இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரியின் பேறுபலன் நான்காம் விதியால் பரிசோதிக்கப்படுதல்

மாமரியின் பேறுபலனின் உயரமும், பக்திக்குரிய தன்மையும், உண்மையில், அதன் முழு மேன்மையும் அவர்களுடைய ஃபியாத்தில், மனிதாவதாரம் மற்றும் இரட்சணியம் என்னும் பரம இரகசியங்களுக்கு அவர்கள் தந்த சம்மதத்தில், அடங்கியிருந்தது என்றும், அவர்களுடைய எல்லாச் செயல்களும் அந்த ஃபியாத்தினுள் கலக்கப்பட்டிருந்தன, அதனோடு ஒன்றிக்கப்பட் டிருந்தன, அதனுடைய நடைமுறை நிறைவேற்றமாக இருந்தன என்றும் நாம் சொல்லியிருக்கிறோம். அதற்கு முந்திய அவர்களுடைய செயல்கள் அதற்கு ஓர் ஆயத்தமாகவும், அதற்குப் பிந்தைய செயல்கள் அதனுடைய படிப்படியான வளர்ச்சியாகவும், அதன் நிறைவேற்றமாகவும் இருந்தன. ஒரு பேச்சு வகைக்கு, அந்த ஃபியாத் இரண்டு முதன்மையான நிலைகளைக் கொண்டிருந்தது: முதலாவது, மங்கள வார்த்தை திருநாளன்று, அவர்கள் தேவ தூதருக்குப் பதில் சொல்லும் விதமாக முதன்முதலாக அதைச் சொன்னபோது; இரண்டாவது, கல்வாரியில் நம் ஆண்டவர் மரித்த திருநாளன்று, மீண்டும் தன் இருதயத்தில் முந்தின ஃபியாத்தை உறுதிப்படுத்தும்படியாகவும், அதை முழுமையாக நிறைவேற்றும் படியாகவும் அதைச் சொன்னபோது.

ஆனால் அந்த ஃபியாத்தைச் சொல்வது மாமரிக்கு எளிதானதாக இருந்ததா? அதற்கு எதிராக எதிர்ப்பு ஏதும் எழவில்லையா? அதைச் சொல்லும்படி, மிகவும் மேன்மையான, மிகக் கடினமான ஒரு முயற்சியைச் செய்ய வேண்டியிருக்கவில்லையா? மாமரியின் பேறுபலன் பற்றிய நம் சிந்தனையை நிறைவு செய்யும்படி இந்தப் பிரிவில் நாம் இந்தக் கேள்விகளுக்குத்தான் பதில் காணப் போகிறோம்.

அந்த ஃபியாத் மாமரிக்கு மிக உன்னதமான உயர்த்தப்படுதல் மற்றும் மிகத் தீவிரமான மகிமையின் மூலமாகவும், ஆதாரமாகவும் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அதைச் சொல்வதற்கு அவர் களுக்கு, முற்றிலும் வாக்குக்கெட்டாத அளவுக்கு மிகப் பெரியதும், மிக உன்னதமானதும், மிக பிரமாண்டமானதும், அதியற்புத மானதுமாகிய ஆற்றலும் போராட்டமும், மிகுந்த தாராளமும், நிலையுறுதி மிக்க மனமும், விடாப்பிடியாக உறுதியும் தேவையா யிருந்தன.

மனிதாவதாரத்திற்குச் சம்மதம் தருவதில் மறைந்திருந்த பாவப் பரிகாரப் பரம இரகசியத்தின் நிறைவேற்றத்திற்குச் சம்மதம் தருவது, மாமரியை இரண்டு காரியங்களில் ஈடுபடுத்தியது:

முதலாவது, கடவுளின் ஆராதனைக்காகவும், மனுக்குலத்தின் இரட்சணியத்திற்காகவும் தன் திவ்விய மகனின் பலியில் அவர்களை ஈடுபடுத்தியது;

இரண்டாவது, அந்தப் பரம இரகசியத்தில் முழு மனுக்குலத்தின் பிரதிநிதியாக அவர்கள் செயல்படச் செய்தது.

