ஆமோஸ் ஆகமம் - முகவுரை

ஆமோஸ் என்போர் சிற்சிலரின் தப்பு அபிப்பிராயம்போல் இசாயாஸ் தீர்க்கவசனரின் தந்தையல்லர்; இவர் எருசலேம் நகருக்குப் பத்துக் கல் துலையிட்ட யூதா கோததிரத்திய சிற்றூராகிய தேகுவேயின் ஆயர்களில் ஒருவராவர்; ஆண்டவர் அவரை ஆடு மேய்த்திருக்கையில் தெரிந்தெடுத்து, அவரைத் தீர்க்கத்தரிசியராகத் தம் பிரசை இஸ்றாயேலிடம் அனுப்பினர்.

அவருந் தேவ அருள் பெற்றவராய் யூதா அரசனாகிய ஓசியாஸ் இராசரீகத்திலும், இஸ்றாயேல் அரசனாகிய யோவாஸ் குமாரன் எரோபோவாம் இராசரீகத்திலும் அதாவது: ஓசியாஸ் அரசாட்சியது இருபத்துமூன்றாம் வருடத்தில்தோன்றிய பூகம்பத்துக்கு இரு வருடங்களுக்கு முன் காட்சி கூற ஆரம்பித்தார்.

இவருடைய தீர்க்கவசனங்களில் சீரியர், பிலிஸ்தியர், தீரியர், இதுமேயர், அம்மோ னியத்தார், மோவாபித்தார் முதலிய சாதி சனங்களுக்கு அவர்கள் பாபத்தில் நிலையா யிருத்தல் பற்றி ஆண்டவர் பயங்கரமான தண்டனைகளை விதித்திருக்கின்றனரென இவர் அறிவிப்பதல்லாமல், யூதாவையும், இஸ்றாயேலையும், அவர்களுடைய விக்கிரக ஆராதனை, சுகபோக ஆசை, உலோபித்தனம், கொடுமை புரிதல், அநியா யஞ் செய்தல் முதலிய துர்க்குணத்தைப்பற்றி மேற்படி அந்நியருக்கிருந்த தண்டனையைப் போல் இவர்களுக்கும் விதிக்கப்படும் எனப் பயமுறுத்துகின்றனர்.

இவர் எரோபோவாம் அரசன் கனகக் கன்று விக்கிரகத்தை ஆராதிக்கச் செய்து வந்த பேட்டேல் என்னும் ஊரில் தம் காட்சிகளை ஓதிவந்தனராதலின், அவ்விக்கிரகத்தின் அர்ச்சகனாகிய அமாசியாஸ் என்போன் இது செய்தியை இஸ்றாயேல் அரசனுக்கு அறிக்கையிட்டு, தானே ஆமோஸ் தீர்க்கத்தரிசியரை அங்கிருந்து விரட்டப் பிரயத்தனஞ் செய்தனன்; ஆனால் அவர் அவனைப் பார்த்து: தான் ஆண்டவருடைய ஆணையைச் சிரசாய் வகித்து, இஸ்றாயேல் இராச்சியத்தில் காட்சி கூற வந்ததாகவும், அவன் மனைவி நடுப்பட்டணத்தில் மானபங்கம் அடைவாளென்றும், அவன் புத்திரர் வாளுக்கு இரையாவர் எனவும், அவனோ அந்நிய நாட்டில் மடிவானெனவும், இஸ்றாயேல் தன் தேசம் விட்டு அடிமையாய்க் கூட்டிப்போகப்படுமெனவுஞ் செப்பலுற்றனர்.