அர்ச். அந்தோனியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்ச். அந்தோனியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அர்ச். அந்தோனியாரின் புண்ணிய தலங்களில் சொல்லத்தகும் ஜெபம்

இப்புண்ணிய சேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனம் கொண்டு எழுந்தருளியிருக்கிற அர்ச். அந்தோனி யாரே!  பரிசுத்ததனம் விளங்கும் லீலியே!   விலை மதிக்கப்படாத மாணிக்கமே!  பரலோக பூலோக காவலே!  கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே, பாவிகளின் தஞ்சமே!  உமது இன்பமான சன்னிதானம் தேடி வந்தோம்.  உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.  மகா சிரவணம் பொருந்திய அர்ச். அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே!  பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே!  உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!  எங்கள் சந்தோ­மும் நம்பிக்கையும் பாக்கியமும் நீரல்லவோ!  நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்.  பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ?  உம்மைத் தேடிவந்த நிர்ப் பாக்கியர் பேரில் தயவாயிரும். அழுகிற பேர்களை அரவணையும்.  அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுத லாக வாரும்.  நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்?  நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்?  நீர் நினையா விட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவு வார்? தஞ்சமென்று ஓடி வந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும்.  பரிசுத்த வெண்மையின் துய்யதான தாபரமே!  தயைக் கடலே! தவிப்பவர் களுக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உமது இன்பமான சன்னிதானம் தேடி வந்தோம்.  ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம்.  துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.  எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பலனற்றதாய்ப் போகுமோ?  எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ?  ஐயா, எங்கள் அன்பனான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறோம்.  எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும்.  ஆமென்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  அர்ச். அந்தோனியாரை  வணங்கி அவருடைய சலுகையை இரந்தும் சாஷ் டாங்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகளாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேணு மென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட் டுகளையயல்லாம் எங்கள் ஆண்டவரான சேசுநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 

ஆமென் சேசு.

அனுகூலமடைய ஜெபம்

ஓ! பரிசுத்ததனத்தின் வெண்மையான லீலி மலரே! உன்னத தரித்திரத்தின் முன்மாதிரிகையே! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே!  பரிசுத்ததனத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ மகிமையில் துலங்கும் அர்ச். அந்தோனியாரே! தேவரீர் உமது திருக்கரங்களில் தேவ பாலனான சேசுநாதர் எழுந்தருளி வரும் விசேஷித்த சுதந்தரம் பெற்று அகமகிழ்ந்தீரல்லோ? அதுபோல வல்லமையுள்ள உம் ஆதரவில் என்னையும் வைத்துக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக் கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய்ப் பிரகாசிக்கிறதல்லோ!  தேவரீர் என் பேரில் இரங்கி எனக்கு அவசரமான இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்ய வாரும். (இன்னின்ன)... அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் அயலாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அடைந்தருளும்.  இவ்விதமாக நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய்ச் சேவித்து மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த் தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக் கடவேனாக.

ஆமென்.

கேட்ட சகாயம் அடையும்படிக்கும் அல்லது காணாமற்போன பொருளைக் கண்டடையும்படிக்கும் ஜெபம்

ஓ! மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச். அந்தோனியாரே!  சகல நன்மைகளும் நிறையப் பெற்ற அப்போஸ்தலரே!  தேவரீர் (காணாமற் போன பொருளைத் திரும்பக் கண்டடையச் செய்கிற) புதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே.  (நான் தொலைத்த பொருளைத் திரும்பக் கண்டடையும் படிக்கு) உமது ஆதரவைத்தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும்.  தேவரீரைக் கொண்டு இப்பேர்க்கொத்த மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மென்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன்.  

ஆமென்.

அர்ச். அந்தோனியாரைக் குறித்து பதின்மூன்று மன்றாட்டு

அற்புதங்கள் வேண்டுமானால் அர்ச். அந்தோனியாரிடம் போ.

1. நீர் சாவை அகற்றுகிறீர்.

வார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.

2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே! சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி.

3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர்.

அர்ச். அந்தோனியாரே! எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.

4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர்.

அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி.

5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன.

அர்ச். அந்தோனியாரே! பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி.

6. நோயாளிகளைச் செளக்கியப்படுத்துகிறீர்.

அர்ச். அந்தோனியாரே!  நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி.

7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது.

அர்ச். அந்தோனியாரே!  பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும்.  ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி.

8. நீர்  சிறைச்சாலையில்  அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே! சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும்.  பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி.

9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி.

10. நீர் காணாமற்போன சொத்தைத்  திரும்பக் கண்டடையச் செய்கிறீர்.

அர்ச். அந்தோனியாரே!  காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி.

11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன.

அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்க ளைத் தற்காத்து இரட்சியும். பர. அருள். திரி.

12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன.

அர்ச். அந்தோனியாரே!  தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி.

13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக.

அர்ச். அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி.

பிரார்த்திக்கக்கடவோம்

இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே!  நிர்மல பரிசுத்தத்தின் உப்பரிகையே! தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர்.  அர்ச். அந்தோனியாரே!  நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும்.

சர்வேசுரா சுவாமி!  தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது.

ஆமென்.

அர்ச். அந்தோனியார் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியாஸ்திரீகளுக்குள்ளே உத்தம அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்திச்சுவாலகருக்கு ஒத்தவராகிய அர்ச். பிரான்சீஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதுவைப் பதியரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத் திருவின் திருப்பெட்டியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தபசில் பற்றுள்ள அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தருமத்தை மிகவும் பின்தொடர்ந்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். சிலுவையை மிகவும் நேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தூய்மையில் லீலியயன்கிற புஷ்பமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பானிய சீமைக்கு நவநட்சத்திரமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச் சத்தமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவிசுவாசிகளுக்குப் பயங்கரமாக உபதேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுகளை நடுநடுங்கச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மீனோரென்கிற சந்நியாசிகளுக்குப் படிப் பினையான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலருடைய கொழுந்தான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆச்சரியங்களைச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலிப்புள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லுகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊமைகளைப் பேசச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உண்மைகளைப் போதிக்கிற உபதேசியாரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுக்களை மிரட்டி ஓட்டுகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரர்களைக் குணமாக்குகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரித்தவர்களைச் சர்வேசுரனுடைய உதவியினாலே, உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிறவிக் குருடருக்குக் கண்கொடுத்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

காணாமற் போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இழந்துபோன பொருட்களைக் கண்டெடுக் கச் செய்கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக் கிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோகத்திற்குச் சுதந்தரவாளியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரருக்கு இரத்தினமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நஞ்சிருக்கக் கண்டு போசனம் அருந்தினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புண்ணியமென்கிற ஞான வெள்ளாண்மையைப் பல நாடுகளில் விளைவித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகமென்கிற அபத்தத்தைப் புறக்கணித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தில் உபத்திரவப்படுகிற எத்தனையோ பேர்களை இரட்சித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மைப் பார்த்து வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு அன்பரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீரைப் புகழுகிறவர்களுக்காக மன்றாடுகிறவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எண்ணிறந்த ஆத்துமங்களைப் பரலோகத்தில் சேர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நன்னாக்கழியாத நற்றவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறு குழந்தை ரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தினவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச். அந்தோனியாரே, சூரத்தனமுள்ள மேய்ப்பரே, கஸ்திப்படுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருத்துவிக்கிறவருமாய்ப் பாவ அக்கினியுடைய காந்தியைச் சீக்கிரத்திலே அமர்த்துகிற வரும் உன்னத பரலோகத்திலிருக்கிற பிதாவான வர் இம்மையினுடைய அவதிக்குப் பிற்பாடு எளிய வர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருள மன்றாடும்.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

பிதாவாகிய சர்வேசுரா சுவாமி, உமது திருச்சபையானது அர்ச். அந்தோனியாருடைய ஞான உதவியினாலே உரம் பெற்றிருக்கவும், நித்திய ஆனந்தத்தை அனுபவிக்க நாங்கள் பாத்திரமாயிருக்கவும், உம்முடைய ஸ்துதியரான அர்ச். அந்தோனியாருடைய திரு நாமத்தைக் கொண் டாடுகிற நாங்கள் அவருடைய புண்ணிய மாதிரிகையை அனுசரித்துக் கொண்டு பேரின்ப மோட்ச இராச்சியத்தில் சேரவும் அனுக்கிரகம் செய்தருளும். உம்முடைய திருச்சபைக்குச் சந்தோஷம் வருத்துவிக்க வேண்டு மென்றும் தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் சேசுகிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். 

ஆமென்.

