இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவிகள் ஒருபோதும் நரகத்துக்குத் தப்பிக்கொள்ளமாட்டார்கள்.

சருவேசுரன் அநாதியான கருணையோடு நம்மை உண்டாக்கி நமக்கு சுபாவத்துக்கு உரிய சகல உபகாரங்களையும் தெய்வீக உதார குணத்தோடு செய்து வருகிறார்.

ஒரு தயாள குணமுள்ள தனவந்தனான தகப்பன் தன் மகனுக்கு என்று ஒரு விசாலமான காணியை வாங்கி, அதிலே விதம் விதமான கனிவர்க்கம் கொடுக்கிற தோட்டங்களையும், விதவிதமான நெல் வகைகள் தவசதானியங்கள் விளைகிற வயல்களையும் வகுத்து; நடுவிலுள்ள சோலைகளின் மத்தியிலே அழகான மாளிகை ஒன்றைக் கட்டி; அம்மாளிகையின் பல பல அறைகளிலே விரும்பத்தக்க சகல உடுப்பு வகைகள், விளையாட்டுக்கு உரிய சகல அணி அடுக்குகள், ஆயுதங்கள், ஒருக்காலும் வற்றாத ஊறணியான திரவியங்கள் எல்லாம் சேமித்து வைத்து ; மேலும், வேண்டிய வேண்டிய விளையாட்டுத் தோழர்கள், வேலையாட்கள், மாடு கன்றுகள், குதிரைகள், வண்டிகள் எல்லாம் ஆயத்தம் பண்ணிய பின் மகனை அழைத்து: என் நேச புத்திரனே நீ சுகமாய் வாழ்ந்து இன்புற்று இருக்கும்படியாக உனக்கு இந்தப் பெரிய ஆஸ்தியையும் அதில் அடங்கிய சகலத்தையும் தந்தேன் என்று சொல்லியது போலவே, அளவில்லாத தயாளமும் அன்பும் பொருந்திய சருவேசுரனும் மனுமக்களின் பொருட்டாய் இந்தப் பெரிய பூமியை உண்டாக்கி, அதில் நம்முடைய சரீர பாதுகாப்புக்கும் இவ் உலக இன்ப வாழ்வுக்கும் வேண்டிய சகலத்தையும் அளவுக்கு மிச்சமாய்த் தந்திருக்கிறார். 

அழிந்து போகிற இவ்வுலகத்தின் சொற்ப கால இன்பத்தை மாத்திரம் அல்ல, அழியாத பரலோகத்தையும் நாம் அடையவேண்டும் என்றே நமக்குத் தம்முடைய திருச்சாயலான ஒரு ஆத்துமத்தையும் தந்தபடியால், அந்த ஆத்துமத்துக்கு உரிய சுபாவத்துக்கு மேலான உபகாரங்களையும் அளவுகடந்து நமக்குப் பண்ணிக்கொண்டுவருகிறார். ஒருவன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல, பூவராகன்களை வழிய வழியக்கொட்டி அளந்து, அவன் கொண்டு போகக்கூடியமட்டும் தலையிற் சுமத்திவிட்டது போல், ஆண்டவரும் தாமே எம்மைத் துரந்து துரந்து நமக்கு நன்மை செய்வதோடு, தாம் மனுஷ வேஷத்தோடேயும் வந்து தம்முடைய வரப்பிரசாதங்களை வாரி அள்ளி அள்ளி எமக்குச் சுமத்திவிடுகிறார்.

இவ்வளவு நன்மைத் தனம் எல்லாம் மனுஷனுக்குக் காட்டி வருகிறவர், மனுஷன் தாம் கொடுத்தவைகளை வாங்கிக் காலுக்குக் கீழே போட்டு மிதித்தது போல், தம்மை அவமதிக்க விட்டுவிடுவாரோ? படைத்தவர், தாம் படைத்த மனுஷனை ஓர் ஆயிரம் நேச வார்த்தைகளால் ஏவி ஏவி, ஓர் ஆயிரம் உபகாரங்களோடு கூடிய திருக்கண் நோக்குகளால் தூண்டித் தூண்டி அழைத்துக்கொண்டிருக்க, அவன் மேலும் மேலும் மிஞ்சி மிஞ்சித் திமிறி அவர் முகத்திலே மீண்டும் மீண்டும் கரி பூச, மீண்டும் மீண்டும் அவரை நையாண்டி பண்ணிக்கொண் டிருக்கத் தலைப்படுவானானால், சருவலோகமும் கிடுகிடுத்துக் கொண்டு தமக்கு ஊழியஞ் செய்யப் பெறுகிறவரான அனந்த நித்தியர் அவனைச் சும்மா விடுவாரோ?

