அர்ச். சூசையப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். சூசையப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். சூசையப்பர் நவநாள் - 9 ம் ஜெபம்

5-வது: தேவ சிநேகம் அடைய ஜெபம்

தேவசிநேகத்தில் மகா ஐஸ்வரியமுடைய வரான அர்ச். சூசையப்பரே! சகல திரவியங்களிலும் மகா அபூர்வமான திரவியமாகிய தேவசிநேகத்தை நான் அடைய எனக்காக சர்வேசுரனை மன்றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், மோட்சம் கொடுக்கிறவரும், சகலவித நன்மை களுக்கும் ஊருணியுமாகிய என் தேவனை நான் சிநேகியாமல் பிறகு யாரை சிநேகிப்பேன்? ஜென்மப் பாவத்தால் அந்த சிநேகம் என்னிடம் அணைந்துபோனதால், மிகவும் மனம் நொந்து கலங்கி விசனப்படுகிறேன். படைக்கப்பட்ட நான் தாய் வயிற்றில் உற்பவமான நாள் முதல் இது வரையில் மதியீனத்தால் கட்டிக்கொண்ட சகல பாவத்தையும் பொறுத்து, என் நன்றிகெட்டதனத் தைச் சட்டை பண்ணாமல், உபகாரத்திற்கு மேல் உபகாரம் செய்து வருகிற ஆண்டவரது சிநேகத்தால் நான் இறந்துபோனாலல்லோ தாவிளை? திவ்ய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவை நேசிக்கா தவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதி யிருப்பதால் என்னை சகல ஆபத்துக்களிலு மிருந்து மீட்டு, தமது கோபாக்கினியின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது பிரிய இரட்சகரை நான் நேசிக்காவிட்டால், நானே சபிக்கப்பட்டு அவரை விட்டு நித்திய காலம் பிரிவேன் என்றும் நினைத்து பயந்து நடுநடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், மாமிசத்தின் இச்சையாலும், ஜீவியத்தின் பெருமையாலும், காணப்படும் பொருட் களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக வெகுமானத்தின் பேரில் கொண்ட விருப்பத் தாலும், என்னில் தேவசிநேகம் அற்றுப்போன தால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் பகைத்து, என் தேவனை உருக்கமாக சிநேகிக் கும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக சிநேகத்தாலும், அழிந்து போகிற சரீரத்தின் பட்சத் தாலும், உன்னதமான மகிமையும், நித்திய பாக் கியமும், ஏக திரவியமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண சத்தியமும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் தேவனை நான் இழப் பதை விட, அவரது சிநேகத்தால் என் இரத்த மெல்லாம் சிந்தி அவரது பாதத்தில் என் உயிரை விட்டாலல்லோ தாவிளை? தேவசிநேகம் நிறைந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவரே, சகல நன்மைகளுக்கும் உபகாரங்களுக்கும் ஊருணியான கர்த்தரை நான் என் சகல சத்துவங்களோடும், புத்தி சித்தம் அறிவோடும் எல்லாவற்றையும் பார்க்க, சிநேகிக்கச் செய்தருளும். தேவ கற்பனைகளின்படி நடப்பதே சிநேகமாகையால், உயிருக் கொட்டி அவைகளை அனுசரித்து தெய்வத் தோடு நான் ஐக்கியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். பாவத்தால் கறைபட்டுக் குளிர்ந்த என் இருதயம், இஸ்பிரீத்துசாந்துவால் அனல் கொண்டு அக்கினி ஆகாயத்தில் தாவுவது போல் என் இருதயம் தேவனை நோக்கித் தாவ எனக்காக வரங் கேட்டருளும். தெய்வத்தைச் சிநேகிக்கிற சிநேகத்தில் நான் தேவனுக்குள் ஐக்கியமாகி, எல்லா மனிதரையும், அவருக் குள்ளும், அவருக்காகவும் சிநேகிக்க அனுக்கிரகித் தருளும். இரக்கமுள்ள தேவசிநேகத்தால் என் விரோதிகளுக்கு நான் பொறுத்தல் கொடுத்துத் தின்மைக்கு நன்மை செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 8 ம் ஜெபம்

4-வது: தேவ நம்பிக்கை அடைய ஜெபம்

இம்மைக்கும் மறுமைக்கும் சர்வேசுரன் பேரில் திடமான நம்பிக்கையை வைத்திருந்த அர்ச். சூசையப்பரே! விசுவசிக்கிறவனுக்கு வெட்க மில்லை, நம்பிக்கையுள்ளவனுக்கு பயமில்லை என்பதை அறிந்திருந்தாலும், அநித்தியமான வஸ்துக்ளோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கெட்ட மாம்சத்தினிமித்தம் நித்திய காரியங்களின் பேரில் எனக்கு நம்பிக்கைக் குறைவதைக் கண்டு மிகவும் விசனப்படுகிறேன். சர்வேசுரனின் வாக்குத்தத்தம் பெரிதே! நான் பாசங்களால் இழுபட்டு புகை போல் மறையும் அநித்தியப் படைப்புகளின் பேரில் நம்பிக்கை வைத்ததால் துக்கங்களும், கவலைகளும் என் தலைக்கு மேல் போயின. மகாத் துமாக்கள் தங்கள் நம்பிக்கையால் பரலோகம் ஏறினாற்போல, நான் நம்பிக்கையில் திடன் கொண்டு, உறுதியான ஜெப தவங்களால் மோட்ச பதவி அடையச் செய்தருளும். எனக்கு உறுதியான விசுவாசமிருந்தால், சுவாமியானவர் இருப்பதையும் நித்திய பதவி கொடுப்பதையும் நம்பி உலகக் கவலைகளால் மயங்காமல், நான் பாராததும், தேவ வாக்கு சொல்வதுமான காரியங்களில் ஊன்றி, காற் றுக்கு அசையா மலைபோல் அமர்ந்து துன்பங்களில் திடன் கொண்டிருப்பேன் அல்லவோ? அப்படி நான் இராததைப் பற்றி மெத்த மனஸ்தாபப்படு கிறேன். தேவசுதன் மனிதனாய்ப் பிறந்து பாடு பட்டு மரித்து உயிர்த்து பரமண்டலத்தில் ஏறினதே என் நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிருக்க,  நான் இன்னும் நம்பிக்கையில் தத்தளிப்பதைக் குறித்து மனங்கலங்கி அழுகிறேன். இந்த இரட்சகரை மாத்திரம் அண்டி, நான் எனக்கும் உலகத்திற்கும் மரித்து, நம்பிக்கையில் உயிர் வாழ்ந்தாலல்லோ தாவிளை? தேவமாதா முதலான அர்ச்சியசிஷ்ட வர்களும், சம்மனசுக்களும் தாழ்ந்த இந்த உலகத் தில் உபத்திரவப்படும் மனிதர்களுக்காக வேண்டிக் கொள்வதை நான் அறிந்திருந்தும், இரவும் பகலும் ஓயாமல் அவர்களை நோக்கி அலறி அழுது இடை விடாமல் மன்றாடாததால் விசனப்படுகிறேன். வரப்போகிற நித்திய ஜீவியத்திற்கு நான் காத்திருப் பதால், அழிந்துபோகிற சரீரத்தின் பேரிலும் என்றென்றும் ஒழிந்துபோகும் பொருட்களின் பேரிலும் நான் நம்பிக்கை வைப்பதேன்? இன்பங் களிலும், துன்பங்களிலும் சர்வேசுரன் பேரில் ஒரே நம்பிக்கையாயிருந்த அர்ச். சூசையப்பரே, நீர் என் அழுகைக்கும் வேண்டுதலுக்கும் இரங்கி சர்வேசு ரனை மன்றாடினாலும், அவர் எனக்குத் திடமான நம்பிக்கையைத் தருவார் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கலக்கமில்லை. ஆகவே என் இருதயம் ஒன்றிலும் கலங்காமல் சர்வேசுரன் பேரில் மட்டும் நம்பிக்கை வைக்கச் செய்தருளும். என் நம்பிக்கைக்கு ஆதாரமான மோட்சத்தில் என் இருதயம் இடைவிடாமல் குடிகொண்டிருக்கச் செய்தருளும். துன்ப துரிதங் களில் கலங்காமல் தேவ வாக்கியங்கள் பேரில் என் ஆசையயல்லாம் வைத்து, நான் சர்வேசுரனை மாத்திரம் நாடி அவர் பேரில் மாத்திரம் நம்பிக்கை யாயிருக்க எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 7 ம் ஜெபம்

