இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவிகள் அக்கினித் தலத்திலே அடையப் போகிற கவலை ஊழியுள்ள காலமுந் தீராக் கவலை.

பிரியமானவர்களே, தேவ துரோகிகளாய்ச் சாகிறவர்கள் சருவத்துக்கும் வல்ல தேவாதி தேவனாகிய சருவேசுரனுடைய முனிவுக்கு ஒருபோதும் தப்பிக்கொள்ள முடியாது. தப்பாமல் அவ ருடைய, நடுத்தீர்வையிலே போய் நிற்கவும் வேணும். தப்பாமல், பிசாசுக்கும் தங்களுக்கும் என்று ஆயத்தம் பண்ணியிருக்கிற நரக பாதாளத்திலே அடைபடவும் வேணும். வேறு போக்கில்லை.

இனி, அந்தப் பயங்கரமான சிறைக் கிடங்கிலே பாவிகள் படுகிற வேதனை என்ன? அவதரித்த தேவ வார்த்தையான யேசுநாதர் தாமே சுவிசேஷத்தின் வேறு பல இடங்களில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது நரகக் கிடங்கிலே உட்பட்டவர்களைக் '' குடைந்தரிக்கிற புழு ஒருபோதும் சாகாது; அவர்களைப் பற்றி எரிகிற நெருப்பு ஒருக்காலும் அவியாது'' என்று திருவுளம்பற்றினார் ( மாற். 9; 43).

அவியாத இந்த நெருப்போ இந்த உலகத்தின் நெருப்பைப் போல் அல்ல அல்ல. இவ் உலகத்தில் உள்ள நெருப்பு நமது நன்மைக்காக உண்டாக்கப்பட்டது. அந்த நெருப்போ ஆத்துமத்தைக் கொளுத்திச் சுட்டு, சரீரத்தையும் வேகாமல் வேக வைக்கிற ஒரு நெருப்பு. அந்த நெருப்பின் முன்னே நமது நெருப்பு பிரசாசமுள்ள சூரியனைக் கரியமையால் எழுதிவிட்ட படம் போலவே இருக்கும்.

அந்த நெருப்பின் ஒரு பொறியை பூலோகத்தின் சமுத்திரங்கள் நடுவே போட்டால், இவைகளின் தண்ணீர் எல்லாம் கொதித்து வற்றிச் சுவறிப் போய்விடும் என்று வேத பாரகர்கள் உவமையாய்ச் சொல்லுவார்கள். அந்த நெருப்பு தனக்குள்ளே இடப்பட்ட பாவியை உள்ளும் புறமும் ஊடுருவிப் பாய்ந்து பற்றி, கண்டதுண்டமாகப் பீறி, வாக்கினால் விபரிக்கக் கூடாத வேதனைப்படுத்திக்கொண்டிருக்கும்.

ஆண்டவர் திருவுளம் பற்றிய ஐசுவரியவானின் சரித்திரத்தை நினைந்து கொள்ளுங்கள். அந்தப் பணக்காரன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து அனுதினமும் சம்பிரமமான விருந்து நடப்பித்துக்கொண்டு வந்தான். அவன் வாசல் அருகே பிச்சைக்கு வந்து கிடக்கிற குட்டம் பிடித்த வறியவனான லாசருவுக்கு தன் மேசையிலிருந்து விழுகிற எச்சில்களையுங் கொடுப்பியான். லாசருவுடைய புண்களை நாய்கள் வந்து நக்கிக்கொண்டிருக்கும். ஆனால் இந்தப் பிச்சைக்காரன் கடவுளுக்கு ஏற்றவன். அதனால் இவன் இறந்தபோது இவனுடைய ஆத்துமத்தைத் தேவ தூதர்கள் இறங்கிவந்து மோட்ச ராச்சியத்திலே, ஆபிரகாமுடைய மடியிலே, கொண்டுபோய்ச் சேர்த்தார் கள்.

