இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - அன்னவிடு தூது

எழுசீராசிரிய விருத்தம்.

வரமெலாம் திரண்ட வடிவுடை யழகன்
வளனெனுந் தமிழ்ப் பெயருடையான்
கரதலத்தொருபூங் கொடியின னெண்ணூர்க்
காவலன் கோயில் வந்தமர்ந்தான்
உரஞ்செய் அத் தலைவன் அறிகுறி யெல்லாம்
ஓதினேன் உன் மனம் தெளிய
அருஞ்சிறை அனமே! தூதெனப் போய்
அழைத்தவென் றனை வருவாயே.

இதுவுமது.

அலையெலாங் கொழித்த முத்தெலா மகளிர்
அரித்தரித் தெடுத்து செய் குன்றம்
விலையெலாங் கடந்த அவன் பெயர்ப் புகழ் போல்
வெள்ளொளி பரப்பு மெண்ணூரன்
கலையெலாங் கடந்த அறிவின ன டியார்
கருதுமுன் கருணைசெய் வள்ளல்
அலகு றும் அனமே! தூதெனப் போய்
அவன் றனைக் கொடு வருவாயே.

இதுவுமது

நேரிசை வெண்பா.

கொஞ்சி கொஞ்சிப் பேசுங் குழந்தை காத்திருப்பான்
அஞ்சொன் மனையா ளருகி ருப்பாள் - கஞ்சமலர்
அன்னமே! தூ தா அமயம் தெரிந்தெண் ணூர்
மன்னவனைக் கண்டு வழுத்து.

கட்டளைக் கலித்துறை.

வருவார்க்கு நன்மை யருள்செய்யு மெண்ணூர் வரோதயனே!
உருவாக்கி யென்னைக் கலைஞான மற்றும் உணர்வித்தனை
மருவாக்கு கூந்தல் மட்வார் மயக்கில் மனந்தெளியத்
தருவாக்கி வந்து தருவாயுன் பாத தரிசனமே.