராலயம், 2020 ஏப்ரல் 25,
சுவிசேஷகரான அர்ச். மாற்கு திருநாள்
பாப்பரசர் பிரான்சிஸ்.


முதல் ஜெபம்

ஓ மரியாயே, தேவரீர் எங்கள் பயணத்தில், இரட்சணியத்தினுடையவும், நம்பிக்கையினுடையவும் அடையாளமாக எப்போதும் பிரகாசிக்கிறீர். வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே,  சிலுவையினடியில் சேசுநாதரின் துன்பத்தில் அவரோடு இணைந்திருந்து, உங்கள் விசுவாசத்தில் நிலையாயிருந்த தாயாரே, நாங்கள் எங்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம்.

""உரோமை மக்களின் இரட்சணியமாகிய'' நீர் எங்கள் தேவைகளை அறிந்திருக்கிறீர், கலிலேயாவின் கானாவூரில் நீர் செய்தது போல, இந்தத் துன்ப காலத்திற்குப் பிறகு ஆத்தும சந்தோஷமும் உள்ளரங்க மகிழ்ச்சியும் திரும்பி வரச் செய்வீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.

தேவசிநேகத்தின் மாதாவே,  பிதாவின் திருச்சித்தத்தோடு எங்களை ஒன்றித்துக்கொண்டு, சேசுநாதர் எங்களுக்குச் சொல்வதைச் செய்ய எங்களுக்கு உதவுவீராக. ஏனெனில் அவர் எங்கள் துன்பங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார், சிலுவையின் வழியாக எங்களை உயிர்ப்பின் மகிழ்ச்சிக்குக் கொண்டு வரும்படியாக, எங்கள் துயரங்களின் பாரத்தை அவர் தம்மேல் சுமத்திக் கொண்டார். ஆமென்.

ஓ சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே,  நாங்கள் உம்முடைய பாதுகாவலைத் தேடி ஓடி வருகிறோம்; மகிமை பொருந்திய, ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையே! எங்கள் தேவைகளில் எங்கள் மன்றாட்டுக்களை புறக்கணிக்காமல், எப்போதும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எங்களை விடுவித்தருள்வீராக.

இரண்டாம் ஜெபம்

ஓ சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே,  நாங்கள் உம்முடைய பாதுகாவலைத் தேடி ஓடி வருகிறோம்; உலகம் முழுவதும் துன்பத்திற்கும் கவலைக்கும் இரையாகியிருக்கும் இன்றைய துயரமான சூழ்நிலையில், கடவுளின் பரிசுத்த மாதாவே, எங்கள் தாயாரே, உம்முடைய பாதுகாவலின் கீழ் நாங்கள் அடைக்கலம் தேடுகிறோம்.

பரிசுத்த கன்னி மாமரியே, இந்தக் கொரோனா கொள்ளை நோயின் மத்தியில், உம்முடைய இரக்கமுள்ள கண்களை எங்கள்பேரில் திருப்பியருளும். துயரத்தால் நிலைகுலைந்திருப்பவர்களையும், மரித்தவர்களும், தங்கள் வேதனையை இன்னும் ஆழப்படுத்தும்படி மோசமான முறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களுமான தங்கள் அன்புக்குரியவர்களுக்காகத் துக்கம் கொண்டாடுபவர்களையும் தேற்றியருளும். நோய் பரவாதிருப்பதற்காக, இப்போது நோய்வாய்ப்பட்டிருக்கிற தங்கள் நேசத்திற்குரியவர்களுக்கு அருகில் இருக்க முடியாததால் மிகுந்த கவலைக்கு உள்ளாகியிருப்பவர்களோடு தேவரீர் இருந்து அவர்களுக்கு ஆறுதல் தருவீராக. எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மையாலும், பொருளாதாரத்திலும் வேலை வாய்ப்புகளிலும் இந்தக் கொள்ளை நோய் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளாலும் கலக்கமடைந்திருப்பவர்களை நம்பிக்கையால் நிரப்பியருளும்.

சர்வேசுரனுடைய மாதாவே, எங்கள் தாயாரே, இந்த மாபெரும் துன்பம் முடிவடையவும், நம்பிக்கையும், சமாதானமும் மீண்டும் வந்து புதிதாய் விடியவும் எங்களுக்காக இரக்கங்களின் பிதாவாகிய சர்வேசுரனை மன்றாடும். நோயாளிகளும் நோய்க்குப் பலியானவர்களும் தேற்றப்படும்படியாகவும், அவர்களுடைய இருதயங்கள் நம்பிக்கைக்குத் திறக்கும்படியாகவும், கானாவூரில் தேவரீர் செய்தது போல, உம்முடைய திவ்விய குமாரனிடம் எங்களுக்காக மன்றாடுவீராக.