ஐசுவரியவானுஞ் செத்து நரக பாதாளத்திலே புதைக்கப்பட்டான். அங்கே அவன் தன் வேதனைகளின் நடுவே கண்களை ஏறெடுத்து, தூர அதி தூரத்திலே ஆபிரகாமையும் அவர் மடியிலே லாசருவையுங் கண்டு உரத்த சத்தமாய்க் கூப்பிட்டுச் சொல்லுவான்: ஆபிரகாம் பிதாவே! நான் இந்த அக்கினிச் சுவாலையில் தாங்கமுடியாத வேதனை அனுபவிக்கிறேன். நீர் என்மேல் இரங்கி, லாசறு தன் விரல் நுனியில் கொஞ்சம் தண்ணீர் தோய்த்து என் நாவில் விட்டு அதைச் சற்றே குளிரப் பண்ணும்படி அவனை அனுப்ப வேணும் என்று வேண்டிக்கொண்டான்.

அதற்கு ஆபிரகாம் பிதா: மகனே நீ பூமியிலே நன்மைகளை அனுபவித்துக் கொண்டாய். அதற்கு இப்போது வேதனைப்படுகிறாய் என்றதை நினைந்துகொள். அல்லாமலும், இவ்விடத்திற்கும் உவ்விடத்திற்கும் போக்கு வரவு இல்லாதபடிக்கு பெரும் பாதாளம் ஒன்று இடையிற் கிடக்கிறது என்றார். அப்போது அவன்: அப்படியானால் பிதாவே எனக்கு ஐந்து பேர் சகோதரர் உண்டு. அவர்களும் கடவுளை மறந்து நடந்து இந்த வேதனைத் தலத்துக்கு வராதபடி எச்சரிப்பதற்கு, ஒருக்கால் லாசருவை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பிவையும் என்று விண்ணப்பஞ் செய்ய: ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேசுவும் தீர்க்கதரிசிகளும் உண்டு. இவர்களுடைய சொல்லைக் கேட்டு நடக்கட்டும் என்றார்.

மீண்டும் ஐசுவரியவான் கதறி: பிதாவே செத்தவன் ஒருவன் உயிர்த்தெழுந்து போய்ச் சொன்னால் என் சகோதரர்கள் சீக்கிரமாய் நம்புவார்களே என்றான். அதற்கு ஆபிரகாம்: மோசேசுவும் தீர்க்கதரிசிகளும் சொல்வதைக் கேளாதவர்கள் மரித்து உயிர்த்தவனுக்கும் செவி கொடார்கள் என்றார் (லூக். 16-ம் அதி ).

நரக நெருப்பின் கொடுமைக்கு அத்தாட்சியாக நூலாசிரியர்கள் ஒரு சம்பவத்தை எடுத்துச் சொல்லுவார்கள். சிஸ்ரேஷியன் என்ற சபைக்குச் சேர்ந்த சன்னியாசி ஒருவர், ஒரு இரவு, பித்தளை விளக்கு வெளிச்சத்தில் வாசித்துக்கொண்டிருக்கும்போது, தமக்கு முன்னே , சரீரம் எல்லாம் அக்கினிக் கொழுந்து விட்டு எரிகிற ஒரு ஆள் வந்து அனுங்கி அனுங்கி அழுதுகொண்டு நிற்கக் கண்டு திடுக்கிட்டு உளம் பதறி : நீ யார் நீ யார் என்று கேட்டார். வந்து நின்ற பயங்கரமான நெருப்பு உருவம்: நான் நரகத்தில் கிடந்து வேகிற ஒரு ஆத்துமம். என் ஆத்துமத்தை ஊடறுத்து சின்னா பின்னமாய் வெட்டிப் பிளந்துகொண்டிருக்கிற நெருப்பின் வேதனை தாங்க முடியாது. நீ என் கூட்டாளியாய் இருந்ததினால் உனக்கு இதை அறிவிக்க வந்தேன். உன் மேசையில் இருக்கிற விளக்குத் தண்டை எடுத்து நீ முகம் கழுவுகிற வட்டிலின் தண்ணீருக்குள் வை என்று சொல்லிற்று. சன்னியாசி நடுநடுக்கத்தோடு விளக்கை எடுத்து தண்ணீருக்குள் நிறுத்திவைக்க, நரக நெருப்பு மயமாய் இருந்த அந்த ஆத்துமம், தன் கைவிரல் நுனியால் தண்ணீரைத் தொட்டது. தொடவே அது சுரு சுரு என்று அதிக வேகமாய்க் கொதித்து பித்தளை விளக்கையும் மெழுகு போல உருக்கித் திராவகமாய்ப் பாய்ந்தோடப் பண்ணிவிட்டது.
இந்தச் சரித்திரம் நரக நெருப்பின் ஊடுருவிப்பாய்கிற அகோரத்துக்கு சிறிதென்றாலும் ஒரு அத்தாட்சி ஆகுமே.

