திருவருகைக் காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவருகைக் காலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவாமி பிறந்த திருநாள் துவக்கி செய்யும் ஜெபம்

1- வது, புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உலகத்தில் நெருப்புப் பற்றுவிக்க வந்தோமென்று திருவுளம்பற்றினீரே; உலக ஆசையால் குளிர்ந்திருக்கிற எங்கள் இருதயங்களை உமது தேவ அக்கினியால் எரிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திரு நாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

2-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உலகத்தின் பிரகாசமென்று திருவுளம்பற்றினீரே; மரண நிழலிலும், பாவ அந்தகாரத்திலும் அமிழ்ந்தியிருக்கிற எங்களைப் பிரகாசிப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

3-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் சகலத்திலும் மாதிரியயன்று திருவுளம்பற்றினீரே; எங்கள் கிரியைகளின் ஆதியந்தம் எல்லாம் உமது திருச்சித்தப்படி நடப் பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப் பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப் படுவதாக. அருள்...

4-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உத்தம கொடி முந்திரிகையயன்று திருவுளம்பற்றினீரே. எங்களை நற்கிளைகளாக இந்தத் திவ்விய கொடியில் சேர்த்து, உத்தம பழங் களைக் காய்க்கப் பண்ண நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

5-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் நல்ல இடையனென்று திருவுளம் பற்றினீரே; கெட்டுப்போன பிரஜைகளாயிருக்கிற எங்களை உமது பட்டியின் வழியிலே நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப் பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப் படுவதாக. அருள்...

6-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் ஆட்டுப்பட்டியின் வாசலென்று திருவுளம்பற்றினீரே; உமது மந்தைகளின் சொந்த ஆடு களாகிற எங்களை உமது மோட்ச பட்டியில் உட்படுத்த நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

7-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் பரமண்டலத்தில் நின்று இறங்கின ஜீவிய அப்பமென்று திருவுளம் பற்றினீரே; இந்தத் திவ்விய அப்பத்தின் போஜனத்தினால் எங்களைப் பலப்படுத்தி நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

8-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாமே வழியும் உண்மையும் சீவியமுமா யிருக்கிறோமென்று திருவுளம்பற்றினீரே; எங்களை இந்தத் திவ்விய வழியிலே உண்மை யானபடி நித்திய ஜீவியத்துக்கு நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

9-வது.  புகழப் புகழ அமிர்தமான சேசுவே, தேவரீர் நாம் உலகத்தில் போரை உண்டாக்க வந்தோமென்று திருவுளம்பற்றினீரே; எங்கள் இச்சைகளின் பேரில் நிஷ்டூரப் போர் பொரு வித்து, உம்மோடும் புறத்தியாரோடும் நற்சமா தானமாய் எங்களை நடப்பிக்க நல்ல நேரத்திலே எங்கள் தேசத்தில் வந்திருப்பீராக.  உமது திருநாமம் சதாகாலமும் புகழப்படுவதாக. அருள்...

அனந்த  சர்வேசுரன்  தமது ஈடேற்றுகிற வரை அறியச் செய்தார். ஜனங்களின் முன்னால் தமது  நீதியைப் பிரத்தியட்சமாக்கினார்.

பிரார்த்திக்கக்கடவோம்.

அனந்த கிருபை நிறைந்த சர்வேசுரா, தேவரீர் உண்மையான சோதியின் பிரகாசத்தினால் அந்த இராத்திரியைப் பிரகாசிக்கச் செய்தருளினீரே.  இந்தத் திவ்விய சோதியின் இரகசியங்களை இவ்வுலகத்திலே நாங்கள் அறியச் செய்த பிரகாரம், அதன் ஆனந்த மகிழ்ச்சிகளை மோட்சத்தில் அனுபவிக்கத் தயவுபண்ணியருள வேண்டு மென்று உம்மையே மன்றாடுகிறோம். 

ஆமென்.

சுவாமி பிறந்த திருநாளுக்கு முந்தி நவநாள் ஜெபம்

1-வது. சகல பிரமாணமற்ற அப்பிரமாணமான ஞானமே, தேவரீர் நித்திய பிதாவின் புத்தியினால் நிட்களமாகி ஓர் எல்லையில் நின்று மறு எல்லைக்கான சகலத்தையும் வல்லபமாகவும் மதுரமாகவும் நடப்பிக்கிறீரே.  ஈடேற்றத்தினும் விமரிசையினும் வழியை எங்களுக்குப் படிப்பிக்க வந்தருளும் சுவாமி, வந்தருளும். அருள்...

