இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் பேறுபலனின் நீளமும், அதன் பலதரப்பட்ட தன்மையும்

அத்தியாயம் 2

மேற்கண்ட விதிகளின்படி மாமரியின் செயல்கள்

இந்த அத்தியாயத்தில், சற்று முன் தரப்பட்ட நான்கு விதிகளின் படி மாமரியின் செயல்களை நாம் பரிசோதித்து, அவர்கள் சம்பாதித் திருக்க வேண்டிய அபரிமிதமானதும், ஈடிணையற்றதும், அதியற்புத மானதுமாகிய பேறுபலன்களைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். ஆனால் இந்தப் பரிசோதனையைத் தொடங்குமுன், மாமரியின் பேறுபலன்கள் நின்றுபோகும் வரை, அவர்கள் பேறுபலன்களைச் சம்பாதிக்கத் தொடங்கிய காலத்தைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

பிரிவு 1

மாமரியின் பேறுபலனின் நீளமும், அதன் பலதரப்பட்ட தன்மையும்

பின்வரும் அனுமானங்கள் மாமரி பேறுபலன்களைச் சம்பாதித்த காலத்தின் நீளத்தை முழுவதுமாகக் கண்டுபிடிக்க உதவும்:

1. மாமரி தன்னுடைய அமல உற்பவத்தின் முதல் கணத்தில் இருந்தே பேறுபலன்களைச் சம்பாதிக்கத் தொடங்கினார்கள்.

ஏனெனில் அந்தக் கணத்தில், பேறுபலன்களைச் சம்பாதிக்க ஒருவருக்குத் தேவையான எல்லா நிபந்தனைகளும், தகுதிகளும் மாமரியின் மீது பொழியப்பட்டன. அவர்கள் புத்தியையும் மிக உத்தமமான விதத்தில் பயன்படுத்தினார்கள். அறிவாகிய கொடை யும் உத்தமமான அளவில் அவர்களில் பொழியப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்துவதற்கு சரீர வளர்ச்சியை அவர்கள் சார்ந்திருக்க வில்லை. அவர்கள் முற்றிலும் சுதந்திரமாயிருந்தார்கள், மிக அதிசயத்திற்குரிய அளவு தேவ இஷ்டப்பிரசாதம் அவர்கள் மீது பொழியப்பட்டிருந்தது; ஆகவே, பேறுபலன்களைச் சம்பாதிப்பதில் இருந்து அவர்களைத் தடை செய்யக் கூடிய எதுவும் இருக்கவில்லை. அவர்கள் உள்ளபடியே பேறுபலன்களைச் சம்பாதித்தார்கள் என்பது இரண்டு காரியங்களிலிருந்து தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது:

முதலாவது: ஏனெனில், தேவதூதர்களும், முதல் மனிதனும் தங்கள் படைப்பின் முதல் கணத்தில் பேறுபலன்களைச் சம்பாதித் தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே, இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள விதியின்படி, மாமரிக்கும் அதுவே உறுதிப்படுத்தப் படுகிறது. இரண்டாவது: ஒவ்வொரு மனிதனும் புத்தி விபரமும் சுதந்திரமும் கொண்டிருக்க முடிந்தவுடன் தன்னையும், எல்லாவற் றையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறான். மாமரி தன்னுடைய உற்பவத்தின் முதல் கணத்திலிருந்தே தனது புத்தியையும் சுதந்திரத்தையும் பயன்படுத்தக்கூடியவர்களாக இருந் தார்கள்; ஆகவே அந்தக் கணத்திலிருந்தே அவர்கள் கடவுளிடம் திரும்பவும், அவர் தந்தருளிய நன்மைகளுக்குரிய ஆராதனை வணக்கத்தை அவருக்குச் செலுத்தவும் கடமைப்பட்டிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்யாமல் இருந்திருந்தால், தன்னுடைய காரியத்தில், தான் பெற்றிருந்த சகல வரப்பிரசாத சலுகைகள் மற்றும் பேறுபலன்களின் நிபந்தனைகளின் காரணமாக, ஒரு மிக முழுமை யானதும், மிக முக்கியமானதுமான கடமையை அவர்கள் மீறியிருப் பார்கள்.

2. மாமரியின் பேறுபலன் அவர்களுடைய உறக்கத்தின்போது தடைப்படவில்லை. ஏனெனில், முதலாவதாக, நம் ஆதிப் பெற்றோர், மாசற்றதனத்தின் அந்தஸ்தில் இந்தச் சலுகையை அனுபவித்தார்கள் என்பது அர்ச். அகுஸ்தீனார் உட்பட பல வேதபாரகர்களின் கருத்தாக இருக்கிறது. அர்ச். அகுஸ்தீனார் அவர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்களுடைய உறக்கம் விழித் திருப்பவர்களின் வாழ்வைப் போல மகிழ்ச்சியானதாக இருந்தது என்று கூறுகிறார்.