அவர்களுடைய சம்மதத்தின் மூலம் மறைமுகமாகக் குறித்துக் காட்டப்பட்ட மாமரியின் மீது சுமத்தப்பட்டவையாகிய இந்த இரண்டு கடமைகளும் நாம் இப்போது விளக்கிக் கொண் டிருப்பதும், அவர் கடைய பேறுபலனை அதிகரித்ததுமான எதிர்ப்பை எழுப்பியது.

முதலாவதாக, மாமரி தன் பியாத்திற்குத் தன் திருமகனின் பலியை விலையாகத் தர வேண்டியிருந்தது. இனி, இத்தகைய ஒரு பலியை நிறைவேற்றுவது எவ்வளவு கடினமாயிருந்தது என்பதையும், அதைச் செய்வதில் எப்பேர்ப்பட்ட வேதனையை அவர்கள் உணர வேண்டியிருந்தது என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்வதற்கு, மாமரி சேசுநாதர் மீது கொண்டிருந்த அன்பின் தன்மையையும், தீவிரத்தையும் சற்று விரிவாக நாம் ஆராய வேண்டும்.

‘மிகச் சிறந்ததும், மிகவும் மாசற்றதுமான ஒரு பாசத்தின் மாதிரி யையும், பிரதிநிதித்துவத்தையும் பூமியெங்கும் நாம் சுற்றித் தேடுவோம் என்றால், முழுத் தீவிரமுள்ளதும், மிக அதிகமான சுயநலமற்ற எளிமையுள்ளதும், மிக இனிய கருணையுள்ளதுமான நேசத்தை நாம் தேடுவோம் என்றால், உடனே ஒரு தாயை அவளுடைய குழந்தையோடு பிணைக்கிற சுபாவமான பாசம் நம் மனங்களுக்கு முன்பாக எழுகிறது. கடவுளின் நேசத்தின் அந்த வாக்குறுதிக்காக, அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டுத் தன்னையே பலியாக்கத் தயாராக இருக்கிறாள்; அவள் தன்னுடைய ஆரோக்கியத்தையும், வாழ்வின் இன்பங்களையும் மட்டுமின்றி, தேவைப்பட்டால், தன் உயிரையுமே பலியாக்குவாள். தன் குழந்தை ஆபத்திலிருப்பதைக் கண்டு, அதைப் பாதுகாப்பதற்காகத் தன்னையே பலியாக்க உடனே தீர்மானிக்கிற ஒரு தாயை விட, மற்றொருவருக்காகத் தன் இருத்தலைக் கையளிக்க அதிகத் தயாரா யிருக்கிற ஒருவரை நம்மால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. இந்தப் பாசம் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது என்றால், மனிதன் மீது தாம் கொண்ட நேசத்தைக் குறித்துக் காட்டும்படி கடவுளே இந்தப் பாசத்தை அழகாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தந்தை என்னும் பெயர் குறித்துக் காட்டுகிற பாசத்தின் சுபாவமான பந்தங்கள் அனைத்தையும் மீறி, ‘‘நான் உங்கள் தந்தை'' என்று சொல்வதோடு அவர் திருப்தியடைவதில்லை. மாறாக, நம் மீது தமக்குள்ள உண்மையான அன்பில் அவர் ஒரு தாய்க்குத் தம்மை ஒப்பிடுகிறார்: ‘‘தன் உதரத்தின் குழந்தையைத் தாய் மறக்க முடியுமோ? அப்படியே அவள் அதை மறந்தாலும், நான் உன்னை மறக்க மாட்டேன்'' (இசை.49:15)'' என்று கர்தினால் வைஸ்மன் கூறுகிறார்.