3-வது: தேவ விசுவாசம் அடைய ஜெபம்

சர்வ வல்லமை பொருந்திய சர்வேசுரன் சிறு குழந்தையானபோது அவரை சாட்சாத் கடவுளென்று விசுவசித்து நடுநடுங்கி தேவ ஆராதனை செலுத்திக்கொண்டு வந்த அர்ச். சூசை யப்பரே! நான் உருக்கமுள்ள சாதாரண விசுவாச மடைய எனக்காக வேண்டிக்கொள்ளும். என் இருதயம் கெட்டுப்போன சுபாவத்தின்படியே அவிசுவாசத்தாலும், அவநம்பிக்கையாலும், சந்தேகங்களாலும் அலைக்கழிக்கப்படுவதால் இவ்வித மோசங்கள் நீங்க தேவ வசனம் சூரிய னைப் போல் என் இருதயத்தில் உதிக்கத்தக்க தாகச் சர்வேசுரனிடம் எனக்காக மன்றாடும். மனிதர்கள் பேரில், அநித்திய வஸ்துக்கள் பேரில் விசுவாசம் வைத்து நான் மோசம்போகாமல் செய் தருளும். என்னை உண்டுபண்ணின தேவனையும், அவரது பேரின்பமான மோட்சத்தையும், அவர் பாவிகளுக்குக் கட்டளையிட்ட பயங்கரமான நரகத்தையும், அவர் திருக்குமாரன் எனக்கு உண்டு பண்ணின கிருபையையும், பாவப் பொறுத்தலை யும் நான் உறுதியாக விசுவசிக்கிறேன். என் சரீரத் திலும், பலவீனத்தாலும், வெளித் தந்திரங்களாலும், பாவத்திற்கு ஆக்கினையாக வந்த காரணத்தாலும் நான் மூடப்பட்டிருப்பதால், நான் கண்ணால் பார்க்கக் கூடாததுமாய், என் இருதயம் உணரக் கூடாததுமான தேவ காரியங்களை உயிரூட்டி உஷ்ணம் பொருந்திய விசுவாசத்தோடு நான் விசுவசிக்கச் செய்தருளும். உலக இரட்சகர் இரட்சணியத்தின் வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருப் பதாலும், அவர் நெரிந்த நாணலை முறிக்கா மலும், மங்கிய தீயை அணைக்காமலும் இருப் பதாலும், உலக இருளின் பாதாளத்தில் அகப் பட்டுக்கொண்டு தத்தளிக்கிற என்னை அவர் புறக்கணிக்க மாட்டாரே, ஆகையால் தப்பறை யான உபதேசங்களாலும், மனிதரின் கோட்பாடு களாலும் நான் மோசம் போகாமல் எல்லா விஷயத்திலும் கிறீஸ்துநாதரைக் கண்டு பாவித்து, அவரிடம் நீதியையும் பாக்கியத்தையும் பெற்றுக் கொள்ளச் செய்தருளும். நான் விசுவாசத்தால் ஆபேலைப் போல தேவனுக்கு பலியிடவும், ஏனோக்கைப்போல வானமண்டலத்தில் எடுத்துக் கொள்ளப்படவும், நோவேயைப் போல மெய் யான திருச்சபையின் அவயவமாயிருக்கவும், ஆபிர காமைப்போல் எப்போதும் பரமண்டலத்தை நாடி நிற்கவும் செய்தருளும். விசுவாசத்தால் யாக்கோபு சம்மனசின் ஆசீர்வாதத்தைக் கொண்டதையும், விசுவாசத்தால் மனுப்புத்திரரில் அநேகர் சுபாவத் துக்கு மேற்பட்ட அநேக புதுமைகளைச் செய்த தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால் உலகத்தாரோடு நான் மகிழ்ச்சி அடையாமல், என் இரட்சகரோடு துன்பத்தின் பாதையில் நான் நடக்கத் திடனுள்ள விசுவாசத்தை எனக்குத் தந்தருளும். பூர்வீக மகாத்துமாக்களைப் போல நான் உறுதியான விசுவாசம் கொண்டு, வானத்தினின்று இறங்கிய தேவ அப்பமாகிய திவ்ய நற்கருணையைப் புசித்துக்கொண்டு, தானியே லைப் போல நரக சிங்கமாகிய பசாசின் வாயை மூடச் செய்து, என்றென்றைக்கும் கர்த்தராகிய சேசுநாதரை நான் காணும்படி எனக்காக வேண்டிக் கொள்ள உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 6 ம் ஜெபம்