அர்ச். அந்தோனியார் ஜெபம்

கற்பில் உத்தமமான லீலியயன்கிற புஷ்பமுமாய் அட்சயமுள்ளவருமாய் இருக்கிற அர்ச். அந்தோனியாரே! எளிமைத்தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, நிர்மல சுத்தத்தின் மாதிரிகையே, அர்ச்சியசிஷ்டதனத்தில் ஒளிவிடுகிற நட்சத்திரமே, ஆசார முறைமைகளின் சோடினையே, மோட்ச வர்க்கத்தின் வடிவே, திருச்சபையின் தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காமாதுரரை அடக்குகிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே, கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சர்வேசுரனுடைய சுதனைத் தாங்குகிறவருமாய் தேவ சிநேகத்தின் பேரிலே மிகவும் எரிகிற அனலுமாய்ப் பச்சாத்தாபத்தின் சீவியமான சுவாலையுமாய்த் தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களைத் தேவ பட்சத்தின் நெருப்பிலே கொளுத்தி எரித்தவருமாய் இருக்கிறவரே, விருப்பமுள்ள வேதசாட்சியே, திவ்யமான தீர்க்க தரிசனரே, பாவிகளைத் திருத்துகிறவரே, எளிய பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும், அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும் ஞானமுள்ள தியானத்தையும் சர்வேசுரன் எங்களுக்குத் தந்தருளும்படிக்கு அவரை வேண்டிக் கொள்ளும். மிகவும் எரிகிற பட்சத்தில் அனலா யிருந்து பாவிகளான எங்களுடைய உலர்ந்த இருதயத்தைத் தேவ பட்சத்தினாலே கொளுத்தி எரிக்கச் சித்தமாய் இருக்க வேணுமென்று மிகுந்த தாழ்ச்சியுடனே உம்மை வேண்டிக்கொள்கிறோம். 

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட பதுவை அந்தோனியாருடைய 13 மன்றாட்டு

(திருநாள் : ஜு ன் 13)

1. எல்லாத்திற்கும் ஆதி காரணரான சர்வேசுரனுக்கு மகா பிரியமுள்ளவருமாய், சத்தியமறை நெறிக்குப் பொக்கிஷத் திரவியமுமாயிருக்கிற அர்ச். அந்தோனியாரே! சர்வேசுரனுடைய தயையையும், இரக்கமுள்ள பட்சத்தையும் நாங்கள் நாடி நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்யக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

2. உடலை ஒறுத்து, தரித்திர வேஷம் எடுத்துக் கொண்டு மகா அற்புதங்களைச் செய்து கொண்டு வந்த அர்ச். அந்தோனியாரே! இந்த உலகத்தில் சத்துருக்களோடு யுத்தம் பண்ணித் தரித்திரத்தைக் கைக்கொண்டு புண்ணிய வழியிலே நாங்கள் பிரவேசிக்கும்படி கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

3. சத்திய மறையின் நெறியின்படியே வழுவாமல் நடந்து உலக வெகுமான விரும்புதலையும் சிற்றின்ப ஆசையையும் வெறுத்துச் சந்நியாச வஸ்திரம் உடுத்தி உலகத்தில் அநேக அற்புதங்களைச் செய்துகொண்டு வந்த அர்ச். அந்தோனியாரே!  நாங்கள் உலக மகிமைகளையும் துரோகமுள்ள துர்க்குணத்தையும் விட்டுத் திருச்சபைக் கற்பனையின்படியே நடந்து சர்வேசுரனுக்கு யோக்கியமுள்ளவர்களாய் இருக்கக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக்கொள்கிறோம். பர. அருள். திரி.

4. சர்வேசுரனுடைய வேதத்தின் நெறியின் படியே நடந்து விரத்தத்துவத்தில் உறுதிப்பட்டுத் தவத்தையும் தருமத்தையும் பின்தொடர்ந்த அர்ச். அந்தோனியாரே!  உலகத்தில் எங்களுக்கு நல்ல மனதோடு உபகார சகாய தருமங்கள் செய்கிற பேர்களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து தர்மத்தைக் கொண்டிருக்கிற விசுவாசிகளாகத்தக்கதாகக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

5. இஸ்பானியா சீமைக்கு நவநட்சத்திரமுமாய் ஒளியுமாய் வெகு அற்புதம் உள்ளவருமான அர்ச். அந்தோனியாரே! திருச்சபையிலிருக்கிற நாங்கள் எங்கள் மரணத் தறுவாயிலே நல்ல மனதோடு ஆத்தும சுத்திகரம் செய்து தேவ இஷ்டப் பிரசாதத்தை அடையவும், எங்கள் ஆத்துமத்தில் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் நட்சத்திர ஒளிபோல் இறங்கி எங்கள் ஆத்துமத்தை மோட்சத்திற்குக் கூட்டிக் கொண்டு போகும்படி கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

6. சத்திய வேதபாரகருக்கும் சுவிசே­கருக் கும் நிர்ணயித்த மறைநெறியை விகிதப்படுத்தி யிருக்கிற சுவிசே­த்தை மகா உந்நதமாய் நிறை வேற்றித் திருச்சபையோர்களை ஆதரவோடு அரவணைத்துக் கொண்டு வருகிற அர்ச். அந்தோனியாரே! நாங்கள் எங்கள் அறியாமை யில் எங்கள் பாப்பு, மேற்றிராணிமார்கள், குருக்கள், உபதேச போதனைகளுக்கும் திருச்சபை யினுடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து நித்திய மோட்சம் அடையும்படி கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளு கிறோம். பர. அருள். திரி.

7. சர்வேசுரனுடைய கற்பனைக்கும் அவரு டைய திருச்சபைக்கும் கீழ்ப்படிந்து நடவாமல் தேவ துரோகத்தினாலேயும், கர்மப்பாவத்தினா லேயும் சுழன்று திரியும் குருட்டாட்டமான அவிசு வாசிகளுக்கு மகா உக்கிரத்துடனே உபதேசித்து அவர்கள் மனம் இளகித் திடுக்கிட்டுக் கலங்கி அஞ்ஞான மதத்தை விட்டு மெஞ்ஞான வழியைத் தேடும்படி செய்வித்த அர்ச். அந்தோனியாரே!  உலகிலிருக்கிற பதிதர், அஞ்ஞானிகளும் அஞ்ஞான மறைநெறியை விட்டு மெஞ்ஞான வழியில் திரும் பவும், நாங்களும் எங்கள் பிள்ளைகள் சகோதரர் களும் நடக்கிற துன்மார்க்கத்தை விட்டு நீர் எங்களுக்குப் படிப்பிக்கிற நல்ல வழியில் நடக்கத் தக்கதாகக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

8. இடி, பெருங்காற்று மழையில் ஒரு ஸ்திரீ யானவள் மேனி நனையாமல் அவளுக்கு மகா அற்புதங்களைச் செய்த அர்ச். அந்தோனியாரே!  நாங்கள் செய்த பாவத்தினாலே வருகிற இடி பெருங்காற்றான நரக தீவினையில் விழுந்து நனை யாமல் சர்வேசுரன் எங்களை இரட்சித்துக் கொள்ளும்படிக்குக் கிருபை செய்தருள வேணு மென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

9. வெந்நீரில் விழுந்து இறந்து போன பெண் பிள்ளையைப் பன்னீரில் விளையாடுகிறாப்போல மகா அற்புதங்களைச் செய்த அர்ச். அந்தோனி யாரே!  எங்கள் மரண சமயத்திலே தேவ இஷ்டப்பிரசாதமில்லாமல் மரணத்தை அடைந்து வெந்நீரான நரகத் தீயில் விழாமல் சர்வேசுர னுடைய தயையின் காலத்தில்தானே எங்களுக்கு வேண்டிய நன்மைகளைத் தந்து பன்னீரான மோட்ச இராச்சியத்திலே களிகூர்ந்திருக்கும் படிக்குக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

10. சர்வேசுரனுடைய கற்பனைகளை மீறின பசாசுக்களை உமது உறுதியுள்ள விசுவாசக் கிரியையினாலே ஜெயித்து அவைகளை நடுநடுங் கச் செய்து, நரகக் குழியில் தள்ளின அர்ச். அந்தோனியாரே!  எங்களுக்கு எதிராளியுமாய்ப் பசாசுக்கு அடிமைப்பட்டவர்களுமாய் இருக்கிற பதித சத்துராதிகளை ஜெயித்து சத்திய மறை நெறியின்படி வழுவாமல் நடக்கும்படிக்குக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

11. சத்தியமறை நெறியை அறிந்தவர்களும் அறியாதவர்களுமாயிருக்கிற அக்கிரமமான பாவி களை நல்வழியில் திருப்பப் புத்தி சொல்ல அவர்கள் கேளாததினால் சமுத்திரத்தின் மீன்கள் உமது உபதேசத்தை மகா விருப்பத்துடனே கேட்க மகா அற்புதங்களைச் செய்த அர்ச். அந்தோனி யாரே! நாங்கள் உம்முடைய உபதேசத்தை பக்தி யுடனே கேட்டுக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

12.  உலக ஆசையை வெறுத்து விசுவாசப் பற்றுதலால் மகா அற்புதமாக மரித்தவர்களை எழுப்பி இரட்சித்துத் திடமான விசுவாசத்தால் அவர்கள் மோட்சகதி அடையும்படிக்கு செய்த அர்ச். அந்தோனியாரே!  நாங்கள் பாவம் என்கிற மரணத்தை விட்டு புண்ணியம் என்கிற மோட் சத்தை விரும்பித்தேட கிருபை செய்தருளும்படி எங்களுக்காக ஆண்டவரைப் பார்த்து வேண்டிக்கொள்ள வேணுமென்று உம்மை  வேண்டிக் கொள்கிறோம். பர. அருள். திரி.

