இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜென்மப் பாவம்

இந்தப் பாவம் மனிதனைக் கடவுளின் பகைவனாகவும், சாத்தானின் அடிமையாகவும் ஆக்குகிறது. ஒவ்வொரு மனிதனோடும் கூடப் பிறக்கிற பாவம் என்பதால் ஜென்மப் பாவம் எனப் படுகிறது. மனிதர்கள் தங்கள் ஆதிப் பெற்றோரின் பாவத்தோடு இவ்வுலகில் பிறக்கிறார்கள்.

இதில் அநீதி எதுவுமில்லை. மகன் தந்தையின் செல்வங்களுக்கு வாரிசாக இருப்பது போல அவனது கடன்களுக்கும் வாரிசாகிறான். ஒரு நாட்டின் அரசன் செய்யும் போர்ப் பிரகடனத்தால் கடைசிக் குடிமகன் வரை பாதிக்கப்படுகிறான். இவ்வாறே ஆதாமின் பாவம் மனுக்குலம் முழுவதையும் பாதிப்பதாக இருக்கிறது. இந்தப் பாவத்தால் ஆதாமும் அவன் சந்ததியாரும் தங்கள் பரிசுத்தமும் பாக்கியமுமான அந்தஸ்தை இழந்து, சகல துன்பங்களுக்கும் இறுதியாக மரணத்திற்கும் உட்பட்டார்கள். இந்தப் பாவத்திற்கு தேவசிநேகத்தினால் பரிகாரம் செய்யப் படாவிடில், மனிதன் பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவியத்தையும் அடைய வழியே இல்லை. 

காயீனும் ஆபேலும்

காயீன் ஜென்மப் பாவத்தின் மகனாக இருந்தான். அந்தப் பாவத்தின் விளைவாகவே அவன் கருத்தரிக்கப்பட்டான். ஆகவே அவன் சாபத்திற்குரியவனாகவும், சகோதரனைக் கொன்ற வனாகவும், கடவுளின் கண்களுக்கு அருவருப்பானவனாகவும் இருந்தான். ஆனால் ஆபேல் ஆதிப் பெற்றோரின் மனஸ் தாபத்தினுடையவும், பரிகாரம் செய்யும் ஏக்கத்தினுடையவும் இத மகனாக இருந்தான். எனவே அவன் கடவுளுக்குப் பிரியமான வன் ஆனான். பரிகாரத்தின் முக்கியத்துவம் இவ்வாறு இந்த இருவரால் எண்பிக்கப்படுகிறது. 

ஜென்மப் பாவம் சரீரப் பாவமும், தேவசிநேகமின்மையுமாக இருக்கிறது!

நன்மை தீமை அறியும் மரத்தின் கனியாக உருவகிக்கப்படுகிற பாவம் உண்மையில் சரீர அசுத்தப் பாவமே. ஆடையற்றிருந்தும் அதை உணராத அளவுக்கு மாசற்றவர்களாக, கடவுளின் திருமுன் பச்சிளங்குழந்தைகளாக நம் ஆதிப் பெற்றோர் இருந்தார்கள். சாத்தானோ மனிதன் மீது பொறாமை கொண்டு ஏவாளை வஞ்சித்தான்; சரீர இச்சையின் அருவருப்புக்குரிய சுகத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தினான்; அவளது கண்களிலும், சரீரத்திலும் இச்சையின் உணர்வை எழச் செய்தான்; இவ்வாறு அவள் இந்தக் கனி, ''புசிப்பதற்கு நல்லதென்றும் பார்வைக்கு நேர்த்தியான தென்றும், அதை நோக்கினால் கண்குளிருமென்றும்" (ஆதி. 3:6) நம்பி ஏமாந்து, தன் கணவனையும் தன் கண்களின் இச்சையின் வலையில் விழச் செய்தாள். இவ்வாறு இருவரும் தங்கள் மாசற்றதனத்தை இழந்து, மனுக்குலம் முழுவதன் மீதும் சாபத்தை வருவித்தார்கள்.

ஜென்மப் பாவத்திற்குக் கடவுள் தந்த சரீரத்திற்கு எதிரான தண்டனைகளும் கூட இது சரீர அசுத்தப் பாவமே என்பதை எண்பிக்கின்றன. நெற்றி வேர்வை நிலத்தின் விழப் பாடுபட்டு, தன் அப்பத்தைப் புசிக்குமாறு ஆதாமும், வேதனையோடு பிள்ளைகள் பெறும்படி ஏவாளும் தண்டிக்கப்பட்டது இதை விளக்குகிறது. இதற்கு, மேலும் ஒரு தெளிவான விளக்கமாக, கடவுள் மனிதனின் காவியம், இரண்டாம் புத்தகத்தில், யூதாஸ் சரீரப் பாவத்தை வெறுப்பவனாகத் தன்னைக் காட்டிக்கொண்டபோது, சேசுநாதர் கூறிய வார்த்தைகளும் இதை எண்பிக்கின்றன: "ஏவாள் கொடுத்த கனியை நான் விரும்பியதேயில்லை என்னும் அளவுக்குத் தூய்மையானவன் யார்?" என்று அவர் கேட்கிறார் (அத். 77, பக். 306).

இஸ்பிரீத்து சாந்துவால் உருவான நம் ஆண்டவரையும், பாவமின்றி உற்பவித்த நம் மாதாவையும் போல, ஆணின் துணையின்றி, மாசற்றவர்களாக உற்பவித்துப் பிறந்து, மாசற்றவர்களாகவே வாழ்ந்து, பாவத்தையும் மரணத்தையும் அறியாமல் நம் திவ்ய அன்னையைப் போலவே மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர்களாக இருந்த நம்மை இப்பாவமே அசுத்தத்திற்கும், துன்பங்களுக்கும், மரணத்திற்கும், நரகத்திற்கும் பாத்திரவான்களாக்கியது.

மேலும் ஜென்மப் பாவம் சாத்தானின் ஆங்காரம், கீழ்ப்படியாமை மற்றும் ஊழியம் செய்ய மறுத்தல் ஆகிய தீமைகளின் மனிதப் பிரதிபலிப்பாகவும் இருந்தது. இந்தப் பாவத்தின் மூலம் மனிதனும் சாத்தானைப் போலவே ஆங்காரத்தினால் கடவுளுக்குக் கீழ்ப்படிய மறுத்தான், "உமக்கு நான் ஊழியம் செய்ய மாட்டேன்" (Non serviam!) என்று அறைகூவல் விடுத்தான்.

இங்கே பரிகாரத்தின் அவசியத்தையும், அழகையும் தெளிவாக்குகிற ஒரு காரியம் உள்ளது : துன்பம் எப்போது இந்த உலகில் பிறந்தது என்பதை சிந்தித்துப் பாருங்கள். சாத்தானால் பாவம் பிறப்பிக்கப்பட்ட அதே நாளில், அதற்குப் பரிகாரமாகத் துன்பமும் பரலோகத்தால் உலகில் பிறப்பிக்கப்பட்டது. உண்மையில் துன்பத்தைப் பாவத்திற்குரிய தண்டனையாகக் கருதுவதைவிட, அளவற்ற தேவசிநேகத்திற்கு எதிராக செய்யப்பட்ட துரோகத்திற்குப் பரிகாரம் செய்வதற்கான அற்புதமான வாய்ப்பாகக் காண்பது நமக்கு அவசியமாக இருக்கிறது.