2-வது: தேவ பயம் அடைய ஜெபம்

சர்வேசுரனாலே மிகவும் உயர்த்தப்பட்ட அர்ச். சூசையப்பரே! ஞானத்திற்கு ஆரம்பமாகிய தெய்வபயத்தை எனக்கு வாங்கித் தந்தருளும். வானமும் பூமியும் அவைகளில் அடங்கிய காரி யங்களும் தெய்வ மகத்துவத்தையும் வல்லமை யையும் காட்டுவதால், எனக்கு எவ்வளவோ பயங் கரம் உண்டாயிருக்க வேண்டியது. என் நினைவு களும் வார்த்தைகளும், கிரியைகளும் தெய்வ பயத்தால் நடத்தப்படாமல் கெட்டுப் போன என் சுபாவத்தால் இழுக்கப்படுவதைக் கண்டு மிகுந்த விசனப்படுகிறேன். தேவ கற்பனைகளுக்கும் வேத வசனங்களுக்கும் என் மனது பய பட்சத்தோடு அமையாமல் உலக இச்சைகளுக்கும் கீழ்ப்படிவ தால், என் பிரலாபம் மிகுந்து போகிறது. தேவ கட்டளையைப் புறக்கணிப்பவனை தேவன் புறக் கணிப்பார் என்பதை நினைத்து நடுங்குகிறேன். தேவரீர் சிறு வயது முதல் தெய்வ சகாயத்தைக் கொண்டிருந்தீர். என் அசட்டையாலும், மந்த குணத்தாலும் தேவ கோபத்திற்கு உள்ளாகாதபடி அருமையான தேவ பயத்தை நான் அடையச் செய்தருளும். நான் சாவுக்கும், நோவுக்கும், சஞ்சலங்களுக்கும் அஞ்சாமல் பாவங்களையும், பசாசின் கிரியைகளையும் விட்டு, நான் என்னையே பகைக்கச் செய்தருளும். நான் சத்துருவுக்குப் பயப்படுவதுபோல, என்னைப் படைத்த ஆண்டவ ருக்குப் பயப்படாமல், ஒரு பிள்ளை தன் பிதா வுக்குப் பயப்படுகிற சிநேகம் நிறைந்த பயத்தை நான் அடையச் செய்தருளும். உபத்திரவங்களா லும், என் சுபாவ பலவீனங்களாலும், சோதனை களாலும் நான் தளராமல் நேசத்துக்குரிய தெய்வ பயத்தால் என் ஆத்துமம் தைரியம் கொண்டு நிலைநிற்க எனக்காக ஆண்டவரை மன்றாடும். நான் எல்லாக் காரியங்களிலும் சர்வேசுரனின் வல்லமையையும், ஞானத்தையும், கிரியையையும் யோசித்து நேச பயம் கொண்டு, இவ்வுலக துன்பங் களுக்கு நான் பயப்படாதிருக்கக் கிருபை செய் தருளும். செல்வங்களுக்கும், உலக ஆடம்பரங் களுக்கும் என் மனது இசைந்து அஞ்ஞானமான உலகக் கற்பனைகளுக்குப் பயப்படாமல், உள்ளத்திலும் வெளியிலும் கர்த்தருக்கு பயப்பட்டு அவருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவர் வாக்குத் தத்தம் செய்திருக்கிற இரட்சிப்பையும் இரக்கத் தையும், ஆசீர்வாதத்தையும், ஞானத்தையும், சகாயத்தையும், கிருபாகடாட்சத்தையும், மெய்யான பாக்கியத்தையும் அடையும்படிக்கு எனக்காக வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 5 ம் ஜெபம்

அர்ச். சூசையப்பரின் அடைக்கல ஜெபம்

1-வது தேவனை அறிய ஜெபம்

பாவ இருள் அகல பரிசுத்தத்தில் உயர்ந்து மனிதர் இயல்பு கொண்ட மட்டும் சம்பூரண மாய்க் கடவுளை அறிந்து ஆனந்த சந்தோ­த்தில் மூழ்கியிருந்த அர்ச். சூசையப்பரே! ஜென்மப் பாவத்தின் இருள் அகல ஆனந்தப் பிரகாசமுள்ள தேவன் வந்து என் அகத்தில் பிரவேசம் செய்யத் தக்கதாக எனக்காக அவரை இரந்து மன்றாடும். ஆடுகள் தங்கள் மேய்ப்பனையும், மாடுகள் தங்கள் எஜமானையும் அறிகின்றன. ஐயோ! என்னை உண்டுபண்ணி, இரட்சித்து ஆனந்த பாக்கியம் அளிக்கும் என் தேவனை என்னால் கூடிய வரை அறிந்து அவருக்குள் நான் ஒன்றித்துப் போகாம லிருப்பதால் எனக்கு வெகு சஞ்சலத் துயரமிருக் கிறது. திரியேக தேவனை அறிந்து அவரது சிநேகத் தைக் கொள்ளத்தக்கதாக முத்திப்பேறு பெற்ற வர்கள் சுபாவத்தை ஜெயிக்க எம்மாத்திரமோ அருந்தவம், தியானம், ஜெபம் செய்தார்கள். நான் பாவச் சகதியில் சிக்கி நொந்து பலவீனப்பட்டிருப் பதால், சூரியனைக் போல பரிசுத்தவான்களுக் குப் பிரகாசிக்கும் தேவ வசனங்களை நான் தியா னித்து, என் பலவீனத்திற்குத் தக்க ஜெபங்களைச் செய்து என்னை உருவாக்கின தேவனை அறியக் கிருபை செய்தருள உம்மை மன்றாடுகிறேன். என்னால் பிதாவுக்குத் தோத்திரமும் தேவ சுதனுக்கு ஸ்துதியும், இஸ்பிரீத்துசாந்துவுக்கு நமஸ்காரமும் உண்டாகச் செய்யும். தேவ சுபாவத் தின் மகிமைப் பிரகாசம் என் ஆத்தும அந்தரங் கத்தில் பதியவும், சிருஷ்டிப்புகளின் விவரங்களை அறிந்து நான் சிருஷ்டிகரிடம் சேரவும் செய்தரு ளும். நான் தீர்க்கதரிசனங்களால் தெளிந்து, சுவிசே­ அற்புதங்களால் ஊக்க ஒளி கொண்டு, கிறீஸ்துவின் அரும்பாடுகளாலும், தாழ்மையாலும் மனமகிழ்ச்சி கொண்டு உலகத்தை வெறுத்து அக்கினிமயமான தேவசிநேகத்தைக் கொள்ளக் கிருபை செய்தருளும். பசாசின் தந்திரங்களையும், உலக மாயைகளையும் ஜெயித்து, திரியேக தேவனை சுவைத்துப் பார்க்க வேண்டிய வரத்தை நான் அடைய கிருபை செய்தருளும். சர்வேசுரனை அறிகிற அறிவே நித்திய ஜீவன் என்று அர்ச்சிய சிஷ்டவர்கள் அகமகிழ்ச்சி கொண்டு எல்லாத் தந்திரங்களையும் வென்று நித்திய பேரின்பப் பேறுபெற்றவர்கள் என்று நான் அறிந்திருக் கிறேன். ஆகையால், தேவ சுதனோடு வெகு காலம் பழகிய தேவரீர் தயை புரிந்து தேவனை அறிகிற சாஸ்திரத்தை நான் அடையத்தக்கதாக அவரை எனக்காக வேண்டிக் கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 4 ம் ஜெபம்