13.   சர்வேசுரனுடைய மகிமைப்பிரதாபத் திற்கும் உம்முடைய பழுதற்ற பக்தி சுவாலையுள்ள விசுவாசத்திற்கும் ஒருமித்திருக்கிற உமது நிறை வான நன்மைத்தனத்தை சேசுநாதர் கண்டு மிகுந்த ஆவலோடும் தாற்பரியத்தோடும் சிறு குழந்தை யாக உம்முடைய கையில் எழுந்தருளின அற்புதங் களைப் பார்த்து எங்கள் மரணத் தறுவாயிலே சேசுநாதர் எழுந்தருளி வந்து எங்களை இரட்சிக்கக் கிருபை செய்தருள வேணுமென்று உம்மை  வேண்டிக் கொள்ளுகிறோம். பர. அருள். திரி.

பிரார்த்திக்கக்கடவோம்

இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே!  நிர்மல பரிசுத்ததனத்தின் உப்பரிகையே!  தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய் பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப் பதியின் பிரகாசமான சூரியனைப் போல சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் யோக்கியவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெறுவிக்க அநுக்கிரகம் செய்தருளும்.

சர்வேசுரா சுவாமி! தேவரீரை வெளியரங்கமாய் ஸ்துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப்பெற்று எங்கள் ஆதாரமாயிருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோ­ங்களை அநுபவிக்கப் பெற்றது மாய் இருக்கக் கடவது. 

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரின் அழியா நாவுக்கு செபம்.

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே! நீர் உமது நாவால் எப்போதும் இறைவனை துதித்ததுமன்றி எப்போதும் துதிக்கப்படவும் செய்தீரே! நான் உமது புண்ணியங்களை எல்லாங் கண்டு பாவிப்பதுமல்லாமல் விசேஷமாய் எந்தப் பாவத்தினாலும் என் நாவை கறைப்படுத்தாமலும், உம்மைப்போல் அதைக் கொண்டு எப்போதும் இறைவனைத் துதித்தும், துதிக்கச் செய்தும் வருவேனென்று உமக்கு வாக்களிக்கிறேன். நான் என் நாவால் கட்டிக் கொண்டதும், கட்டிக் கொள்ளச் செய்ததுமான எல்லா பாவங்களுக்கும் மன்னிப்பையும், இனி எப்போதைக்கும் இறைவனை துதிக்கவும். பிறருக்கு நன்மாதிரி கொடுக்கவும் மாத்திரம் நாவை உதவிக் கொள்ளும் வரத்தையும், உமது கரங்களில் ஏந்தியிருக்கிற தேவபாலனை மன்றாடி அடைந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன்.

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரின் உதவியினை அடைய வல்லமை மிகும் செபம்.

புனிதர்களுக்குள் பெருந்தகைமையும் பேரன்பும் கொண்ட தூய அந்தோனியாரே! நீர் இவ்வுலகில் வாழ்ந்த போது உம்மிடம் விளங்கிய தேவ அன்பு, பிறரன்பு, புண்ணியங்கள் பிறருக்கு தரப்படாத புதுமை செய்யும் வரத்தை உமக்குத் தந்தன. உமது வாயின் சொல்லிற்கு புதுமைகள் காத்திருந்தன. துயருறுவோர் கேட்டதும் நீர் அவர்களுக்காகப் பேசி நலம் செய்ய முன் நின்றீர்.

இக்கட்டு இடைஞ்சலில் உம்மை வேண்டி, பயனடையாது போகவில்லை. பிணியாளரின் பிணியை நீக்கினீர். காணாமற் போனவைகளைக் கண்டடையச் செய்தீர். துன்பம் நிறைந்தோர் உம்மை அழைத்தபோது உதவி செய்ய விரைந்தீர. இறந்தோருக்கு உயிரளித்தீர். நீர் உலகில் இருந்த போது வருந்திய இறை மக்கள் துயர் துடைக்கத் தயங்கவில்லை. இந்த நம்பிக்கையால், நிரப்பப்பட்டு, முழந்தாட்படியிட்டு உம்மிடம் கேட்கும் மன்றாட்டு யாதெனில்......

(வேண்டுதலை உறுதியோடு கேட்கவும்) 

இதனை நிறைவேற்ற ஒரு புதுமை நிகழ வேண்டுமாயினும் செய்தருள்வீர்! உமக்கு, அது கடினமானதல்லவே! நீர் கோடி அற்புதரல்லவா! உம் கரங்களில் வீற்றிருக்கும் திருப்பாலனின் செவிகளில் என் வேண்டுகோளை மெல்ல உரைத்தருளும். உமது வார்த்தை ஒன்று மட்டுமே போதுமானது என்று மன்றாட்டு நிறைவேறும். உமக்கு நான் என்றும் நன்றியறிதல் உள்ளவனாய் இருப்பேன். ஆமென்.

திருப்பாலனால் சிநேகிக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட தூய அந்தோனியாரே! எனது மன்றாட்டிற்கு செவி சாய்த்தருளும். சொல்லிலும், செயலிலும், வல்லமை மிக்க புனித அந்தோனியாரே! எனது மன்றாட்டிற்குத் தயவாய் செவி சாய்த்தருளும். உம்மிடம் வேண்டுவோர் மீது அதிக அக்கறை காட்டும் தூய அந்தோனியாரே! என் வேண்டுதலை அடைந்து தந்தருளும். (ஆமென். (பர.அரு.பிதா)

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரை நோக்கி செபம்.

கற்பில் உத்தமமான லீலியென்கின்ற புஷ்பமுமாய் அட்சயமுள்ளவருமாயிருக்கிற புனித அந்தோனியாரே, எளிமைத்தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, நிர் மல சுத்தத்தின் மாதிரிகையே, புனிதத்துவத்தின் ஒளிவிடுகிற நட்சத்திரமே, ஆசார முறைமை முடிவுகளின் சோடினையே, மோட்ச வர்க்கத்தின் வடிவே, திருச்சபையின்தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காம தூதரை அடக்குகிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே, கஷ்டப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சருவேசுரனுடைய சுதனாவரைத் தாங்குகிறவராய் தேவ சிநேகத்தின் பேரில் மிகவும் எரிகிற அனலுமாய், பச்சாபத்தின் சீவியருமான சுவாலையுமாய், தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களை தேவ பட்சத்தின் நெருப்பினாலே கொளுத்தி எரித்தவருமாயிருக்கிற விருப்பமுள்ள வேதசாட்சியே, திவ்வியமான தீர்க்கதரிசினரே, பாவிகளைத் திருத்துகிறவரே, நரகத்திற்குப் பயங்கரத்தை விடுக்கிறவரே, எளிய பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும் அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும் ஞானமுள்ள தியானத்தையும், சர்வேசுரனானவர் எங்களுக்குத் தந்தருளும்படிக்கு அவரை வேண்டிக் கொள்ளும் மிகவும் எரிகிற பட்சத்தின் அழகானவரே! பாவிகளான எங்களுடைய உலர்ந்த இருதயத்தை தேவ பட்சத்தினாலே கொளுத்தி எரிக்கச் சித்தமாயிருக்க வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சியுடன் உம்மை வேண்டிக் கொள்கின்றோம்.

செபிப்போமாக.
தயை மிகுந்த இறைவா, உம் பிரிய அடியரான தூய அந்தோனியாரைப் போல் நானும் அழிந்து போகிற உலக செல்வங்கள் போல் எனக்குள்ள பற்றை அகற்ற உமதண்டை வந்து உமக்கு ஊழியஞ்செய்து வருவதே இப்பூவுலகில் எனக்கு உண்மையான நன்மையேயொழிய வேறு இல்லை என்று கண்டுபிடிக்கச் செய்வீர். உலக நாட்டங்களிலாவது செல்வம் பெருமை, வெகுமானத்தின் பேரிலாவது உடல் இன்பங்களின் பேரிலாவது என்னில் ஏற்படும் ஆசையை முழுவதும் அகற்றிட எனக்கு அறிவைத் தந்தருளும் சத்தியத் திருச்சபையின் உத்தம மைந்தனாக நான் என்றும் வாழ அருள்தாரும்.