2-வது. சகல பரியந்தமற்ற அபரிமித வல்லமையே, தேவரீர் உமது திருவாக்கினால் மாத்திரம் சகலத்தையும் உண்டாக்கி அதெல்லாவற்றையும் உமது திருச்சித்தத்தினால் மாத்திரம் நடப்பிக்கிறீரே.  உமது திருக்கர வல்லமையோடு பசாசின் தந்திரங்களினின்று எங்களை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

3-வது. சகல அளவற்ற அப்பரியந்த நேசமே, தேவரீர் மண்ணால் உண்டாக்கின மனுஷன் பேரில் அதிக தயவைக் காட்டத் திருச்சித்தமானீரே.  இப்போது எங்கள் ஆத்துமாக்களோடு ஞானவிவாகம் பண்ணி உமது பத்தினிகளாகக் கைக்கொள்ள வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

4-வது. சகலாதிகர்த்தனே, இஸ்ராயேல் குடும்பத்தின் திவ்ய பரிபாலனே, தேவரீர் மோயீசனுக்கு முள்ளுமரத்தின் அக்கினிச் சுடரோடு காணப்பட்டுச் சீனாய் மலையில் அவருக்கு உமது வேதத்தைக் கொடுத்தருளினீரே. உமது திருக்கர வல்லமையோடு எங்களை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

5-வது. சகல பிரஜைகளுக்கும் அடையாளமான ஏசேயின் மூலிகையே, உமது திவ்விய சந்நிதானத்தில் ஆசாரநிமித்தமாய் ஜனங்கள் மெளனமாக உம்மைப் பிரார்த்திப்பார்களென்று சொல்லப்பட்டதே. தாமதப்படாமல் எங்களை இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

6-வது. தாவீது இராயனுடைய திறவுகோலே, இஸ்ராயேல் வீட்டின் செங்கோலே, தேவரீர் திறக்கவும் ஒருவனும் பூட்டவும், தேவரீர் பூட்டவும், ஒருவனும் திறக்கவும் மாட்டானல்லோ. சிறைச்சாலையிலும் அந்தகாரங்களிலும் மரண நிழலிலும் கட்டப்பட்டவர்களை அவிழ்க்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

7-வது. கிழக்கில் உதித்த ஆதித்தனே, நித்திய பிரகாசத்தின் சுடரே, நீதியின் சூரியனே!  அந்தகாரங்களிலும், மரண நிழலிலும் வசிக்கிற வர்களைப் பிரகாசிப்பிக்க  வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

8-வது. ஜனங்களின் இராயனே, அவர்களால் ஆசிக்கப்படுகிறவரே, தேவரீர் மூலைக்கல்லாகி இரு சுவர்களையும் ஒன்றாக்கினீரே. மண்ணினால் தேவரீர் உண்டாக்கின மனிதரை  இரட்சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

9-வது. எங்கள் கர்த்தாவான தேவனாகிய எம்மானுவேலே, எங்கள் இராயனே, எங்கள் வேதாந்தியே, ஜனங்களின் நம்பிக்கையே, அவர் களுடைய இரட்சாதிகாரனே, எங்களை இரட் சிக்க வந்தருளும் சுவாமி வந்தருளும் அருள்...

நாங்கள் சேசுக்கிறீஸ்துவின் வாக்குத் தத்தங்களுக்குப் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். தேவ மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.

அநந்த தயையுள்ள சர்வேசுரா! தேவரீர் மனிதருடைய மீட்புக்காக உமது திருச்சுதனை இவ்வுலகில் அனுப்பி அவர் ஒன்பது மாதம் அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயின் உதரத்தில் வசிக்கத் திருச்சித்தமானீரே. அவருடைய கர்ப்ப வாசத்திற்குத் தோத்திரமாக நாங்கள் பண்ணுகிற இந்த ஆராதனையைக் கருணாகடாட்சமாய்க் கைக்கொண்டு அவருடைய பேறுபலன்களால் எங்கள் மீட்பின் பலனை நாங்கள் அடைந்து சதாகாலம் அனுபவிக்கக் கிருபை பண்ணியருள வேணுமென்று உம்மையே மன்றாடுகிறோம். 

