அநாதிநம.
காப்பு
நேரிசை வெண்பா.
சீர்சே ருடுமுடியுஞ் செங்கதிரோன் றன்னுடையும்
ஏர்சேர் பதத்தி லிளம்பிறையும் சேர்தேவ
மாதாவி னம்மானை மண்மேல் வழுத்து தற்குத்
தாதாவே நின்னருளைத் தா.
கடவுள் வாழ்த்து .
விருத்தம்.
பூவிலேபாந்தபாவம் போக்கவந்து தித்திட்டேபூங்
காவிலே யுதிரவேர்வை கருத்தொடு சொரிந்ததேவா
பாவிலேயுனது தாயின் பண்புறு சரிதை கூற
நாவிலே வந்தெனக்கு நல்லருள் புரிகுவாயே.
அம்மானை.
செம்பொன் திகழ்வானுந் தேனுலகுந்தானாகி
நம்பும்பலவுயிர்க்கும் நாயகமாய்நின்றோனே
பன்னாட்டவிதாசன் பாடப்பரிவுதந்த
என்னாப்பெலமான வேகதிர்த்துவனே
அனந்தபலவரத்தால் அத்தனையுமுண்டாக்கிச்
சினந்தபசாசுகளைத் தீநரகில்விட்டோனே
பண்டோர்க்குநின் கருணை பாலித்து நின்றாலும்
உண்டாக்கப்பட்டபுத்திக் குள்ளடங்காவுத்தமனே
வாசம்பொருந்தும் மறைஞானத்துட்பொருளே
ஆசொன் றில்லாத வருளே யருட்கடலே
மண்ணுலகங்காக்கும் மகராசகன்னியெனும்
புண்ணியமா மரியாள் பூதலத்திலே நடந்த
தன்மச்சரித்திரத்தைத் தாரணியிலேபாட
இன்னலுடைய எனக்குவந்து முன்னடவாய்
நித்தியகற்புடனே நேர்ந்தபலன் குன்றாமல்
சத்தியமான சருவேஸ்பரன் றனையே
ஈன்றுவளர்த்த இராசகுலக்கன்னிகதை
ஆன்ற தவத்தி லதிகமுயற்சியுள்ள
பொன்னாருறோமைப் பொதுச்சபையிற்றீட்டிவைத்த
நன்னீதிவாசகத்தில் நான் சிறிது தானெடுத்து
பாடத் துணிந்தேன் பராபானேயுன் கிருபை
கூடத் துணை புரிந்து கொண்டாஞ்செய்வாயே.