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் வாழி விருத்தம்.

தூத்துக்குடி ஆயர்ரோச் ஆண்டகை சே.ச.அவர்களின் அனுமதி பெற்ற விருத்தம்.

அருள் மறை தினம் புகழ் நாதா
அண்டி வந்தோமெமை ஆதரி போதா
அரனடி தினம் மறவாக் குருநாதா
அடியோரெமைக் கருள்புரி அன்னதாதா
என்றென்றும் தோத்திரமே
சந்த அந்தோனி
என்றென்றும் தோத்திரமே.

ஞாலத்தை மீட்ட இயேசு நற்பதம் நாளும் வாழி
வால சன்னியாசியான - சத்துரு சங்கார வாழி
பாலனைத்தாங்கும் முனி அற்புத ஞானி வாழி
சீல தப் செப் கோடியற்புதா வாழி, வாழி.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் மன்றாட்டு.

அர்ச். அந்தோனியாரே! சூரத்தனமுள்ளமேய்ப்பரே! கஸ்திப்படுகிறவர்களுக்கு சந்தோசம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியின் சாந்தியை சீக்கிரத்திலே அமர்ந்துகிறவரும் உன்னதபரமண்டலங்களிலே இருக்கிறவருமான பிதாவானவர் இன்மையினுடைய அவதிக்குப் பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களிற்கு மோட்ச விருது தந்தருள உம்மையே மன்றாடுகிறோம்.

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரின் சத்துரு சங்காரமாலை.

காப்பு 

அகில சராசா பர்வ தாகாயமும் படைத்த
தகைமை நின்ற கடவுளைத் தான்கையேந்து மகிமையுற்ற
அந்தோனி மாமுனியே யம்புவியிலுன் சதமே
வந்துவா வா வா ததி

மன்றாட்டுமாலை 

சீர்பூத்திலங்கு பாதுவை மாநகர் சிறந்திலங்கப்
போர்பூத்திலங்கு சந்தந்தோனி ராயர் மேற் பிரபலமாய்த்
தார்பூத்திலங்கு சத்துரு சங்காரமாலை தமிழ்பாடுதற்குக்
கார்பூத்திலங்கிய கர்த்தர் திருவடி காப்பதுவே

அட்சணமேகவினாதாரம் பெற்று மலைகடலின்
மட்சந் தனக்கு உபதேசமோதின மாமுனியே
பட்சமாயும்மையுச் சரிந்தேன் பத்தைந்தினை பாடுவதற்கு
இட்சணம் வந்து சந்தந்தோனி என்பங்கின் முன்னிற்பாயே

கோவிகளாகிய பதிர்களிடரைத் குவலயத்தில்
சாவிய ஞானவுருவாய் சமைத்து அத்தருணத்தில்
மேவிச் சிலுவைதனை விட்டிறங்கியென் மெய் குருவே
என்னாவுக்கருள் புரிவாய் சந்தந்தோனி ராசநன்முனியே

பற்றவர் போற்றிடும் பாதுவை மாநகர் பார்த்திபனே
அத்தினாரேசுவை மார்போடணைந்த வருள்முனியே
சத்தமற்றேயும்மை யுச்சரிக்கு மித்தருணத்திலுள்
சித்தம் வைத்தே வருவாய் சந்தந்தோனி ராச திருமுனியே

ஆமென வான்புலி திரைகடல் யாவுமரை நொடியில்
ஓமெனப் கடைத்தோனேக பிதாவினுரைப்படியே
நாமென மூன்றுலோக நின் காவலில் நடத்திவரும்
ஈமெனழுந்தருள்மாய் சந்தந்தோனி ராசனென்குருவே

அன்பரனேக பிதாநினருள் தர வரியசுதன்
என் பரனேசு நின் செங்கரமேந்திய வேகனிடம்
ஒன்பரமான பரகதி மேவுமுகமது தஞ்சம்
நம்பினேனின்னருள் சந்தந்தோனி ராசகனிமுனியே

பாவலர் போற்றிடும் வாலசிரோமணி பார்த்திபனே
நாவாலுமது திருநாமமோதி நமஸ்கரிக்க வுந்தன்
ஆவலினோடுன்னருளைப் புரிந்து அனுதினமுங்
காவலிருந்தென்னையாள் சந்தந்தோனி ராசகாரணனே

ஆரோவெனக்கிந்த வல்லினை செய்த கசடாது
பேரோவுமக்குத் தெரிந்திருக்கும் பொல்லாப் பேயுனென்மேல்
லீறாயனுப்பிய யேவுமிப் பேய்களை வெருட்டியென்பால்
சீராயெழுந் தருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

அந்தியுஞ்சந்தியு முன்றிரு நாமத்தை யனுதினமுஞ்
சிந்தையற்றே தொழுமெளியேன் தனக்குள் சகாயமருள்
தந்தை மடுந்தீனுயிரை மீட்ட தயவது போல்
எந்தனை யாண்டருள்வாய் சந்தம்தோனி ராசனெனுங்குருவே

கையாலுமென்னை யடியாமல் பொல்லாக் கருவெடுத்து
மெய்யாலெனப் போலுருவை சமைத்து உருச்செபித்து
பொய்யான பேய்களை யோதியேவிட்ட புலையருட
கையை முறித்திடுவாய் சந்தந்தோனி ராசவுத்தமனே

முன்னாலெனது வலுப்பிணிமாற்றி நின் முற்றித்தந்தாய்
பின்னாலெனக் குபகாரஞ் செய்தாய் பெற்றவர் போல்
என்னாலுனக்கு செய்வதொன்றில்லை யெளியவனானான்
உன்னாலென்னைக் காத்தருள்வாய் சந்தந்தோனி ராசவுத்தமனே

வஞ்சவுலகினில் முன்னாளில் வேதமகிமை செய்தாய்
துஞ்சியமைந் தோர்க்குயி ரளித்தாயுன் சித்தமதால்
தஞ்சமுமது திருமலர்க் கஞ்சத்தருணத்திலே
அஞ்சாமவாண்டருள் வாய்சந்தந்தோனி ராசவனுகூலனே

பிடித்தேனுமது திருமலர் பாதத்தைப் பேதையுனான்
பிடித்தேன் தமிழர் லுச்சரித்தேனுமைப் பரிபாலன்பால்
துடித்தே வருகும் வன்னாகப்பேயைச் சுறுக்கிலன்பாய்
பிடித்தேயாத்திடுவாய் சந்தந்தோனி ராசபுண்ணியவனே

பொல்லாத வஞ்சகர் வர்மித்தென்மேல் வெகு போட்டி செய்து
கொல்ல நினைத்து யேவினபேயையிக் குவலயத்தில்
வில்லதைக் கண்ட சிட்டது போல் விரண்டிச் செய்,
சொல்லா வடித்திடுவாய் சந்தந்தோனி ராசகாவலனே

மாவைக் குவித்து பள்ளையம் போட்டு வலுப்பூசையிட்டு
பூவைக் கொணர்ந்து உருவே செபித்துப் பலிகொடுத்து
என்னையுங்கொல்ல யேவின பேயையிடுப் பொடித்து
கண்ணைப் பிடுங்கிடுவாய் சந்தந்தோனி ராசகாவலனே

வன்னியின் பேய்கள் மந்திரத்தாலென்னை வாட்டுதற்கு
உன்னிதமாக வுருவதையே செபித்தோதிய பேய்ப்
சென்னித் துணிந்ததன் மாரைப் பிளந்து சில நொடியில்
நன்னீதமா யெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசநன்முனியே

சக்கரமாரனபேதன ஸ்தம்பனஞ் சல்லியத்தின்
உக்கரமொட்டிய மோகன மூக்காடன முருசெபித்து
முக்கியமாக வோதியப்பேயை முடிதறித்து மென்பால்
இக்கண மெழுந்டசந்தந்தோனி ராசவென்குருவே

செத்தவங்கண்ட கழுகதுபோ லென்னிடத் தேடிவரும்
நித்தம்ழல் நாவன்னியின் பேய்களை நிமிஷமதில்
பத்தியெரித்துக் குத்தியிரித்திப் பர்ணபந்து தென்பால்
சித்தம் வைத்தழுந்தருள்வாய் சந்தந்தோனி ராசசிகாமணியே

வெள்ளைமதைக் கண்ட நாரைப்போ லென்னிடமேவிவரும்
கள்ளபசாசுகள் தன்னைப் பிடித்து இருகாலொடித்து
பள்ள நாகத்தில் பத்தியேவோட பறக்கடித்தென்
உள்ளத்தில் புக்கிடுவாய் சந்தந்தோனி ராசிகாமணியே

கருவையெடுத்து வஸ்துவாலாட்டிக் கயாதினால்
உருவைப்பிடித்தென் போதைச் சொல்லியோதிவிட்ட
பெருமாள் பிசாசைப் பிடித்தேயடித்துப் பின் என்னுள்ளத்திற்
குருவாயிருந்தருள்வாய் சந்தந்தோனி ராசனென் குருமுனியே

