இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பேறுபலன்களுக்கான நிபந்தனைகள்

சற்றுமுன் தரப்பட்ட வரையறையிலிருந்து, மனிதன் செய்யக் கூடிய எல்லாச் செயல்களும் பேறுபலனைச் சம்பாதிக்க வல்லது அல்ல என்பதும், அவ்வாறே செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வனும் பேறுபலனைச் சம்பாதிக்க இயலாது, மாறாக, பேறுபலனைச் சம்பாதிப்பதற்கு, செயலிலும், அதைச் செய்பவனிலும் சில குணங்கள் தேவைப்படுகின்றன.

இந்தக் குணங்கள் அல்லது நிபந்தனைகள் - இவ்வாறு இவை அழைக்கப்படலாம் - பின்வருமாறு: சில நிபந்தனைகள் செயல் தொடர்பானவை, சில, அதைச் செய்பவனோடு தொடர்புள்ளவை: செயலைப் பொறுத்த நிபந்தனைகளைப் பொறுத்த வரை, அது தன் சொந்தத் தன்மையில் ஒன்றில் நல்லதாக இருக்க வேண்டும், அல்லது சார்பற்றதாக, அதாவது அது தன் சொந்தத் தன்மையில் நல்ல தாகவோ, கெட்டதாகவோ இருக்காமல், அதைச் செய்பவனின் நோக்கத்தால் தகுதியுள்ளதாக்கப்படக் கூடியதாயிருக்க வேண்டும்.

செயலைச் செய்பவனைப் பொறுத்த வரை, அவன் சுயாதீன சித்தத்தை அனுபவிக்கிறவனாக இருக்க வேண்டும் என்பது முதலாவது நிபந்தனை. அதாவது, அவனைக் கட்டுப்படுத்துகிற, அல்லது செயல்படும்படி வற்புறுத்துகிற மூல காரணம் எதுவும் அவனுடைய சொந்த சுபாவத்தில் இருக்கக் கூடாது, மாறாக, அவன் எந்த விதமான கட்டுப்பாட்டிலிருந்தும், வற்புறுத்தலிலிருந்தும் விடுபட்டவனாகவும், தனக்குத் தானே முதன்மையானவனாகவும், தன்னாலேயே கட்டுப்படுத்தப்படாதவனாகவும், செயல்பட அல்லது செயல்படாதிருக்க, இதைச் செய்ய, அல்லது இதற்கு நேர் எதிரானதைச் செய்ய, இந்தக் காரியத்தைச் செய்ய, அல்லது மற்றொரு காரியத்தைச் செய்ய, தானாகவே முடிவெடுக்கக் கூடிய வனாகவும் இருக்க வேண்டும். பேறுபலன் என்னும் கருத்தே இந்த சுதந்திரத்தை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறது. தன் சொந்த சுபாவத்தால் தான் செய்கிற விதமாகச் செயல்படக் கட்டுப்படுத்தப் படுகிற,வேறு விதமாகச் செய்ய இயலாதிருக்கிற ஒருவனுடைய செயல் சம்பாவனையையோ, தண்டனையையோ, புகழ்ச்சியையோ குற்றச்சாட்டையோ பெறுவதில் எந்த அர்த்தமுமில்லை.

இரண்டாவதாக, செயலைச் செய்பவனும், பேறுபலனுக்கு உரிமை பாராட்டுகிறவனுமான மனிதன் தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் இருக்க வேண்டும். ஏனெனில் பாவமுள்ள மனிதன் எப்படிப் பேறுபலனுள்ள செயலைச் செய்ய முடியும்?

தேவ இஷ்டப்பிரசாத அதிகரிப்பும், அதற்கேற்ற தேவ காட்சியின் அளவவும். இவை, தங்கள் சுபாவத்தில் முற்றிலும் சுபாவத்திற்கு மேற்பட்டவையாகவும், எந்த ஒரு சுபாவமான முகமைக்கும் எட்ட முடியாதவையாகவும் இருக்கின்றன. ஆகவே, தேவ இஷ்டப்பிரசாதத்தில் இல்லாத மனிதன் அதன் அதிகரிப் பிற்கும், அதன் முழு நிறைவேற்றத்திற்கும் ஒருபோதும் தகுதி பெற முடியாது.

