பொம்பே மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொம்பே மாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு நவநாள் மன்றாட்டு.

பொம்பே நாட்டுப் புதுமையுள்ள நாயகியின் ஒரு படம் / சுரூபத்துக்கு முன்பாக , கீழ்காணும் மன்றாட்டுகளும், ஜெபங்களும் , சிறு வேண்டுதலும் கூடிய இந்த நவநாள் ஜெபத்தை ஜெபிக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்கி பரிசுத்த பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்களுக்காக வேண்டிக்கொல்லுகிரவர்களுக்கும் பரிபூரண பலனையும் பரிசுத்த பிதா 13ஆம் சிங்கராயர் கட்டளையிட்டருளி இருக்கிறார்.

சுரூபம் / படத்தை தக்க இடத்தில் ஸ்தாபித்து உன் விசுவாசத்துக்கும் பக்தி பற்றுதலுக்கும் அடையாளமாக , கூடுமானால் ஒரு மெழுகுதிரி கொளுத்தி பக்தி வணக்கத்தோடு சொல்ல வேண்டியதாவது :

சர்வேசுரா , எனக்கு உதவியாக வாரும்! கர்த்தாவே, எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்! பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக! ஆதியில் இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக!

ஆமென்.

பொம்பே மாதாவிடம் வல்லமை மிக்க செபம்.

ஆதாமின் சந்ததியில் உதித்த அனைவரிலும் தெரிந்தெடுக்கப்பட்ட கன்னிகையே! இக் கண்ணீர்க் கணவாயில் வருந்தித் தளர்ந்து சோரும் பிரயாணிகளைத் தனது சுகந்த பரிமள வாசனையால் ஆற்றித் தேற்றுவதற்காகப் பரம நந்தவனத்திலிருந்து இப்பரதேசமாகிய பாழ்நிலத்தில் நடப்பட்ட பரோபகார ரோஜா புஷ்பமே! எக்காலமும் வாடா மலர்களின் மெய்யான இராக்கினியே! இறைவனுக்கு உகந்த தாயே! பாவ மரணத்தை ஒழித்துப் பரம வரப்பிரசாத ஜீவியத்திற்கு மனுமக்களை அழைப்பதர்க்காகப் பொம்பே நாட்டில் உமது கருணை வரப்பிரசாத சிம்மாசனத்தை இந்நாட்களில் ஸ்தாபிக்க சித்தம் வைத்தருளின ஆண்டவளே! இரக்கத்தின் தாயாரென்று உம்மைத் திருச்சபை விசுவாசிகள் எல்லோரும் உம்மை அழைத்து வருகிறார்கள். ஆதலால் இதோ உமது தூய பாதத்தில் வரும் ஏழையாகிய அடியேனையும் புறக்கணியாதிருக்க மன்றாடுகிறேன் .

இறைவனுக்கு அத்தியந்த பிரியமுள்ளவர் நீராதலால், உமது மன்றாட்டை அவர் எப்போதும் கேட்டருள்கிறார். ஓ! ஆண்டவளே! உமது அடைக்கலத்தில் ஓடிவரும் எந்த பாவியும், எவ்வளவு தான் துரோகியாய் இருந்த போதிலும் உமது அத்தியந்த மதுரம் நிறைந்த அன்பானது ஒருபோதும் புறக்கணித்துத் தள்ளினதில்லை. பாவிகளுக்கு அடைக்கலமென்றும் பரிந்து பேசுபவரென்றும் உம்மைத் திருச்சபை பெயரிட்டழைப்பது பொருத்தமே .

ஆண்டவரே உமது அளவற்ற இரக்க உருக்கத்தினாலேயே நீர் பாவிகளின் தப்பாத அடைக்கலமும் ஏக நம்பிக்கையும் பரிந்து பேசுபவருமாய் விளங்குகிறீர் . உலகத்தார் அனைவருக்காகவும் இயேசுக்கிறிஸ்து நாதரை ஈன்றெடுத்த தேவ தாயார் நம்மிடத்தில் ஓடி வந்த ஓர் பாவிக்கிரங்காது போனதென்று ஒருபோதும் உலகத்தில் சொல்லப்பட இடங்கொடாதேயும். ஓ ! ஆண்டவளே! இறைவனுக்கும் மனிதருக்கும் உறவு கொண்டாடுவதே உமது வேலை

