நவநாள் செபங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவநாள் செபங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். குழந்தை சேசுவின் தெரசம்மாள் பேரில் நவநாள் ஜெபம்

(திருநாள் : அக்டோபர் 3)

அர்ச். குழந்தை சேசு தெரசம்மாளே! சிறிய சுகந்த புஷ்பமே! தேவசிநேகத்தினால் பற்றியெரிந்த கன்னிகா ரத்தினமே! துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! அண்டி வந்தவர்களைக் கைவிடாத பேருபகாரியே!  அம்மா! பாவி நான் உம்மை நம்பி வந்தேன்.  நான் கேட்கும் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயையுடன் சேசுவின் திரு இருதயத்தினின்று பெற்றுக் கொடுத்தருள்வீராக! 

ஆமென்.

3 பர. 3 அருள். 3 திரி.

வேதசாட்சியான அர்ச். ஆக்னசம்மாளை நோக்கி நவநாள் ஜெபம்

(திருநாள் : ஜனவரி 21)

இளம்பிராயத்திலேயே சேசுநாதர் சுவாமிக்கு உம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து அவரை உமது ஏக பத்தாவாகத் தெரிந்து கொண்ட அர்ச். ஆக்னசம்மாளே, இவ்வுலக சுகபோகமெல்லாம் வீணும் விழலுமென்று நிந்தித்துத் தள்ளி, நித்திய சீவியமடைய சர்வ நிர்ப்பந்த வாதனைகளையெல்லாம் அனுபவித்து கன்னிமை முடியும், வேதசாட்சி முடியும் பெற்ற கர்த்தரின் உன்னத பத்தினியே, உம்மைப்போல் நாங்களும் எங்கள் சத்துருக்களாகிற உலகம் பசாசு சரீரத்தை ஜெயிக்கவும் எங்களுக்கு நேரிடுகிற துன்பதுரித பொல்லாப்புகளை எல்லாம் நல்ல மனதோடு பொறுக்கவும், கடைசியாய் தூய இருதயத்தோடு மரிக்கவும், நாங்கள் பாத்திரவான்களாகும்படிக்கு எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.

பர. அருள். திரி.

நவவிலாச சபை சம்மனசுக்களுக்கு பிரார்த்தனை.


சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சிஷ்டதமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்சுேரா எங்களைத் தயைப்பண்ணி இரட்சியும் சுவாமி

சம்மனசுக்களின் இராக்கினியாயிருக்கிற அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பக்திச் சுவாலகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்சிஷ்ட காவல் தூதர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித லிகோரியாரின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்

கிறிஸ்துபிறப்பு விழாவிற்கான நவநாள் பக்தி முயற்சிகள் நமது ஆலயங்களிலும், குருமடங்கள், கன்னியர் மடங்களிலும் நடைபெற்று வருகின்றன. சில ஆலயங்களில் பாடலுடன் செபங்கள் கூறப்படுகின்றன. திருச்சபையில் மக்களுக்கு மறையுரை, தியானம் முதலியவற்றை நடத்தி வரும் இரட்சகர் சபையை நிறுவிய புனித அல்போன் லிகோரியார் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபத்தை எழுதினார். இது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது.

1. ஒரே ஓர் ஆன்ம / சமூக / தனிநல கருத்தை வைத்து ஒன்பது நாள்களிலும் செபிக்கலாம்.

2. ஒவ்வொரு செபத்திற்குப் பின்னரும் ஒரு பரலோக செபம், அருள் நிறை மரியே செபம், திரி, செபம் கூறி அந்தக் கருத்துக்காகச் செபிக்கலாம்.

(16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை)

முதல் நாள்:

இறைவனின் மைந்தரே, இயேசுவே, எங்களுக்காக எங்களில் ஒருவராகப் பிறந்து மரித்தீர். இந்த அன்புக்குக் கைமாறாக வாழாமல் இருந்திருக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னித்து, உன்னதமான எண்ணத்துடன் வாழ அருள்புரியும்.

அன்புத் தாயே, மரியே! இறைவனை முழுவதும் நேசித்து அவரது அருளைப் பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி).

