இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் பேறுபலனும் மகிமையும்

முந்தின புத்தகங்களில் பிரபஞ்சத்தில் மாமரி வகிக்கும் இடத்தைப் பற்றியும், அவர்களுடைய பக்திக்குரிய மகத்துவத்தைப் பற்றியும், அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்ற அவர்களுக்கு உதவவும், அவர்களுடைய மகத்துவத்தை அலங்கரிக்கவும் தேவையாயிருந்த சுபாவமானவையும், சுபாவத் திற்கு மேலானவையும், சாதாரணமானவையும், அசாதாரண மானவையுமான வரப்பிரசாதங்களைப் பற்றியும், கடவுளைப் பொறுத்த வரையும், மனிதர்களைப் பொறுத்த வரையும், மாமரியையே பொறுத்த வரையும் அவர்களுடைய இரு மடங்கான மகத்துவத்திலிருந்து விளையும் பலன்களைப் பற்றியும் பேசி முடித்த பிறகு, மாமரியைப் பற்றிய நம் அறிவை முழுமையப்படுத்துவதற்கு, நாம் அவர்களுடைய பேறுபலன்களைப் பற்றியும், அவர்களுடைய மகிமையைப் பற்றியும் பேசுவது அவசியம் என்று நான் உணர்கிறேன். இதைத்தான் இந்த ஐந்தாவது புத்தகத்தில் நாம் செய்யப் போகிறோம்.

அத்தியாயம் 1

பிரிவு 1

பேறுபலனைப் பற்றிய விளக்கம்

சிருஷ்டி தன் சிருஷ்டிகரிடமிருந்து பேறுபலனைச் சம்பாதிப்பது என்பது தொடர்பான பிரச்சினை வரும்போது, பேறுபலன் என்ற கருத்தைப் புரிந்துகொள்வது எப்போதுமே மிகக் கடினமாகத்தான் இருந்து வந்துள்ளது. ஒருவன் கண்டிப்பான முறையில் தான் செய்யக் கடமைப்பட்டிருக்கிற ஒரு காரியத்திற்காகக் கைம்மாறு பெறுவதோ, அல்லது ஒரு சம்பாவனையைப் பெறுவதோ அறிவுக்கு உகந்ததாகத் தோன்றவில்லை என்பதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.

நாம் செய்யக்கூடிய எந்த விதமான நற்செயல்களும், நாம் இப்படிப் பேசலாம் என்றால், ஏற்கனவே கடவுளுக்குரியவையாக இருக்கின்றன, நம் மீது அவர் பொழிந்துள்ள மட்டில்லாத நன்மை களுக்காக அவருக்கு சம்பாவனை அளிக்கப்படுவதற்கான காரணங் களாக இருக்கின்றன. ஆகவே, மிக அநேக காரணங்களுக்காக ஏற்கனவே கடவுளுக்கு உரியவையாக இருக்கிற செயல்களுக்காக நமக்கு சம்பாவனை வழங்கப்படுவது அறிவுபூர்வமானதாகத் தோன்றவில்லை.

இது தவிர, நாம் நன்மை செய்யும்போது, எந்த விதத்திலும் கடவுள் அதனால் எந்த விதமான ஆதாயமும் பெறுவதில்லை, மாறாக நாம்தான் அதனால் பலனடைகிறோம். அப்படியிருக்க, தமக்கு எந்த ஆதாயமும் இல்லாததும், நமக்கே முழுவதும் அனுகூலமாயிருப்பதுமான ஒரு காரியத்திற்காக, கடவுள் ஏன் நமக்கு சம்பாவனை அளிக்க வேண்டும்?

இதன் காரணமாக, சிலர் பேறுபலன் என்னும் கருத்தைப் பழிக்கிறார்கள், இந்தக் கத்தோலிக்க சிந்தனை தத்துவஞானத்திற்கு எதிரானது என்றும், கிறீஸ்தவத் தன்மை இல்லாதது என்றும் முத்திரை குத்துகிறார்கள், ஆகவே இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதும், அதனுடைய முறையான மதிப்பை அறிந்து கொலள்வதும் அவசியமாக இருக்கிறது.