உள்ளும் புறம்பும் ஊடுருவி அந்தகாரகாலமாய்ப் பற்றி எரிகிற இந்த நுண்ணியவைகளிலும் அதிக நுண்ணியதான அக்கினியின் ஆக்கினை ஒரு புறம். மறுபுறத்தில், இதிலும் அதிக கொடூரமான அதிக நிர்ப்பந்தமான ஒரு வேதனை உண்டு. அது என்னவென்றால் ஓயாமற் குடைந்து அரிக்கிற புழு என்று சொல்லப்பட்ட மன ஏக்கமும் கலக்கடியுமாம்.

கிறிஸ்தவர்களே, உங்களில் ஒரு ஆளுக்கு உபகாரமாய்க் கிடைத்த ஒரு ஆயிரம் ரூபாவை அவன் போட்டுவிட்டால் எவ்வளவு துயரத்துக்கும் கவலைக்கும் உள்ளாவான். ஐயோ எவ்வளவு அருமையான ஒரு கைமுதலை இழந்து போனேன்! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போனது போல் ஆயிற்றே என்று இரங்கி இறங்கி மனம் நோவானே.

ஆனால்: நான் பூலோகத்தில் இருந்தபோது இலேசாய்ப் பெற்றுக்கொள்ளக் கூடிய நித்திய மோட்ச சம்பாவனையை, என்னைப் படைத்தவருடைய சகல அழகு சோபனமும் பொருந்திய திருமுகத்தைக் கண்டு களிகூருவதாகிய பேரின்பத்தை, என் புத்தி மோசத்தால், என் ஆங்காரத்தால், இழந்து போனேனே என்ற நினைவு பாவியுடைய மனதைக் குடைந்து குடைந்து அரிக்கப் போகிற தன்மையை நாம் இவ்வுலகத்திலே சரியாய் உணர்ந்துகொள்ள முடியாது.

இங்கே யாதொரு நட்டம், இழவு, கவலை ஏற்படும்போது அந்த நினைவை மறப்பித்துக்கொள்ள எத்தனையோ வழிகள் உண்டு. மனத்துயரத்தை மாற்றும்படி அயலாரோடு பல கதைகளையும் பேசி ஆறுகிறோம். புத்தகங்களைப் பத்திரிகைகளை வாசித்து வேறு விஷயங்களிலே புலனைச் செலுத்துகிறோம். வேடிக்கை விநோதங்களைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறோம். இருந்த இடத்தை விட்டு வேற்றிடத்துக்குப் போய் பராக்கு தேடிக்கொள்ளுகிறோம். இந்த உபாயங்களினால் முன்னே மனதிற் பட்ட துக்கமான, கவலையான மன உருவங்கள் மறையும்படியாக, அவைகளுக்கு மேல் வேறு மன உருவங்கள் வந்து படிந்துகொள்ளுகிறது.

புகையிலைப் பாடம் அடுக்கினது போல், பிரியமில்லாத நினைவுகளாகிய மன உருவங்களின் மேல் வேறு பிரியமுள்ள மன உருவங்களை அடுக்கி மூடிவைத்து விடுகிறோம். நாட் செல்லச் செல்ல, வேணுமென்று பாடம் பிரித்தது போல, அவைகளைக் கிளப்பினால் ஒழிய, தற்செயலாய் ஏற்பட்ட ஒரு தருணத்திலே பாடம் பிரிந்தால் ஒழிய, அந்தப் பிரியமில்லாத நினைவுகள் வெளிக்கு வராது. நரக பாதாளத்திலேயோ இப்படி அல்ல. அங்கே போய் அடைந்த ஆத்துமாக்களுக்கு இனிப் புது மன உருவங்கள் உண்டாக வழியில்லை. காணப்படுகிற இந்த உலகத்திலே தான் புதுப் புதுக் காட்சிகளால் புதுப் புது மன உருவங்கள் உண்டாகும். நரக உலகத்திலே அப்படிப்பட்ட புது உருவங்களுக்கு இடம் இல்லை.