இனி, மாமரி ஒரு தாயாக இருந்தார்கள், அதுவும் எப்பேர்ப் பட்ட தாய்! சுபாவமான உணர்வு சார்ந்த வட்டத்திற்குள்ளும் கூட, எந்தப் பெண்ணோடும் அவர்களை ஒப்பிடுவது அபத்தமான காரியமாகவே இருக்கும்! பரிசுத்த வேதாகமம் ஆகாரையும், யாகோபேதா, மக்கபேயரின் தாய், இரபேக்கா, இராக்கேல், சவுலின் மனைவியான ரேஸ்பா என்னும் பல தாய்மாரைப் பதிவு செய்திருக் கிறது. இவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளின்மீது முழு நேசமுள்ளவர்களாகவும், அவர்களுக்காகத் துயரப்பட்டவர் களாகவும் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே மாமரியின் நிழல்களாகவும், உருவகங்களாகவும் மட்டுமே இருந்தார்கள், அதற்கு மேல் அல்ல. மாமரி மிக அதீத அழகும், நுண்ணிய உணர்வும், கனிவுமுள்ள ஓர் ஆத்துமத்தைக் கொண்டிருந்தார்கள்; மேலும் மிகுந்த சாந்தமும், மென்மையும், மகத்துவமும், அற்புதமானதுமான சரீர அமைப்பையும் கொண்டிருந்தாVர்கள். நம் ஆண்டவரின் மகா பரிசுத்த மனுஷீகத்திற்கு அடுத்ததாக அவர்களே கடவுளின் கரங்களிலிருந்து வந்த அனைவரிலும் அதிக மாசற்றவர்களும், அதிக உத்தமமானவர்களுமான சிருஷ்டியாக இருந்தார்கள். அவர்களில் பாசங்களின் உத்வேகமும், கனிவும், உணர்வுகளின் இனிமையும், வடிவழகும், அசைவுகளில் நளினமும், மென்மையும், அவயவங் களின் மென்மையும் ஜென்மப் பாவத்தால் அற்பமும் மாற்றப் படாமலும், கர்மப் பாவங்களால் தொடப்படாமலும் இருந்தன. இந்த எல்லாக் காரியங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, மாமரியை எப்பேர்ப்பட்ட தாயாக ஆக்கியிருக்க வேண்டும்!

ஆனால் அவர்கள் கன்னித் தாயாராக இருந்தார்கள். உணர் திறன், மென்மையான இருதயம் ஆகியவற்றின் எத்தகைய ஒரு புதிய ஆதாரமாக இது இருந்தது! பெண்களின் உணர்திறன் அவர்களுடைய கூடக்குறைய அற்புதமான வடிவமைப்பிலிருந்தும், மனநிலையிலிருந்தும் மட்டுமின்றி, எல்லாவற்றிற்கும் மேலாக தூய இருதயத்தினின்றும் வருகிறது. இதன் காரணமாக, கன்னியர் தீவிரமும் கனிவுமுள்ள, மிக அற்புதமான, மென்மையான உணர் திறனும், நேசமும் கொண்டிருக்கிறார்கள். இந்த மாசற்றதனமாகிய கொடையில் மாமரியோடு ஒப்பிடப்படக்கூடியவர் யார்? சம்மனசுக்களின் மாசற்றதனத்திற்கும் கூட அப்பாற்பட்டதும், கடவுளின் கருணையும் தயவும் நிரம்பிய பார்வைகளை அவர்கள் மீது இழுத்ததுமான அவர்களுடைய பரிசுத்ததனத்திற்கும், மாசற்றதனத் திற்கும் வேறு எந்த பரிசுத்ததனமும், மாசற்றதனமும் இணையாக முடியும்? கன்னித் தாயார்! அதாவது, மனிதனின் வேலையின்றி, அதற்கு மாறாக, பரிசுத்த ஆவியானவரின் மகா பரிசுத்த செயல்பாட்டால் வளப்படுத்தப்பட்டவர்கள்! இங்கே மனித அறிவு தவறிப் போகிறது, இத்தகைய பரம இரகசியங்களின் அடியாழத்தை அதனால் கண்டுபிடிக்க முடியாது, அதிலிருந்து ஊற்றெடுத்து வரும் நேசத்தையும் அதனால் அறிய முடியாது. ஒரு பக்கம், மாமரி, கன்னிகையாக இருப்பதால், சகல தாய்மாரிலும் அதிக உண்மை யான தாயாராக இருக்கிறார்கள். கிறீஸ்துநாதரின் மாசற்ற மாம்சம் முழுவதுமாகவும், பரிபூரணமாகவும் மாமரியின் மாம்சமாக இருக்கிறது. மற்ற மனிதக் குழந்தைகள் அனைவரும் தந்தையிடம் இருந்தும், தாயிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் பொருண்மையை நித்திய வார்த்தையானவர் தம்முடைய திருமாதாவிடமிருந்து மட்டும் பெற்றுக்கொண்டார். சேசுநாதர் முற்றிலும் மாமரியினுடை யவர், அவர்களுடைய பகிர்ந்துகொள்ளப்படாத சொத்து, இவ்வாறு, அவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு நேசம்இருக்கிறது; ஒரே இருதயத்தில் பரம இரகசியமான முறையில் இணைக்கப்பட்ட ஒரு தந்தையின் அன்பும் ஒரு தாயின் அன்புமாக, சேசுநாதரின் மீது மாமரி கொண்டுள்ள அன்பு இருக்கிறது.