கடினத்துடனே சுக்காலச் செய்து கடலைக்கரியதனால்
துடினத்துடனே தலைமண்டை யோட்டில் கழியெழுதிப் படினத்துடனே
புதைக் கக் கருவைப் பறக் கடித்து நடி ன த துட னே
 யெனையாண்டருள்வாய் சந்தந்தோனி ராசனென் நன்முனியே

மாவலுருச் செய்து மந்திரமோதி வசியரைத்துக் காவுங்கொடுத்து
உருவே ஜெபித்துக் கருமிஜயென்மேல்
ஏவல் செய்தனுப்பிய ஈனப்பசாசை யிடுப்பொடித்து காட்டும்
காவலிருந்தெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசகாரணனே

ஆறெழுத்தாலு தைந்தெழுத்தாலு மெண்பத்தோ ரட்சரத்தால்
ஈரெழுத்தாலு மெட்டெழுத்தாலு மிருத்தோ ரட்சரத்தால்
ஓரெழுத்தாலு முருவை செபித்து உச்சாட்டின் பேய்களுந்தன்
பேரெழுத்தாலும் மோட்டியுவாய் சந்தந்தோனி புண்ணியனே

சுருபஞ் சமைத்துச் சுள்ளாணிதைத்துச் சுடலையிலே
உருவே செபித்து யம்மணத்தோடிந் தோகிவிட்ட
செருப்பைக் கடித்த தீ நாகப்பேயைப் சிகைப்பிடித்து
நெருப்பால் யெரித்திடுவாய் சந்தந்தோனி ராசனென் குருவே

சாராயங்கள்ளுக்குங் கஞ்சாயபினிக்கும் பொரியதற்கும்
பூராயணமான எள்ளுப் புண்ணாக்கும் பொரியதற்கும்
வீராயமாக கூத்தாடும் பேயை மிகப்பிடித்தடித்தது
சீராயென யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

உப்புப்புளி யுமிர் நீர் வலமும் வாயின் தம்பலமும்
செப்பமுடனே தேங்கா இளநீர் சேர்த்தடைத்து
வெப்பமுடனே புதைத்த கருவை மிகவெடுத்தெறிந்து
தப்பாதெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

கெங்கைக்கரையி வளிந்தோப்பிலே விவெகு கீர்த்தியுடன்
கண்கள் மகிழப் பலபள்ளம் போட்டுக் கருவியென்மேல்
கங்கையுடனே யனுப்பிய சத்துருவை சங்கரித்துன்
செங்கரத்தா வாசீர்வாதமருள்வாய் சந்தந்தோனி ராசதிருமுனியே

பேயைத் தொழுது உருவே ஜெபித்துப் பலிகொடுத்துத்
தாயத்துடனே யனுப்பின பேயைத் தலையுடைத்து
வாயைக் கிழித்து மயிரைப்பிடித்து வதைத்து நன்றாய்
நேயத்துடனே யெனையாண்டருள் சந்தந்தோனி ராசவென்குருவே

பிடிபிடியென வருந்தும்படியான பேயைப்பிடித்து நன்றாய்
இடி இடியாக இடித்தே பிசாசை யிடிப்பொடித்து
அடியடியாக அடித்தே யெனைவிட்டகற்றி யென்பால்
குடிகுடியாயிருந்தருள்வாய் சந்தந்தோனி ராசகுருமுனியே

காளிளிருசி, காட்டேரி, சங்கிலி, கருப்பன் மொண்டி
சூலிக்கெவுரி, மாடன், வயிரவன், சுப்பிரமணியனையும்
யாளி முகந்தோன்றுமுகன் வேலன் கோரனையுங்
கோழிபோல் முறித்திடுவாய் சந்தந்தோனி ராசகுருமுனியே

கட்டுவாய் பேயையும் தானைமீறிக் கடந்துவரும்
முட்டுவாய் பேயினீரலெடுத்து முடியறுத்து
வெட்டுவாயுந்தன் சுவிஷேச வாளால் விரட்டிடப்போய்
கொட்டுவாய் சுத்தியால் சந்தந்தோனி ராச குருமனியே

அபயமென்றுந்தன் திருமலர்ப்பாதத்தை யடிபணிந்தேன் -
பகையோர்க் ளென்மேலேவின் பேய்களைப் பார்த்து நன்றாய்ச்
சிகையைப் பிடித்துச் சடையையறுத்துத் தெறிக்கெடித்து
தகையாதெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராச்சற்குருவே

ஆதார நீயன்றி வேறோர் துணையில்லை யடியேனுக்கு முன்
பாதார விந்தம் படியருள்வாய்ப் பாருலகில்
வேதா பிதாச் சுதனிஸ்பிரீத்து சாந்தோடு வேண்டியெனைச்
சீதாரவிந்தருள்வாய் சந்தந்தோனி ராசென்குருவே

உன்னையல்லாம் லுலகினில் வேறெனக் குதவியுண்டோ
பிள்ளை பேறில்லை பெற்றவர் போலென்னை பேணுதற்கு "
சொன்னேனுமது திருமலர் பாத்திலெந்தன் துக்கமெல்லாம்
என்னை நீ யாருண்டருள்வாய் சந்தந்தோனி ராசவென்குரவே

தாங்கியேயுந்தன் திருமலர்ப்பாதத்தைச் சரணித்து நான்
தூங்கிக்கிடக்கின்ற வேளையில் மேவுஞ் சோதனையை
ஏங்கி என்னிடமேவும் பசாசை யிருகக்கட்டிகள்
ஓங்கியடித்திடுவாய் சந்தோந்தோனி ராசனென்னுத்தமனே

பழியாக என்மேற் பகையோர்கள் செய்யும் பார்வைகளுந்
தொழிலாகச் செய்யுங்சூனியம் பில்லிச்சுழிமுனையும்
மெலிதாக வென்னைச் சாராமலுந்தன்னிரு விழிபோல்
முழுதாகக் காத்தருள்வாய் சந்தந்தோனி ராசவென்மூர்த்திபனே

வர்மித்து என்னைக் கொலை செய்யப் பேயை வாலிடுத்து
கர்மத்தின் பில்லி சூனியங்கற்றவர்களின் வாயடைத்துப்
வர்மித்தறைந்த ஆணியும் ஆப்புமிகத் தெறிக்கடித்து இப்ப
தர்மத்தினாலென்னை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராச சற்குருவே

யைாலு மும்மைத் தொழுதேன் மனதிற் கலக்கமுற்று
பொய்யான பேய்களும் வந்தெனைச் சூழ்ந்து போயிடுமுன் :
மெய்யாக வந்து ஆசீர்வதித்து மேவியென்னால்
அய்யாவெனையாண்டருள்வாய் சந்தந்தோனியனு கூலனே

சலமாகவென்மேற் கொலைஞர்கள் செய்யுங் சல்லியத்தின்
இலமான பில்லி சூனியப் பேயைபிடித்திருக்கியெமன்
நிலமேவ வெட்டிரிணக்களஞ்செய்து நிமிஷத்திலென்
வலமாக வந்தருள்வாய் சந்தந்தோனி ராசமாமுனியே

அடிமீதிலென்மேற் பகையாளர் கூடிப்பகைகள் செய்யுந்
துடியான பில்லிசூனியப் பேயென்னை சூழவருமுன்
கடிதாக வந்து பேய்களைக் கட்டியென் கைவசமாய்க்
குடியாயிருந்திடுவாய் சந்தந்தோனி ராசகுரு முனியே

பேரெயெழுதி கருவதிற் சேர்த்துப் புதைத்து என்மேற
கூராயனுப்பிய பேயைப்பிடித்துக் கொலைப்படுத்தியதை
ஒரேயடி யாயடித்துப் பசாசையோட வெண்பாற்
நீராயிந்தருள்வாய் சந்தந்தோனி சிகாமணியே

கட்டுத்தெறித்த வில்வோதி யுண்டைடையச் செங்கையினால்
விட்டுத்தெறித்திடல் போலேயடிக்கு மெதிரியுடன்
கட்டுத்தெறிக்க வாணித்தெறிக்க கருத்தெறிக்க
ஒட்டுத்தெறிக்க அடித்திடுவாய் சந்தந்தோனி ராசவுத்தமனே

மானதைக்கண்ட வேங்கை போலென்னிடம் வருகும் பொல்லா
ஈனவாயுப் பேயையிடுப்பையொடித் இரு காலொடித்து
ஆனையைக் கண்ட சிங்கம் போல் சீறியடித்து நன்றாய்த்
தேனதுபோலெனை யாண்டருள்வாய் சந்தந்தோணி ராசவுத்தமனே

எலியதைக்கண்ட பூனையோ லென்னிட மிடறுசெய்ய
வலியதோர் சர்ப்பம் போலே வருகின்றவன்னியனை
சலியாதடித்துக் தலையையுடைத்துப் பேய்ச்சந்தொடித்து
நலியாதெனை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராநன் முனியே