ஓ! யூதேயா நாட்டை ஆண்ட கீர்த்திப் பிரதாபமுள்ள இராஜாக்களின் குலத்தில் உதித் தவரே, பிதாப்பிதாக்களின் சற்குணத்தின் சுதந்தர வாளரே, உத்தம பாக்கியவானாகிற அர்ச். சூசை யப்பரே! அடியேனுடைய மன்றாட்டைக் காது கொடுத்துக் கேட்டருளும். சேசுநாதருக்கும் அர்ச். மரியம்மாளுக்கும் பிற்பாடு, என் அத்தியந்த வணக்கத்துக்கும் முழு விசுவாசத்திற்கும் காரண ரும் உன்னத பாதுகாவலுமாயிருப்பவரே! நீர் சிறந்த அர்ச்சியசிஷ்டவராயிருக்கிறீரே. தாழ்மை யில் சர்வேசுரனுக்கு மிகுந்த தூய்மையோடும், முழு ஆசையோடும் தொண்டு செய்து வருவோ ருக்கு நன்மாதிரிகையாக, அந்தரங்கத்தில் விளங்கி நின்ற மகா அர்ச்சியசிஷ்டவரே, உமது பேரில் விசுவாசம் கொண்ட பக்திமான்களோடு நானும் ஒருவனாக உமக்குப் பணிவிடை புரிய என்னை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். பிள்ளை யைப் போல உமக்கு நான் கீழ்ப்படியவும், உம்மை சிநேகிக்கவும் அநுக்கிரகம் செய்தருளும். நீர் என் பிதாவும், நான் உமது பிள்ளையும் ஆகையால், பிள்ளையாகிய நான் பிதாவாகிய உமக்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தையும், உமது பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையையும், அன்பையும் நான் அடையச் செய்தருளும். திருச்சபைக்கு உட்பட்ட கிறீஸ்தவர்களுக்காகப் பரிந்துபேசும் வல்லமை பொருந்திய நியாய தூதுவரே, நீர் சர்வேசுரனிடம் அடியோர்களுக்காகப் பேசின மனு வீண் போனதில்லையயன்று அர்ச். தெரேசம் மாள் உறுதியாய் சொல்லியிருக்கிறாரே! ஆகை யால் அடியேன் இப்பொழுது உமக்குச் செலுத்தும் இந்த வேண்டுதல் மூலம் என் மனுவை அடைய எனக்காக ஆண்டவரிடம் மன்றாடியருளும். ஓ சிறந்த அர்ச்சியசிஷ்டவரே! நித்திய சமாதானத் தோடு நான் சம்பந்தப்பட்ட அர்ச். திரித்துவத் துக்கு என்னை ஒப்புக்கொடுத்தருளும். ஆண்டவ ரின்  பரிசுத்த சாயலாய்ப் படைக்கப்பட்ட நான் பாவக்கறையால் அசுத்தப்படுத்திக்கொள்ள விடா தேயும். என் திவ்ய இரட்சகர் தமது அன்பின் சுவாலையை என் இருதயத்திலும் சகல விசுவாசி களின் இருதயங்களிலும் பற்றியயரியச் செய்ய அவரிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். திவ்ய சேசு குழந்தையாய் இருந்தபோது கொண் டிருந்த பரிசுத்த தன்மையையும் தாழ்ச்சியையும் நாங்கள் எங்கள் இருதயத்தில் பெற்றுக்கொள்ளச் சுவாமியை மன்றாடியருளும். உமது பரிசுத்த மணவாளியாகிய முப்பொழுதும் கன்னித் தாயின் பேரில் நான் வைத்திருக்கும் விசுவாசம் அதிகரிக் கக் கட்டளையிட்டருளும். நீர் இறக்கும்போது சர்வேசுரனிடம் பெற்ற பாக்கியத்தைப் பார்த்து இரட்சகருடையவும், தேவமாதாவினுடையவும் பாதுகாவலில் நான் உயிர்விடச் செய்து, என் ஜீவியத்திலும் மரணத்திலும் என்னைப் பாதுகாத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 3 ம் ஜெபம்