ஆனதினால், ஆத்துமமானது. தன் மனமாகிய ஒரே புத்தகத்திலே பதிந்திருக்கிறவைகளைத்தான் ஓயாமற் பார்த்துக்கொண்டிருக்க வேணும். தன்னுடைய பழஞ் சரித்திரத்தைத்தான் எப்போதும் ஒரே நிலையாக கண்முன்னே கண்டுகொண்டிருக்க வேணும். ஆ! இது எவ்வளவு அச்சம் வருத்துகிற ஒரு எண்ணம்! நான் வகை மோசமாய் மோட்ச தரிசனத்தை இழந்து போன ஏக்கம் என்னை விடாது.

நான் செய்த பாவங்கள் ஒவ்வொன்றினும் நினைவு, அவைகள் ஒவ்வொன்றோடுங் கூடிய வெட்கக்கேடு, பிறரைப் பாவத்தில் விழுத்தின பழி, பிறரை நித்தியமாய்க் கெடுத்த கல் நெஞ்சத்தனம், புண்ணியஞ் செய்யத்தக்க ஆயிரமாயிரந் தருணங்களை வீணாக்கிக்கொண்ட மதிகேடு இவை எல்லாம் ஓயாமல் என் கண் முன்னால் நிற்குமே. என் சீவியத்தின் சம்பவங்களையெல்லாம் திட்ப நுட்பமாய் எழுதிய மனச் சாட்சி என்கிற புத்தகம் எனக்கு முன்பாக விரித்தபடியே இருக்குமே. இந்த நினைவுகளை விட்டு என் மனதைத் திருப்பிக்கொள்ளவோ முடியாது. வேறு நினைவுகளால் இவைகளை மறைக்கலாம் என்றால், வேறெந்த நினைவுக்கும் இடம் இல்லையே. எந்த வாதையைத் தாங்கினாலும் இந்த வாதையைத் தாங்கக் கூடுமோ?

நரகவாசிகளுக்கு, தங்கள் உலக சீவியத்தின் நினைவே அதிக கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என்பது வேதபுத்தகத்தின் ஞானாகமத்திலே எழுதப்பட்டிருக்கிற வாக்கியங்களாலும் விளங்குகிறது, நடுத்தீர்வை நாளிலே சுத்தமானவர்கள் மோட்ச சம்பாவனை அடைந்து கொள்ள, தாங்களோ நரகக் கிடங்கில் விழுத்தப்பட்டதை பாவிகள் கண்டு கலங்கி மிகவும் பயந்து, தங்கள் எண்ணத்துக்கு மாறாய் நீதிமான்கள் இரட்சிக்கப்பட்டதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து, மனஸ்தாபப்பட்டு மனம் நொந்து பெருமூச்சு விட்டு தங்களுக்குள்ளே சொல்லுவார்கள்: இவர்களை அல்லவோ நாங்கள் பலமுறை நிந்தித்தோம்; சகல நிந்தைகளுக்கும் பாத்திரவான்கள் என்று எண்ணினோம். புத்தியீனராகிய நாங்கள் இவர்களுடைய சீவியம் பைத்தியம் என்றும், இவர்களுடைய மரணம் இழிவானது என்றும் நினைத்தோமே. இதோ இவர்கள் சருவேசுரனுடைய மக்களாகப் பாவிக்கப்பட்டுப் பரிசுத்தரோடு கூட்டப்பட்டிருக்கிறார்களே. நாங்கள் அல்லவோ, சத்தியத்தின் மார்க்கத்தை விட்டு அகன்று திரிந்தோம், நீதியின் ஒளி எங்களுக்கு அல்லவோ பிரகாசிக்கவில்லை? அறிவின் சூரியன் எங்களுக்கு அல்லவோ உதிக்க வில்லை? எங்கள் அக்கிரமப் பாவ வழியில் நடந்து தவித்தோம். கஷ்டமான வழிகளைக் கடந்தோம். ஆனால் கர்த்தருடைய வழியை நாங்கள் அறிந்ததில்லை. ஆங்காரத்தினால் எங்களுக்கு வந்த பலன் என்ன? ஆஸ்திகளின் மகத்துவத்தால் எங்களுக்கு உண்டான இலாபம் என்ன? சகலமும் நிழலைப் போலவும், ஓட்டமாய் ஓடும் தூதனைப் போலவும், அலைந்து ஆடுஞ் சமுத்திரத்தைக் கடக்கும் கப்பலைப் போலவுங் கடந்து போனதே. இதுபோலவே பிறந்த நாங்கள், தட்சணமே முடிவு அடைந்த பலத்தின் அடையாளம் ஒன்றுங் காண்பிக்க நம்மால் கூடுமாயில்லை. எங்கள் கெட்ட தன்மையினாலேயே நாங்கள் நிர்மூலமானோம், என்று பாவிகள் நரகத்திலே சொல்லிக்கொள்ளுவார்கள் '' என்பதாக வரைந்திருக்கிறது ( ஞானாக மம் 5). பாவிகளுடைய பதற்றமும் பதகளிப்பும் எடுத்து வருணிக்குத்தரம் அல்ல.