கொக்கதைக்கண்ட ராசாளி போலென்மேற் கொக்கரித்து
அக்கிரமத்தோடே தெடிவருகின்ற வலகையை நீர்
சக்கரத்திருத்தி வையமென்றோடச் சாதித்தென்பால்
இக்கணமெழுந்தருள்வாய் சந்தந்தோணி ராசமென் குருவே

வெங்கண் சிவந்து சீறிச்சினந்து வேகமுற்றுச்
சிங்கம்போ லென்னைத் தேடித்திரிகின்ற பேய்களை நீர்
பங்கமழித்த பசாசைப் பிடித்துப் பறக்கடித்துத்
தங்கம் போலென்னை யாண்டருள்வாய் சந்தந்தோனி ராசதவமுனியே

பரவோடு குத்திப் பனியிற்புதைந்து வெகுபாஷையிட்டு
சூலோடு குத்திச் சுடலையிற் புதைத்த சதிகளை நீர்
சாலோடு சாவல் குத்தித் திணித்துப் புதைத்த சதிகளை நீர்ப்
காவலுதைத்திடுவாய் சந்தந்தோனி ராச காரணனே

புட்டுக் கொழுக்கட்டை யெள்ளுருண்டை தேங்காய் பொரியதற்கும்
இட்டப் படைப்பு ஏங்கி வருகின்ற யினப்பசாசுகளை
மட்டுப்பட்டிருக் வுமதானையிட்டேன் வரும் பேய்களை நீர்
கட்டுக்குள்ளாக்கிடுவாய் சந்தந்தோனி ராச காவலகே

கார்ப்பது மென்னைக் கடனுமக்காக நின் கண் திறந்து -
பார்ப்பதமக்கு பாரமல்லோ விந்தப் பாரிலென்னை
ஏற்பதுமென்னைக் கைதூக்கி யெடுப்பது மென்னிடாதனை
தீர்ப்பது முன்கடனாஞ் சந்தந்தோனி ராச திருமுனியே

ஐம்பதுருக்கள் நின்னருள் சேவித்த வைனித்தனில்
வம்பானபேய்கள் மயங்கியலைந்து மடிவதற்குள்
நின்பாதஞ் சோவைத் துணையைத்தந்தாண்டருள் நீள்புவியிற்
பண்பாகத் தீர்த்தருள்வாய் சந்தந்தோனி ராச புண்ணியனே

வாழி விருத்தம்

ஞாலத்தை மீட்ட இயேசு நாற்பதாம் நாளும் வாழி
வால சந்நியாசியான வள்ளலந்தோனி வாழி
கோல மேற்றிராணி வேத குருக்களுமிகவே வாழி
சிலநற்சபையும் நாளும் செழித்துமே வாழி வாழி

பேயோட்டும் செபம்.

(பாப்பிறை 13 - ஆம் சிங்கராயர் அனுமதியுடன்) "Prayer against Satan and the Rebellious Angels" இச் செபத்தை ஆயரின் அனுமதி பெற்ற குருக்கள் அல்லதது பொது நிலையினர் தான் அதிகாரபூர்வமாக செபிக்க முடியும்.

பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே - ஆமென்.

எங்கள் ஆண்டவரும் இறைவனுமாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும், இறைவனின் அன்னையான அமலோற்பவ மரியாள், அதிதூதரான மிக்கேல், அப்போஸ்தலர்களான இராயப்பர், சின்னப்பர், சகல தூயவர்களின் பரிந்து பேசுவதிலும் திடங்கொண்டு, நம்பிக்கையுடன் சாத்தானின் தாக்குதலையும், தந்திரங்களையும் அகற்றிட முன் வந்துள்ளோம்.

சங்கீதம் 67: இறைவன் எழுகின்றார். அவர் எதிரிகள் சிதறுகின்றனர். அவரைப் பகைத்தவர்கள் அவர் முன்னின்று வெருண்டோடுகின்றனர். புகை வெளியேற்றப்படுவது போல் அவர்கள் ஓட்டப்படுகின்றனர். மெழுகு, தீ முன் உருகுவது போல் தீயவர்கள் ஆண்டவர் முன் அழிந்தொழிவர்.

இதோ ஆண்டவருடைய சிலுவை சத்துருக்களே வெருண்டோடுங்கள்.

தாவீதின் வழித் தோன்றலாகிய அவர் யூதாவின் மரபின் சிங்கத்தினை வென்றார்.

இறைவனின் இரக்கம் நம்மீது இறங்குவதாக.

உம்முடன் எங்களுக்குள்ளே நம்பிக்கை பெருமளவிற்குத் தக்கதாக.

சிலுவை அடையாளத்தில், குருவானவர் ஆசிர்வதிப்பார். இல்லறவாசி இச்செபத்தைச் செய்தல் அமைதியாக உறுதியோடு சிலுவை அடையாளத்தை வரைய வேண்டியது.

செபம்

நீங்கள் யாராக இருப்பினும், அசுத்த அரூபிகளே, சாத்தானின் எல்லா சக்திகளே, எல்லா நரக முற்றுகையாளர்களே, எல்லா தீய கணங் களே, கூட்டங்களே, பிரிவுகளே, ஆண்டவரான இயேசுகிறிஸ்துவின் நாமத்தாலும், வல்லமையாலும், நீங்கள் திருச்சபையிலிருந்து இறைவனின் சாயலில் பகைக்கப்பட்டு, தெய்வீக செம்மறியின் விலைமதிப்பற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆன்மாக்களிலிருந்தும் களைந்தெறியப்பட்டு துரத்தப்படக் கடவீர்களாக.

✠ மிகவும் தந்திரமிக்க அரவமே, நீ இனிமேல் மனுக்குலத்தை ஏமாற்றவும், திருச்சபையை வாதிக்கவும், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கோதுமைப் புடைப்பதுபோல் துயருறுத்தவும் துணியாய் மாபெரும் கடவுள் உனக்கு கட்டளையிடுகிறார். உன் ஆங்காரத்தால் இப்பொழுதும் அவர் உனக்கு சரி நிகர் சமம் என நீ உரிமை கொண்டாடி வருகின்றாய். எல்லா மனிதரும், மீட்புப் பெறவும் உண்மையின் அறிவை அடைந்து கொள்ளவும் வேண்டுமென்பதே அவர் விருப்பம் (1 தீமோத் 2:4) 36

✠ தந்தையாம் இறைவன் உனக்குக் கட்டளையிடுகிறார். இறைவனாம் தூய ஆவி உனக்கு ஆணையிடுகிறார். இறைவனின் வார்த்தையால் ஊனான கிறிஸ்து உன்னை பணிக்கின்றார். எங்கள் மனுக்குலத்தைக் காத்திட உன் பொறாமைக்குப் பலியான அவர் தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழப்படிபவரானார். (பிலிப் 2:8)

தனது திருச்சபை பலமான பாறையில் அமைத்து அவர் உலக முடிவு வரையில் எல்லா நாட்களிலும் நான் அதனுடன் இருப்பதால் நரக வாயில்கள் அதனை மேற்கொள்ளாது என்றார். தூய திருச்சிலுவை அடையாளம் எனக்குக் கட்டளையிடுகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தின் பரம சக்திகள் உனக்குக் கட்டளையிடுகின்றன. மகிமை பொருந்திய இறைவனின் தாயாம் கன்னி மரியம்மாள் உனக்குக் கட்டளையிடுகிறாள். அவள் தனது தாழ்ச்சியால், அமலோற்பவமாய் உற்பவித்த தருணத்திலிருந்து உன் ஆங்காரத்தலையை நசுக்கினாள். இராயப்பர், சின்னப்பர் மற்றும் தூய அப்போஸ்தலர்களின் விசுவாசம் உனக்குக் கட்டளையிடுகிறது. வேதசாட்சிகளின் இரக்கமும் தூயவர்களின் தூய பரிந்து பேசுதலும் உனக்குக் கட்டளையிடுகின்றனர்.

இவ்வாறு சபிக்கப்பட்ட சாத்தானே,
விலங்கே, நரகப் படைப்புக்களே
உயிருள்ள தேவனால் உங்களுக்கு வெளியேறுங்கள்
எனக் கட்டளையிடுகின்றோம்.

✠ பரிசுத்த கடவுளால் தன் "ஒரே பேறான மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அருள் கூர்ந்தார். (அரு. 3.3) கடவுள் பெயரால் கட்டளையிடுகின்றோம்.