நல்ல மரணத்தைக் கொடுக்கிற வரமுள்ள அர்ச். சூசையப்பரே! நான் செய்த பாவத்தால் எனக்கு ஆகாத சாவு வருவதற்குப் பாத்திரவானா யிருந்தாலும், உமது பேரில் நான் வைத்த நம்பிக் கையின் காரணமாக தேவரீர் சர்வேசுரனை இரந்து எனக்கு நல்ல மரணத்தைக் கட்டளையிடுவீர் என்று நம்பியிருக்கிறேன். இப்படிப்பட்ட பாக் கியமான மரணத்தை நான் அடையத்தக்கதாக நீர் அனுபவிக்கிற வாக்குக்கெட்டாத மோட்ச பாக் கியத்தைக் குறித்து உம்மை மன்றாடுகிறேன். தேவ வரங்களால் நிறைந்த அர்ச். சூசையப்பரே வாழ்க! கர்த்தராலும் கர்த்தருடைய திருத்தாயாராலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே! உம்முடைய திருக் கன்னிப் பத்தினியின் கனியாகிய சேசு ஆசீர்வதிக் கப்பட்டவருமாமே. கடவுளுடைய தாயாரின் பரிசுத்த பத்தாவான அர்ச். சூசையப்பரே, உம்  ஊழியரும், பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக் காக வேண்டிக்கொள்ளும். சேசுகிறீஸ்துநாத ருடையவும், கன்னிமரியம்மாளுடையவும் திருக் கரங்களில் பாக்கியமான மரணத்தை அடைந்தவர் நீரே.  எங்களுக்கு  இப்போதும்  எங்கள்  மரண நேரத்திலும் ஒத்தாசையாயிரும். அருளினாலே பூரண சூசையப்பரே வாழ்க. சேசு மரியாயும் உம்முடனே. ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட் டவரும் நீரே! உமது பத்தினியின் திருவயிற்றின் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச். சூசையப்பரே, அர்ச். தேவமாதாவின் துணைவரே, சேசுநாதரைப் போ´த்தவரே, உமது பேரில் பக்தியாயுள்ளவர்களுக்காக வேண்டிக்கொள்ளும். இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களால் பூரண சூசை யப்பரே வாழ்க, அர்ச். தேவமாதாவுக்குப் பிள்ளை யான சேசுநாதர் அனந்த கிருபையோடு உமக்குப் பிள்ளையாக வந்ததால் தேவதாயார் பெண் களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டது போல, நீரும் ஆடவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே. கிறீஸ்து வின் பிதாவென்னும் பெயர் படைத்த அர்ச்.  சூசையப்பரே! அர்ச். தேவமாதாவுக்குப் பரிசுத்த பத்தாவே, இந்த உலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்த சேசுநாதர் பாவிகளாயிருக்கிற எங்களுக்கு இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் கிருபை செய்யும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 2 ம் ஜெபம்

எனது இரட்சணியப் பிதாவான சூசை முனீந்திரரே! சேசுநாதர் பூலோகத்தில் உமக்கு மிகுந்த அமைதலோடு கீழ்ப்படிந்து மகா தயை யோடும், வெகுமானத்தோடும் ஆதரித்து நடந் தாரே; இப்போது பரலோகத்தில், உமது சுகிர்தங் களுக்குப் பலன் கொடுக்கிற இடத்தில், நீர் கேட் கிற எந்தக் காரியங்களுக்கும் இல்லை என்கிற துண்டோ? அதில்லையே, ஆனதினால் நீர் எனது தயவான பிதாவைப் போல எனக்காகப் பிரார்த் தித்து, முதலாவது - நான் என் சகல பாவங்களை யும் வெறுத்து, துர்க்குணங்களை அருவருத்து, சுகிர்தங்களுக்குப் பிரயாசைப்படும்படி தேவ வரப்பிரசாதமடையச் செய்தருளும். இரண்டா வது ‡ நான் நடக்கிற நல்ல வழிக்குப் பசாசு பண்ணுகிற சர்ப்பனைகளையும், உலகத்திலுள்ள விக்கினங்களையும் அகற்றி, என் சகல ஆபத்து அவசரங்களிலே பிரசன்னராய் எனக்கு நீர் சகாயம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன். இந்த நன்மைகளை எல்லாம் சர்வேசுரனின் சித்தத்தின் படியே அடைய உமது காருண்ணியமுள்ள அடைக் கலத்தை நம்பியிருக்கிறேன். சாகிறவர்களுக்கு உறுதித் துணையாகிய அர்ச். சூசையப்பரே! உமது வலது பக்கத்தில் நீர் வளர்த்த உம்முடைய பிள்ளையயன்று பேர் கொண்ட சேசுநாதரும், உமது இடது பக்கத்தில் உமது பத்தினியாகிய தேவ மாதாவும் உமக்கு ஆறுதல் சொல்லிக் கொண் டிருந்ததால் ஆனந்த சந்தோஷத்தோடு மரணத்தை அடைந்தீரே; அதை நினைத்து உம்மை வணங் கும் எங்களை இப்பொழுதும் மரண நேரத்திலும் சேசுநாதரும் தேவமாதாவும் தங்கள் திருக்கரங் களால் எங்கள் ஆத்துமங்களை ஒப்புக்கொள் ளவும், உறுதியோடு நாங்கள் மரணமடையவும் அனுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் 

ஆமென்.

