மாமரியின் இலட்சணங்களைப் பற்றிய தியானத்தில் நுழை வதற்கு முன்பாக, இந்தப் புத்தகத்திலும் பின்வரும் புத்தகங்களிலும் நாம் விரித்துரைக்க வேண்டியுள்ள எல்லாக் கருத்துக்களும் புரிந்து கொள்ளப்படுவதற்கான வழியை ஆயத்தம் செய்கிற அர்ச். தாமஸ் அக்குயினாஸின் கோட்பாடு ஒன்றை இங்கே தர நாம் விரும்புகிறோம்.
காரியங்களின் சுபாவ ஒழுங்கில் உத்தமதனத்தின் மூன்று வகைகள் இருக்கின்றன முதலாவது பண்பு மற்றும் தகுதி ஆகிய வற்றின் உத்தமதனம்; ஒரு காரியம் அல்லது ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு அல்லது அலுவலுக்குத் தகுதியுள்ளதாக ஆக்க அவசியமான தேவைகள் அனைத்தையும் அது தன்னில் கொண்டிருக்கும்போது இந்த உத்தமதனம் நிறைவேறுகிறது. உதாரணமாக, நீங்கள் விறகு ஒன்றை எரிக்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைச் செய்வதற்கு நீங்கள் அதற்குத் தடையாக இருக்கிற அனைத்தையும் அதிலிருந்து விலக்க வேண்டும், அதாவது அது பச்சையாயிருப்பது, ஈரமாயிருப்பது போன்ற காரியங்கள். இந்தத் தடைகளை அகற்றாமல் அந்த விறகு எரிக்கப் படத் தகுதியுள்ளதாக இராது. அது பண்பின் உத்தமதனத்தைக் கொண்டிராது. அவ்வாறே ஒரு சிற்பக் கலைஞன் ஒரு சுரூபத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவன் கல்லில் தேவையற்ற பகுதிகளை அகற்ற வேண்டும், அதை சுருபம் செய்ய சரியான வடிவத்திற்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தான் விரும்புகிற உருவத்தை அதில் கொண்டு வர அவன் தயாராக முடியும்.
இரண்டாவது வகை உத்தமதனம், உருவாக்கப்பட இருக்கும் காரியத்தின் சுபாவ உத்தமதனமாகும். ஏனெனில் ஒவ்வொரு காரியமும் தனக்கே சொந்தமான ஓர் இயல்பான உத்தமதனத்தைக் கொண்டுள்ளது. இதுவே அது என்னவாக இருக்கிறதோ, அப்படி அதை ஆக்குகிறது, அதற்கு முறையான தன்மையைத் தருகிறது. சிற்பி தன்னிடமுள்ள கல்லை, உதாரணமாக, அர்ச். சூசையப்பரின், அல்லது அர்ச். சவேரியாரின் சுரூபமாக வடிக்க எண்ணி அதன்படி வேலையைச் செய்யும்போது, அது தனது வடிவத்தின் உத்தமதனத்தைக் கொண்டுள்ளது.
கடைசி வகையான உத்தமதனம், ஒரு பொருள் தனது சத்துவங்களின் இறுதியான, முடிவான வளர்ச்சியை அடையும்போது பெறப் படுகிறது.
உத்தமதனத்தின் இந்த மூன்று வகைகளும் வளர்ச்சி பெறக் கூடியவையாக இருக்கின்றன. ஒன்று, மற்றொன்றுக்கு மேற்பட்ட தாக இருக்கிறது, இரண்டாவது, முதலாவதற்கு மேற்பட்டதாகவும், கடைசியானது இரண்டாவதற்கு மேற்பட்டதாகவும் இருக்கிறது. ஏனெனில் வடிவத்தின் உத்தமதனத்தைக் கொண்டிருப்பது, தகுதியின் உத்தமதனத்தைக் கொண்டிருப்பதை விட அதிக உத்தம மானதாக இருக்கிறது, அவ்வாறே வளர்ச்சியின் இறுதி நிலையை அடைவது, தன்மை அல்லது வடிவத்தின் உத்தமதனத்தைக் கொண் டிருப்பதற்கு மேற்பட்டதாக இருக்கிறது.
இந்தக் கொள்கையை இப்போது விளக்கி விட்டோம் என்பதால், மாமரியின் இலட்சணங்களைப் பற்றிப் பேசுவதில் நாம் பின்பற்ற வேண்டிய வழி இப்போது நமக்கு முன் தெளிவாயிருக்கிறது. அவை அனைத்தையும் ஒழுங்கோடும், தெளிவாகவும் விளக்குவது மட்டும் நமக்குத் தேவையாயிருக்கிறது. நாம் முதலில் மாமரியின் தகுதியின் உத்தமதனத்தைப் பற்றிப் பேசுவோம், அதன்பின் அவர்களது வடிவ உத்தமதனத்தையும், இறுதியாக, இறுதி உத்தமதனத்தையும் பற்றிப் பேசுவோம்; ஆகவே, இந்தப் புத்தகத்தை இந்தக் கொள்கையின்படி மூன்று அத்தியாயங்களாக நாம் பிரித்துக்கொள்வோம்.