என் பாவங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிகப் பெரிதாயிருக்கிற உமது கரைகாணாக் கருணையால் எனக்கு இரங்கியருளும். ஓ! மரியாயே! ஜெபமாலை இராக்கினியே! பொம்பே கணவாயில் நம்பிக்கை நட்சத்திரமாய்த் தோன்றுபவளே! என் பேரில் இரக்கமாயிரும். அனுதினமும் அடியேன் உமது பாதத்தன்டையில் வந்து உம்மை நோக்கி அபயச் சத்தமிடுகிறேன். நீரே பொம்பே நாட்டு புதிய ஆசனத்தில் நின்று என்னை கிருபாகடாட்சமாய் நோக்கி அடியேன் மன்றாட்டுக்கு காது கொடுத்து என்னை ஆசீர்வதித்தருளும் ஆண்டவளே!

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 5-வது மன்றாட்டு.

ஓ, ஜெபமாலை இராக்கினியும் கன்னிகையுமானவளே, பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியும், சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரும், பரிசுத்த ஆவியின் பத்தினியும், அதி பரிசுத்த திரித்துவத்தினிடத்தில் சர்வ சக்தியுடையவருமானவரே! எனக்கு இவ்வளவு அவசியமாகிய இவ் வரப்பிரசாதம் என் இரட்சண்ணியத்துக்கு இடையூறாயிராவிடில், அதை நீர் எனக்கு அடைந்து தந்தருள வேண்டும்.

(இன்னதென்று  உறுதியாகச் சொல்லவும்)

அடியேன் இந்த மன்றாட்டை உமது அமலோற்பவத்தைக் குறித்தும் நீர் தேவதாயாரானதைக் குறித்தும் உமது சந்தோஷங்கள், வியாகுலங்கள், வெற்றிகளைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறேன்.

அன்றியும் உமது நேச இயேசுவின் திருஇருதயத்தைக் குறித்தும், நீர் அவரை உமது உதரத்தில் தரித்திருந்த ஒன்பது மாதங்களைக் குறித்தும், அவர் தமது ஜீவிய காலத்தில் அனுபவித்த துன்ப துரி தங்களைக் குறித்தும், பட்ட கொடிய பாடுகளைக் குறித்தும், சிலுவையிலடைந்த மரணத்தைக் குறித்தும் ,அவருடைய மகா பரிசுத்த நாமத்தைக் குறித்தும் ,அவரது  விலையேறப் பெற்ற திரு இரத்தத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறேன்.

கடைசியாய் உமது அத்தியந்த மதுரமான திருஇருதயத்தைக் குறித்தும், ஓ, மரியாயே! சமுத்திரத்தின் நட்சத்திரமே!  வல்லபமுள்ள இராக்கினியே! பரலோகத்தினுடைய வாசலும் சகலவரப்பிரசாதங்களின் தாயாருமாகிய உம்மை நோக்கி மன்றாடுகிறேன். உம்மை நம்பினேன்; உம்மால் சகல நன்மைகளும் அடைவேனென்று உறுதியாயிருக்கிறேன். நீரே என்னை இரட்சிக்கக்கடவீர்.

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.

திருக்கன்னிகையே நான் உம்மைத் துதிக்கக் கிருபை செய்தருளும். உமது பகையாளிகளுக்கு விரோதமாய் எனக்குத் தைரியமும் பலமும் தந்தருளும்.

இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத் தங்களுக்கு நாங்கள் பாத்திர வான்களாய் இருக்கத்தக்கதாக, மிகவும் பரிசுத்த ஜெபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக.

தமது சீவியத்தாலும் மரணத்தாலும் உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணிய சம்பாவனையை சம்பாதித்தருளிய ஏக புத்திரனின் பிதாவாகிய சர்வேசுரா சுவாமி, அந்தத் தேவ இரகசியங்களை முத்திப்பேறு பெற்ற கன்னி மரியாயின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாய் நினைவு கூரும். அடியோர்கள் அவைகளுக்கொப்ப நடந்து அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேறடையத்தக்கதாக உதவி புரிந்தருளும்  . இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 4வது மன்றாட்டு

நிர்ப்பாக்கியருக்குச் சகாயமும், ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலமும், துன்பப்படுவோர்க்குத் தேற்றரவுமாயிருக்கிற உம்மையல்லா நான் வேறே யாரையடுத்துப் போவேன்?