நெருப்பின் கொடூர வேதனையும் மனக்கவலையின் மாறாத் துயரமும் என்ற இந்த உளம் பதறச் செய்கிற நரக தண்டனைக்குள்ளே, இந்த ஆறாட்டமான பாடுகள் எல்லாம் ஒருநாள் தணியும் என்ற ஒரு எள்ளளவு நம்பிக்கையாவது இருக்குமானால், பாவிகளுக்கு இணையில்லாத ஆறுதல் உண்டாகிவிடும். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒன்று இருக்குமானால் அந்த காரிருள் மண்டின சிறைச்சாலைக்கு உள்ளேயும் ஒரு மனோகரமான வெளிச்சக் கதிர் புகுந்தது போல் இருக்கும்.

ஆனால், நரக வேதனைகளோ நித்தியமானவைகள்; எள்ளளவு ஆவது குறையத் தக்கவைகள் அல்ல; தணியத் தக்கவைகள் அல்ல; எப்போதும் இருந்தபடியே ஒரு மாற்றமும் இல்லா மல் ஊழியுள்ள காலமும் நிலைக்கவேண்டியவைகள். ஊழியுள்ள காலமும்...! நித்தியமும்...! என்ற இந்தச் சொற்களை நாம் கண் மூடி விழிக்குமுன் வாயினாற் சொல்லி முடித்துவிடுகிறோம். ஆனால், இவைகளுடைய உட்கருத்தை அறிவது இல்லை.

நித்திய காலம் என்றால் என்ன? ஊழியுள்ள காலம் என்றால் என்ன? இதை சிற்றறிவு உள்ளவர்களாகிய மனுஷர் ஒருபோதும் சரிவரக் கண்டுபிடிக்க மாட்டார்கள். உவமைகளால் மாத்திரம் இதை ஒருவிதத்திலே ஊகித்து அறியலாம். அறிவாளிகள், முடிவில்லாத காலம் என்றதற்குப் பல உவமைகளை எடுத்துச் சொல்லுவார்கள். ஒரு கையினால் அள்ளி எடுத்த மணலை ஒவ்வொன்றாக எண்ணி முடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு ஆற்றங்கரையிலே உள்ள மணல்களைக் கணக்கெடுக்க எத்தனை காலம் செல்லும்? இனி, உலகத்தில் உள்ள சகல ஆற்றங்கரைகளிலும், சகல சமுத்திரக்கரைகளிலும், பூமி முழுதிலும், உள்ள சசுல மணற்துகள் மண் துகள்களை எல்லாம் எண்ணி முடிக்க எவ்வளவு காலாதிகாலஞ் செல்லும்! இப்படியே பூமியில் உள்ள சகல துகள்களையும் எண்ணி முடித்த காலத்திலும் நித்திய காலம் முடியாது. ஒரு போதும் முடியாது.

