அமல உற்பவம்: விளக்கம்

ஆதிப் பெற்றோர் பாவம் செய்தவுடன் சர்ப்பமாகிய சாத்தானுக்கு சாபமாக சர்வேசுரன் மனித இரட்சணியத் திட்டத்தை அறிவித்தார். "உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம். அவள் உன் தலையை நசுக்குவாள்" என்பதுதான் அந்தத் திட்டம்.

இங்கே இரண்டு பகைகள் சர்வேசுரனால் ஏற்படுத்தப்படுகின்றன. சாத்தானுக்கு எதிரி பெண்; சாத்தானின் வித்துக்கு, அதாவது பாவத்திற்கும், அதன் சம்பளமாகிய மரணத்திற்கும் எதிரி, பெண்ணின் வித்து. இனி, "அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர், ஏனெனில் அவர் தம் ஜனத்தை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” (மத். 1:21) என்று அதிதூதரான கபிரியேல் அர்ச். சூசையப்பருக்கு அறிவித்தபடியும், "மரணத்தின் கொடுக்கு பாவம்.... நம்முடைய சேசு கிறீஸ்துநாதரைக் கொண்டு நமக்கு ஜெயம் தந்தருளின சர்வேசுரனுக்குத் தோத்திரம்" (1கொரி. 15:56,57) என்று அப்போஸ்தலர் கூறுகிறபடியும், நம் ஆண்டவராகிய சேசுவே சாத்தானின் வித்தாகிய பாவத்தின் மீதும், மரணத்தின் மீதும் வெற்றி கொள்ளும் பெண்ணின் வித்தாக இருக்கிறார். இதிலிருந்து இந்த ஸ்திரீகன்னிமாமரியே என்பது தெளிவாக விளங்குகிறது.

"மாமரிதான் லூசிபரை வெல்வதற்கு உலகத்திற்குக் கொண்டு வரப்பட்ட வீரமிக்க ஸ்திரீ என்றால், அவன் முதலில் ஜென்மப் பாவத்தின் மூலம் அவர்கள் மீது வெற்றி கொள்வதும், அவர்களைத் தன் அடிமையாக ஆக்கிக் கொள்வதும், நினைக்கக்கூட தகுதியற்றதாக இருக்கிறது; ஆனால் அவர்கள் எல்லாக் கறைகளினின்றும் பாதுகாக்கப்படுவதும், ஒரு கணம் கூட தன் எதிரிக்குக் கீழ்ப்படாமல் இருப்பதும் நீதியாக இருக்கிறது" என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் அறிக்கையிடுகிறார் (Discourse on the Immaculate Conception).

எனவே மகா பரிசுத்த கன்னிகை (1) சாத்தானின் தலையை நசுக்குகிற ஸ்திரீயாக இருக்க வேண்டும்; (2) அவர்கள் இரட்சணியத்தின் பலிப் பொருளானவருக்கு ஒரு மாசற்ற சரீரத்தைத் தந்து, அவரைத் தன் திருவுதரத்தில் உருவாக்கிப் பெற்றெடுக்க வேண்டும். இவற்றின் காரணமாக, அவர்கள் ஜென்ம மாசின்றி உற்பவித்துப் பிறப்பது, இன்றியமையாததாக இருக்கிறது.

இவ்வாறு தேவமாதாவின் அமலோற்பவம் சர்வேசுரனுடைய மகிமையாக இருக்க வேண்டியிருந்தது. தேவமாதா, தனது அமல உற்பவத்திலேயே சாத்தானின் மீது சர்வேசுரன் கொண்ட மாபெரும் வெற்றியாக இருக்கிறார்கள்.

தேவ சுதனானவர் தமது மனிதாவதாரத்தின் தொடக்கத்தில், தம் பிதாவை நோக்கி, "நீர் பலி யையும், காணிக்கையையும் விரும்பாமல், எனக்கு ஒரு சரீரத்தைப் பொருத்தினீர்; .... எனவே ... சர்வேசுரா, உம்முடைய சித்தத்தின்படியே செய்ய இதோ வருகிறேன்" என்கிறார் (சங்.39:6,7; எபி.10:5,7). இவ்வாறு பிதா மனிதர்களின் பாவப் பரிகாரத்திற்கென தம் திருச்சுதனுக்குப் பொருத்தித் தந்த திருச்சரீரம் பாவ மாசுமறுவற்றதாக இருக்க வேண்டியிருந்தது. அது தேவ-மனிதனுக்குத் தகுதியுள்ள சரீரமாக இருக்க வேண்டியிருந்தது. இந்த மாசற்ற திருச்சரீரத்தை, ஜென்மப் பாவத்தால் ஒரு வினாடி முதலாய்க் கறைபடாதிருந்த தமது சின்ன மகளாகிய மகா பரிசுத்த கன்னிகையின் திருவுதரத்தில் தான் நித்திய பிதா அவருக்கு உருவாக்கித் தந்தார். சேசுவுக்கு மாசற்ற சரீரத்தைத் தரும்படி அவரது தாயாரின் மாம்சமும், திரு இரத்தமும் மாசற்றவையாக இருக்க வேண்டியது கடவுளின் உன்னத நியமமாயிருந்தது. ஏனெனில் தேவ மனிதனின் திருச்சரீரத்தின் "வித்தாக" இருக்க நியமிக்கப்பட்டிருந்த மாதாவின் திரு இரத்தம் ஜென்மப் பாவத்தால் ஒரு கணமேனும் பாதிக்கப்பட்டிருந்தால், பாவப் பரிகாரத்திற்கென பரிசுத்த தமத்திரித்துவத்திற்கு பலியாக ஒப்புக் கொடுக்க ஒரு மாசற்ற திருச்சரீரம் சேசுநாதருக்குக் கிடைத்திருக்காது என்பது ஆச்சரியத்திற்குரிய, ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய உண்மையாக இருக்கிறது!