நம் பெற்றோரில் இருந்த இந்தச் சலுகை அவர்கள் ஸ்தாபிக்கப் பட்டிருந்த ஜென்ம மாசற்றதனமாகிய பக்திக்குரிய அந்தஸ்தின் விளைவாக இருந்ததென்று நாம் கருதுகிறோம். இந்த மாசற்றதனம் அவர்களுடைய ஞான மேலாங்கிஷ சத்துவங்களுக்கு கீழாங்கிஷ சத்துவங்களின் மீது ஓர் உன்னதமான கட்டுப்பாட்டைத் தந்து, இந்தக் கீழாங்கிஷ சத்துவங்களால் அவை தடுக்கப்படாமலும் அவற்றிலிருந்து சுதந்திரமாகவும் எப்போதும் இருக்கச் செய்தது. ஆகவே, மாசற்றதனத்தின் நிலையின் சலுகையாக இருந்தது என்றால், பாவமின்றி உற்பவிக்கப்பட்ட மாமரிக்கும் இது எப்போதும் பொருந்துவதாகவே இருக்க வேண்டும். 

இரண்டாவதாக, மாமரியின் உற்பவத்தின் முதல் கணத்தில் இருந்து அவர்கள் மீது அறிவின் கொடை பொழியப்பட்டிருந்தது என்றும் பல வேதபாரகர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அர்ச். பெர்னார்தீன், அர்ச். பெரிய ஆல்பெர்ட், அர்ச். அந்தோனினுஸ் போன்றவர்கள் மாமரியின் மீது இந்தச் சலுகை பொழியப்பட் டிருந்தது பற்றி அற்ப சந்தேகமும் கொண்டிருக்கவில்லை.

இனி, மாமரியினுள் ஊற்றப்பட்டிருந்த இந்த அறிவு தன் செயல் பாடுகளில் புலன்களிலிருந்தும், ரூபிகரத்திலிருந்தும் ஒட்டுமொத்த மாக விடுபட்டிருந்தது. ஆகவே, புலன்களும் ரூபிகரமும் உறக்கத்தில் புதைக்கப்பட்டிருக்க, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையால், தன்னில் ஊற்றப்பட்ட அறிவைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது, அதன் வழியாக, சித்தத்தின் சுதந்திரமான செயல்பாடுகளை விளைவிக்க அவர்கள் உதவி பெற்றுக்கொண்டார்கள்.

3. மாமரி தன் வாழ்வில், தன் சொந்த சுயாதீன சித்தத்தைச் சார்ந் திருந்த ஒவ்வொரு செயலாலும் பேறுபலன்களைச் சம்பாதித் தார்கள்; ஏனெனில் கடவுளின் திருத்தாயார் தன்னுடைய சுயாதீன சித்தத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவையும், அதைச் சார்ந்திருந்தவையுமான தன் வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இந்தச் சலுகையைக் கொண்டிருப்பது பொருத்தமானதாக இருந்தது என்றும், அவற்றில் எதுவும் முழுமையானதும், உத்தமமானதுமான கவனமின்றிச் செய்யப்படவில்லை, இதன் காரணமாக, கடவுளின் ஆராதனைக்காகவும் மகிமைக்காகவும் முன்கூட்டியே ஒப்புக் கொடுக்கப்படாமல் அவை செய்யப்படவில்லை என்றும், இதனால் அவை கடவுளின் பார்வையில் பேறுபலன் மிக்கவையாக இருந்தன என்றும் இந்தப் பொருள் பற்றி எழுதியிருக்கிற சகல வேதபாரகர் களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆகவே, மாமரியின் பேறுபலன்களின் கால நீட்சியையும், அவற்றின் பலதரப்பட்ட தன்மையையும் பற்றி இப்படிச் சுருக்கிக் கூறப்படலாம்: மாமரி தன் உற்பவத்தின் முதல் கணத்திலிருந்தே பேறுபலன்களைச் சம்பாதிக்கத் தொடங்கினார்கள்; தன்னுடைய சுயாதீன சித்தத்தைச் சார்ந்திருந்த எல்லாச் செயல்களாலும், ஒவ்வொரு செயலாலும் தன் வாழ்வின் இறுதி வரை அவர்கள் பேறுபலன்களைத் தொடர்ந்து சம்பாதித்தார்கள். உறக்கத்தில் அவர்களுடைய திருச்சரீரம் ஓய்வெடுத்தக் கொண்டிருந்த போதும் கூட, அவர்கள் இப்படி பேறுபலன்களைச் சம்பாதிப்பது இடை நிறுத்தப்படவில்லை.