அர்ச். சூசையப்பர் நவநாள் - 1 ம் ஜெபம்

சூசை முனிவரே! அருளிலும் வரப்பிரசாதத்திலும் உமக்குச் சமானமுள்ளவன் யார்? பிதாவாகிய சர்வேசுரனின் பொருட் காப்பாளர் நீர்; சுதனாகிய சர்வேசுரனை வளர்த்த தந்தை நீர்; இஸ்பிரீத்துசாந்துவிட மாய்த் தமது பத்தினிக்கு விரத்த நிழலானவர் நீர்; பரம திரித்துவத்தால் திவ்ய இரகசியங்களின் சஞ்சிதக்காரராய்த் தெரிந்து கொள்ளப்பட்டவர் நீர்; சர்வமும் சிருஷ்டித்தவருடைய மாதாவுக்கு உத்தம பத்தாவானவர் நீர்; இப்படிப்பட்ட உமது மகிமையை வாழ்த்த தேவ தூதர்களுக்கும்கூட அரிதாயிருக்க, அடியேனுக்கு இயல்வதெப்படி? ஆனால் என் ஆசையும் பக்தி யும் நிறைவேறத்தக்கதாக இயன்ற வரை உம்மைத் துதிக்கக்கடவேனாக. தாயின் உதரத்திலே தேவ வரப்பிரசாதத்தால் அலங்கரிக்கப்பட்டதால், பாக்கியவாளன் நீர் வாழ்க, வாழ்க! பாவ உலகில் நீர் பிறந்து, பாவப் பழுதில்லாமல் ஜீவித்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! தண்ணீரில் உற்பவித்த புஷ்பம் தண்ணீரோடு கலவாமலிருப்பது போல, பெண் குடும்ப வாசத்தில் வாழ்ந்து, பெண் ணோடு உறவின்றி இருந்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! சுகிர்தவாளனென்று முதன் முதல் தேவ வாக்கியத்தில், சுவிசே­த்தில் நிரூபிக்கப்பட்டதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! பழுதற்ற கன்னிதானத்தோடு விவாக சரணத்தின் பலனாகிய புத்திர பலனை இஸ்பிரீத்து சாந்துவால் அடைந்ததால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! இருபத்தேழு வரு­ம் தேவமாதா வோடு உரையாடி, அவர்களது புண்ணியங்களின் பின்சென்றதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! கிறீஸ்துநாதருக்குக் காவலான தேவதூத ராக உம்மைக் கையேற்றுக் கொண்டதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! சேசுநாதருக்கு உமது கையால் உணவு ஊட்டி, உடுத்தி, சீராட்டி, கையில் ஏந்திப் பணிவிடை செய்ததால் பாக்கிய வாளன், நீர் வாழ்க, வாழ்க! தேவ குமாரன் உம்மைப் பிதாவென்று கூப்பிட்டதால் பாக்கிய வாளன், நீர் வாழ்க, வாழ்க! அறுபது வயது ஆகும் வரை தேவகுமாரனுக்கும் மாதாவுக்கும் துணை செய்து சாகிற வேளையில் அவர்களும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது, உமது சுகிர்தம் நிறைந்த ஆத்துமத்தை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்ததாலும், அவர்கள்தாமே உம்மை அடக்கம் செய்ததாலும் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! மோட்ச இராச்சியத்தில் தேவ மாதாவுக்குப் பிறகு எல்லாரிலும் அதிக மோட்ச மகிமையை அடைந்திருப்பதால் பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! தேவமாதா உம்மை மெய்யான பத்தாவாகவும், தேவசுதன் உம்மை கைத்தாதை யாகவும் வெகுமானித்து, நீர் கேட்டதெல்லாம் செலுத்துவதால், பாக்கியவாளன், நீர் வாழ்க, வாழ்க! நீர் பழுதற்ற கன்னித்தானன் ஆனதினால், கன்னியருக்குத் தஞ்சம்; மெய்யான விவாக சரணனு மானதால் விவாக சரணருக்குத் தஞ்சம்; திவ்ய பாலனான சேசுவைக் காத்ததால், தாய் தந்தை இல்லாத சிறுவருக்குத் தஞ்சம்; தேவமாதாவை யும், குமாரனையும் கொண்டு அநேக தூரம் பரதேசியாய் வழிநடந்ததினால் பரதேசிகளுக்கும் தஞ்சம்; இப்படியே யாவரும் உமது தஞ்சத் தையும், அடைக்கலத்தையும் நம்பியிருக்கிறபடி யால், நானும் என்னை உமக்கு அடிமையாக ஒப்புக்கொடுக்கிறேன். சேசு மரியாயோடு நீரும் என்னை அடிமையாகக் கையேற்றுக்கொண்டு, உமது திருச்சித்தத்தின்படியே நடப்பித்து, பரகதி யில் என் ஆத்துமம் சேரும்படி கிருபை செய்தருளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பருக்குத் தோத்திரப் பாடல்

முதல்: செளக்கியனாய் சீவிக்கவும் கடைசியாய் சீவியகாலத்தின் பாக்கியமான முடிவை அடையவும் விரும்புகிறவன் எவனோ அவன் அர்ச். சூசையப்பரின் உதவியைக் கேட்கக்கடவான். 

சபை: செளக்கியனாய்... மற்றதும்.

முதல்: இவர் தயாள திருக்கன்னியின் மாசற்ற பத்தாவும் சேசுவின் பிதாவாக எண்ணப்பட்டவரும் நீதிமானும் பிரமாணிக்கரும், பரிசுத்தருமாகையால் தாம் மன்றாடிக் கேட்பதையயல்லாம் பெற்றருளுகிறார்.

சபை: செளக்கியனாய்...

முதல்: காய்ந்த புல்லின் மேல் வளர்த்தப்பட்ட பாலனை ஆராதித்தவரும் பின்னும் பரதேசத்தில் அத்திருப்பாலனைத் தேற்றினவரும் பின்பு காணாமல்போன அவரைத்  துயரத்தோடு தேடிக் கண்டவரும் இவரே.

சபை: செளக்கியனாய்...

முதல்: உலகத்தை சிருஷ்டித்த பரம கர்த்தர் இவருடைய கைத்தொழிலால் அமுது கொண்டார். பரம பிதாவினுடைய சுதன் இவருக்குக் கீழ்ப்படிந்து ஏவல் செய்தார்.

சபை: செளக்கியனாய்...

முதல்: சேசுநாதரும் தேவமாதாவும் தமக்கு மரணவேளையில் உதவியாய் நிற்கிறதைக்கண்டு அவர்கள் திருக்கரங்களில் அகமகிழ்ச்சியுடன் இன்பமான நித்திரை கொண்டாற்போல் ஜீவித்தார்.

சபை: செளக்கியனாய்...

முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது.

சபை: செளக்கியனாய்...

முதல்: ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் அநாதி சதாகாலமும் இருக்கும்படியே. ஆமென் சேசு...

சபை: செளக்கியனாய்...

முதல்: நாங்கள் சேசுகிறீஸ்துவின் வாக்குத்தத் தங்களுக்குப் பாத்திரவான்களாகத்தக்க தாக,

சபை: அர்ச்.சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாவீது ராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவதாயாரின் பத்தாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ குமாரனை வளர்த்த தகப்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துநாதரை உற்சாகப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம தைரியசாலியான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரத்தின் அன்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர்களின் காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குடும்பங்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரிக்கிறவர்களுக்குப் பாதுகாவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களை நடுநடுங்கச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார். அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக்கெட் டாத பராமரிக்கையினால் தெரிந்து கொள்ளத் திருவுளமானீரே.  பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிற வராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற ஆண்டவரே. 

ஆமென்.

திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே!  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். (100 நாட் பலன்.)

நல்ல மரணமடைவதற்கு அர்ச். சூசையப்பரைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிற ஜெபம்

தேவ வரங்களால் நிறைந்த அர்ச். சூசையப்பரே வாழ்க. கர்த்தரும் கர்த்தருடைய திருத் தாயாரும் உம்முடனே. மனிதர்களுக்குள் ஆசீர் வதிக்கப்பட்டவரும் நீரே. உம்முடைய திருக் கன்னிப் பத்தினியினுடையவும் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவருமாமே.  கன்னித் தாயாருடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச். சூசையப்பரே! உம்முடைய ஊழியரும் பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். சேசுக்கிறீஸ்து நாதருடையவும் கன்னிமரியம்மாளுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணத்தை அடைந்தவர் நீரே. எங்களுக்கு எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் ஒத்தாசையாயிரும்.  

ஆமென்.

