இயேசுவின் திரு இருதயமும் திருத்தந்தைகளும்!

1720 - ஆம் ஆண்டு மார்செயிஸ்' நகரில் ஏற்பட்ட பிளேக் நோயால் 40,000 பேர் இறந்தனர். அந்நகர ஆயர் அந்நகரத்தை இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடுத்தார். இயேசுவின் திரு இருதயத் தொடர் மன்றாட்டும்' (பிரார்த்தனை) அமைக்கப்பட்டு பாடப்பட்டது.

1856 - ல் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் திரு இருதயத் திருநாளைத் திருச்சபையெங்கும் கொண்டாட்” உத்தரவிட்டார். கன்னிகை மார்கரீத் மரியாளுக்கு முக்திப்பேறு பட்டமும் அளித்தார். நெடுமடல் ஒன்று வரைந்து மக்கள், அன்பின் பலியான இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி ஆர்வத்தோடு தொடர்ந்து செபிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

திருத்தந்தை 13- ஆம் சிங்காராயர், 1899 - ல் நெடுமடல் ஒன்று எழுதி, மனுக்குலம் முழுவதையும் இயேசுவின் திரு இருதயத்துக்கு அற்பணிக்கும் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் இப்பக்தியைக் கடைபிடிக்கப் பரிந்துரை செய்கிறார்.

அவர் இறுதியாக திருச்சபையின் தொடக்கக் காலத்தில் உரோமை சீசர் அரசர்களின் ஆதிக்கத்துக்குள், திருச்சபை அகப்பட்டு அல்லலுற்ற காலத்தில் 'கான்ஸ்ட ன்டைன்' என்ற ஓர் இளம் அரசர் வானத்தில் சிலுவை அடையாளத்தைக் கண்டார்;

அவ்வடையாளத்தைக் கொண்டு மகத்தான வெற்றி பெற்றார். இன்று நம் முன் வேறோர் அடையாளம் தோன்றுகிறது; அதுதான் இயேசுவின் திரு இருதயம்; அன்பின் சுடரின் நடுவில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் இருதயமும், அத்தூய இருதயத்தின் நடுவில் ஒரு சிலுவையும் காட்சியளிக்கின்றன. அத்திரு இருதயத்தில் நம் நம்பிக்கையெல்லாம் வைக்க வேண்டும். மனிதர் ஈடேற்றம் அடைய அத்திரு இருதயத்தை மன்றாட வேண்டும்" எனத் தம் மடலை முடிக்கிறார்.

அவர், இயேசுவின் திரு இருதயப் பக்தியைப் பரப்ப வேறு சில காரியங்களையும் செய்தார். 1899 ஜூன் 28 - ல் 'இயேசுவின் திரு இருதயத் திருநாளை முதல் தர திருநாளாக உயர்த்தினார். தலை வெள்ளிதோறும் திரு இருதய திருப்பலியை, வேண்டுதல் திருப்பலியாகச் செய்விக்க கட்டளை பிறப்பித்தார்.

திருத்தந்தை 15-ஆம் ஆசீர்வாதப்பர், முத். மார்கரீத் மரியாளுக்கு புனிதை பட்டம் வழங்கி 'திரு இருதயப் பக்தி இக்காலத்துக்கு மிகவும் தேவை' எனக் குறிப்பிடுகிறார்.

திருத்தந்தை 11- ஆம் பத்திநாதர் 1928 - ல் இயேசுவின் திரு இருதயத்துக்குச் செய்யப்படும் நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்' என்னும் பொருள் பற்றி ஒரு நெடுமடல் வரைந்தார். இயேசுவின் திரு இருதயத் திருநாளை எட்டுநாள் சிறப்புடன் கொண்டாட ஏற்பாடு செய்ததுடன், தம் நெடும் மடலோடு, பரிகாரச் செபம்' ஒன்றை அமைத்துக் கொடுத்து, அதனை இயேசுவின் திரு இருதயத் திருநாளன்று பகிரங்கமாகச் சொல்லப் பணித்தார். 1932 - ல் 'மானிடரின் இன்றைய துன்பங்களுக்குப் பரிகாரமும் செபமும் ' என்னும் பொருள் பற்றி ஒரு நெடுமடல் வரைந்தார்.

இயேசுவின் திரு இருதயப் பக்திக்குச் சிறப்பிடம் அளித்து, புனிதை மார்கரீத் மரியாளுக்கு ஆண்டவர் கொடுத்த 12 வாக்குறுதிகள் வழி அருட் கொடைகளைப் பெற இன்னல்களில் சிக்கித் தவிக்கும் மானிடரைக் கேட்டுக் கொண்டார்.

திருத்தந்தை 12 - ஆம் பத்திநாதர் 1956 - ல் "மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அக மகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்" (எசா. 12:3) என்ற வசனத்தைத் தொடக்கமாகக் கொண்டு ஒரு நெடுமடல் வரைந்து அனைத்துலக மக்களுக்கும் தந்தார். இயேசுவின் திரு இருதயத்துக்கு ஏன் தேவாராதனை செலுத்த வேண்டும்?' என்பதற்குப் பல காரணங்களைத் தருகின்றார்.

திருத்தந்தை 6- ஆம் சின்னப்பர், 1965 - ல் "கிறிஸ்துவின் அளவறுக்கப்படாத செல்வங்கள்" எனத் தொடங்கும் நெடிய மடல் வழியாக 'வத்திக்கான் சங்கம் காணத் துடிக்கும் மறு மலர்ச்சிக்கு இயேசுவின் திரு இருதயப் பக்தியே இணையற்ற வழி' எனப் போதித்தார். இந்த திரு இருதயப் பக்தி விரிந்து பரந்த இயேசுவின் அன்பையும், மனிதரை ஒருவரையொருவர் பிணைக்கும் உறவையும் தெளிவுப்படுத்துகின்றது.

1974 - ல் தென் அமெரிக்காவில் ஈக்வடாரில் குயிட்டோ ' என்ற இடத்தில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டின்போது திருத்தந்தை 6- ஆம் சின்னப்பர் 'இயேசுவின் திரு இருதயப் பக்திக்கும் நற்கருணைக்குமுள்ள தொடர்பை விசுவாசிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.