செபமாலை செபங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செபமாலை செபங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேவமாதாவின் கண்ணீரின் ஜெபமாலை

(மாதா உலகில் இருக்கும்போதும், பல்வேறு காட்சிகளிலும், மற்றும் சுரூபங்களிலும் சிந்தும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக)

ஜெபமாலையின் பாடுபட்ட சுரூபத்தில்:

சிலுவையில் அறையப்பட்ட சேசுவே!  உமது  பாதத்தடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப் பாதையில் அனுதாப வேதனையுடன் உம்மைப் பின்சென்ற உம் தாயின் கண்ணீர்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.  நல்லவரான ஆண்டவரே!  உம் மிகப் புனித அன்னையின் கண்ணீர்கள் எங்களுக்குத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, அதனால் பூவுலகில் உமது திருச் சித்தத்தை நிறைவேற்றவும்,மோட்சத்தில் நித்தியத் திற்கும் உம்மைப் புகழ்ந்து துதிக்கவும் தகுதி பெற்றவர்களாகும்படி செய்தருள்வீராக. ‡ ஆமென்.

பெரிய மணிகளில்:

ஓ சேசுவே! நீர் உலகத்தி லிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நிய மாய் நேசிக்கிற உமது தாயின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக.

சிறிய மணிகளில்:

சேசுவே,, உம்முடைய மகா பரிசுத்த மாதாவின் கண்ணீர்களைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (இப்படி ஏழு விசை சொல்லவும்)

ஏழு மணி ஜெபத்திற்குரிய ஏழு மன்றாட்டுக்கள்

1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத் தைக் கேட்டு உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோ டிருக்கக் கிருபை செய்வீராக.

2. சேசுவே!  உமது மாதா எஜிப்துக்கு ஓடிப் போனபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத் திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!

3. சேசுவே!  மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, உம்மை இழந்து விட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.

4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவையின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும், துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறை களில் விழுகிறவர்களின் வழியும், உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டி யருள்வீராக.

5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்படும்போது உமது மாதா வடித்த கண்ணீர்களைப் பார்த்து, மரண அவஸ்தையா யிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங்களிலிருந்து அன்போடு ஏற்றுக்கொள்ள கிருபை செய்வீராக.

6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப் பட்டு மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப்படுகிறவர்கள்மேல் இரக்கமாயிரும்.  அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்தருளும்.

7. சேசுவே!  நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.  இந்நாட்களில் உம் சுரூபங்கள் சொரியும் கண்ணீர்களுக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக.

கண்ணீர் ஜெபமாலையை “கிருபைதயாபத்து” மந்திரத்தைச் சொல்லி முடிக்கவும்.)

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் செபமாலை.

இது 39 மணிகள் உள்ளது மும்மூன்று மணிகளாய்க் கோர்த்து இடையில் இடம் விட்டிருக்க வேண்டும்.

பின்வரும் செபத்தை முதலில் சொல்லவும் உனக்கு அற்புதங்கள் வேண்டுமானால், அந்தோனியாரிடம் சொல் பின்னர் 13 செபங்களைச் சொல்லி ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு பர.அரு. பிதாவுக்கும் .... சொல்ல வேண்டியது

(இது பாப்பிறையின் ஆசிரைப் பெற்றதாகும். எனவே பலன் மிக்கது)

1. சாவை அகற்றுகிறார் :- வார்த்தையால் இறந்தவர்களை உயிர்ப்பித்தவரே, இப்பொழுது மரண வேளையில்இருப்பவர்களுக்காகவும், மரித்த விசுவாசிகளுக்காகவும் வேண்டிக் கொள்ளவும்.

2. தப்பறையை நீக்குகிறார் :- எங்களை எல்லாவிதத் தப்பறைகளிலுமிருந்து காத்திடுவீர். திருச்சபைக்காகவும், அதன் தலைவருக்காகவும் வேண்டிக் கொள்ளும்.

3. ஆபத்துக்களை அகற்றுகிறார் :- எங்கள் பாவங்களுக்காக இறைவன் அனுப்பும் பஞ்சம், படை, கொள்ளை, நோய் என்ற ஆபத்துக்களிலிருந்து எங்களைக் காத்தருளும்.