ஆமென்.

கிறிஸ்துவின் வருகையாகிய அற்வேந்த் என்னும் ஞாயிறு

சர்வ வல்லமையுள்ள கடவுளே! உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கச் சிறந்த மகத்துவத்தோடே திரும்பி வரும் கடைசி நாளிலே, நாங்கள் உயிர்த்தெழுந்து, நித்தியசீவனைப் பெறும்படியாக அவர் மிகுந்த தாழ்மையோடு எங்களைச் சந்திக்க வந்த சாவுக்கினமன இந்தச் சீவகாலத்தில், நாங்கள் அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளி விட்டு ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக் கிருபைசெய்ய வேண்டுமென்று உம்மோடும், பரிசுத்த ஆவியோடும், இப்பொழுதும் எப்பொழுதும் ஜீவித்து அரசாளுகிற அவரை முன்னிட்டு வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஆமென்.

கிறிஸ்துவின் ஜனன திருநாளன்று சொல்லும் செபம்.

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது ஒரே பேறான குமாரனைத் தந்தருளி அவர் எங்கள் தன்மையைத் தரித்துக் கொள்ளவும், கற்புள்ள கன்னி மரியாயிடத்தில் பிறக்கவும் தயைசெய்தீரே! மறு ஜெனனம் அடைந்து புத்திர சுவிகாரத்தினாலும் கிருபையினாலும் உமக்குப் பிள்ளைகளான நாங்கள் உமது பரிசுத்த ஆவியினாலே தினம் தினம் புதுப்பிக்கப்படக் கிருபை செய்தருளும்.

ஒரு நட்சத்திரத்தினாலே புறச்சாதியாரை வழி நடத்தி, அவர்களுக்கு உம்முடைய ஒரே பேறான குமாரனை வெளிப்படுத்தினதுபோல, இம்மையில் விசுவாசத்தினால் உம்மை அறிந்திருக்கிற நாங்களும், மறுமையில் உமது தேவ தத்துவத்தைத் தரிசிக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கும்படி, உம்மோடும் பரிசுத்தாவியோடும் எப்பொழுதும் ஒரே கடவுளாகச் சதாகாலமும் சீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் கிருபை செய்தருளும்.

ஆமென்.

புனித லிகோரியாரின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்

கிறிஸ்துபிறப்பு விழாவிற்கான நவநாள் பக்தி முயற்சிகள் நமது ஆலயங்களிலும், குருமடங்கள், கன்னியர் மடங்களிலும் நடைபெற்று வருகின்றன. சில ஆலயங்களில் பாடலுடன் செபங்கள் கூறப்படுகின்றன. திருச்சபையில் மக்களுக்கு மறையுரை, தியானம் முதலியவற்றை நடத்தி வரும் இரட்சகர் சபையை நிறுவிய புனித அல்போன் லிகோரியார் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபத்தை எழுதினார். இது சில இடங்களில் நடைமுறையில் உள்ளது.

1. ஒரே ஓர் ஆன்ம / சமூக / தனிநல கருத்தை வைத்து ஒன்பது நாள்களிலும் செபிக்கலாம்.

2. ஒவ்வொரு செபத்திற்குப் பின்னரும் ஒரு பரலோக செபம், அருள் நிறை மரியே செபம், திரி, செபம் கூறி அந்தக் கருத்துக்காகச் செபிக்கலாம்.

(16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை)

முதல் நாள்:

இறைவனின் மைந்தரே, இயேசுவே, எங்களுக்காக எங்களில் ஒருவராகப் பிறந்து மரித்தீர். இந்த அன்புக்குக் கைமாறாக வாழாமல் இருந்திருக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னித்து, உன்னதமான எண்ணத்துடன் வாழ அருள்புரியும்.

அன்புத் தாயே, மரியே! இறைவனை முழுவதும் நேசித்து அவரது அருளைப் பெற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
(கருத்து) (பர, அரு, திரி).

இரண்டாம் நாள்:

⛪ மூன்று இராஜாக்கள் திருநாள் செபம்.