முடிந்த வரை மிகத் தெளிவான ஒளியில் இந்தச் சிந்தனையை விளக்க நாம் முயற்சி செய்வோம்.

நாம் அர்ச். தாமஸ் அக்குயினாஸோடு சேர்ந்து, சம்பாவனையும், பேறுபலனும் ஒரே காரியத்தைத்தான் குறிக்கின்றன என்று சொல்ல வேண்டும்; ஏனெனில் ஒருவனுடைய வேலை அல்லது உழைப்புக்கு ஊதியமாக அவனுக்குத் தரப்படுவதுதான் சம்பாவனை, வெகுமதி என்று அழைக்கப்படுகிறது. பேறுபலன் என்பதும் இதே காரியம் தான், அது, ஒருவன் செய்த ஏதாவது ஒரு காரியத்திற்கு ஈடாக, அவனுக்குரிய விலையை, கூலியை அவனுக்குத் தருவது ஆகம். இவை இரண்டுமே நீதியின் ஒரு செயலைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன; மற்றொருவனிடமிருந்து பெறப்பட்ட ஒரு காரியத்திற்கு ஒரு நியாயமான கூலியைத் தருவது நீதியின் செயலாக இருக்கிறது. ஆகவே, ஒருவனுடைய வேலை அல்லது உழைப்பின் மதிப்புக்கு ஏற்றபடி அவனுக்கு வெகுமதி தருவது அதே புண்ணியத் தைச் சேர்ந்த ஒரு செயலாக இருக்கிறது.

இனி நீதி சமநிலையை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறது. ஆகவே கண்டிப்பான நீதி என்பது, கண்டிப்பான ஒரு சமநிலை யாரிடையே இருக்கிறதோ அவர்களில்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும். யாரிடையே இந்தக் கண்டிப்பான சமநிலை காணப்பட முடியாதோ, அங்கே ஒரு குறிப்பிட்ட முறையில் மட்டுமே நீதி இருக்க முடியும். இதே போல, தன்னுடைய மிகக் கண்டிப்பான பொருளில், பேறுபலன் என்பது, ஒரு கண்டிப்பான சமநிலை யாரிடையே இருக்கிறதோ அவர்களில்தான் இருக்க முடியும். அத்தகைய கண்டிப்பான சமநிலை யாரிடையே இருக்க முடியாதோ, அவர்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் மட்டுமே அதைக் கொண்டிருக்க முடியும்.

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இந்தக் கண்டிப்பான சம நிலை இல்லாதது மட்டுமின்றி, ஓர் உன்னதமான சமமற்ற நிலை இருக்கிறது என்பது வெளிப்படை. ஏனெனில் அவர்களிடையே ஓர் அளவற்ற தொலைவு இருக்கிறது, மனிதனில் இருக்கிற எல்லா நன்மையும் கடவுளிடமிருந்தே வருகிறது. ஆகவே, மனிதன் சமநிலையின் விளைவாக, மனிதன் கடவுளிடம் எந்த உரிமை களையும் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் அப்படி ஒன்று உண்மையில் இல்லை. அவன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் மட்டுமே பேறுபலனைக் கொண்டிருக்க முடியும். இந்தக் குறிப்பிட்ட விதம் என்னவெனில் கடவுள்தாமே மனிதனின் வேலைகளுக்கு அவனுக்கு ஒரு சம்பாவனையை நியமித்திருக்கிறார் என்பதும், தம்முடைய சொந்த நியமத்தையும், உத்தரவையும் கொண்டு அவை பேறுபலன் உள்ளவை என்று தீர்மானித்திருக்கிறார் என்பதுதான். ஏனெனில், பல காரணங்களால் நம் வேலைகளின் பலன் கடவுளுக்குரியது என்பதால், அவற்றிற்குக் கடவுள் ஒரு சம்பாவனையை நியமிக்க வில்லை என்றால், மனிதன் அதற்கு எந்த உரிமையையும் கொண் டிருக்கவோ, அல்லது தவறாத விதத்தில் அதை எதிர்பார்க்கவோ இயலாதவனாகவே இருந்திருப்பான்; ஏனெனில் வேறு காரணங் களுக்காக, உதாரணமாக, மனிதன் தம்மால் படைக்கப்பட்டவன் என்ற காரணத்தால், அல்லது சகல சிருஷ்டிகள் மீதும் தமக்குள்ள உன்னத ஆளுகையின் காரணத்தால், மனிதனுடைய வேலைகளை ஏற்றுக்கொள்ளவும், அவற்றிற்கு உரிமை பாராட்டவும் கடவுளால் முடியும்.