இந்த அவசர காலத்தில் முன்னணியில் நின்று, மற்றவர்களைக் காப்பதற்காகத் தங்கள் வாழ்வை ஆபத்துக்கு உள்ளாக்குகிற மருத்துவர்களையும், செவிலியர்களையும், உடல் நல ஊழியர்களையும், காவல் துறையினரையும், துப்புறவுப் பணியாளர்களையும், தன்னார்வ ஊழியர்களையும் பாதுகாத்தருளும். அவர்களுடைய வீரமிக்க முயற்சிகளைத் தாங்கி நடத்தி, அவர்களுக்கு பலமும், தாராள குணமும், தொடர்ச்சியான நல்ல ஆரோக்கியமும் தந்தருளும்.

இரவும் பகலும் நோயாளிகளுக்கு ஒத்தாசையாயிருப்பவர்களுக்கு அருகில் தேவரீர்தாமே விழித்துக் காத்திருப்பீராக. மேலும், ஒவ்வொரு விசுவாசிக்கும் உதவவும், ஆதரவாயிருக்கவும் முயன்று கொண்டிருக்கிற பிரமாணிக்கமுள்ள குருக்களுக்கும் தேவரீர் அண்மையில் இருப்பீராக.

ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய கன்னிகையே, இந்த நோய்க் கிருமியை வெல்லக் கூடிய பலன் மிக்க மருந்துகளை விஞ்ஞான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆண்களும், பெண்களும் விரைவில் கண்டு பிடிக்கும்படியாக, அவர்களுடைய மனங்களை ஒளிர்வித்தருளும்.

நாடுகளின் தலைவர்கள் ஞானத்தோடும், கனிவோடும், தாராளத்தோடும் வாழ்வின் அடிப்படைத் தேவைகள் குறைவுபடுவோருக்கு உதவியாக வரவும், தொலைநோக்குப் பார்வையாலும், பொது நன்மைக்குரிய கட்டுப்பாட்டாலும் தூண்டப்படுகிற சமூக, பொருளாதாரத் தீர்வுகளைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தருளும்.

மகா பரிசுத்த மரியாயே, போராயுதங்களின் தயாரிப்புக்காக ஒதுக்கப்படும் மிகப் பெரிய பணத்தொகைகள், அதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் இதுபோன்ற துயர நிகழ்வுகள் நிகழாதபடி தடுப்பது எப்படி என்பது பற்றிய பலனுள்ள மருத்துவ ஆய்வுகளுக்காக செலவிடப்படும்படியாக, ஆள்பவர்களின் மனச்சான்றுகளை நீரே தூண்டியயழுப்புவீராக.

அன்புக்குரிய மாதாவே, நாங்கள் அனைவரும் (திருச்சபையாகிய) ஒரே பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதை உணரவும், எங்களை இணைக்கும் பந்தனத்தை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ளவும் எங்களுக்கு உதவியருளும். இவ்வாறு, சகோதரத்துவ, மற்றும் பிறர்சிநேக உணர்வுடன், தரித்திரம் மற்றும் பல்வேறு தேவைகள் உள்ள எண்ணற்ற சூழ்நிலைகளில் துன்புறுவோருக்கு உதவி செய்ய நாங்கள் திடம் பெறுவோமாக. விசுவாசத்தில் எங்களைப் பலமுள்ளவர்களாகவும், ஊழியத்தில் நிலைத்து நிற்பவர்களாகவும், ஜெபத்தில் நிலையானவர்களாகவும் இருக்கச் செய்தருளும்.

மரியாயே, கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, துன்பப்படும் உம் பிள்ளைகள் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும், வாழ்வு தன் இயல்பான பாதையில் மீண்டும் அமரிக்கையோடு நடக்கத் தொடங்கும்படியாக, சர்வேசுரன் தமது சர்வ வல்லமையுள்ள திருக்கரத்தை நீட்டி, இந்த பயங்கரக் கொள்ளை நோயிலிருந்து எங்களை விடுவிக்கும்படியாக அவரிடம் மன்றாடும்.

