இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவங்கள் எனக்கு (மாதாவுக்கு) எதிராகச் செய்யப்படுகின்றன!

தேவ அன்னை ல சலேத்திற்குக் கடவுளால் அனுப்பப்படும் ஒரு தீர்க்கதரிசினியாக வந்தார்கள். மனிதர்கள் செய்யும் பாவங்களைப் பற்றியும், அவற்றிற்கு வரவிருக்கும் தண்டனை பற்றியும் கண்ணீரோடு முறையிட்டார்கள்.

அடுத்து, லூர்து நகரில் தேவமாதா காட்சி தந்து, ஜெப மாலையின் முக்கியத்துவத்தைப் பிரசித்தப்படுத்தினார்கள்; தவம், பரிகாரத் தின் முக்கியத்துவத்தை அறிக்கையிட்டார்கள்; இஸ்பிரீத்து சாந்துவானவரோடு தனக்குள்ள பிரிக்க முடியாத தெய்வீக ஐக்கியத்தை வெளிப்படுத்தும்படியாக, "நாமே அமலோற்பவம்” என்று தன் திருப்பெயரை அறிவித்தார்கள்.

இந்த இரு காட்சிகளிலுமே மனிதர்கள் பாவம் செய்வதை விட்டு விலகி, பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதன் அவசியத் தையும், அவசரத்தையும் மாதா வெளிப்படுத்தினார்கள். இறுதியாக, தேவமாதா பாத்திமாவில் தோன்றி, அனுதின ஜெப மாலையின் முக்கியத்துவத்தையும், தனக்கு எதிராகச் செய்யப் படும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்கள். முந்தின இரு காட்சிகளுக்கும், இந்த பாத்திமா காட்சிகளுக்குமிடையே சில வேறுபாடுகளை நாம் காண முடிகிறது.

1. முதல் சனி பக்தியை அனுசரிப்பவர்களுக்கு தேவ அன்னை இரட்சணியத்தை வாக்களித் தார்கள்;

2. முதல் காட்சியில் தேவமாதா தன் கரங்களிலிருந்து குழந்தைகளின் மீது பாயவிட்ட ஒளி, அவர்கள் கடவுளுக்குள் மூழ்கியிருப்பதாக உணரச்செய்தது;

3. இரண்டாம் காட்சியில் பிரான்சிஸையும் ஜஸிந்தாவையும் தான் மோட்சத்திற்கு எடுத்துக் கொள்வதாக மாதா கூறினார்கள்;

4. இறுதியாக, 1929, ஜூன் 13 அன்று ஸ்பெயின் நாட்டில் துயி நகர மடத்தில் நிகழ்ந்த தமத் திரித்துவக் காட்சியில், "எனக்கு எதிராகக் கட்டிக்கொள்ளப்படும் பாவங்களுக்காகக் கடவுளின் நீதி மிக அநேக ஆன்மாக்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிடுகிறது" என்று வேதனையோடு கூறினார்கள்.

இந்த நான்கு இடங்களிலும், தெய்வீகத் தன்மைக்கு உயர்த்தப்பட்டு விட்ட கடவுளின் அதியற்புத சிருஷ்டியாக மாதாவை நாம் காண்கிறோம். சர்வேசுரனோடு பிரிக்க முடியாதபடி ஒன்றித்திருப்பதால், மாமரியை நாம் பரலோகத்தின் மீது முழு அதிகாரமுள்ளவர்களாகவும், சர்வேசுரனுடைய ஒளியையே தன் சொந்த ஒளியாகக் கொண்டிருப்பவர்களாகவும், யாரையும் மோட்சத்திற்கு எடுத்துக்கொள்ள அதிகாரமுள்ளவர்களாகவும் காண்கிறோம். நாம் ஏற்கெனவே அறிந்துள்ளது போல, பாவம் கடவுளுக்கு மட்டுமே எதிரானது என்ற போதிலும், கடவுளோடு ஒன்றாக, முழுமையாக ஐக்கியப்பட்டிருப்பதால், "பாவம் எனக்கு எதிராகச் செய்யப்படுகிறது" என்று சொல்ல வல்லமையுள்ள திவ்ய கன்னிகையாக மாதாவை நாம் பார்க்கிறோம்.