4. தொழுநோயாளரைக் குணப்படுத்துகிறார்:- எங்கள் ஆன்மாவை கறைப்படுத்தும் எல்லா அருவருப்பான பாவங்களினின்று உடலை விரட்டும் எல்லாவிதப் பிணிகளினின்றும் காத்தருளும்.

5. பேய்களை ஓட்டுகிறார் :- உம்மைக் கண்டதும் பேய்கள் நடுங்கி ஓடுகின்றன. பிசாசுகளின் மீது வல்லமையுள்ள தூயவரே! பேய்களின் சகல மாயைகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

6. கடலை அமர்த்துகிறார் :- கடலில் தத்தளிப்பவர்களுக்கு புகலிடமானவரே! எங்களைக் கரை சேர்த்து ஆன்மாக்களில் எழும்பும் ஆசாபாசப் புயலை அமர்த்தியருளும்.

7. பிணியாளர்களைக் குணமாக்கிறார். :- எங்களைத் துன்புறுத்தும் ஆன்ம சரீரப் பிணிகளிலிருந்து எங்களைக் குணமாக்கும்.

8. சிறைப்பட்டவர்களை விடுதலை செய்கிறார்:- சிறையில் அடைபட்டவர்களுக்காய் உம்மை மன்றாடுகிறோம். விலங்கிடப்பட்டோரின் விலங்குகளை உடைத்தெறியும். பாவ அடிமைத் தனத்தினின்று எமைக் காத்திடும்

9. உயிரற்ற அவயவங்களுக்கு உயிர் அளிக்கிறார்:- உயிரற்ற அவயவங்களைக் குணப்படுத்தியவரே, எங்களுக்கு எவ்வித ஆன்ம சரீர சேதம் விளையாதவாறு காத்தருளும்.

10. காணாமற் போனவைகளைக் கண்டடைய செய்கிறார்:உலகிலும், ஞான வாழ்விலும் நாங்கள் இழந்தவற்றை மீண்டும் அடைந்திடச் செய்தருளும்.

11. ஆபத்துக்களை அகற்றுகிறார்: எங்களுக்கு ஏற்படும் ஆன்ம உடல் ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளும்

12. தாங்க முடியாத இக்கட்டுக்களை நொடிப்பொழுதில் நீக்குகின்றார்: எங்கள் இக்கட்டு வேளைகளில் உதவி புரிந்து உணவு, உடை, வேலை இல்லாதவர்களுக்கு உதவி செய்தருளும்.

13. அவர் வல்லமையை அறிந்தவர்கள் அவரை வாழ்த்துவார்களாக: தூய அந்தோனியாரே நாங்கள் வாழும் நாட்களெல்லாம் நீர் செய்த உபகாரங்களை வெளிப்படுத்தி நன்றியுடன் உம்மை வாழ்த்துவோமாக

33 மணிச் செபமாலை.

சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! நீச மனிதருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலேயிருந்து செபம் பண்ண பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும் தேவரீருடைய அளவறுக்கப்படாத கிருபா கடாட்சத்தை நம்பிக் கொண்டு சேசுநாதருக்கு தோத்திரமாக முப்பத்து மூன்று மணிச் செபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த செபத்தை பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமியுடைய மூன்று பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று புண்ணியங்களைக் கேட்கிறது.

மெய்யான சர்வேசுரனாயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ விசுவாசமென்கிற புண்ணியமுண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான மனிதராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ நம்பிக்கையென்கிற புண்ணியமுண்டாகி வளரும்படிக்கு அநுக்கிரகம் பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

மெய்யான இரட்சகராயிருக்கிற எங்களாண்டவரே! எங்களிடத்திலே தேவ சிநேகமென்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி அநுக்கிரகம் பண்ணியருளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...

பிதாவுக்கும், சுதனுக்கும்...

பரிசுத்த கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவுக்கு கபிரியேலென்கிற சம்மனசானவர் மங்கள வார்த்தை சொன்ன அருள் நிறை மந்திரம் சொல்லுகிறது.
1 அருள் நிறைந்த...

1-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! தேவரீர் அருளிச் செய்த திவ்விய கற்பனைகளுக்கு விரோதமான குற்றங்களைச் செய்தோமே. அவர்களையெல்லாம் தேவரீர் பொறுத்துக்கொண்டு இனிமேல் அடியோர்கள் சுமுத்திரையாய் நடக்கவும், தேவரீருடைய தோத்திரம் விக்கினமின்றி எங்கும் பரம்பவும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதியில் இளைப்பாற்றியடைந்து மோட்ச பாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்ளவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.

