இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தனி ஜெபமாலை, குடும்ப ஜெபமாலை

மாதாவின் பிள்ளைகளாகிய நீங்கள் இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறீர்கள். ஜெபமாலை சகல ஞான சரீர ஆபத்துக்களிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதோடு, சகல விதமான நன்மைகளையும், நித்திய இரட்சணியத்தையும் கூட நமக்குப் பெற்றுத் தருகிறது. குடும்ப ஜெபமாலை குடும்ப உறுப்பினர்களின் ஞான சரீர நலன்களைப் பாதுகாக்கிறது; குடும்பங்கள் சிதறாமல் பாதுகாக்கிறது; குடும்பத்தில் தேவ சமாதானம் நிலைபெறச் செய்கிறது. ஜெபமாலை மகா பரிசுத்த தேவமாதாவின் மேல் மாந்தையால் நம்மை மூடிப் பாதுகாக்கிறது.

எனவே முடிந்த வரை மாலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாதாவோடு அரை மணி நேரம் தங்கியிருந்து, மங்கள வார்த்தையால் அன்னையை வாழ்த்தி, அவர்களுடைய திருச்சுதனின் ஆசீர்வாதங்களை நிறைவாகப் பெற்றுக்கொள்வோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கிளிப்பிள்ளை போல, வெறும் வாய் வார்த்தையாகச் செய்யும் நீண்ட ஜெபங்களை விட, குழந்தைக்குரிய அன்போடு மனப்பூர்வமாகச் சொல்லும் ஒரு சில அன்பு நிறைந்த வார்த்தைகளையே கடவுள் அதிகம் விரும்புகிறார் என்பதை உணருங்கள். திருச்சபை நமக்கு எழுதித் தந்துள்ள ஜெபங்கள் மிகவும் முக்கியமானவை என்பது மிகவும் உண்மை, எனினும் ஜெபம் என்பது, தன் பெற்றோரிடம் கள்ளங்கபடின்றி பாசத்தோடு உரையாடும் குழந்தையின் மழலை மொழியைப் போன்றது. இந்த மனநிலையோடு நாம் ஜெபிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு வார்த்தை: 'துன்பப்படுவதால், அல்லது வேலைப் பளுவால் ஜெபிக்க முடியாத ஒருவன் உண்மையில் ஜெபிப்பதேயில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது. அவன் தன் துன்பங்களை அல்லது தான் செய்யும் வேலையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும் போது, அவனது துன்பங்களும் வேலையும் ஜெபமாக மாறிப் போகின்றன. பல சமயங்களில் நீண்ட ஜெபங்களில் ஈடுபடும் ஒருவனைவிட அவன் அதிகமாகவே ஜெபிக்கிறான்" என்று அர்ச். அவிலாதெரேசம்மாள் கூறுகிறாள்.

பாத்திமா தூதரும் நமக்கு இதையே கற்பிக்கிறார்: “நீங்கள் செய்யும் யாவற்றையும் ஒறுத்தல் முயற்சி ஆக்குங்கள். கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவற்றை ஒப்புக்கொடுங்கள்....... யாவற்றுக்கும் மேலாக, நமதாண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்று தாங்கிக் கொள்ளுங்கள். இதை நாம் செய்யும் போது, மிக எளிதான முறையில் நம் பாவங்களுக்கும், பிறர் பாவங் களுக்கும் பரிகாரம் செய்து, நம் அநித்தியத் தண்டனையை வெகுவாகக் குறைத்து விடுகிறோம்.