மறு பக்கத்தில் நேசம் எப்போதும் வளப்படுத்தும் மூல காரணத்தின் சுபாவத்தைப் பின்பற்றுகிறது. மாமரி பரிசுத்த ஆவியானவரின் செயலால் தாயானார்கள் என்பதால், தன் குழந்தையானவரின் மீது அவர்கள் கொண்ட அன்பு, அவர்களை வளப்படுத்திய ஆதிகாரணரின் அதே அன்பாக இருக்கிறது, அதாவது, எந்த அன்பைக் கொண்டு பிதா சுதனையும், சுதன் பிதாவையும் நேசிக்கிறார்களோ அந்த அன்பாக, மூன்றாவது தேவ ஆளாகிய சர்வேசுரனுடைய நித்தியமானதும், முடிவற்றதுமான அன்பாகவே இருக்கிறது.

இங்கே நாம் சுபாவமானதை விட்டு விட்டு, சுபாவத்திற்கு மேலானதை நோக்கி எழும்பியிருக்கிறோம்; சுபாவத்தின் அன்பு வரப்பிரசாதத்தினுடையவும், மேன்மையினுடையவும், சலுகை யினுடையவும், புண்ணியத்தினுடையவும் அன்பாக ஆகியுள்ளது. மனிதக் குழந்தைகள் அனைவரிலும் அதிக உத்தமமானவரும், அதிக அழகானவரும், அனைவரிலும் அதிக நேசத்திற்குரியவரும், எல்லாக் குழந்தைகளிலும் அதிக உண்மையானவருமாகிய கிறீஸ்துநாதரின் சுபாவமான இலட்சணங்கள் தாயாரின் அன்பை ஆயிரம் மடங்கு அதிகரிக்கின்றன. ஆனால் அவர் சர்வேசுரனாகவும் இருக்கிறார்; ஆகவே, மாமரி தாயாராக, சர்வேசுரனுடைய மாதாவாக இருக் கிறார்கள். பிறகென்ன? அவர்கள் தாய்மையின் முழுமையைக் கொண்டு, வரப்பிரசாத முழுமையைக் கொண்டு நேசிக்கிறார்கள், அவர்கள் தன் குழந்தையில் தன் சர்வேசுரனையும், தன் சர்வேசுரனில் தன் குழந்தையையும் நேசிக்கிறார்கள்; சுபாவமாக நேசமும், தெய்வீக நேசமும் பரஸ்பரம் ஒன்றையொன்று தூண்டியெழுப்பி, ஒரு முழுமையான அன்பை, ஒரு பரிபூரணமான அன்பை உருவாக்கு கின்றன, அதன் அளவு தாயாரின் உத்தமதனமாகவும், திருமகனின் உத்தமதனமாகவும் இருக்கிறது.