எங்கள் பயணத்தில் இரட்சணியத்தினுடையவும் நம்பிக்கையினுடையவும் அடையாளமாகப் பிரகாசிக்கின்ற தேவரீரிடம் எங்களை நாங்கள் ஒப்படைக்கிறோம், இனிமையே, நேசமே, ஓ மதுரமுள்ள கன்னிமரியாயே. ஆமென்.

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே,

இந்த ஜெபங்களுக்காக நம் பரிசுத்த பிதா பாப்பரசருக்கு நன்றி செலுத்துவோம். ஏற்கெனவே குடும்ப ஜெபமாலை ஜெபிக்கிற கத்தோலிக்க விசுவாசிகள் அனைவரும் ஜெபமாலைக்குப் பிறகு இந்த ஜெபங்களைச் சேர்த்துச் சொல்ல மறவாதீர்கள். மற்றவர்கள் இனியாவது, இந்தக் கொள்ளை நோயினின்றும், உலகம், சரீரம், பசாசிடமிருந்தும், நித்திய அழிவினின்றும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வதற்காக, இன்றே குடும்ப ஜெபமாலையைத் தொடங்கி, அதில் இந்த ஜெபங்களை ஜெபிக்க முன்வாருங்கள். மேலும், இந்தக் கொள்ளை நோயால் மரித்த ஆயிரக்கணக்கான நம் சகோதர சகோதரிகளின் ஆன்மாக்களுடைய உத்தரிப்பின் வேதனை தணியும்படியாகவும், அவர்கள் விரைவில் நித்திய இளைப்பாற்றியை அடையும்படியாகவும் தேவ இரக்கத்தையும், கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற பரிசுத்த இராக்கினியையும் மன்றாடத் தவறாதிருப்போம். மேலும் இந்நோய் இவ்வுலகிலிருந்து முழுவதுமாக அகன்று போகும் வரையிலும் தனிப்பட்ட ஜெபங்கள், உபவாசங்கள், பிற பரித்தியாக முயற்சிகளைச் செய்து, இந்த உலகளாவிய பெரும் துன்பத்திற்குக் காரணமாக இருக்கிற நம் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுப்போமாக. உங்கள் ஜெபங்களை அதிகப்படுத்துங்கள்; ஏற்கெனவே நீங்கள் செய்து வரும் தவ முயற்சிகளோடு மேலும் சில சிறு தவ முயற்சிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; உங்கள் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, உங்கள் விருப்பங்களை ஒறுத்து அடக்கி, துன்பப்படும் உங்கள் ஏழைச் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள். இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பரிதாபத்திற்குரிய இந்த உலகத்தின் மீது சர்வேசுரனுடைய இரக்கம் இறங்கி வரச் செய்வோம். கடவுள் துன்பங்களை அனுப்புவது நம்மைத் தண்டிப்பதற்கு அல்ல, மாறாக, நம்மை மனந்திருப்பவே என்பதை உணர்ந்து, உண்மையாகவே மனந்திரும்பி, பரிசுத்த வாழ்வுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். இனி வரும் காலங்களில் தேவத்திரவிய அனுமானங்களை (பாவசங்கீர்த்தனம், தேவ நற்கருணை என்னும் அருட்சாதனங்களை) அடிக்கடி பெற்று, பத்துக் கட்டளைகளுக்கும், திருச்சபைக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதன் மூலம் ஆண்டவரின் மீது நமக்குள்ள சிநேகத்தை உறுதிப்படுத்தி, பாவத்தை முழுவதுமாக விலக்கி, புண்ணிய வாழ்வு வாழ எப்போதும் முயற்சிப்போமாக. சேசு மரியாயின் இருதயங்கள் இந்தப் பெரும் காரியத்தில் நம் ஆதரவாகவும், அடைக்கலமாகவும் இருப்பார்களாக.

ஆயினும், இனி எந்த வகையான துன்பம் நமக்கு வந்தாலும், அல்லது நாம் எதைச் செய்தாலும், தேவ நம்பிக்கையோடு அதை எதிர்கொண்டு, பாத்திமா மாதா நமக்குக் கற்றுக்கொடுத்த ""ஓ சேசுவே, உம் அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதை ஒப்புக்கொடுக்கிறேன்'' என்னும் சிறிய பாத்திமா ஜெபத்தைச் சொல்லி, நமக்கு வரும் துன்பங்களாலும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலாலும் கூட, நம்மை மோட்சத்திற்குத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்வோமாக.