மூன்று உலகங்களையும் இழுதனதாட்ட வல்லமையுடைத்தான திவ்விய இயேசுவே! உமது திருப்பாதத்தினருகில் மூன்று இராஜாக்களின் இதயத்தில் நீா் பொழிந்த வரப்பிரசாதங்களினாலும், அவா்கள் கண்காண வானத்தில் தோன்றச் செய்த நவமான நட்சத்திரத்தினால் வரச் செய்த தயவைப் பாா்த்து, என் இருதய ஆணவம் தீருமட்டு்ம் என் மனதில் உமதருளை ஊற்றி நானும் உமது  தெய்வீகத்தின் இனிப்பைக் கண்டடையச் செய்தருளும் சுவாமி. திருச்சபையில் நீா் ஏற்படுத்திய நட்சத்திரங்களைப் போலிருக்கின்ற போதகா்கள் எனக்கு உமது பேரால் காட்டும் வழியை விட்டகலாமலிருக்கப் பண்ணியருளுஞ் சுவாமி.

ஏரோதென்பவன், மூன்று ராஜாக்களைக் கபடமாய் மோசம்போக்க எண்ணின எண்ணத்தில் நின்று அவா்களை ஒரு வான தூதனுடைய மொழியால் வேற வழியில் திருப்பியதுபோல, இவ்வுலகத்தில் பதிதர்கள் பிரிவினைக்காரர்கள் எனக்குச் செல்லும் துர்ப்புத்தியைக் கேளாமல் உமது திருவிவிலியம் பிரகாரம் நான் நடக்க அனுக்கிரகித்தருளும் சுவாமி.  பசாசுக்களுடைய தந்திரங்களிலும் சரீரத்தின் தொந்தரைகளிலும் பூலோகத்திற் காணப்பட்ட வஸ்துக்களுடைய மாய்கைகளிலும் நான் சிக்கிப்போகாமல், மூன்று இராஜாக்கள் கொண்டஞான வெளிச்சப் பிரகாரம் அவா்கள் நடந்ததுபோல, நானும் பிரமாணிக்கனாய் நடக்க செய்யும் சுவாமி.

பரலோகத்தில் அருட்பிரவாகம் உமதன்பின் மிகுதியினாலே பூலோகத்தில் வந்து பாயவும், பாவங்களினுடைய விஷமற்று, புண்ணியங்களினுடைய கனிகள் காய்க்கவும் செய்த மதுரம் பொருந்திய இயேசுவே! உம்மை இராஜாவென்றும். பூலோகத்தை ஈடேற்ற வந்த தேவனென்றும், மனித சரீரத்தைக்கொண்டு, மனிதர்களுக்காக மரித்து பலியளிப்பவரென்றும், கஸ்பார், மெல்கியோ, பல்தாசர் என்ற மூன்று இராஜாக்கள் ஏற்றுக்கொண்டு; பொன், தூபம், மீறை என்னப்பட்ட காணிக்கைகளைக் கொடுத்தது போல், நானும் உம்மை என்னுடைய இராசாவென்றும், நித்தியத்தில் நான் சாகாமல் எனக்காக உயிர்விட்டவரென்றும் ஏற்றுக்கொண்டு, என் புத்தி, மனது, நினைவு முழுமையும் உமக்குப் பாதகாணிக்கையாக தருகின்றேன் சுவாமி.

பூலோகம், பசாசு, சரிரமெனப்பட்ட மூன்று சத்துருக்களுடைய கையிலகப்படமாலும், பாவத்தின் விஷயங்களாலும் என் சரீரத்தின் நாட்டங்களாலும் உம்முடைய நெருக்கமான வழியைவிட்டு நான் அகலாமலுமிருக்க மூன்று இராஜாக்களுக்கு நீா் காட்டின காட்சிகளை எனக்குங்காட்டி, நீா் அவர்களுக்குக் கொடுத்த ஏராளமான வரங்களை எனக்குங்கொடுத்து, நானும் நித்திய பதவியில் வந்து சேரத்தக்கதாக அனுக்கிரகஞ் செய்தருளும் சுவாமி. ஒரு நட்சத்திரத்தினாலே பிற தேசத்தாரை நடத்தி அவா்களுக்கு உம்முடைய திருக்குமாரனை வெளிப்படுத்தின சா்வேசுரா! இப்பொழுது விசுவாசத்தால் உம்மையறிந்திருக்க நாங்கள் இச்சீவனுக்குப் பின்பு மகிமையுள்ள உமது தேவத்துவத்தைத் தரிசிக்கிற ஆனந்தமடையும்படி எங்கள் கா்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைப் பற்ற எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.