இரண்டாம் நாள்:

உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் நவநாள் செபம்.

சர்வ வல்லபரான தேவனாகிய ஆண்டவரே, உமது திவ்விய சுதனாகிய சேசுநாதர் தமது மகா பரிசுத்த வியாகுல மாதாவின் பிரசன்னத்தில் தமது திருவிலாவினின்று ஏராளமாகச் சிந்தின விலைமதியாத திருஇரத்தத்தைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களையும், விசேஷமாக, இந்தத் திவ்விய இராக்கினியிடம் அனைவரிலும் அதிக பக்தியுள்ளதாக இருந்திருக்கிற ஆத்துமம் தேவரீருடைய மகிமைக்குள் சீக்கிரமாகப் பிரவேசித்து, அங்கே பரிசுத்த கன்னிகையில் உம்மையும், உம்மில் அவர்களையும் எக்காலங்களுக்கும் வாழ்த்திப் போற்றி ஸ்துதித்துக் கொண்டிருக்கும்படியாக அந்த ஆத்துமத்தையும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கும்படியாக உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.

1 பர, 1 அருள், 1 திரி.

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி, முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது.

உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்கள் நவநாட்களில் ஒவ்வொரு நாளும் சொல்லும் செபம்.

ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும். என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

என் சிருஷ்டிகரும், சகல விசுவாசிகளினுடையவும் இரட்சகருமாகிய சர்வேசுரா, உமது ஊழியர்களும், அடிமைகளுமானவர்களின் ஆத்துமங்களின் சகல பாவங்களையும் மன்னித்தருளும். இவ்வாறு, எங்கள் பக்தியுள்ள மன்றாட்டுக்களின் வழியாக, அவர்கள் எப்போதும் ஆசித்து வந்திருக்கிற மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்களாக. ஜீவியரும். சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே.

ஆமென்.

பனிமய மாதா நவநாள் ஜெபம்.

சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.
(3 முறை).

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்.

நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு காடு கடல்களைக் கடந்து ஓடி வந்தோம், துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம்.

எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!.

ஆமென்.

சதா சகாயமாதாவுக்கு வல்லமையுள்ள நவநாள் செபம்.

இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்ளும்.
(மும்முறை)

மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பிக்கையுமாக இருப்பவள் நீரே!

இன்று நாங்கள் அனைவரும் உம்மிடம் வருகிறோம். நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இடைவிடா சகாயத் தாயே உம்மை நேசிக்கிறோம். எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.

இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

சோதனைகளை வெல்லும் பலத்தையும், இயேசுக்கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும், நல்ல மரணத்தையும் அடைந்து தாரும். உம்மோடும் உமது திருக்குமாரனோடும் என்றென்றும் வாழ அருள் புரியும்.

இடைவிடா சகாயத் தாயே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆமென்.

கார்மேல் மாதா நவநாள் செபம்.

மிகவும் மதுரமுள்ள அர்ச்சியசிஷ்ட கன்னிகையே! பரம தேவ தாயே! உம்முடைய முந்தையோராகிய பிதாப்பிதாக்களுள் மிகவும் பூச்சியமான கீர்த்தி பெற்றவராகிய ஆபிரகாம் என்கிறவருக்கு சர்வேசுரன் கொடுத்த வார்த்தைப்பாட்டின்படி, உம்முடைய திருப்புத்திரனாகிய சேசுநாதரிடத்தில் சகல ஜாதி ஜனங்களும் இரட்சிக்கவும், ஆசீர்வதிக்கவும் பட்டதைப் பற்றி உம்மோடே அகமகிழ்ந்து உம்மை வாழ்த்தி ஸ்துதித்து வணங்குகிறோம்.