தாம் எவ்வளவு அருமையாகத் தமது சிருட்டியை நேசித்தாரோ, அந்தச் சிருட்டி தம்மை வேண்டாம் என்று தட்டி உதறிப்போட்டுப் போகும்பொழுது அவ்வளவு உத்தண்ட வேகத்தோடே அதைத் தண்டிக்கவும் தூண்டப்படுவார் அல்லவோ? 

நீதியுள்ள ஒரு எசமான் தன் ஊழியர்கள் தன்னிடத்தில் பெற்றுக்கொண்ட உபகாரத்துக்கு நன்றி காட்டி நடக்கும் போது மேலும் அதிக உபகாரங்களைச் செய்வதும், உபகாரத்துக்கு அபகாரம் பண்ணும்பொழுது அந்த அவலட்சண நன்றி கேட்டுக்குத் தகுதியான ஆக்கினை இடுவதும் இயல்பு அல்லவோ? அப்படி இருக்க, அளவற்ற நீதியும் குறைவற்ற வல்லமையும் உடைய கர்த்தாதி கர்த்தரானவர், தம்மிடத்திற் பெற்றுக்கொண்ட கணக்கிடக் கூடாத நன்றி எல்லாம் மறந்து தமக்குத் தேவ துரோகம் பண்ணுவதிலே மூர்க்கனாய் நிலைகொண்ட மனுஷனுக்கு தேவ நீதிக்கு ஏற்ற பாரதூர தண்டனை விதியாமல் விடுவாரோ ?

ஆனால் நம்மைப் படைத்தவராகிய சருவேசுரன் கருணா சமுத்திரமான ஒரு பிதா அல்லவா? அவர் '' நீடிய சாந்தமும் மிகுந்த இரக்கமும் உள்ளவர் '' (சங். 144; 8) என்று வேதாகமம் சொல்லவில்லையா? சமுத்திரத்துக்குக் கரை உண்டானாலும் அவருடைய இரக்கத்துக்கு முடிவில்லை அல்லவா?

இது முக்காலும் மெய். சருவேசுரன் அளவில்லாத இரக்கம் உள்ளவர். அவர் இந்த அளவில்லாத இரக்கத்தோடு மீண்டும் மீண்டும் பாவியானவனை நல் வழிப்படுத்தத் தேடிக்கொண்டுவர, அவனோ இந்த அளவில்லாத இரக்கத்தின் அழைத்தல்களையும் தட்டிப்போட்டபடியாற்தான் நித்திய நரகத் தண்டனைக்கு ஆளாகிறான். சருவேசுரன் அளவில்லாத இரக்கம் உள்ளவர் என்று சொல்லும்போது, அவர் அளவில்லாத நீதியும் உள்ளவர் என்றதை நாம் மறந்துபோக ஒண்ணாது. அவருடைய இரக்கம் கோழை நெஞ்சுள்ள ஒரு தாயுடைய மனங்கேளாத இரக்கம்போல அல்ல. அது அளவில்லாத தேவ ஞானத்தோடு, அளவில்லாத பெலத்தோடு, அளவில்லாத உறுதியோடு கூடின ஒரு இரக்கம்.

சருவேசுரன் உண்மையாய் மனந்திரும்பி பாவத்தை விட்டு வருவோருக்குக் கங்கு கரை இல்லாமல் இரக்கமும் உருக்கமும் தயவும் தாட்சணியமும் காண்பிக்கிறார். பாவத்தில் மூர்க்கனாய் நிற்கிறவன் பேரிலோ தமது நீதியைச் செலுத்துகிறார்.

ஒரே ஒரு சூரியன்தான் மெழுகு உருகுகிறதற்கும் கழிமண் இறுகுகிறதற்கும் காரணம் ஆகிறதைக் காணவில்லையா? வெயிலிலே மெழுகை வைத்தால் இளகுகிறது. கழிமண்ணை வைத்தால் இறுகுகிறது. இப்படியே, மென்மையான இருதயம்
உள்ளவர்கள் சருவேசுரனுடைய தயவைக் கண்டு இளகி மனந்திரும்பிப் பொறுதி அடைவார்கள். கடின இருதயம் உடையவர்கள் அத்தயவைக் கண்டு கண்டு மேலும் கடினமாகிக் கெடுவார்கள். 