அர்ச். சூசையப்பரின் ஏழு வியாகுலங்களையும் ஏழு சந்தோஷங்களையும் குறித்துக் கேட்கும் மன்றாட்டு

1-வது. அர்ச். சூசையப்பரே! நீர் கன்னிமரியாயின் கெற்பத்துக்குக் காரணமறியாமல் பட்ட துக்கத்தைப்பற்றி மனமிரங்குகிறேன். மேலும் காரணத்தை சம்மனசினாலறிந்து நீர் அனுபவித்த சந்தோஷத்தைப்பற்றிக் களிகூறுகிறேன். அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.  (அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

2-வது. அர்ச். சூசையப்பரே! சேசுநாதர் மாட்டுக்கொட்டிலில் பிறந்ததைக் கண்டு நீர் பட்ட துக்கத்தைப் பற்றி மனமிரங்குகிறேன்.  மேலும் அவர் சம்மனசுக்களாலும், மனிதர்களாலும் ஆராதிக்கப்பட்டதைக் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப் பற்றிக் களிகூருகிறேன்.  அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.  (அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

3-வது. அர்ச். சூசையப்பரே! திவ்விய குழந்தை விருத்தசேதனப்பட்டதைக் கண்டு நீர் பட்ட துக்கத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் அவருக்கு சேசுவென்னும் திருநாமம் தரிக்கப் படுவதைக் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப் பற்றிக் களிகூறுகிறேன்.  அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப் பேசியருளும். (அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

4-வது. அர்ச். சூசையப்பரே! திவ்விய குமாரனுடைய பாடுகளையும் அவருடைய திருத் தாயாருடைய வியாகுலங்களையும் சிமியோன் முன்னறிவிக்கக் கேட்டு நீர் பட்ட துக்கத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் மனுக்குலத்தின் இரட்சண்ணியத்தை அவர் முன்னறிவிக்கக் கேட்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப் பற்றிக் களிகூறுகிறேன். அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.  (அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

5-வது. அர்ச். சூசையப்பரே! நீர் எகிப்து தேசத்துக்கு ஓடிப் போனதைப் பற்றி மனமிரங்குகிறேன்.  மேலும் நீர் திவ்விய இரட்சகரைக் காப்பாற்றினதைப் பற்றிக் களிகூறுகிறேன்.  அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும். (அவரவர் தமக்கு வேண்டிய தைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

6-வது. அர்ச். சூசையப்பரே! எகிப்து தேசத்தினின்று திரும்பி வருகையில் நீர் பட்ட பயத்தைப் பற்றி மனமிரங்குகிறேன். மேலும் சம்மனசின் காட்சியால் தேறுதல் அடைந்ததைப் பற்றிக் களிகூறுகிறேன். அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும்.  (அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

7-வது. அர்ச். சூசையப்பரே! சேசுநாதர் காணாமல் போனதினால் நீர் பட்ட துக்கத்தைப் பற்றி மனமிரங்குகிறேன்.  மேலும் அவரை மறுபடியும் கண்டு நீர் அனுபவித்த சந்தோஷத்தைப் பற்றிக் களிகூறுகிறேன்.  அர்ச். சூசையப்பரே, நீர் அனுபவித்த இந்தத் துக்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்து எங்களுக்காக மனுப்பேசியருளும். (அவரவர் தமக்கு வேண்டியதைக் கேட்கிறது.) பர. அருள். திரி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி! உம்முடைய மிகவும் அர்ச்சியசிஷ்ட திருமாதாவுக்கு பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக் கெட்டாத பராமரிப்பால் தெரிந்துகொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப் பேசுகிறவராய் இருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்களாகத்தக்கதாக அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடு கிறோம்.  பிதாவோடும், இஸ்பிரீத்துசாந்து வோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே. 

ஆமென்.

அர்ச். சூசையப்பரைக் குறித்து சுகிர்த மன்றாட்டு

கிருபை, தயாளம் நிறைந்தவருமாய், எங்கள் நேச வணக்கத்துக்கு உரியவருமாயிருக்கிற பிதாப் பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! தேவரீரை மன்றாடி தேவரீருடைய அடைக்கலத்தைத் தேடி, உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமல் போனதில்லை என்று அர்ச். தெரசம்மாள் நிச்சயித்ததை நினைத்தருளும். என் அன்புள்ள தகப்பனாரே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு, நான் உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன்.  பெருமூச்செறிந்து பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக்கொண்டு உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாய் விழுகிறேன். மிகவும் இரக்கமுள்ள பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே! சொற்பமும் அயோக்கியமுமாயிருக்கிற என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரராய்க் கேட்டுக் கிருபை புரிந்தருளும். 

ஆமென்.

அர்ச். சூசையப்பருக்குத் தன்னை முழுதும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

மகிமை நிறைந்த பிதாப்பிதாவாகிய அர்ச். சூசையப்பரே!  தேவமாதாவுக்குப் பரிசுத்த பத்தாவானவரே! சேசுக்கிறீஸ்துநாதரை வளர்த்த தகப்பனாரே!  தேவரீரை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே, நன்மரணத்துக்கு மாதிரிகையும் தஞ்சமுமானவரே, தேவரீருடைய தாசராயிருக்கிற நாங்கள் எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  உமது சிம்மாசனத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஏக திரித்துவமான சர்வேசுரனுடைய சமூகத்திலேயும், உமது திவ்விய குமாரனான சேசுநாதருடையவும், உமது பரிசுத்த பத்தினியாகிய தேவமாதாவினுடையவும் சகல மோட்சவாசிகளுடையவும் அண்டையிலேயும் மிகுந்த வணக்கத்துடனே தேவரீரை எங்களுக்குத் தகப்பனாராகவும், ஆண்டவராகவும், அடைக்கல மாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்.  தேவரீருக்கு எங்களுடைய ஆத்துமத்தையும், சரீரத்தையும், சக்திகளையும், உடைமையுற்பத்திகளையும், எங்களுடைய மற்ற யாவற்றையும் ஒப்புக்கொடுக் கிறோம்.  உமது மகிமையைக் கொண்டாடி உமக் குரிய வணக்கத்தைப் பிரசித்தம் பண்ணி ஒரு நாளாவது உமக்கு ஸ்துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப்போகிறதில்லை.  தேவரீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து எங்களுடைய இக்கட்டுகளை நிவிர்த்தி பண்ணி எங்களை புண்ணிய நெறியிலே வழுவாமல் நடப்பித்தருளும். சேசுநாதருடையவும் தேவமாதாவுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணத்தையடைந்த நீர்,  நாங்கள் மரிக்கும்போது இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து மோட்ச பேரின்ப பாக்கியத்தை அடைந்து, உம்முடனே என்றென்றைக்கும் வாழப்பண்ணியருளும்.  உமது பிள்ளைகளாயிருக்கிற எங்களைக் கைவிடாதேயும் தகப்பனாரே. 