சர்வலோகத்துக்கும் ஆனந்தமான இராக்கினியே! சகலருக்கும் தயாபரியான ஆண்டவளே, பாவிகளுக்கு அடைக்கலமே, பரிதவிப்போருக்கு ஆதரவே , பாவப்பிணியை நீக்கும் பரம தேவ தாயே , உமக்கு உத்தம வணக்க தோத்திரம் பண்ணுகிற பக்தி சபைகளுக்குள்ளே உமக்கு விஷேஷ பிரியமும் மகிமையுமாயிருப்பதற்கு புனித உத்தரிய சபையை ஏற்படுத்தச் சித்தமாகி, அத்தியந்த பக்தியால் உமக்கு உகந்தவரான அர்ச்சியசிஷ்ட சிமியோன் ஸ்டோக் என்கிற மகத்துவமானவருக்கு திரு உத்தரியத்தைத் தந்தருளினீரே! அடியோர்களுக்கும் உமது ஆதரவின் ஈடாகத் தந்தருளிய இத்திரு ஆடையைப் பற்றி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

மீளவும் சாதாரண திருச்சபைக்குப் பிதாவும், தலைமையான குருவுமான புனித பாப்பானவருக்கு மிகுந்த கிருபையுடனே தரிசனமாகி, உம்முடைய திரு உத்தரிய சபைக்கு உட்பட்டவர்களில் யாராவது ஒருவர் பூவுலகில் பக்திச் சுமுத்திரையுடனே நடந்த பிறகு, மரித்து உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போவார்களேயாகில், அதற்குப் பின் முதற் சனிக்கிழமையில் நீர் அவர்களை அத்தீயில் இருந்து மீட்டுக் கொண்டு, மோட்ச ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பண்ணுவதாகத் திரு உளம் பற்றினீரென்றுவேத சாஸ்திரிகர் அநேகர் எழுதி வைத்தார்களே. இந்த வர்த்தமானம் உம்முடைய திருவடியார்களுக்கு எவ்வளவோ சந்தோஷத்திற்கும் நம்பிக்கைக்கும் இடமாயிருக்கிறது.

ஆ தயாளமுள்ள தாயே!! அடியேன் மிகவும் பாவியாயிருந்தாலும் உமது அத்தியந்த தயாளத்தை நம்பி உம்முடைய திருக்குமாரனிடத்தில்எனக்குக் கிருபை கிடைக்கும்படி செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அன்புள்ள தாயே! உமது திரு உத்தரியத்தைத் தரிசிக்கிற அடியேனைப் புறக்கணியாமல் உம்முடைய திருக்கரங்கொண்டு நடப்பித்தருளும்.

பின்னும் என் மரண சமயத்தில் எனக்கு வேண்டிய சகாயங்களைச் செய்து சகல சோதனை பொல்லாப்பு ஆக்கினைகளிலே நின்றும் உமது வேண்டுதலினால் என்னை இரட்சித்து, உம்முடைய திருக்குமாரனுடைய சமூகத்தில் என் ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்து, எனக்கு நித்திய மோட்ச பேரின்பத்தைப் பெறுவிக்க வேணுமென்று உம்மை மிகுந்த நம்பிக்கைப் பக்தி நேசத்துடனே வேண்டிக் கொள்ளுகிறேன் ஆண்டவளே!

ஆமென்.

குழந்தை இயேசு நவநாள் ஜெபம்.

அற்புதக் குழந்தை இயேசுவே! அடியோர் மேல் இரக்கமாயிரும்!
(மும்முறை)

தொடக்கச் செபம்.

எங்கள் அருமைக் குழந்தை இயேசுவே!, அடியோரை ஆசீர்வதித்து வரவேற்க கரம் விரித்து காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவிபுரியும். நீரே எங்கள் ஆண்டவர்! நீரே எங்கள் மீட்பர்! எங்களைப் பற்றி உமக்கு எவ்வளவோ அக்கரை! எங்கள் மன்றாட்டுக்களை கேட்க எங்களோடு இருக்கின்றீர். எனவே எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து எங்கள் கோரிக்கைகளை கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு இறைஞ்சி கேட்கிறோம். தந்தையோடும் தூய ஆவியோடும், இறைவனால் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் இயேசுவே.!
ஆமென்.

குழந்தை இயேசு செபம்.

அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி பணிவாக உம்மை இறைஞ்சி வேண்டுகிறோம்.

எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும் நீக்கி, உமது குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக.

ஆமென்.