என்னாத்துமமோ நிர்ப்பாக்கியமானதுமாய், கொடிய பாவச் சேற்றில் அமிழ்ந்தினதுமாய் நரகாக்கினைக்கும் பாத்திரமும், உமது வரப்பிரசாதங்களுக்கு அபாத்திரமானதுமாய் இருக்கிறது மெய்தான் என்று ஒத்துக்கொள்கிறேன்.

ஆயினும், நம்பிக்கையற்றவர்களின் நம்பிக்கையும் , மானிடருக்கும் கடவுளுக்குமிடையில் மகா மத்தியஸ்தம் செய்பவரும், சர்வ உன்னத சர்வேசுரனின் சிம்மாசனத்துக்கு முன்னின்று எங்களுக்காக வெகு பலத்தோடு பரிந்து பேசுபவரும் பாவிகளுக்கு அடைக்கலமும் நீரல்லவோ?

நீர் உமது திருக்குமாரனிடத்தில் எனக்காக ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம் பற்றியருளுவிரேயாகில் உமது மன்றாட்டை அவர் கேட்டருளுவார்,

ஓ! என் தாயாரே! இதோ! எனக்கு எவ்வளவோ அவசியமாயிருக்கிற இவ் வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தந்தருளும்.

(வேண்டுதலை விசுவாச உறுதியோடு சொல்லவும்)

ஆண்டவளே! நீர் மாத்திரமே அடியேனுக்கு பெற்றருளக் கூடியவள். நீரே என் ஏக நம்பிக்கை. நீரே என் ஆறுதல். நீரே என் மதுரம். நீரே என் பூரண ஜீவியம். நான் நம்பிக் காத்திருக்குமாப் போல் ஆகக்கடவது.

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 3-வது மன்றாட்டு.

ஓ! என் தாயாரே! எத்தனையோ பேர் நம்பிக்கையோடு உம்மையண்டி வந்ததினால் உமது உதவி சகாயங்களைப் பெற்றுக் கொண்டார்களென்று கேள்விப்படும் போது, உமது ஆதரவை இரந்து மன்றாடும் அடியேனுக்கு விசேஷ தைரியமும் துணிவும் உண்டாகக் காண்கிறேன்.

எவ்வித வரப்பிரசாதங்களையும் அடைய விரும்புவோர்கள், உமது மகா பரிசுத்த ஜெபமாலை வழியாய் அடையலாமென, புனிதசாமி நாதருக்கு வாக்குத்தத்தம் செய்தருளினீர். ஆதலால், நானும் இதோ உமது ஜெபமாலையைக் கையிலேந்தி, தாய் தேசத்துக்குரிய விபத்து தப்பாட்டை நிறைவேற்றும்படி உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

பொம்பே என்னும் ஸ்தலத்தில் உமக்கோர் ஆலயத்தைக் கட்டுவிக்க உமது மக்களையும் ஏவும் பொருட்டு எத்தனையோ அற்புதங்களை நீர் இன்று வரையும் செய்து வருகிறீர்!

ஆதலால், நீர் எங்கள் கண்ணீரைத் துடைக்கவும், கவலைகளையாற்றவும் சித்தமுடைத்தானவராயிருக்கிறீரெனக் கண்டு, என் இருதயத்தை முழுதும் உமக்குத் திறந்து, உயிருள்ள விசுவாசத்தோடு உம்மை நோக்கி என் தாயாரே! அழகு செளந்தரியமுடைத்தான மாதாவே! மகா மதுரம் பொருந்திய மாதாவே! என்று உம்மை நோக்கிக் கூப்பிட்டு ,எனக்கு உதவி செய்ய மன்றாடுகிறேன்.

அர்ச்சியசிஷ்ட செபமாலை இராக்கினியும் தாயுமானவளே, நீர் தாமதிப்பீராகில் நான் தவறி மோசம் போய் விடுவேன் என்பதை அறிவீர். ஆதலால், சற்றும் தாமதியாமல் உமது வல்லபமுள்ள கரத்தை நீட்டி என்னை இரட்சித்தருளும்.

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 2-வது மன்றாட்டு.

