இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கல்வாரிப் பலி: உன்னத தெய்வீக பாவப் பரிகாரம்!

அதோ கல்வாரி மலை! அங்கே திருச்சரீரம் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டு, பரிகார அரசராக முள்முடி தரித்து, உடல் முழுவதும் புண்ணாக, ஏறக்குறைய ஆடையிழந்தவராக, மனித அசுத்தங்களால் நிரப்பப்பட்டவராக, மூன்றாணிகளால் ஒரு சிலுவை யோடு பிணைக்கப்பட்டு, தம்மிடம் சகலரையும் ஈர்த்துக் கொள்ளும் தாகத்துடன் பூமியினின்று உயர்த்தப்பட்டிருக்கிறவர் யார்?

அவரே சர்வேசுரன்! பரலோக, பூலோக, பாதாள லோகங் களையும், அதுகளிலடங்கிய சகலத்தையும் ஒரே வார்த்தையால் உண்டாக்கியவர்! சர்வ வல்லபர்! சகல சிருஷ்டிகளின் வல்லமை முழுவதையும் ஒன்றாக இணைத்தாலும், அவை அவருடைய பலவீனத்திற்கு ஈடாக இயலாது! அவரே இருக்கிறவர்! நித்தியர், அரசர்களுக்கு அரசர்! தம் சிந்தனையின் ஒரே ஒரு அசைவால் இப்போ திருக்கிற உலகம் முழுவதையும் சுட்டெரித்து, புதிய பரலோகத் தையும், புதிய பூலோகத்தையும் அடுத்த கணப் பொழுதில் உருவாக்க வல்லவர்!

பின் ஏன் இந்த தரித்திரக் கோலம்! ஏன் சிலுவையின் மீது இந்த அச்சத்திற்குரிய தவக் கோலம்! எதற்காக இப்படி சகலத்தையும் இழந்தவராக, தம் அன்புத் தாயாரின் மாசற்ற இருதயமே வெடித்து விடும் அளவுக்கு மிகப் பரிதாப நிலையில் அவர் தொங்கிக் கொண்டிருக்கிறார்?

இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. ஏனெனில் அவர் அளவற்ற விதமாய் நம்மை யெல்லாம் நேசிக்கிறார்! வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர் தம் விரலால் பிடித்திருக்கிற ஒரு நூலில் கட்டுண்டவர்களாக, மரண பாதாளத்தின் மீது தொங்கியபடி தங்கள் பாவத்தால் அவரையே பரிகசித்துக் கொண்டிருக்கிற பரிதாபத்திற்குரிய மனிதர்களை நேசிக்கும்படியாக அவர் இப்படித் தம்மையே பலியாக்கிக் கொண்டிருக்கிறார்!

ஒருவேளை இந்தப் பலி நிகழாவிடில் மனிதர்களுக்கு என்ன ஆகும்? நித்தியப் பரலோகக் கதவுகள் அவர்களுக்கு என்றென்றைக்கும் அடைபட்டவையாகவே இருந்திருக்கும். கர்மப் பாவத்தையே அறியாத பச்சிளங்குழந்தைகளும் கூட மோட்சம் செல்ல இயலாதவர்களாக இருந்திருப்பார்கள். மனிதன் என்றென்றைக்கும் கடவுளின் சிநேகத்தை இழந்தவனாகவும், அவரது எதிரியாகவும் விடப்பட்டிருப்பான். ஏனெனில் சேசுநாதரின் திருப்பாடுகளும், அவருடைய கல்வாரித் திருமரணமும் மட்டுமே இரட்சணியத்திற்கான ஒரே பலியாக இருக்கின்றன. அவை மட்டுமே பாவத்திற்கான ஒரே பரிகாரமாகவும் இருக்கின்றன.

ஆம், திருச்சிலுவையே நம் ஏக இரட்சணியக் கருவியாக இருந்தது. அதன் வழியாகவே, "மரணம் வெல்லப்பட்டது, ஆதித் தகப்பனின் பாவம் அழிக்கப்பட்டது, நரகம் ஏராளமான ஆன்மாக்களை இழந்து போனது, உயிர்ப்பு பரலோகத்தினின்று பொழியப்பட்டது, உலகக் காரியங்களையும், மரணத்தையும் கூட நிந்தித்துப் பரிகசிக்கும் வல்லமை நமக்குத் தரப்பட்டது ... நம் சுபாவம் கடவுளின் வலது பக்கத்தில் அமர்த்தப்பட்டது, நாம் கடவுளின் பிள்ளை களாகவும் பரலோக வாரிசுகளாகவும் ஆக்கப்பட்டோம்" என்கிறார் அர்ச். தமாஸின் அருளப்பர்.

ஆகையால் உத்தமமான முறையில் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்பும் கிறீஸ்தவர்கள் அனைவரும் சேசுநாதருடைய திருச்சிலுவையோடு தங்களைப் பிணைத்துக் கொள்வார்களாக. சிலுவையில்தான் இரட்சணியம்! சிலுவையில் தான் பாவப் பரிகாரம்!