மாமரி சேசுநாதர் மீது கொண்ட இந்த அன்பை ஓரளவுக்கு புரிந்துகொள்ளச் செய்யும்படி இன்னும் பல குறிப்புகளைச் சொல்லாமலே நாம் கடந்து போகிறோம், உதாரணமாக, கடவுளும் மனிதனுமாக சேசுநாதரின் உத்தம இலட்சணங்களைப் பற்றிய மாதாவின் அறிவிலிருந்து விளையக்கூடிய அவர்களுடைய அன்பு. அறிவின் அளவுக்கு ஏற்றபடி அன்பு அதிகரிக்கிறது என்று குறித்துக் காட்டுவது அவசியமில்லை. மாமரியின் அளவுக்கு சேசுநாதரை அறிந்தவர்கள் யாருண்டு? எந்த அல்லது உண்மையில், எல்லா சிருஷ்டிகளுடையவும் மிக உச்சிதமான, மிகுந்த பக்திக்குரிய, உன்னதமான அறிவும், மாமரியின் அறிவோடு ஒப்பிடப்படும்போது அது அறியாமையாகவே இருந்தது. அவருடைய இலட்சணங்களின் ஆழத்தை மாமரியை விட நன்றாக அறியக்கூடியவன் யார்? இதெல்லாவற்றோடும் சேசுவோடு முப்பது வருடங்களாக மாமரி கொண்டிருந்த அந்நியோந்நியத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நேசத்திற்குரிய பொருளோடு ஒரு சில கணங்கள் இருப்பதும் கூட நேச ஆர்வத்தை அதிகரிக்கிறது. தெய்வீக மற்றும் சிருஷ்டிக்கப் படாத முழுமையின் பாதாளமாகிய சேசுநாதரோடு இடைவிடாத பிரசன்னத்திலிருந்தும், இடைவிடாத உரையாடல்களிலிருந்தும், அனைத்திலும் அதிகமான அந்நியோந்நிய பரிச்சயத்திலிருந்தும் மாமரியின் நேசம் எப்பேர்ப்பட்ட நேச ஆர்வத்தைப் பெற்றிருக்கும்! மாமரிக்கு ஒரே ஒரு கணமாகத் தோன்றியிருக்கக் கூடிய அந்த முப்பது நீண்ட வருடங்களின் ஒவ்வொரு கணமும் எத்தகையதொரு ஆழங்காண முடியாத நேசத்தை மாமரியின் இருதயத்தில் தூண்டியிருக்க வேண்டும் என்றால், அதன் அருகில் மிக உயர்ந்த பக்திச்சுவாலகரின் நேசமும் கூட, வெதுவெதுப்புள்ள நேசமாக மட்டுமே இருந்தது. ஒவ்வொரு கணமும் தெய்வீக அக்கினியின் தீச்சுவாலை ஒன்று அவர்களுடைய இருதயத்தில் எழுந்திருக்க வேண்டும்! ஒவ்வொரு கணமும் தேவசிநேகத்தின் ஒரு பாதாளம், ஒரு காட்டாறு, ஒரு தேவசிநேகப் பெருங்கடல், அந்த அதியற்புதமான கன்னித்தாயாரின் உள்ளத்தை நிரப்பி, நவ விலாச சம்மனசுக்கள் அனைவருடையவும் மிக உயர்ந்த நேசத்தின் மீதும் ஆளுகை கொண் டதாக அவர்களுடைய அன்பை ஆக்கியிருந்திருக்க வேண்டும்.

இனி, நம் மனதிற்கு வெளிப்படுத்தப்படுகிற, தன் திவ்ய குழந்தையானவரின் மீதான மாமரியின் இந்த சிநேகத்தைக் கொண்டுதான், மங்கள வார்த்தை திருநாளன்று தன்னுடைய அதியற்புதமான ஃபியாத்தை உச்சரித்ததிலும், அதைத் தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உறுதிப்படுத்தி வந்ததிலும், கல்வாரியின்மீது ஆண்டவருடைய திருப்பாடுகளின்போது அதை முழுமைப்படுத்திய திலும் மாமரி சம்பாதித்திருக்க வேண்டிய பேறுபலனின் அளவை நாம் அளவிட வேண்டும். ‘‘ஈடிணையற்றதும், ஒப்பற்றதும், ஆழங்காண முடியாததுமான அன்பைக் கொண்டு நான் நேசிக்கிற என் திருமகன் துயரங்களின் மனிதனாகி, மனுக்குலத்திற்காகப் பலியிடப்படுவாராக!''