இதன் காரணமாக, மனிதன் ஒரு சம்பாவனைக்குத் தகுதி பெறுவதற்கும், தவறாத விதத்தில் அதைப் பெற்றுக்கொள்வதற்கும், கடவுள்தாமே தம்முடைய சொந்த உத்தரவால், அந்த வேலை களுக்கு ஒரு சம்பாவனையை நியமம் செய்வது அவசியமா யிருக்கிறது.

ஆகவே, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் செய்யப்படுகிற, மனிதனின் சில குறிப்பிட்ட வேலைகளுக்காகக் கடவுள் தம்முடைய சொந்த தெய்வீக உத்தரவைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட சம்பாவனையை நியமம் செய்திருக்கிறார் என்ற அடிப்படையில், கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே பேறுபலன் என்பது சாத்தியமா யிருக்கிறது. இந்த விதத்தில் மனிதன் உண்மையாகவும், நிஜமாகவும் கடவுளுக்கு முன்பாகப் பேறுபலனைப் பெற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு சம்பாவனை அளிப்பது பற்றிய வாக்குறுதி ஒரு முறை அளிக்கப்பட்டவுடன், அந்த வாக்குறுதி ஏற்கப்பட்டு, அந்த வாக்குறுதி தொடர்பாக வேலை செய்யப்படும்போது, கண்டிப்பான நீதியின்படி, சம்பாவனை நிஜமாகவே சம்பாதிக்கப் படுகிறது, அதற்கு நிஜமாகவே மனிதன் உரிமை கொண்டாட முடியும். வாக்களித்துள்ளவன் அதை நிறைவேற்றக் கடமைப்பட் டிருக்கிறான். ஆகவே கடவுள் சில வேலைகளுக்கு ஒரு சம்பாவ னையை நியமித்திருக்கிறார், இந்த வாக்குறுதியை மனிதன் ஏற்றுக் கொண்டபின், அவன் அந்த வாக்குறுதிக்குக் கீழ் வரும் வேலை களைச் செய்யும்போது, அவன் நிஜமாகவே பேறுபலனைப் பெறத் தகுதி பெறுகிறான், நீதிப்படி தன்னுடைய வெகுமதிக்கு உரிமை பாராட்டவும் அவனால் முடியும்.

பேறுபலனைப் பற்றிய இந்தத் தத்துவஞான சிந்தனையைத் தந்த பின், அதன் வேதசாஸ்திரப் பொருளின்படி அதை நாம் வரையறுப் போமாக.

பேறுபலன் என்பது தேவ இஷ்டப்பிரசாத அதிகரிப்பிற்கான ஓர் உரிமையாக இருக்கிறது, மேலும் அந்த வரப்பிரசாதத்தோடு தொடர்புள்ள நித்திய தேவ காட்சியின் ஒரு குறிப்பிட்ட அளவுக் கான உரிமை யாகவும் அது இருக்கிறது. கடவுளால் இயக்கப்பட்டு, அவரால் வழிநடத்தப்பட்டு, மனிதனின் சுயாதீன சித்தத்தால் நிறைவேற்றப்படுகிற சில குறிப்பிட்ட செயல்களுக்குக் கடவுள் ஒரு சம்பாவனையை நியமித்திருக்கிறார்.