பேறுபலனின் சம்பாவனை இயற்கையான விதத்தில் பேறுபலன் உள்ள செயலிலிருந்து வராமல், கடவுளால் அதற்குத் தரப்படுகிறது என்பது உண்மைதான்; என்றாலும், ஒழுங்கினுடையவும் முறையான அளவினுடையவும் சர்வேசுரனாக இருக்கிறவர் எப்போதும் நோக்கத்திற்கும் அதை அடைவதற்கான வழிக்கும் இடையில் ஒரு பிரியமுள்ள ஈர்ப்பையும், ஒரு வித ஒத்த தன்மையையும் ஸ்தாபிக் கிறார். ஆகவே ஒரு காரியத்தைச் செய்பவனின் செயலுக்கும், அவன் சம்பாதிக்க வேண்டிய பேறுபலனுக்கும் இடையே ஒரு விகிதாச் சாரம் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நித்திய தேவ காட்சி என்பதன் பொருள், தேவ இஷ்டப்பிரசாதத்தின் நோக்கமும், இயக்கத்தின் நிறைவேற்றமுமாகும். அதன் அதிகரிப்பு என்பதற்கு, அந்த நோக்கத்தை நோக்கிய முன்னேற்றம் என்பது பொருள். ஆகவே, கடவுள் நோக்கத்திற்கும், அதைச் செய்வதற்கான வழிக்கும் இடையே கடவுள் ஒரு ஈர்ப்பையும், விகிதாச்சாரத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்றால், செயலைச் செய்பவனில் இந்த இயக்கம் தொடங்கப்படாமல், இந்த இரண்டையுமே அடைந்துகொள்ள இயலாது என்பது வெளிப்படை.

மூன்றாவதாக, செயல் சுபாவத்திற்கு மேலான ஒரு நோக்கத்திற்காகச் செய்யப்பட வேண்டும்; ஏனெனில் செயல் தன்னிலேயே நல்லதாகவோ, தீயதாகவோ இல்லாதிருந்தால், அல்லது செயல் ஒரு சுபாவமாக நன்மைத்தனத்தின்படி மட்டும் நல்லதாக இருந்தால், அப்போது, முதல் காரியத்தில் சுபாவத்திற்கு மேலான நோக்கம் செயலைத் தகுதியுள்ளதாக்கி, சுபாவத்திற்கு மேலான மகத்துவத்திற்கு அதை உயர்த்துகிறது; இரண்டாவது காரியத்தில்,செயலைத் தகுதியுள்ளதாக்காமல், அது அதற்கு சுபாவத்திற்கு மேலான மகத்துவத்தைத் தருகிறது. உதாரணமாக, சாப்பிடுவது, உறங்குவது, நடப்பது போன்ற செயல்கள் தங்களிலேயே நடுத்தரமானவையாக, நல்லவையாகவோ, கெட்டவையாகவோ இல்லாதவையாக இருக் கின்றன. என்றாலும் அவை நல்லவையாக்கப்பட்டு, சுபாவத்திற்கு மேலான தன்மைக்கு உயர்த்தப்பட்டு, இவ்வாறு பேறுபலனைச் சம்பாதிக்க வல்லதாகும்படி, சேசுக்கிறீஸ்துநாதரின் திருப்பெயரால் அவற்றைச் செய்யும்படி அர்ச். சின்னப்பர் நமக்குக் கட்டளையிடு கிறார். பிறருடைய நிர்ப்பாக்கியத்தைக் கண்டு இயல்பான முறையில் இரக்கப்பட்டு நாம் பிச்சையிடும்போது, அந்தக் காரியம் தன்னிலேயே நல்லதாக இருக்கிறது, என்றாலும் அது சுபாவமான நன்மையாக மட்டுமே இருக்கிறது, இதன் காரணமாக அது நித்திய ஜீவியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள இயலாததாக இருக்கிறது. இனி, சுபாவமானது ஒருபோதும் வரப்பிரசாதத்தையும், மகிமையையும் விளைவிக்க முடியாது; ஆகவே, நோக்கமானது அந்தச் செயலை சுபாவத்திற்கு மேற்பட்டதாக ஆக்க வேண்டும். இந்த நோக்கம் கடவுளின் மகிமையாகவும், சங்கை மரியாதையாகவும் இருக்கிறது.