இதையே அர்ச். சியென்னா பெர்னார்தீன், "திவ்விய கன்னிகை ஜென்மப் பாவத்தின் மிக மிக அற்பமான ஒரு கறையால் தீண்டப்பட்டவர்களாக இருந்திருந்தாலும் கூட, தேவசுதன் அவர்களிடமிருந்து பிறந்திருப்பார் என்றோ, அவர்களுடைய மாம்சத்தையே தமது மாம்சமாகக் கொண்டிருப்பார் என்றும் நாம் நம்பவே இயலாது" என்று கூறுகிறார் (Quadr. s. 49, p. 1).

மேலும் தேவதாய் கன்னிமாமரி, "அருள் நிறைந்தவர்களாக" (தேவ வரப்பிரசாதத்தால் பரிபூரணமாக நிரம்பி) இருக்கிறார்கள் என்று அதிதூதர் கபிரியேல் அறிக்கையிடுகிறார். "இந்த வார்த்தைகளைக் கொண்டு, ஆதிப் பாவத்தால் மனுக்குலத்தின் மீது வெகுண்டெழுந்த முதல் தீர்வையின் கடுஞ்சினத்திலிருந்து தேவகன்னிகை முற்றிலுமாக விலக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் தேவ ஆசீர்வாதத்தின் வரப்பிரசாதத்தால் பூரணமாக நிரப்பப்பட்டிருந்தார்கள் என்று அவர் நமக்கு உணர்த்துகிறார்" என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். பூரணத்துவம் என்பது இனி ஒரு துளி கூட சேர்க்க முடியாத நிலை. மாதா வரப்பிரசாதங்களால் பொங்கி வழிந்து கொண் டிருந்தார்கள் என்பதே இதன் பொருள். ஏனெனில் சர்வேசுரன் தமது சின்ன மகளிடம் வரப்பிர சாதத்திற்கு எதிரான மிக அற்பத் தடையைக் கூட காணாததால், மாமரி அவரது சகல வரப்பிர சாதங்களாலும் செல்வியாக்கப்பட்டார்கள். இவ்வாறு தேவ கன்னிகை தனது மாசற்ற உற்பவத்தின் முதல் கணத்திலேயே சகல தேவ வரப்பிரசாதங்களும் சம்பூரணமாக நிறைந்து வழியும் தெய்வீகப் பாத்திரமாயிருந்தார்கள்.

இதுவும் தவிர, இரட்சகரைப் பெற்று, அமுதூட்டி வளர்க்கும் பொறுப்பை மட்டுமின்றி, கல்வாரியின் மீது அவரைப் பலியிட்டு, அவரோடு சேர்ந்து தானும் பலியாகி, அவரோடு சேர்ந்து பாவப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்படும் பெரும் பொறுப்பையும் பிதாவானவர் தமது திவ்ய மகளிடம் ஒப்படைத்திருந்தார். ஏவாளில் தொடங்கி ஆதாமில் நிறைவு பெற்ற பாவத்திற்கான பரிகாரத்தை இவ்வாறு புதிய ஏவாளான மாமரி தொடங்கி வைக்க, புதிய ஆதாமாகிய அவர்களது திருக்குமாரன் அதை அவர்களோடு சேர்ந்து நிறைவேற்றி முடிப்பது தேவ சித்தமும், சாத்தானின் மீது கடவுள் பெற்ற மகா உன்னத வெற்றியுமாக இருக்கிறது. மாதா ஜென்மப் பாவமின்றி உற்பவித்து, கர்மப் பாவமின்றி ஜீவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். திவ்ய கன்னிகை இவ்வாறு எல்லா விதத்திலும் ஜென்மப் பாவமின்றி உற்பவித்து, பாவ மாசின்றி ஜீவிப்பது, மனித இரட்சணியத்திற்கு இன்றியமையாததாக இருந்தது. ஒரே வார்த்தையில் கூறுவதானால், மரியாயின் அமல உற்பவமின்றி, மனித இரட்சணியமில்லை !!

காட்சியாகமம் 12-ம் அதிகாரத்தில் உள்ள சூரியனை ஆடையாக அணிந்த பெண் மாமரி தான். அவர்கள் கதிரவனை ஆடையாக அணிந்திருப்பதன் பொருள், தேவ கன்னிகையின் ஆத்துமம் தொடக்கம் முதலே எக்கறையும் இன்றி பிரகாசிக்கிறது என்பதன் அடையாளமாகும். இருளும், கறையும் பாவத்தின் விளைவு. சூரியனை ஆடையாக அணிந்த கன்னிகையிடம் இவை இருக்கவே இயலாது என்பதால், இதுவும் தேவகன்னிகையின் அமல உற்பவத்தை எண்பிக்கிறது!