இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தனித் தீர்வையின் கணக்கு ஒப்பிப்பு தப்பாமல் ஒரு நாள் நடக்கப் போகிறது.

சரீரத்தை விட்டுப் பிரிந்த ஆத்துமம் தன்னைப் படைத்தவருக்குக் கணக்குக் கொடாமல் தப்பிப் போய்விட முடியுமோ? ''சாவுக்குப்பின் நடக்கிறதை யார் அறிவார்? அதை யார் கண்டது? '' என்று நாம் சொல்லிக் கொண்டு கவலையற்று இருக்க முடியுமோ ? ஒரு போதும் முடியாது. ஏனென்றால், செத்தவுடன் தனித்தீர்வை என்றது எடுத்து வைத்துச் சொல்லுகிற ஒரு உவகதையல்ல; அது சருவேசுரன் தாமே நியமித்தருளின ஏற்பாடு; வேத புத்தகத்தி லே வெளிப்படையாய்க் காட்டியிருக்கிற ஒரு சம்பவம்.

''மனி தர் ஒரே தரம் மரிக்க வேண்டும் என்றும் அதற்குப் பின் நடுத்தீர்வை என்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது'' (எபிரே. 9; 27 ).

நியமிக்கப்பட்டிருக்கிறது - இது ஒரு தேவ நியமிப்பு. எவராலுங் கடக்க முடியாத, ஒரு போதும் மாறாத ஒரு நியமிப்பு. "'சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்கும் தின்மைக்கும் தக்க பலனை அடையும்படிக்கு நாமெல்லாரும் கிறீஸ்துநாதருடைய நியாயாசனத்துக்கு முன்பாக வெளிப்படவேண்டும்'' என்றதும் வேத வாக்கியம் ( 2 கொரி. 5; 10. ரோ. 14; 10).

வெளிப்படவேண்டும் - இதற்கு வேறு போக்கில்லை. மோட்ச சம்பாவனைக்குரிய சுத்தவாளரும் அந்த நீதியாசனத்துக்கு முன்பாக வெளிப்பட வேண்டும்; நரக தண்டனையை அடையப்போகிற நிர்ப்பாக்கிய பாவிகளும் அதே நீதியாசனத்துக்கு முன்பாக வெளிப்பட வேண்டும்.

வேத வாக்கியமானது சந்தேக விபரீதத்துக்கு இடமில்லாமல், தெட்டத் தெளிவாய்க் காட்டுகிற இந்த உண்மைக்கு, நம்முடைய புத்தியும் சாட்சி சொல்லும். அளவில்லாத கருணையோடு நம்மைப் படைத்து, மட்டில்லாத உதார குணத்தோடு நமக்கு வேண்டியது வேண்டியது எல்லாந் தந்து காப்பாற்றி, நமக்காகத் தமது திரு உதிரத்தையுஞ் சிந்தின சருவேசுரன், இத்தனை மகத்தான நன்மைகளுக்கு எல்லாம் யாதொரு கணக்கும் கேளாமல் விட்டுவிடுவாரோ? “ஆற்றிலே போடுகிலும் அளந்து போடு'' என்றபடி, புத்தியுள்ளவன் எவனும் தான் யாதொரு அலுவலுக்காகக் கொடுப்பதைக் கணக்கோடு கொடுப்பான்; கொடுத்ததற்கு வகையும் கேட்பான்.

உங்களில் ஒரு ஆள் தனக்குக் கீழ்ப்பட்ட ஒருவனிடம் : ''இந்தா இந்தக் காசு பத்துப் பவுணையுங் கொண்டுபோய் எனக்கு இன்ன இன்ன வேலை செய்து முடித்துவிடு '', அல்லது '' இன்ன இன்ன சாமான் வாங்கிக்கொண்டு வா '' என்று கொடுத்துவிட்டு, பிறகு, தான் கொடுத்த காசைப்பற்றி, வேலையாள் செய்த வேலையைப் பற்றி, வாங்கின சாமானைப் பற்றி நினையாமலும் கணக்குக் கேளாமலும் விடுவது உண்டோ? ஒருபோதும் இல்லை. நியமித்துக்கொண்ட கெடு முடிந்த உடனே வேலை செய்து நிறைவேற்றா விட்டால், சாமான் வராவிட்டால் உடனே ஆளைத் தேடிப் பிடித்து ''' என் காசை வை அல்லது வேலையை முடி; சாமானைத் தா '' என்று நெருக்காமல் விடுவது உண்டோ?