மனிதரை ஏமாற்றுவதையும் நித்திய அழிவின் நஞ்சை அவர்களுக்கு ஊற்றுவதையும் விட்டுவிடுங்கள். திருச்சபைக்கும் அதன் உரிமைகட்கும் தீங்கிழைப்பதை நிறுத்தி விடுங்கள். மீட்பின் பகைவனுமான சாத்தானே! அப்பாலே போ! உனது வேலைகள் . ஒன்றிற்குமே இடமில்லாத கிறிஸ்துவிற்கு இடமளிப்பாய் தனது இரக்கத்தின் வழியாய் தனதாக்கிக் கொண்ட ஏக கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபைக்கு இடமளிப்பாய். இறைவனின் வல்லமை மிகு கரங்களின் முன் பணிவாய் உனக்கு நடுக்கந்தரும் தூய இயேசுவின் திருப்பெயரை நாங்கள் உரைக்கும் போது நடுங்கி ஓடுவாய். இப்பெயர் நரகத்தை நடுங்கச் செய்கின்றது. இப்பெயருக்கு, "பரதத்தின் நலன்களும், வல்லமையும், எல்லைகளும், பணிவுடன் பணிகின்றன. இப்பெயரைக் கெரூபிம், செராபிம் முடிவில்லாதது. "பரிசுத்தர், பரிசுத்தர் சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர் தூயவர்" என ஆர்ப்பரிக்கின்றது.

ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
எங்கள் குரல் உம்மிடம் வருவதாக.
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
உம்மோடும் இருப்பாராக.

செபிப்போமாக.
வானக இறைவா! பூமியின் இறைவா! வான் தூதர்களின் இறைவா! அதி தூதர்களின் இறைவா! பிதா பிதாக்களின் இறைவா! இறைவாக்கினர்களின் இறைவா! அப்போஸ்தலர்களின் இறைவா! வேதசாட்சிகளின் இறைவா! துதியர்களின் இறைவா! கன்னியர்களின் இறைவா! மரணத்திற்குப் பின் வாழ்வையும், உழைப்பிற்குப்பின் ஓய்வையும் அருளும் வல்லமையுள்ள இறைவா! ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை . இருக்கவும் இயலாது. காணும், காணாத பொருட்களைப் படைத்தவர் நீரே! உமது ஆட்சிக்கு முடிவில்லை. உமது மகத்துவ திருமுன் நாங்கள் தெண்டனிட்டு உமது வல்லமையால், துஷ்ட அரூபிகளின் கொடுமையிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகின்றோம். அவைகளின் தந்திரங்கள், பொய்யுரைகள், கடுஞ்சினத்தீதுகளிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகின்றோம். உமது வன்மை மிகும் பாதுகாப்பை எமக்களித்து நாங்கள் நலமுடன் வாழச் செய்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் உம்மை மன்றாடுகின்றோம். எங்களை காத்தருளும் ஆண்டவரே!திருச்சபை சமாதானத்திலும், உரிமையிலும், உமக்குத் தொண்டு செய்ய உம்மை மன்றாடுகின்றேன்.

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். திருச்சபையின் எல்லாப் பகைவர்களையும் நசுக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (தீர்த்தம் தெளிக்கவும்)

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் சிட்டு - பேயோட்டுகிறதற்குச் செபம்.

(இதன் தமிழ் மொழி பெயர்ப்பு)

இதோ ஆண்டவருடைய சிலுவை
சத்துருக்களே ஓடி ஒளியுங்கள்
யூதா கோத்திரத்தின் சிங்கமும் 
தாவீதின் சந்ததியும் வெற்றி கொண்டது. 
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!!!

நரக வல்லமையை அடக்கின புனித அந்தோனியாரே, இயேசுகிறிஸ்து நாதருக்கும், திருச்சபைக்கும் சத்துருக்களாய் இருப்பவர்களை எல்லாம் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கர்களையும், துர்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.

(இந்த சிட்டை அணிவதால் மாற்றானின் தொல்லைகள் மறையும்) (அதை எழுதித் தந்தவர் தூய அந்தோனியாரே!)

அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் சிரம் பணிதல்.

கட கட என சாத்தான் வெருண்டோட
மட மட என அவன் ஆணவம் நீங்க
பட பட என மாற்றான் பதைத்து ஓட
உடன் வந்து உதவுவாய் திடமிகு தூயா,
எந்த வினை வந்தாலும் உந்தனை மறவோம்
தந்தை அந்தோனி சிந்தை இரங்குவாய்
இந்த வேளை எந்தனுக்குதவி நீ
சந்தக இன்பம் தந்தருள் கூராய்
இருள் நீக்கும்! மருள் ஓட்டும்! அருள் தாரும்!
பொருள் தாரும்! பொறை தாரும்! குறை தீரும்!
ஞான மீயும் பரமொனமீயும் - நரதாபம் தீரும்!
மனத்துயர் நீக்கும் ஈனப்பிணி நீக்கும்
அருள் பொழி அண்ணலே! போற்றி! போற்றி!
கருணை முகிலே! போற்றி! போற்றி!
திருவடியரே! போற்றி ! போற்றி!
அன்னை மரி பக்தரே போற்றி! போற்றி!
நன்மறை போதா - போற்றி போற்றி!
துன்பத்தில் இன்பமே போற்றி! போற்றி!
வன் பேயஞ்சும் - போற்றி போற்றி! -
எத்திக்கிலும் எதுவரினும்
அத்தா அதனையறவே போக்கி
தத்தளிக்கும் சேயரைக் காத்து
பக்தா பல்வரம் ஈவாய்.
கோடி அற்புதா சிரம் பணிகின்றோம்.
தேடியோருக்கு அடைக்கலம் சிரம் பணிகின்றோம்.
வாடியோருக்கு உறுதுணையே சிரம் பணிகின்றோம்.
ஈடில்லா தூயவனே சிரம் பணிகின்றோம்.
பிணி துயர், ஏவல் தொல்லை ,
அணியாய் உருமிடர் பித்து மற்ற
குணங்கின் மாயை - யாவும் மாற்றி
அணுகுமெமை - அரவணைப்பாய் - அண்ணகரே!

ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் செபமாலை.

இது 39 மணிகள் உள்ளது மும்மூன்று மணிகளாய்க் கோர்த்து இடையில் இடம் விட்டிருக்க வேண்டும்.

பின்வரும் செபத்தை முதலில் சொல்லவும் உனக்கு அற்புதங்கள் வேண்டுமானால், அந்தோனியாரிடம் சொல் பின்னர் 13 செபங்களைச் சொல்லி ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு பர.அரு. பிதாவுக்கும் .... சொல்ல வேண்டியது

(இது பாப்பிறையின் ஆசிரைப் பெற்றதாகும். எனவே பலன் மிக்கது)

1. சாவை அகற்றுகிறார் :- வார்த்தையால் இறந்தவர்களை உயிர்ப்பித்தவரே, இப்பொழுது மரண வேளையில்இருப்பவர்களுக்காகவும், மரித்த விசுவாசிகளுக்காகவும் வேண்டிக் கொள்ளவும்.

2. தப்பறையை நீக்குகிறார் :- எங்களை எல்லாவிதத் தப்பறைகளிலுமிருந்து காத்திடுவீர். திருச்சபைக்காகவும், அதன் தலைவருக்காகவும் வேண்டிக் கொள்ளும்.

3. ஆபத்துக்களை அகற்றுகிறார் :- எங்கள் பாவங்களுக்காக இறைவன் அனுப்பும் பஞ்சம், படை, கொள்ளை, நோய் என்ற ஆபத்துக்களிலிருந்து எங்களைக் காத்தருளும்.

4. தொழுநோயாளரைக் குணப்படுத்துகிறார்:- எங்கள் ஆன்மாவை கறைப்படுத்தும் எல்லா அருவருப்பான பாவங்களினின்று உடலை விரட்டும் எல்லாவிதப் பிணிகளினின்றும் காத்தருளும்.

5. பேய்களை ஓட்டுகிறார் :- உம்மைக் கண்டதும் பேய்கள் நடுங்கி ஓடுகின்றன. பிசாசுகளின் மீது வல்லமையுள்ள தூயவரே! பேய்களின் சகல மாயைகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

6. கடலை அமர்த்துகிறார் :- கடலில் தத்தளிப்பவர்களுக்கு புகலிடமானவரே! எங்களைக் கரை சேர்த்து ஆன்மாக்களில் எழும்பும் ஆசாபாசப் புயலை அமர்த்தியருளும்.

7. பிணியாளர்களைக் குணமாக்கிறார். :- எங்களைத் துன்புறுத்தும் ஆன்ம சரீரப் பிணிகளிலிருந்து எங்களைக் குணமாக்கும்.

8. சிறைப்பட்டவர்களை விடுதலை செய்கிறார்:- சிறையில் அடைபட்டவர்களுக்காய் உம்மை மன்றாடுகிறோம். விலங்கிடப்பட்டோரின் விலங்குகளை உடைத்தெறியும். பாவ அடிமைத் தனத்தினின்று எமைக் காத்திடும்

9. உயிரற்ற அவயவங்களுக்கு உயிர் அளிக்கிறார்:- உயிரற்ற அவயவங்களைக் குணப்படுத்தியவரே, எங்களுக்கு எவ்வித ஆன்ம சரீர சேதம் விளையாதவாறு காத்தருளும்.

