இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - கிள்ளை பயிற்றல்

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

வயலெலாஞ் செந்நெல் வரப்பெலா முத்தம்
வழியிரு மருங்கெலாம் பவளம்
அயலெலாம் பணிலம் அகழெலாம் ஆம்பல்
அம்புயத் தொகையெலாம் அன்னம்
கயலெலாம் நீர்பாய் மடையுடை யெண் ணூர்க்
காவலன் காப்பவ னென்று
பயனெலாஞ் சுவைக்கும் பசுந்தமிழ்க் கிளிகாள்!
பாடுமின் அவன் புகழ் தலத்தே.

தலமெனுந் தாயைப் பணிதல்போற் செந் நெல்
தலையினால் வணங்கு மெண்ணூரன்
அலகிலாக் கதிர் சால் அருக்கன் அம்புலி மீன்
அணியெனத் திருவுடல் புனைந்து
உலகெலாம் படைத்த ஒருவனை யளித்த
ஒருத்தியைப் புரந்தன னென்று
பலகலைக் கேள்விப் பசுந் தமிழ்க் கிளிகாள்!
பாடுமின் அவன் புகழெடுத்தே.