ஆண்டவர் நல்லவர், நீடிய பொறுமை உடையவர், ஆதலால் பாவத்தில் நிலைப்பேன் என்று சொல்லுகிறது எதற்குச் சரி என்றால்: நெருப்பு நல்லது; ஆனபடியால் அதற்குள்ளே கையை வைப்பேன் என்று சொல்லுவதற்குச் சரி. நெருப்பானது நமக்கு அனலைத் தருகிறது; வெளிச்சத்தைத் தருகிறது, தீன் பண்டங்களைப் பாகம் பண்ண உதவுகிறது. சூரியனிலோ அடுப்பிலோ உள்ள நெருப்பைப் போல மனுஷனுக்கு உபகாரமான பொருள் உலகத்தில் வேறொன்றும் இல்லை.

இவ்வளவு உபகாரமான நெருப்பு அல்லவோ என்று சொல்லிக்கொண்டு அதற்குள் கையை வைத்தால், கை வேகாமல் இருக்குமா? அள்ளி மடியிற் கட்டினால் மடி எரிந்து போகாமல் இருக்குமா? அது போலவே "பட்சிக்கிற அக்கினி'' என்றும் ( உபாக. 4; 24 ) ''நீதியின் சூரியன்'' என்றும் ( மலக். 4; 2 ) வேதாகமங் கூறுகின்ற சருவேசுரனும் இணையில்லாத நன்மைத்தனம் உள்ளவர். ஆனால் அவரிற் கை வைத்தது போல அவரை எதிர்த்து மூர்க்கமாய்ச் சாகும் பாவியோ அவருடைய நீதி என்னும் அக்கினியாற் சுட்டப்படாமல் இருக்க முடியாது. நீதி செலுத்தும் போது அவர் முகம் பார்க்கமாட்டார். ''அவர் பட்சவாதம் உள்ளவர் அல்ல'' (அப். நட. 10; 34 ).

நீதியாசனத்தில் வீற்றிருக்கிற ''சுப்பிறீங் கோட்டு'' இராசா, தமக்கு முன்பாக தமது பிராண சிநேகிதன் ஒருவன் கொலைக் குற்றஞ் சுமந்து நின்றால் அவனைச் சிநேகிதன் என்று பார்ப்பாரோ? ஒருபோதும் பாரார். அன்பனுக்கு உரிய இருதய பாசத்தை அடக்கிக்கொண்டு தம்முடைய நீதி ராசாவின் உத்தியோகத்தின்படியே அவனுக்குக் கொலைத் தீர்ப்புச் சொல்ல வேண்டியிருந்தாலும் சொல்லுவார். அப்படியே, பிரியமானவர்களே, நீங்கள் தேவத் துரோகிகளாய் நீதிபரபான சருவேசுரன் முன் போய் நின்றால், அவர் உங்களைத் திருச்சபையின் மக்கள் என்றும் பாரார், முன்னொரு நாள் பத்தியுள்ளவர்களாய் நடந்தவர்கள் என்றும் பாரார். பாவிகளுக்கு என்று நியமிக்கப்பட்ட ஒழியாத துக்கத் தலத்திலேயே தள்ளிவிடுவார் என்பது திண்ணம்.

இந்தத் தலம் மெய் மெய்யாய் இருக்கிற ஒரு தலம் என்பதற்கு நம்முடைய தெளிந்த புத்தி சொல்லுகிற சாட்சியோடு, உலகம் முழுதும், உலகத்திலுள்ள பல பல பொய்ச் சமயங்களுங் கூட ஒருவாக்காய்ச் சொல்லுகிற சாட்சியோடு, இவைகளுக்கு மேற்பட்ட வேறொரு சாட்சியும் இருக்கிறது. அது தேவ வாக்கியம் ஆகிய சத்தியவேத ஆகமங்களின் சாட்சி.

பழைய ஏற்பாட்டிலே நரகத் தலத்தின் விபரிப்பு பல இடங்களிலே காணப்படுகிறது. பாவிகளுக்காக ஏற்படுத்தியிருக்கிற அந்த மறியல் வீடு ''ஆழமும் விசாலமுமானது. அங்கு வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகும் உண்டு. கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப் போல் அதைக் கொளுத்தும் '' என்று இசையாஸ் தீர்க்க தரிசி வசனிக்கிறார் (30; 33).