சித்தப் பிரமை கொண்ட ஒருவன், மண்டைக் கலக்கமுள்ள ஒருவன் மாத்திரம் தன் பணத்தைக் கணக்கு வழக்கில்லாமல் எறிந்து போட்டு இருப்பான். சருவேசுரனோ அனந்த ஞானம் உள்ளவர். மனத்தடுமாற்றத்தின் நிழல் தானும் அவரிடத்தில் வராது. அவர் நமக்குத் தந்ததை எல்லாம் கணக்கோடு தந்திருக்கிறார். ஆதலால், தந்த கொடைகளுக்குத் தக்கபடி கணக்குக் கேட்பார். இது கொஞ்சமும் ஐயப்பாட்டுக்கு இடம் இல்லாத ஒரு நிச்சயம்.

மனுஷன் பேசும் வீணான சகல வார்த்தைகளைக் குறித்தும் நடுத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் '' என்று ஆண்டவர் தாமே திருவுளம் பற்றவில்லையா? (மத். 12; 36 ) அவர் தந்த நாவைக்கொண்டு நாம் பேசுகிற வீண் வார்த்தைகளுக்குமே கணக்கு ஒப்புவிக்க வேண்டுமானால், மற்றக் கொடைகளைப் பற்றி என்ன சொல்லுவோம்! எவ்வளவு கட்டாயமான ஒரு நடுத்தீர்ப்பு! எவனாவது அந்தத் தீர்ப்புக்கு உட்படாமற் தப்புவது எப்படி?

உலக சுக போகங்களிலே கருத்து வைத்து நடக்கிறவர்களுக்கு
நடுத் தீர்ப்பைப் பற்றி நினைக்க மனம் இல்லை. நடுத்தீர்ப்பும் இல்லை, நடுவரும் இல்லை, நம்மை மீட்க வந்த யேசு நாதரும் இல்லை என்று தங்களைத் தாங்களே நம்பப் பண்ணிக்கொள்ள அவர்கள் வெகு பிரயாசப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களை நோக்கி வேத வாக்கியம் சொல்லுவதாவது: ''வாலிபனே, உன் இளமையிலே சந்தோஷப்படு; உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்களின் காட்சிகளிலும் நட. ஆனாலும், இவை எல்லாவற்றினும் நிமித்தம் சருவேசுரன் உன்னை நியாயத் தீர்ப்பிலே கொண்டுவந்து நிறுத்தாமல் விடார் '' (எக்கிளி. 11; 9).

உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டு உனக்கு நடுத்தீர்வை இல்லை என்றது போல நீ நடந்து கொண்டாலும் என்ன? அது ஒரு நாள் வரவே வரும் என்றதுதான் இவ் வாக்கியத்தின் கருத்து. ஆதலால், பிரியமானவர்களே, நான் நன்மை தின்மை பகுத்தறியக் கூடிய ஒரு உத்தரவாதமுள்ள மனுஷனாய் இருக்கிறேன் என்பது எவ்வளவு நிச்சயமோ, நான் செய்த நன்மை தின்மைக்கு ஒருநாட் கணக்குக் கொடுக்க வேணும் என்பதும் அவ்வளவு நிச்சயம். எனக்குப் புத்தியும் தன்னிட்டமும் உள்ள ஒரு ஆத்துமம் இருக்கிறபடியால் நடுத்தீர்ப்பும் உண்டு; சந்தேகமில்லாமல் உண்டு.

சாவு வந்த உடனே மனுஷனுக்கு இவ் உலகமும் அதின் சகல பொருள் பண்டங்களும், தன் சரீரமும் கூட, மறைந்து போம். ''இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே'' என்ற வேத வாக்கியத்தின் உண்மையை அப்போதே பூரணமாக உணரலாம் (1 கொ ரிந். 7; 31). ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிதலும், முகத்தை மூடிக்கொண்டிருந்த ஒரு முகமூடி விழுந்தது போல, அதின் கதி அப்போது தான் தெரியும். காச நீரால் மறைந்திருந்த கண் திடீரென வெளித்தது போல, உலக மாய்கையும் பாவ மயக்கமும் அப்போது தான் துலையும்.