10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.

பரலோகத்துக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம்.

1 அருள் நிறைந்த...

2-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் சுபாவமாய் மகா பலவீனருமாய் தந்திரங்களினால் இழுக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறப்படியினாலே உலகம், பசாசு, சரீரமாகிய ஞான சத்துருக்களை ஜெயித்து நாங்கள் பாவ வழி போகாமலும், பஞ்சேந்திரியங்களுடைய அலைக்கழிப்புக்கு இனங்காமலும் ஒறுத்தல் உபவாசத்தால் உமது வேத வழிபாட்டில் சுமுத்திரையாய் நடக்கவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.

10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.

பூலோகத்துக்கு ஆண்டவளாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம்.

1 அருள் நிறைந்த...

3-வது மன்றாட்டு:

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமி! நாங்கள் பிரதான புண்ணியங்களாகிய விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்தில் உயரவும், இஸ்பிரீத்துசாந்துவின் ஞான ஒளி கொண்டு பேரின்பத்தின் பாதையை பிடிக்கவும் உலகத்தில் உத்யோகத் தொழில்களை செய்கையில் எங்கள் மனது உம்மையும் உம்முடைய நித்திய இராச்சியத்தையும் மாத்திரம் தாவி நிற்கவும் எல்லா கிரிகைகளையும் உமக்காகவே செய்யவும் கிருபை பண்ணியருளும் சுவாமி.

10 பரலோகத்திலிருக்கின்ற...
1 திரித்துவப்புகழ்.

விடியற்காலத்தின் நட்சத்திரமாய் இருக்கிற அர்ச்சியஷ்ட தேவமாதாவே, பாவிகளாயிருக்கின்ற நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த பத்து மணி செபத்தையும் உம்முடைய தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி உம்முடைய திருக்குமரன் சேசுநாதரின் திருப்பாத்திலே பாத காணிக்கையாக வைக்க உம்மை மன்றாடுகின்றோம்.

1 அருள் நிறைந்த...


பிரார்த்திக்கக்கடவோம்.


அவதரித்த தேவனுமாய், கிருபை நிறைந்த கர்த்தருமாய், மதுரமுள்ள இரட்சகருமாயிருக்கிற அன்புக்குரிய சேசுவே! தேவரீர் இவ்வுலகத்தில் வாசம் பண்ணின முப்பத்து மூன்று வருஷ காலம் மனிதர்களுக்கு திவ்விய மாதிரிகையாக செய்து வந்த சுகிர்த புண்ணியங்களை அடியோர்கள் அநுசரிக்கவும், தேவரீர் எங்களை இரட்சிக்கத்தக்கதாக, உம்முடைய திரு இரத்தமெல்லாம் சிந்தி அடைந்த கடின மரணத்தின் பலனாலே நாங்கள் மோட்சத்தின் பேரின்ப பாக்கியத்தைப் பெற்று உம்மை என்றென்றைக்கும் தரிசித்துச் சிநேகித்து ஸ்துதிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி!

ஆமென்.

பரலோக மந்திரம். பாரம்பரிய முறைப்படி!

பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக! உம்முடைய இராச்சியம் வருக! உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக! எங்கள் அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்! எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் கடன்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் பிரவேசிக்கவிடாதேயும். தின்மையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்.

ஆமென்.

அருள் நிறைந்த மந்திரம். பாரம்பரிய முறைப்படி!

பிரியதத்தத்தினாலே பூரண மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே! பெண்ஜாதிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிஷ்ட மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.

ஆமென் சேசு.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் சீட்டு.

தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்.

✠ இதோ ஆண்டவருடைய சிலுவை.
✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள்.
✠ யூதா கோத்திரத்தின் சிங்கம்.
✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது.
அல்லேலூயா.

ஆமென்.

காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென். 

(100 நாள் பலன்)

சயன ஆராதனை.

