அக்டோபர் 16

அர்ச். கெய்ல் - மடாதிபதி (கி.பி. 646) 

தனவந்தரும் பக்தி விசுவாசமுள்ளவர்களுமான தாய் தந்தையரிடமிருந்து கெய்ல் என்பவர் பிறந்து தன் பெற்றோரால் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டார். 

இவர் சிறுவராயிருக்கும்போதே ஒரு சந்நியாச மடத்தின் சிரேஷ்டர் கையில் ஒப்புவிக்கப்பட்டு தர்ம வழியைக் கைப்பற்றினார். இவருக்கு வயது வந்தபின் துறவியாகி தன் சிரேஷ்டருடன் பிரான்ஸ் தேசத்திற்குச் சென்று சில மடங்களைக் கட்டி அதில் அநேக துறவிகளைச் சேர்த்து ஜெப தபம் முதலிய புண்ணிய கிருத்தியங்களைச் செய்துவந்தார். 

அருகாமையிலிருந்த அஞ்ஞானிகளின் நகரத்தில் சத்திய வேதத்தை வெகு சிரத்தையுடன் பிரசங்கித்து, அவர்கள் ஆராதித்து வந்த பேய்க் கோவில்களிலுள்ள விக்கிரகங்களை உடைத்தெறிந்து, மெய்யான சர்வேசுரனை மாத்திரம் ஆராதித்து வணங்கும்படி அறிவுரைக் கூறினார். 

அந்த நகரில் பெரும்பாலோர் அர்ச்சியசிஷ்டவரின் புத்திமதியைக் கேட்ட போதிலும் சிலர் மாத்திரம் அவருக்குக் காது கொடாமல், அவரையும் அவருடைய சன்னியாசிகளையும் துன்பப்படுத்தி, இரு சன்னியாசிகளைக் கொலை செய்தார்கள். 

கெய்ல் மனந்தளராமல் ஊக்கத்துடன் உழைத்ததினால், அந்த அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். வேறொரு ஊரிலுள்ளவர்கள் துஷ்ட மிருகங்களால் துன்பப்பட்டதை கெய்ல் அறிந்து, அவ்விடத்தில் தேவதாயார் பேரில் ஒரு கோவில் கட்டியபின் துஷ்ட மிருகங்கள் அந்நாட்டை விட்டு அகன்று போயின. 

இவர் அநேக புதுமைகளைச் செய்து, தமது சன்னியாசிகளுடன் ஜெப தபங்களைப் புரிந்து, புண்ணிய வழியில் உயர்ந்து, முதிர்ந்த வயதில் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.

யோசனை

தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, சிறு வயதிலேயே அவர்களை சன்மார்க்கத்தில் வளர்த்து சத்திய வேத பள்ளிக்கூடங்களுக்கு அவர்களை அனுப்பக்கடவார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். லல்லுாஸ், அதிமே. 
அர்ச். மம்மோலின், மே.