இது மாமரியின் இருதயத்தில் எப்பேர்ப்பட்ட போராட்டத்தை எழுப்பியிருக்க வேண்டும்! எத்தகையதொரு கடும் புயல் அந்த மாசற்ற இருதயத்தை அங்குமிங்குமாக அலைக்கழித்திருக்க வேண்டும்! அவர்கள் தன்னுடைய மனதின் அதிதாராளத்தில், தன் குழந்தையானவரின்மீது தனக்குள்ள அன்பிற்கும் மேலாக எழும்பி, மனுக்குலத்தை இரட்சிக்கும்படி கடவுளால் தான் அழைக்கப்பட்ட காரியத்தை நிறைவேற்றுகிறார்கள்! ஆனால் சகல மனித முயற்சி களிலும் அதிக பக்திக்குரிய இந்த முயற்சி, இந்த பிரமாண்டமான தாராளம், எவ்வளவு பயங்கரத் தீவிரமுள்ளதும், மிகக் கொடூர வேதனை தருவதும், மிகக் கொடூரமாக சித்திரவதை செய்வதும், வெகுவாகக் குத்தித் துளைப்பதும், வெகுவாக ஆக்கிரமிப்பதும், வெகுவாகக் கிரகித்துக்கொள்வதுமான எத்தகைய கொடிய மன வேதனைக்கும், துயரத்திற்கும், துக்கத்திற்கும், வலிகளுக்கும் அவர்களை உள்ளாக்கியது என்றால், அவர்களுடைய வேத சாட்சியம் சகல வேதசாட்சிகளின் எல்லா வலிகளுக்கும், மன வேதனைகளுக்கும் வெகுவாக அப்பாற்பட்டதாக இருந்தது. அவர்களுடைய வேதசாட்சியம் சேசுநாதரின் வேதசாட்சியத்தோடு மட்டுமே ஒப்பிடப்படக்கூடும்.

ஏனெனில் மாமரியின் துயரத்தின் காரணத்தையும், முன்னேற் றத்தையும், நோக்கத்தையும், தீவிரத்தையும் தீர்மானிப்பதற்கு, சேசு நாதரின் திருப்பாடுகளிடம் நாம் தஞ்சமடைய வேண்டும். அர்ச். பொனவெந்தூரின் இந்தக் கருத்தைத் திருச்சபைத் தந்தையர் ஏக மனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்:

‘கிறீஸ்துநாதர் தம் திருச்சரீரத்தில் அனுபவித்த துன்பங்களை மாமரி தன் ஆத்துமத்தில் அனுபவித்தார்கள்.'' அதே தந்தையர் மாமரியின் துயரங்களுக்கும், சேசுவின் திருப்பாடுகளுக்கும் இடையே உள்ள இந்தத் தொடர்பைச் சித்தரித்துக் காட்ட பல உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஆர்னால்ட் என்பவரின் கருத்துப்படி, மனிதனின் வார்த்தை களின் உண்மையான சத்தத்தையும், குரலையும் அப்படியே திருப்பி யெழுப்பும் எதிரொலி, சேசுநாதரின் திருச்சரீரத்தில் உண்டான அடிகளும் காயங்களும் மாமரியின் இருதயத்திலும் உண்டானதற் கான அழகிய உபமானமாக இருக்கிறது.

‘முகம் பார்க்கும் கண்ணாடி, பொருட்களின் உருவத்தையும், நிறத்தையும் பிரமாணிக்கத்தோடும், துல்லியத்தோடும் பிரதி பலிப்பது போலவே, மாமரியின் இருதயம் சேசுநாதரின் எல்லா வேதனைகளையும் அதே பிரமாணிக்கத்தோடும், துல்லியத்தோடும் பிரதிபலித்தது'' என்று அர்ச். லாரன்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார்.

‘நன்கு ஒத்திசைவாக்கப்பட்ட லயர் என்னும் நரம்பிசைக் கருவிகள் இரண்டை எனக்குக் கொடுங்கள். நான் ஒன்றைத் தொட் டால், வெறும் உணர்தல் மற்றும் அதிர்வாலேயே மற்றதும் அதே ஒலியை எழுப்பும். திருச்சுதனின் துன்பங்கள் திருத்தாயாரின் இருதயத்தில் பிரதிபலிக்கக் காரணமான பரம இரகசியமான இணக்கமும், அற்புதமான இசைவு நிலையும் அப்படிப்பட்டவை'' என்று அர்ச். நிஸ்ஸா கிரகோரியார் கூறுகிறார்.