சர்வேசுரா சுவாமி, மனிதர் சயனத்தால் இளைப்பாற இராத்திரி காலம் கட்டளையிட்டருளினீரே, உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. இன்றெனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் உமக்குத் தோத்திரம் பண்ணி, என்னால் செய்யப்பட்ட பாவங்களை எல்லாம் பொறுத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறேன். அவைகள் தேவரீருடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத்தனத்திற்கும் விரோதமாயிருக்கிறதினாலே முழுவதும் அவைகளை வெறுக்கிறேன். இந்த இராத்திரியிலே, சடுதி மரணத்தினாலும், துர்க்கனவு முதலான பசாசு சோதனைகளாலும் அடியேனுக்கு மோசம் வரவொட்டாமல் காத்துக்கொள்ளும்.
ஆமென்.

சேசுவே! என் மரண வேளையிலே இஷ்டப் பிரசாதத்தோடிருந்து உமது சிலுவையை ஆவலோடு தழுவி உயிர் விடவும், உமது இராச்சியத்தில் உம்மோடே நிரந்தரம் அடியேன் இளைப்பாறவும் கிருபை செய்தருளும்.

ஆமென்.

தேவ ஸ்துதிகள்.

எல்லாம் வல்ல சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக. அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக.

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுகிறீஸ்து நாதர் ஸ்துதிக்கப்படுவாராக, சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக, அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக,

அவருடைய விலை மதிக்கப்படாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக, பீடத்தில், மிகவும் பரிசுத்த தேவதிரவிய அநுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக.

சர்வேசுரனுடைய தாயாராகிய அதி பரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக. அவர்களுடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக.

கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக.

தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி ஸ்துதிக்கப்படுவாராக. தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் சதாகாலமும் ஸ்துதிக்கப்படுவாராக.

ஆமென்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து, எப்போதும் பரிசுத்த கன்னியாஸ்திரியுமாய், நமது ஆண்டவளுமாய் கொண்டாடப் பட்டவளுமாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக் கடவது.

தேவப் பிரசாதத்தின் தாயே! இரக்கத்துக்கு மாதாவே! அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி, எங்களைக் காக்கவும், ஆளவும் கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென் சேசு.

திவ்ய நற்கருணைக்கு நிந்தைப் பரிகார ஜெபம்.

ஓ மகா பரிசுத்த திரித்துவமே, பிதாவே! சுதனே! இஸ்பிரீத்துசாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள நற்கருணைப் பேழைகளிலிருக்கும் சேசு கிறீஸ்துவின் விலை மதிக்கப்படாத திருச் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்கு செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன்.
ஆமென்.

ஆகாயமும், பூலோகமும் தாங்கிய சகலமான உயிருள்ள வஸ்துக்களுக்கும் அமுதளிக்கும் நாதனே! எனக்கு யாவற்றையும் கொடுத்து, உம்மையும் என் ஆத்தும போஜனமாக தேவ நற்கருணையில் கொடுத்துவிட்ட ஆண்டவரே, உமது மட்டற்ற தயாளத்தையும், சிநேகத்தையும் கண்டு பிரமித்து, இந்த தேவ நற்கருணையில் பயபக்தியோடு உம்மை வணங்கி, என்னை முழுமையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். வானம் கொண்ட ஆச்சரியமான அண்டகோளங்களுக்குப் பிரகாசம் தந்து, ஒன்றோடொன்று தட்டாமல் இயக்கும் தேவனே, நான் பொன்னாசை, புவியாசை, சரீர ஆசைகளில் தட்டுப்படாமல் சுகந்த பரலோக பரிமளம் வீசும் உம்மில் இளைப்பாறச் செய்தருளும். சர்வலோகங்களிலும் அடங்காத கர்த்தாவே, என் மேல் வைத்த சிநேகப் பெருக்கத்தால் தேவ நற்கருணையில் அடங்கினதை யோசித்து நடுநடுங்கி எல்லாவற்றையும் வெறுத்து, உம்மைக் கெட்டியாய்ப் பற்றி ஆராதிக்கிறேன். என் சித்தம், புத்தி, ஞாபகம், ஆசையெல்லாம் ஒன்றிலும் அடங்காமல், உம்மில் மாத்திரம் அடங்கிப் போகச்செய்தருளும் சுவாமி.

ஆமென்.

திவ்ய நற்கருணைக்கு ஆராதனை.

நித்திய ஸ்துதிக்குரிய  பரிசுத்த நற்கருணைக்கு,
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்.