அவ்வேளை, பாவவாளனுடைய ஆத்துமமானது தன்னை நடுத்தீர்க்கிறவருக்குத் தப்பி ஓட நினைத்து, எப்பக்கம் பார்த்தாலும் தப்புவதற்கு வகையில்லாமல் திகைத்து நிற்கும். கூட்டை விட்டு வெளிப்பட்ட கிளிப்பிள்ளை போல் இருக்கிற ஆத்துமம் எங்கே பறந்து தப்பியோடும்? இதோ! உயரப் பறந்தாலும் அங்கே சருவேசுரன் இருக்கிறார்; பாதாளத்தை ஊடறுத்து ஓடிப் பார்த்தாலும் அங்கே அனந்த வல்லமையுள்ளவர் இருக்கிறார்; கிழக்கு முகமாய்ப் பார்த்தாலும் அங்கே சகலத்தையும் அறிகிறவர் இருக்கிறார்; மேற்கு முகமாய், வடக்காய் தெற்காய் விரைந்து போனாலும் எங்கெங்கும் சர்வ வியாபியான அனாதி நித்தியர் இருக் கிறார்.

எவனாகிலும் தன்னை நாம் காணாதபடிக்கு மறைவிடத்தில் ஒளித்துக் கொள்ளக் கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் வசனிக்கிறார்'' ( யெரே மி. 23 ; 24.). செத்தவனுடைய ஆத்துமம் எங்கும் நிறைந்தவருடைய சமுகத்தை விட்டு நீங்க முடியாது.

இவ்விடத்தில், கிறீஸ் தவர்களே, ஆத்துமத்தை நடுத்தீர்க்கிறவர் பிதாவாகிய சருவேசுரனுமல்ல, இஸ்பிரீத்துசாந்து சருவேசுரனுமல்ல, நமக்காக மனித சுபாவத்தைத் தரித்த சுதனாகிய யேசுநாதர் தாமே என்றதை மனதிலே வைத்துக் கொள்ளுங்கள். ''பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நடுத்தீர்வை சொல்லாமல் தீர்வை சொல்லும் அதிகாரம் முழுமையையும் சுதனிடத்தில் ஒப்புவித்திருக்கிறார். அவர் மனுஷ குமாரனாய் இருக்கிறபடியால் நடுத்தீர்வை சொல்லும் அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்'' என் பது வேத வாக்கியம் ( அருளப். 5; 22-3).

மனுஷ குமாரனாகிய அவரும், வேத சாத்திரிகளுடைய ஒரு அபிப்பிராயத்தின்படி, பரலோகத்திலே அல்ல, வேறொரு தூரமான தலத்திலேயும் அல்ல, அவனவன் மரித்த இடத்திலேதானே, ஒரு நொடிப் பொழுதுக்குள்ளே அந்தப் பாரதூரமான தீர்வையைச் சொல்லி முடித்துப் போடுவார் என்று நம்பவேண்டி இருக்கிறது.

செத்தவன் செத்துப் போனான்தானோ என்று சூழ நிற்போருக்கு இன்னும் நிச்சயமாக வில்லை. அவர்கள் சவத்தின் கண்களை இன்னும் பிடித்து மூட வில்லை. பிரேதத்திலே இன்னும் சூடு காணப்படுகிறது. இதற்கிடையில், உடலை விட்டுப் பிரிந்த ஆத்துமத்தின் கணக்கு இதோ! கேட்கப்பட்டாயிற்று. பாக்கியமான நித்தியமோ, நிர்ப்பாக்கியமான நரகக் கிடங்கோ நியமிக்கப்படுகிற மகா விளக்கம் இதோ! நடந்து முடிந்தது. சவத்தைப் புடை சூழ்ந்து கோவென்று அழுகிறவர்களுக்கு, பந்தல் போட, பாடை கட்ட, இழவு சொல்ல ஓடியாடித் திரிவோருக்கு இந்தத் தீர்வையைப்பற்றி ஒன்றும் தெரிய வராது.

இறந்துபோனவனை முன் நிறுத்தி யேசுநாதசுவாமி நடத்துகிற விசாரணையைச் சூழ நிற்போர் கண்டார்களானால், கேட்டார்களானால், திடுக்கிட்டு, திக்குமுக்காடி, விறைத்து, சமித்து, சீவனற்று விழுந்து போவார்கள். அவர்கள் கண்ணுக்கும் காதுக்கும் அது மறைத்து வைக்கப்படுவதும் ஒர் தேவ தயவுதான்.