இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் சூசையப்பர் கலம்பகம் - வினாவுத்தரம்

எண் சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம், 

தொல்லறத்தின் ஞானியர்கள் அறமிரண்டாத்
துறவென்றும் மனை யென்றுந் தொகுத்திருக்கப்
பல்லறத்தின் புகழ்படைத்த எண்னூர் வாழும்
பாவலரே! யாரை நீர் பகட்டுகின்றீர்
இல்லறத்தில் மனையிருக்க மகனிருக்க
ஈரறமு மோரறமா விழைத்த தென்னா
நல்லறத்திற் புகல்வது மக் கடைவோ? அந்த
நடுநீதி நாடறிய நாட்டுவீரே.

இதுவுமது

நாட்டுவதென்? பல நீதி கங்காய்! கேளாய்
நமதையர் எண்ணூரார் துறவறத்தைக்
கூட்டுதற்காத் தவவனத்துக் குன்றிவர்ந்த
குறிப்பறிந்தோர் பெருவானோன் குறுக்கிட்டாங்கே
நாட்டினிலே யிவ்வொழுக்கங் கொண்டு சேர்க்கின்
நல்லறத்தோ டில்லறமும் நடக்குமென்ன
ஈட்டருமா தவங்கொண்டார் மனை யிலீது
ஈரறமு மொன்றான வியல்பதன்றோ.

கட்டளைக் கலித்துறை.

தனத்துக் கழகு தகுங்கொடை நீழல் தருக்கழகே
புனத்துக்கழகு விளை பயிர் ஞானம் பொறிக்கழகே
கனத்துக் கழகு பெருமழை யென்பர் கரு துமென் றன்
மனத்துக் கழகுநீ யன்றோ வெண் ணூர் வரு மாணிக்கமே.

காலம்.
எண் சீராசிரிய விருத்தம். 

மாத்திசைக ளேறிட்டுப் பார்க்குங் காலம்
மனமெலிய வீடழிந்து வாடுங் காலம்
நாத்தழும்பத் தழுதமுத்துப் பேசாக் காலம்
நயமென்றுஞ் சிந்தித்து நடவாக் காலம்
பூத்தொடுத்துத் திருவடியிற் புனையாக் காலம்
புண்பலவுந் திருத்தமுற வணியாக் காலம்
பாத்தொடுத்த தமிழ் மாலை மணக்கு மெண்ணூர்ப்
பதியுடையார் எதிர்பாராக் காலந்தானே.