மகத்துவமும் மகிமைப் பிரதாபமும் கொண்ட அரசியே, உமது ஆசனத்தண்டையில் சாஷ்டாங்கமாய் விழுந்து, அணை கடந்த துயரப்பிரலாப சாகரத்தில் அமிழ்ந்தியிருக்கும் என்னாத்துமம் உம்மை வணங்குகிறது.

இதோ என் துன்ப துரிதங்களில் நம்பிக்கையோடு என் கண்களை ஏறெடுத்து எவராலும் புறக்கணிக்கப்பட்ட ஏழைகளும் தரித்திரரும் வசிக்கும் அவ்விடத்தை உமது வாசஸ்தலமாகத்தெரிந்து கொண்ட உம்மை நோக்கிப் பார்க்கிறேன்.

இதன் முன்னே அஞ்ஞான ஆசாபாசக்காட்சியின் ஆனந்தக்களறியும் நகருமாயிலங்கி, இப்போது அழிவும் மெளனமும் அரசாளும் அத்தலத்துக்கருகில் நின்று, நீர் இத்தாலியாவின் எத்திசையிலும், கத்தோலிக்க இராச்சியம் எங்குமுள்ள உமது தேச மக்களை உமக்கோர் ஆலயத்தைக் கட்டுவதற்காக ஜெயசீல இராக்கினியாய் உரத்த சத்தத்தோடு அழைக்கிறீர்.

ஆண்டவளே! அசுத்தத்தில் அமிழ்ந்து கிடக்கும் என் ஆத்துமத்தின் பேரில் இரக்கமாயிரும். அணை கடந்த துன்ப துரி தங்களாலும் நிந்தை அவமானங்களாலும் நிறைந்திருக்கும் என் பேரில் இரங்கியருளும்.

பசாசுக்களை விரட்டி ஓட்டுகிறவளே! என்னைச் சூழ்ந்துள்ள சத்துருக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும். கிறிஸ்தவர்களின் சகாயமே, நான் நிர்ப்பாக்கியனாய் வீழ்ந்து கிடக்கும் இது சோதனைகளினின்று என்னைக் காப்பாற்றியருளும்.

என் சீவியம், இதோ இவ்வளவு ஆபத்துக்குள்ளாகி, என்னாத்துமத்தை யடுத்திருக்கும் மரணத்தை ஜெயித்து, சமாதானத்தையும், அமரிக்கையையும், அன்பையும், ஆரோக்கியத்தையும் அடியேனுக்குக் கட்டளையிட்டருள்வீராக

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 1 ஆவது மன்றாட்டு.

அமலோற்பவ கன்னிகையே, அர்ச்சியசிஷ்ட செபமாலையின் அரசியே , விசுவாசம் தளர்ந்து, அவிசுவாசம் வளர்ந்தோங்கும் இக்காலத்திலே அஞஞானிகளிடமிருந்து மறைந்து போன பொம்பே என்னும் அபூர்வ நாட்டில், இராக்கினிக்கு உரியதும், மாதாவுக்குரியதுமாகிய உமது ஆசனத்தை ஸ்தாபிக்கக் கிருபை புரிந்தருளினதுமல்லாமல், விக்கிரகங்களையும் பேய்களையும் வணங்கி வந்த அவ்விடத்திலேயே நீர் எழுந்தருளி, தேவ வரப்பிரசாதங்களின் தாயாராய்ப் பரம கிருபாகரப் பொக்கிஷத்தை ஏராளமாய் எங்கும் பொழிந்தருளுகிறீர்!

ஆ! மரியாயே! அவ்வித கிருபாகரியாய் அரசாளும் அச் சிம்மாசனத்தில் நின்று அடியேனையும் உமது கிருபைக் கண்கொண்டு நோக்கி, உமது உதவி சகாயம் அத்தியந்த அவசியமாக இருக்கிற அடியேன் பேரில் இரக்கமாயிரும்!.

எத்தனையோ பேருக்கு நீர் மெய்யான இரக்கத்தின் தாயாராகக் காண்பித்தருளினது போல் எனக்கும் காண்பித்தருளும். என் முழு இருதயத்தோடு உம்மைத் துதித்து, என் ஆண்டவரும் திருச்செபமாலை இராக்கினியுமென்று உம்மைக் கூப்பிடும் இத்தருணத்தில் எனக்கு மாதாவாகக் காண்பித்தருளும்.

(கிருபை தயாபத்து ஜெபம் சொல்லவும்).

ஆமென்.