இந்த வரையறையை விளக்குவதற்கு ஒரு சில வார்த்தைகள் போதுமானவை. முதலாவது, பேறுபலன் என்பது ஓர் உரிமை. இது, மேலே விளக்கப்பட்டுள்ள பொருளின்படி, அதாவது, கடவுளின் வாக்குறுதியின் விளைவாக சம்பாதிக்கப்படும் ஓர் உரிமை என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

எதற்கு உரிமை? ஒரு சம்பாவனைக்கு. இந்த சம்பாவனை என்ன? தேவ இஷ்டப்பிரசாத அதிகரிப்பு மற்றும் இந்த வரப்பிரசாதத்தோடு தொடர்புள்ள தேவ காட்சியின் ஒரு குறிப்பிட்ட அளவு. வரப்பிரசாத அதிகரிப்பு மற்றும் அதனோடு தொடர்புள்ள மகிமையின் அளவு என்னும் இந்த இரு காரியங்களும் பேறுபலனுக்கான நோக்கத்தை உருவாக்குகின்றன. மற்ற எதுவும் பேறுபலனின் நோக்கம் அல்ல, ஏனெனில் கடவுளால் இயக்கப்பட்டு, அவரால் வழிநடத்தப்பட்டு, மனிதனின் சுயாதீன சித்தத்தால் சம்பாதிக்கப்படக் கூடியது மட்டுமே பேறுபலனின் நோக்கமாக அல்லது முடிவாக இருக்க முடியும்.

ஆனால் இந்த வழிகாட்டுதல் அல்லது இயக்கம் ஒரு மூலாதாரமாகவோ, காரணியாகவோ சம்பாதிக்கப்பட ஒருபோதும் இயலாது; ஏனெனில், மனிதன் மூலாதாரமாக அல்லது காரணியாக அந்த இயக்கம் அல்லது வழிகாட்டுதலை சம்பாவனையாக சம்பாதித்துக்கொள்ள முடியுமானால், அவன் கடவுளின் செயலுக்கும் இயக்கத்திற்கும் எஜமானனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு, தான் விரும்பும் விதத்தில் கடவுளைப் பயன்படுத்துவான், இத்தகைய நிலையில் அவன் எஜமானனாகவும், கடவுள் அவனுக்குக் கீழ்ப்பட்டவராகவும் இருக்கிறார்கள் என்று ஆகி விடும். இது பெரும் அபத்தம்.

ஆகவே, முதல் வரப்பிரசாதம் என்று அழைக்கப்படும் கடவுளின் நட்பை நான் அடையும்படி, அவர் என் சுயாதீன சித்தத்தை இயக்கவோ அல்லது வழிநடத்தவோ நான் ஒருபோதும் தகுதி பெற முடியாது. நான் விரும்பும் வரை அவர் என்னை இயக்குவதற்கும், என்னை வழிநடத்துவதற்கும் நான் தகுதி பெறவும் முடியாது. அது முதலில் நிலைமை வரப்பிரசாதமாக இருக்கும், ஏனெனில் எந்தச் செயலுக்கும் அத்தகையதொரு சம்பாவனையைக் கடவுள் வாக்களித் திருக்கவில்லை; இரண்டாவதாக, தம் சொந்த சுதந்திரத்தை இழக் காமல், அவர் அதை வாக்களிக்க இயலாது. ஆனால், கடவுளால் இயக்கப்பட்டு, அவரால் வழிநடத்தப்பட்டு, நான் இவ்வுலகில் கடவுளின் நட்பையும், பரலோகப் பேரின்பத்தில் அதன் முழு நிறைவேற்றத்தையும் பேறுபலனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.