அன்பின் அவதாரமே, துன்புறும் சிநேகிதமே,
வந்தோம் உந்தன் பாதமே, எம்மை நாளும் ஆளுமே.

இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய், மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே அனவரத காலமும் முடியாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.

ஆமென்.

வல்லமை மிக்க செபம்.

நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை. சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே!
ஆமென்.

குருசான குருசே!
கட்டுண்ட குருசே!
காவலாய் வந்த குருசே!

தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!

மரியாயின் கீதம். (லூக் 1: 47-55).

என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது. என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தன்னுடைய அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார். ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேல் இருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுடையவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைதானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி செல்வர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவு கூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவர் சந்ததியாருக்கும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்.

ஆமென்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்.

திவ்விய சேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே, சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். சுவாமி, தேவரீர் அன்று சிலுவை பீடத்தில் பலியாகும் போது பச்சாதாபக் கள்ளனுக்கு கிருபை புரிந்துதுபோல், இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து  அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையி்ன் பாக்கியத்தில் சேர்த்தருளும். அங்கே சகல அர்ச்சியசிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதா சர்வகாலமும்  தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக.
ஆமென்.

உன்னதத்தில் வீற்றிருக்கிற எங்கள் பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்விய சேசுக்கிறீஸ்துவின் விலைமதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சுவாமி! பரிசுத்தரே, சர்வ வல்லப பரிசுத்தரே, அட்சயரான பரிசுத்தரே சுவாமி! எங்கள் மேல் இரக்கமாயிரும். பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும். மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும்.

ஆமென்.

தேவன்னைக்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் செபம்.

என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக, இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும்.

ஆமென்.

மாதாவுக்கு காணிக்கைச் செபம்.

அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராக்கினியான பரிசுத்த தேவமாதாவே, உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று, உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து, இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும், சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும், பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே.!

ஆமென்.

கிருபை தயாபத்து / இரக்கத்தின் அரசி செபம்.

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே! எங்கள் தஞ்சமே! எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே! தயாபரியே! பேரின்ப இரசமுள்ள கன்னிமரியே! சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமா யிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

செபிப்போமாக.
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும், சரீரமும் பரிசுத்த ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.

செபமாலை முடிவில் சொல்ல வேண்டிய செபம்.

அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, தேவதூதர்களான அர்ச்சியசிஷ்ட கபிரியேலே, இரஃபேலே, அப்போஸ்தலர்களான அர்ச்சியசிஷ்ட இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த 53 மணி செபத்தையும் உங்கள் தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்ச்சியசிஷ்ட தேவமாதவின் திருப்பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

பாப்பரசருடைய சுகிர்த கருத்துக்களுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவிகள் மனம் திரும்புவதற்காகவும், சேசு, மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காகவும் இந்த ஜெபமாலையை ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொள்வோம்.

1 பரலோகத்தில் இருக்கின்ற...
1 அருள் நிறைந்த மரியே...
1 பிதாவுக்கும்...
1 ஓ என் இயேசுவே...

ஆமென்.

விசுவாசப்பிரமாணம் (எ) விசுவாச மந்திரம்.

சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசமென்கிற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாச மந்திரம் சொல்லுகிறது:

விசுவாசப்பிரமாணம்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறேன்.

ஆமென்.

பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு.

திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.

தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும்.

வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.

அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும்.

உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!
ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்.
சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடய இருதயங்களை இஸ்பிரீத்துசாந்துவின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே, அதே இஸ்பிரீத்துசாந்துவினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.

ஆண்டவரே, நாங்கள் சரீரக் கற்புடனே உமக்கு ஊழியம் செய்யவும், இருதய சுத்தத்துடனே உமக்குப் பிரியப்பட நடக்கவும், உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்கள் கிரியைகள், வார்த்தைகளெல்லாம் உம்மைக் கொண்டு துவக்கவும், உம்மிலே முடியவும் வேண்டியதாகையால், நாங்கள் அதை செய்வதற்கு முன்னமே உம்முடைய ஏவுதலைத் தந்தருளும். செய்யும்போது உமது உதவியைத் தந்து நடத்தும் ஆண்டவரே.

ஆமென்.