இந்த இறுதிக் காலத்தில், தனக்கு மிகக் கொஞ்ச காலமே எஞ்சியுள்ளதை அறிந்திருக்கிற சாத்தான், முடிந்த வரை அதிக ஆன்மாக்களை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் முனைப்போடு, அவர்களைத் தனது பரம எதிரியான தேவ அன்னைக்கு எதிராகத் திருப்புகிறான்; அவன் தருகிற உலக நன்மைகளுக்காக அவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கும் பயங்கரத்துக்குரிய பாவிகளை அவன் தேவ அன்னைக்கு எதிராக ஏவி விடுகிறான். இவர்கள் மாதாவின் மீதும், அவர்கள் மீது பக்தி கொள்ளும் அவர்களுடைய குழந்தைகள் மீதும் கடும் துவேஷம் கொண்டு, கடவுள் மாதாவுக்குச் சிறப்பான முறையில் வழங்கியிருக்கிற விசேஷ வரப்பிரசாத சலுகைகளை மாதாவின் பிள்ளைகள் மறுக்கச் செய்வதற்காக, மாதாவைப் பற்றிய தவறான போதனைகளை எங்கும் பரப்பி வருகிறார்கள். போன்ற வேத்ரா காட்சியில் சேசுபாலனே கேட்டுக் கொண்டது போல ஐந்து வகைகளில் மட்டுமின்றி, மாதாவின் ஒவ்வொரு வரப்பிரசாத சலுகையையும் அவர்கள் மறுதலிப்பதோடு, மாதாவின் மீதான வெறுப்பைக் குழந்தைகளின் மனங்களிலும் ஊட்டுகிற மாபெரும் துரோகத்திலும் ஈடுபடுகிறார்கள். என்றாலும், இந்த எல்லா நிந்தை களிலும் மிக மோசமான ஐந்து நிந்தைகளை மட்டும் சேசுபாலன் அறிவித்து, அவற்றிற்கு முதல் சனி பக்தியை அனுசரிப்பதன் மூலம் பரிகாரம் செய்து, தமது திவ்விய அன்னையின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் அளிக்கும்படி நம்மிடம் கேட்கிறார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். தேவ அன்னையின் அமலோற் பவமும், நித்திய கன்னிமையும், தெய்வீகத் தாய்மையும் நிந்தித்து வெறுப்பவர்கள் கிறீஸ்து நாதருடைய மாசற்ற மனிதாவதாரத்தையும், அவருடைய தெய்வீகத்தையுமே நிந்தித்து மறுக் கிறார்கள். இங்கே தேவ அன்னை இரண்டு காரியங்களின் நிமித்தம் ஆறுதலின்றித் தவிக் கிறார்கள். அவற்றில் முதலாவது: அவர்களுக்கு எதிரான பாவங்களின் வழியாக, அவர்களுடைய திருக்குமாரனின் பரிசுத்த மனுஷீகமும், தெய்வீகமும் மறைமுகமாக மறுதலிக்கப்படுவது அவர்களுக்கு சொல்லொணாத வேதனையை அளிக்கிறது. இரண்டாவது : மாமரிக்கு எதிரான பாவங்களின் நிமித்தமாக, எதிரிகளாகவே இருந்தாலும் தன் சொந்தப் பிள்ளைகளாகவே இன்னும் இருக்கிற பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்வதைக் கண்டு அன்னையின் மாசற்ற இருதயம் கொடிய விதமாய்க் குத்திக் கிழிக்கப்படுகிறது. இதுவே மாமரி யின் இருதயத்தைக் குத்தி ஊடுருவும் மிகக் கொடிய வியாகுல வாளாக, அவர்களுடைய திருவிலாக் காயமாக இருக்கிறது.

இப்போது தேவ அன்னை கேட்டுக்கொண்டபடி முதல் சனி பக்தியின் மூலம் அவர்களுக்கு ஆறுதலளிப்பது எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குப் புரிகிறது. மாதாவுக்கு எதிரான பாவங்கள் பிதாவின் கடுஞ்சினமுள்ள நீதியை எப்படித் தூண்டி விடுகின்றன என்பதை நாம் உணர முடிகிறது. இந்நிலையில் நாமாவது இந்தப் பரிகார பக்தியை நன்றாகவும், முழுமையாகவும் செய்து, மாதாவுக்கு ஆறுதல் தர முன்வருவோம். அப்போது மாதாவின் இருதயம் மகிழ்ச்சி கொள்ளும், சேசுநாதர் ஆறுதல் பெறுவார், பிதாவானவரின் கடுஞ்சினம் தணிக்கப்படும்; அதனால் ஏராளமான ஆன்மாக்கள் நித்திய நரகத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். 

மரியாயே வாழ்க!