ஆங்காரிகளுடைய '' உடலம் அழிக்கப்பட்டு எரிகிற அக்கினிக்கு ஒப்புக் கொடுக்கப்படும் '' என்று தானியேல் தீர்க்கதரிசி வரைகிறார் ( 7; 11).

''இதோ சூளையைப்போல் எரிகிற நாள் வரும் ; அப்பொழுது அகங்காரிகள் யாவரும், அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாய் இருப்பார்கள். வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும். அது அவர்களுக்கு வேரையும் விடாது கொப்பையும் விடாது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்'' என்பதாக மலக்கியாஸ் தீர்க்கதரிசி வாக்குரைக்கிறார் (4; 1).

இந்த அக்கினி நிலையத்தை யோபுவானவர் விபரித்துக் காட்டுவதாவது: அது 'இருள் அடர்ந்து மரண அந்தகாரத்தினால் மூடுண்ட ஒரு தேசம். நிர்ப்பாக்கியமும் வெளிச்சம் இன்மையும் சாவின் பயங்கரமும் நிரம்பிய இடம். அங்கு நித்திய கலக்கமும் சதாகால திடுக்காட்டமும் குடிகொண்டிருக்கும். அங்கு போனவர்கள் மீண்டு வருவதில்லை'' என்று கூறுகிறார் (10; 21, 22).

புதிய ஏற்பாட்டிலே அர்ச். சின்னப்பர் பாவிகளுக்கு '' நடுத்தீர்வையை எதிர்பார்த்திருக்கிற பயங்கரமும் பட்சிக்கிற நெருப்பின் கோபாக்கினையும் உண்டு '' என்கிறார் (எபி. 10; 27 ).

சருவேசுரன் " பாவஞ் செய்த தூதர்களைத் தப்ப விடாமல் அந்தகாரச் சங்கிலிகளாலே கட்டி நரகத்திலே தள்ளினார் '' என்று அர்ச். இராயப் பர் வசனிக்கிறார் (2 பேது. 2; 4).

"' பாவிகளை மோசம் போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கெந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். பாவிகள் இரவு பகலாய்ச் சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள். பயங்காளிகளும் அவவிசுவாசிகளும் அருவருப்பானவர்களும் கொலை பாதகரும் விபசாரக்காரரும் பொய்யர் அனைவரும் அக்கினியோடு கந்தகம் எரிகிற கடலிலே பங்கடைவார்கள். இதுவே இரண்டாம் மரணம் " என்று அர்ச். அருளப்பர் எழுதி வைத்தார் ( காட்சி. 20; 10 -21; 8).

தீர்க்க தரிசிகள் அப்போஸ்தலர்கள் வெளிப்படுத்தலாய்க் கேட்டு எழுதிய வாக்கியங்களை ஏன்? தீர்க்க தரிசிகளுக்கு ஞானங் கொடுத்தவரும் அப்போஸ்தலர்களுக்குக் குருவும் ஆகிய தேவ சுதன் தாமே தமது தேவ திருவாய் மலர்ந்து சொல்லிய பிரசங்கங்களிலே தீயோர்களுடைய கதியை, அவர்கள் போய் விழும் அக்கினித் தலத்தைப் பற்றி எத்தனையோ முறை திருவுளம் பற்றியதாக சுவிசேஷங்களிலே வாசிக்கிறோமே.

விசேஷமாய் அவர் உலக முடிவில் தாமே நடத்தப்போகிற பொதுத் தீர்வையைப் பற்றி எடுத்துச் சொல்லிய தருணத்திலே திருவுளம்பற்றுவது : "மனுஷ குமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங் கூடவந்து தமது பிரதாபமுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல சனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல் அவர்களை அவர் பிரித்து, செம்மறி ஆடுகளைத் தமது வலது பக்கத்திலும் வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். பின்பு தமது வலது பக்கத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து: வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்... என்பார். இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே என்னைவிட்டு அகன்று பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணியிருக்கிற நித்திய அக்கினியிலே போய் விழுங்கள்... என்பார். அந்தப்படி இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும் புண்ணியவாளர்களோ நித்திய சீவனை அடையவும் போவார் கள் '' (மத். 25; 31-46 ).