ஆமென்.

அர்ச். சூசையப்பரைக் குறித்து ஜெபம்

மகா பாக்கியம்பெற்ற அர்ச். சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம்.  தேவதாயாரான ஜென்ம பாவமில் லாமல் உற்பவித்த அர்ச். கன்னிமரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை சேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில்  நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால் (விரும்பியதைக் கேட்கவும்.) சேசுக்கிறீஸ்துநாதர் தமது இரத்தத் தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.

ஓ!  திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே! சேசுக்கிறீஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும்.  ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே! நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே! நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்திலிருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக.  திவ்ய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித் துக் கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந் தீரோ அவ்விதமே சர்வேசுரனுடைய திருச்சபையை பசாசின் வலையிலும், எவ்வித ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல்  என்றும் இருக்கக்கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் பரிசுத்தமாய்ச் சீவித்து பக்தியாய் மரித்துப் பரகதியின் முடிவில் லாப் பாக்கியம் பெற்று வாழும்படி கிருபை செய்ய உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென்.

(இந்தச் செபத்தைப் பக்தியோடு சொல்லுகிறவர்களுக்கு ஒவ்வொரு விசையும் 7 வருஷம் 7 மண்டலப் பலன்களை அர்ச். பாப்பானவர் கொடுத்திருக்கிறார்.)

அனுகூலமடைய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரைப் பார்த்து செபம்.

கன்னியர்களின் தந்தையும், பரிபாலனுமாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! பிரமாணிக்கமுள்ள காவலனே! பரிசுத்தமயமாகிய இயேசுவையும், கன்னியருக்கு அரசியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயையும் சர்வேசுரன் உமது அடைக்கலத்தில் ஒப்படைத்தாரே. உமது அருமைப் பராமரிப்புக்கு மிகவும் உரியவர்களாயிருக்கிற இந்த இருவரைக்குறித்து நான் இரந்து கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்...

வேண்டியதைக் குறிப்பிடுக.

நான் மாசற்ற சிந்தனைகளோடும், பரிசுத்த இருதயத்தோடும், கற்புள்ள சரீரத்தோடும், உத்தம தேவ சிநேகத்தோடும் பழுதின்றி நடந்து, அத்திவ்விய இயேசுவுக்கும், தேவமாதாவுக்கும் இடைவிடாமல் ஊழியம் பண்ணும்படிக்கு, எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தைக் கேட்டுத் தந்தருளும்.

ஆமென்.

பாப்பரசர் 13-ம் சிங்கராயர் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பேரில் செய்த செபம்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! எங்களுடைய துன்ப துயரங்களில் உமது சரணமாக ஓடி வந்தோம். உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின், உமது அடைக்கலத்தை அடைய நம்பிக்கையோடு மன்றாடுகின்றோம்.

தேவ தாயாரான அமலோற்பவ கன்னிமாதாவின்பேரில் நீர் வைத்திருந்த அன்பின் ஐக்கியத்தைப் பார்த்து திவ்விய பாலனான இயேசுவை அன்போடு அரவணைத்து வளர்த்த தந்தைக்குரிய உமது நேசத்தைப் பார்த்து, அத்திவ்விய கர்த்தர் தமது திரு இரத்தத்தால் மீட்டு இரட்சித்த மனுக்குலத்தைக் கிருபாகடாட்சமாய் பார்த்தருளி, எங்கள் அவசரங்களில் உமது செல்வாக்குள்ள மன்றாட்டினால் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

திருக்குடும்பத்தைக் காத்து நடத்தின விவேக காவலனே! இயேசு கிறிஸ்துவின் பிரஜைகளை ஆதரித்தருளும். அதிமிக உருக்க நேசம் அமைந்த பிதாப்பிதாவே! சகல பாவங்களினின்றும் எங்களைத் தற்காத்தருளும். வல்லமை பொருந்திய பாதுகாவலனே! எங்கள் சத்துருக்களோடே நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களைப் பாதுகாத்தருளும்.

மரண ஆபத்தினின்று திவ்விய பாலனை தேவரீர் அன்று மீட்டு இரட்சித்ததைப்போல இப்போது எங்கள் சத்துருக்களின் சகல தந்திரங்களில் நின்றும் இக்கட்டு இடையுறுகளில் நின்றும் திருச்சபையை பாதுகாத்தருளும். உமது தயவு ஆதரவால் நாங்கள் தற்காக்கப்பட்டு உமது திவ்விய மாதிரிகையைப் பின்சென்று, பரிசுத்தமாய் சீவித்துப் பக்தியாய் மரித்து பரகதியின் ஆனந்தத்தில் வந்து சேரத்தக்கதாக தேவரீருடைய இடைவிடாத உதவி ஒத்தாசையை எங்களுக்குக் கட்டளையிட்டருளும்.

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்கு செபம்: (வல்லமைமிகு செபம்.)

(இந்த மன்றாட்டு கி.பி.55-ம் ஆண்டு இயற்றப்பட்டது. கி.பி.1500-ம் ஆண்டில் பாப்பரசரால் மாமன்னன் சார்லஸ் போருக்குச் செல்லும் முன் கொடுக்கப்பட்டது.)

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.

உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.

அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும்.

மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும்.

ஆமென்.

இந்தச் செபத்தை வாசிக்கிறவர்கள், கேட்கிறவர்கள் அல்லது தங்களுடன் வைத்திருப்பவர்கள் அகால மரணத்தால் சாகமாட்டார்கள். தண்ணீரில் மூழ்கியும், விஷமுள்ள ஜந்துக்களாலும் சாகமாட்டார்கள். தீயினாலோ அல்லது அவர்களது எதிரிகளாலோ எந்தவித ஆபத்தும் அவர்களுக்கு நேரிடாது. யுத்தக்களத்தில் எப்பொழுதும் வெற்றியை அடைவார்கள்.