10. காணாமற் போனவைகளைக் கண்டடைய செய்கிறார்:உலகிலும், ஞான வாழ்விலும் நாங்கள் இழந்தவற்றை மீண்டும் அடைந்திடச் செய்தருளும்.

11. ஆபத்துக்களை அகற்றுகிறார்: எங்களுக்கு ஏற்படும் ஆன்ம உடல் ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளும்

12. தாங்க முடியாத இக்கட்டுக்களை நொடிப்பொழுதில் நீக்குகின்றார்: எங்கள் இக்கட்டு வேளைகளில் உதவி புரிந்து உணவு, உடை, வேலை இல்லாதவர்களுக்கு உதவி செய்தருளும்.

13. அவர் வல்லமையை அறிந்தவர்கள் அவரை வாழ்த்துவார்களாக: தூய அந்தோனியாரே நாங்கள் வாழும் நாட்களெல்லாம் நீர் செய்த உபகாரங்களை வெளிப்படுத்தி நன்றியுடன் உம்மை வாழ்த்துவோமாக

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் மீது செய்யுள் (தொகையறா)

தூத்துக்குடி ஆயர்ரோச் ஆண்டகை சே.ச.அவர்களின் அனுமதி பெற்ற தொகையறா.

மூவா முதல்வனைப் போற்றி மலர் தூவுகின்றோம்.
தந்தையைச் சிரம் தாழ்த்தி பணிந்து தூவுகின்றோம்.
தூய ஆவியை ஆராதித்து மலர் தூவுகின்றோம்.
திருக்குமாரன் இயேசுவை நெஞ்சாரப் பணிந்து மலர் தூவுகின்றோம்.
பாதத்தில் பேயை நசுக்கிய தேவதாய்
மரி அன்னையைப் பணிந்து மலர் தூவுகின்றோம்.
எரி நரகில் சாத்தானை வீழ்த்திய
தூய மிக்கேல் அடி பணிந்து மலர் தூவுகின்றோம்.
வான் தூதர்களை வணங்கி மலர் தூவுகின்றோம்.
ஸ்நாபக அருளப்பர் சகல தூயவர்களை வணங்கி மலர் தூவுகின்றோம்.
திருச்சிலுவையை ஆராதித்து மலர் தூவுகின்றோம்.
எட்டுத் திக்கும் ஈரெட்டுத் திக்கும் துஸ்டப்பேய்
பயந்தோடி பயந்தோடி எரி நரகில் வீழ்ந்திடவே
தூய அந்தோனி மாமுனியே உம்
இணையடி பணிந்து மலர் தூவுகின்றோம்.
(மலர் தூவுகின்றோம் எனும் போது மலர் தூவவும்)
சங்கீத ஏட்டினை எடுத்துச் சென்ற.. மறையோனை
இங்கிதமாகக் கரை சேர்த்து அலகையை ஓட்டி
மங்காப்புகழ் பெற்ற சந்தந்தோனி மாமுனியே!
எங்கட்கு என்றும் ஆதரவளித்து அருள் புரிவாயே!

பிணி நீங்க அர்ச்சியசிஷ்ட அந்தோனியாரிடம் செபம்.

புனித அந்தோனியாரே! நோயாளிகளுக்கு ஆறுதல் தருபவரே! இறந்தோரை இறைவன் வல்லபத் தால் உயிர்த்தெழுப்பினவரே! உம் அடியானான (பெயர்) ............. படும் துன்பங்களைக் கண்டு மனமிரங்கி பிணியை நீக்கிவிடும். உமது மன்றாட்டால் பிணி அகலுமாயின் நன்றியறிதலாக ஏழைகளுக்கு என்னாலான தருமம் செய்வேன். ஒரு பர.அரு.பிதா.

புனித அந்தோனியாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.

அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் வார பக்தி.

DEDICATING THE WEEK (To.St.Anthony of Padua என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது)

திங்கள்

செபம்:
எனது மகிமையான பரிந்துரையாளரான துாய அந்தோனியாரே! அன்புடன் உமது பார்வையை என் மீது திருப்பிட வேண்டுகிறேன். பல புதுமைகளையும், தேவ அருளையும் செய்பவரே, என் பேரில் இரங்கி இந்த அவசர வேளையில் எனக்கு உதவி புரியும்.

தூயவரின் அறிவுரை
ஒருவனின் இரக்கச் செயல்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வர வேண்டும்.

நற்செயல்
பாவிகள் மனந்திரும்ப செபிப்பது

செவ்வாய் 

செபம்:
தேவசிநேகம் என்பது உம் அடியார்களிடம் காணப்பட்டது. அது இதுவரை என்னிடம் இல்லையே என வருந்துகிறேன். இதனால் உம்மை விட்டு அகன்று சென்று விட்டேன். உம் திருவருளாலும், அந்தோனியாரின் மன்றாட்டாலும் எனது வழிகளைத் திருத்தி எனது அயலாருக்கு மன்னிப்பளித்து அன்பு காட்டி உதவி செய்து அவர்கள் குற்றங்களைப் பொறுக்க வேண்டும்.

நற்செயல்
தேவையான அயலான் ஒருவனுக்கு ஆன்மீக அல்லது உலக சம்பந்தமான உதவி செய்தல்.

புதன்

செபம்:
செபத்தால் தேவ அருளையும், ஆன்மீக எதிரிகளுக்கு எதிரான ஆயுதங்களையும் அருளிய ஆண்டவரே, இதனை இம்மட்டும் - உணராமல் இருந்து விட்டேனே, புனித அந்தோனியாரின் முன் மாதிரிகையைப் பின்பற்றி இன்னும் அதிகமதிகம் செபித்திட அருள் புரியும்.

புனிதரின் அறிவுரை உன் செபத்தில் அதிக பற்றுதல், நம்பிக்கையும் வைத்திரு. உன் செபத்தை ஆண்டவர் உடனே ஆண்டவர் கேட்கவில்லையென அங்கலாய்ப்பு அடையாதே. ஏனெனில் உன் தகுதியை உயர்த்திட அவர் திருவுளம் கொண்டுள்ளார்.
நற்செயல்
அடிக்கடி செபித்தல்.

வியாழன் 

செபம்:
வாழ்வின் பல இன்னல்களில் உம்மிடம் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக மனிதரில் நம்பிக்கை வைத்தேன். என் மேல் கருணை புரியும். பாவியாகிய நான் தூய அந்தோனியாரின் வேண்டுதலால் உம்மீது என் முழு நம்பிக்கையை வைத்திட அருள் புரியும் என் தேவைகளில் எனக்கு உதவியாக வாரும்.

தூயவரின் அருள் வாக்கு
நம்பிக்கையும் தெரிவு பயமுமே ஞானத்தின் தொடக்கம். அதுவும் திவ்விய இயேசுவின் வழியில் அமைய வேண்டும்.

நற்செயல்
உன்னை முற்றிலும் இறைவன் கரங்களில் ஒப்புவித்து விடு.

வெள்ளி 

செபம் :
உலகின் மீதுள்ள பற்றுதலை அணைத்தருளும். தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அந்தோனியாரின் சுடரின் ஒரு சிறு ஒளியை எனக்குத் தாரும். உமது அருளால் இம்மையிலும் மறுமையிலும் நலம் பெறுவேனாக.

அண்ணலின் பொன்னுரை
தேவ சிநேகம், எல்லா புண்ணியங்களின் அடிப்படையாகும். தேவ சிநேகமின்றி செய்யப்படும் செபம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நமது நற்செயல்களும் நித்திய வாழ்விற்கெனப் பயன்பட மாட்டாது.

நற்செயல்.
அடிக்கடி தேவசிநேக முயற்சி செய்தல்.

சனி 

செபம்:
இதயத் தூய்மை என்பது பக்தி எனும் பலி எரியும் பீடமாகும். தன் கருணையுள்ள பார்வையை அதன் மீது இறைவன் செலுத்துகின்றார். "

நற்செயல்
தூய்மைக்கு எதிரான சமயங்களையும், இடங்களையும் விட்டு அகலுதல்.

ஞாயிறு 

செபம் :
இறைவா, தூய அந்தோனியாரிடம் விளங்கிய திடமான செயலுள்ள விசுவாசத்தை என் இதயத்தில் பதித்தருளும். விசுவாசங்குன்றிய எனக்கு தூய அந்தோனியார் மன்றாட்டினால் அதனை அருளி, உமது உண்மையான சீடனாக வாழ உதவுவீர்.

தூயவரின் சொல்
நற்கிரியைகள் செய்யாது விசுவாசிப்பது இறைவனின் முகத்தை நோக்கி நகைப்பதாகும்.

நற்செயல்
உலகப் பற்றை வெறுக்க முயற்சித்தல்.