ஆகவே, மாமரி முதலில் தனது ஃபியாத்தைக் கூற வேண்டி யிருந்தது, அவர்களுடைய உன்னதமான வாழ்வு முழுவதும் அந்தச் சம்மதத்தின் நிறைவேற்றமாக இருக்க வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் கல்வாரியின் இரத்தம் தோய்ந்த சிகரத்தின்மீது அதன் நிறைவேற்றத்தில் பங்குபெற வேண்டியிருந்தது. இவ்வாறு, கடவுளின் நியமங்களுக்குக் கீழ்ப்படிவதற்காகவும், மனுக்குலத்தின் மீதான தன்னுடைய நிகரற்ற அன்பிற்காகவும், சேசுநாதர் மீதான தனது தாய்க்குரிய அன்பிற்கும், கடவுளின் சித்தத்தின் மீதான தன் நேசத்திற்கும் எதிரான ஒரு மிகப் பெரிய போராட்டத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தன் இனத்தின் மீதான அவர் களுடைய நேசம் வெற்றி பெற்றது. தன் திருமகனின் பலியில் பெண் குருவாக இருக்க அவர்கள் சம்மதித்தார்கள். சில வேத பிதாக்கள் குறித்துக் காட்டியுள்ளது போல, ஒருவேளை கொலைஞர்களால் இயலாமல் போயிருந்தால், ஆபிரகாமை விடப் பெரிதான ஒரு அதீத தாராளத்தோடு மாமரியே அவரைச் சிலுவையில் அறைந்திருப் பார்கள்! ஆனால் அவர்களுடைய தாய்க்குரிய இருதயத்தை ஒரு வேதனை வெள்ளமாக நிரப்பியது. அந்த வேதனை தன் துயரத்தில் எவ்வளவு கூரியதாகவும், அளவுக்கு மீறிய கொடூரமுள்ளதாகவும் இருந்தது என்றால், அதன் மூலம் அவர்கள் வேதசாட்சிகளின் இராக்கினி என்ற பெயருக்குத் தகுதி பெற்றார்கள், ஏனெனில் அவர்களுடைய வேதசாட்சியம், ஒன்றுசேர்க்கப்பட்ட சகல வேதசாட்சிகளுடையவும் ஒட்டுமொத்த வேதசாட்சியத்தையும் விட பாரதூரமான அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. இந்த உன்னதமான, பக்திக்குரிய வேதசாட்சியத்தின் மூலம் மாமரி சம்பாதித்த பேறுபலன்களின் அளவு, உண்மையில் எந்த மனித அறிவுக்கும் எட்டாததாக இருக்கிறது.

இது வரை நாம் சொன்னதையெல்லாம் ஒரு சில வார்த்தைகளில் சுருக்கிக் கூறுவதன் மூலம் மாமரியின் பேறுபலனைப் பற்றிய இந்த அத்தியாயத்தை முடித்து வைப்போம்:

மாமரியின் பேறுபலன் மிக்க பணியை அதன் நேரடி மதிப்பில் நாம் சிந்தித்துப் பார்ப்போம் என்றால், அவர்களுடைய பேறுபலன் எல்லாக் கணக்கீட்டிற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. அது மனிதாவதாரம், இரட்சணியம், திருச்சபை, தேவத்திரவிய அனுமானங்கள், முழுமையான சுபாவத்திற்கு மேற்பட்ட வரப் பிரசாத ஒழுங்கு, மகிமைப்படுத்தப்படுதலின் முழு ஒழுங்கு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான கிறீஸ்தவப் பராமரிப் பின் ஒழுங்கை விட அதிகமாகவோ, குறைவாகவோ இல்லை.

மாமரியின் பணிகளுக்கு மூல காரணமாக இருந்தது அவர்களுடைய தேவ இஷ்டப்பிரசாதமாகும். அது மாமரியில் ஆழங்காண முடியாததாக இருந்து, அவர்களுடைய பேறுபலன்கள் மனிதனுடையவும், தேவதூதருடையவும் எல்லா புத்திக்கும் எட்டாத தீவிரமுள்ளதாக இருக்கச் செய்தது. இந்தப் பேறுபலன் அவர்களுடைய எல்லா வேலைகளிலும் இருந்த நோக்கத்தினுடைய, முற்றிலும் சுபாவத்திற்கு மேலான தன்மையால் அதிகரிக்கப்பட்டது. தன் வாழ்வின் கதியை நிறைவேற்றும்படியாகவும், மனுக்குலத்தின் இணை இரட்சகியாக இருக்கும்படியாகவும் மாமரி எதிர்கொள்ள வேண்டியிருந்த கொடிய போராட்டத்தால் அவர்களுடைய பேறுபலன் அதன் உச்சபட்ச உத்தமதனத்திற்கு உயர்த்தப்பட்டு, அதன் அனைத்திலும் உச்சமான புள்ளியைச் சென்றடைந்தது.