இன்னும் ஒரு உவமை:- குருவிகளுக்குள் ளே சிறியதான பலாக்கொட்டைக் குருவி ஒன்று, நூறு வருஷத்துக்கு ஒருக்கால் சமுத்திரக் கரையிற் பறந்து வந்து அந்தச் சமுத்திரத்தின் தண்ணீரிலே தன் சின்னஞ் சிறிய சொண்டு கொண்ட அளவு அள்ளிக்கொண்டு போகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். அந்தக் குருவி அப்படியே வந்து நூறு வருஷத்துக்கு ஒருக்கால் சமுத்திரத்தில் தண்ணீர் அள்ளி அள்ளிக் கொண்டுபோய் சமுத்திரத் தண்ணீர் முழுதையும் வெளியே இறைத்துப் போட்ட காலத்திலும் நித்திய காலம் முடியாது; ஊழியுள்ள காலம் ஒழியாது. உள்ளபடியே காலம் என்ற சொல்லு, நித்தியத்துக்குப் பொருந்துவது அல்ல.

உலகம் முடிந்த பின் " இனிமேல் காலம் என்ற வரம்பு இல்லை'' என்று வேதாகமமும் சொல்லுகிறது (காட்சி. 10; 6). நித்தியமான து மாற்றமில்லாமல், முன் பின் என்ற காலப் பிரிவு இல்லாமல் ஒருகண்ட சீராய் இருக்கும். இப் படியே முடிவில்லாமல், என்றென்றைக்கும் ஒருகண்ட சீராய், நரகவாசிகள் அகோர ஆக்கினை அனுபவிப்பார்கள்.

ஆ எனக்காகச் சிலுவையில் அறையுண்ட என் இரட்சகரே, தேவரீர் படுபாவியாகிய என்னை இதுவரையில் நடுத்தீர்த்து நரக பாதாளத்திற் தள்ளிவிடாமல், அடியேனோடு நீடிய பொறுமையும் தயவு தாட்சணியமும் சாதித்து வந்ததற்காகத் தேவரீருக்கு அத்தியந்த நன்றி அறிதலான தோத்திரஞ் சொல்லுகிறேன். என்னைப் போல பாவக்குரோதஞ் செய்திராத எத்தனை பேர் நித்திய தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்! என்னையோ இதுவரையுந் தேவரீர் காத்து வைத்து இன்றைக்காவது நான் மனம் திரும்பும்படியான ஒரு நல்ல தருணந் தந்திருக்கிறதைப் பார்க்கும்போது, தேவரீர் எதுவிதத்திலும் என்னை இரட்சித்துப்போடவேணும் என்று கொண்டிருக்கிற தேவ தயவுள்ள திருச்சித்தத்தைக் கண்டுகொள்ளுகிறேன்.

ஆதலால், ஆண்டவரே, தயவின் கரை காணாத சமுத்திரமே, கல்லான என் இருதயத்தைத் தேவரீர் தாமே உமது சகல வல்லமையுள்ள வரப்பிரசாதத்தால் இளகப் பண்ணி, என் பாவங்களுக்காக மெய்யான மனஸ்தாபத்தை எனக்குக் கட்டளையிட்டருளும். என் இருதயம் நெக்குவிட்டு உருகவும், கண்களாற் கண்ணீர் ஆறாய் ஓடவும் செய்தருளும். இவ்வளவும் நான் செய்த அக்கிரமங்களுக்குத் தக்க தவம் பண்ணி, உமது கோப அக்கினிக்குத் தப்பிக்கொள்ளவும், எனக்கு மிஞ்சியிருக்கிற காலத்திலே புதுச் சீவியம் உள்ளவனாகி பயத்தோடும் நடுநடுக்கத்தோடும் என் இரட்சணிய அலுவலைப் பார்த்துவரவும் அனுக்கிரகம் செய்தருளும் ஆண்டவரே,

ஆமென்.