இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வழிபாட்டுக்கும், வாழ்வுக்கும் இடையிலுள்ள பெரும் இடைவெளி

நாம் பூசைக்கு வரும்போது, பல நல்ல எண்ணங்களாலும், உணர்வுகளாலும் நிரப்பப்படுவது இயல்புதான். ஆலயத்தில் இருக்கும் வரை நாம் செய்யும் ஜெபங்களும், அங்கு தரப்படும் வாசகங் களும், போதகமும் நம்மை ஆட்கொள்கின்றன ; பீடத்தில் நமக்காகப் பலியாகும்படி இறங்கி வருகிற தேவ அப்பமானவரை மிகுந்த நேசத்தோடு ஆராதிக்கிறோம்; அவரை நேசிப்பதாக வாக்களிக்கிறோம்; அது வரை செய்து வந்த பாவங்களையெல்லாம் விட்டுவிடுவதாகப் பிரதிக் கினை செய்கிறோம். உணர்ச்சி வேகத்தில் ஒரு வித மனச்சமாதானத்தையும் நாம் உணர்கிறோம்.

எல்லாம் சரிதான். ஆனால் ஆலயத்தை விட்டு வெளியே வந்தவுடன் இதெல்லாம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை அடியோடு காணாமல் போய் விடுகிறதே, இது எப்படி நிகழ்கிறது? அதே பொய் பித்தலாட்டங்கள், அதே அசுத்தப் பாவங்கள், அதே சாதி வெறி, சாதி உணர்வோடு பிறரன்புக் கட்டளையை மீறுதல், அதே கோபம், ஆங்காரம், அதே கடுமையுள்ள வார்த்தைகள், வன்மம், வைராக்கியம் ஆகியவை ஆலயத்திற்கு வெளியே நமக்காகக் காத்திருந்து, பசாசுக்களைப் போல நம்மைப் பிடித்துக்கொள்கின்றனவே, இது எப்படி சாத்தியமாகிறது?

எப்படியெனில், நம்மிடம் உண்மையில்லை, நம் பிரதிக்கினைகள் உண்மையாக, உள்ளபூர்வ மாக செய்யப்படுவதில்லை, உணர்ச்சி வசப்படுதல் மட்டுமே நம் பிரதிக்கினைகளுக்கு அடிப்படையாயிருக்கிறது. மொத்தத்தில், நம்மிடம் உண்மையான தேவசிநேகமில்லை. உண்மையான தேவசிநேகம் உணர்ச்சிகளில் வெளிப்படுவதில்லை. அது பரிகார உணர்வுள்ள நம் ஒவ்வொரு சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வெளிப்படுகிறது. உண்மையான தேவ சிநேகம் கடவுளுக்காகத் துன்பப்படவும், அயலானின் மனந்திரும்புதலுக்காகப் பரிகாரச் செயல் களில் ஈடுபடவும் ஏக்கம் கொள்கிறது. கடவுளுக்கும் மேலாக சாதிப்பற்று, சாதி வெறி என்று வாழ்ந் தால், நாம் முதலாம் கற்பனையை மீறுபவர்கள் ஆவோம்!

தேவசிநேகமின்றிப் பிறர்சிநேகமில்லை, அவ்வாறே பிறர்சிநேகமில்லாத தேவசிநேகமும் இல்லை. உங்கள் சிநேகம் பாசாங்கற்றிருப்பதாக என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார்; நம் ஆண்டவரும், உங்கள் விசுவாசம் சொல்லிலும் பேச்சிலும் இராமல் செயலில் விளங்கும் உண்மையான விசுவாசமாக இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.