இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சாதி வெறி, இன வெறி

பத்து தேவ கற்பனைகளும், "எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது; தன்னைத் தானே நேசிப்பது போலப் பிறரையும் நேசிப்பது' என்னும் இரண்டு கற்பனைகளுக்குள் அடக்கப் படுகின்றன. அதாவது தேவ/பிறர் சிநேகமே கடவுளின் கட்டளைகள் அனைத்திற்கும் அடித்தள மாக இருக்கிறது. அர்ச். அருளப்பர் தமது முதல் நிருபத்தில், "தான் கண்ணால் காண்கிற சகோதரனைச் சிநேகியாதவன் தான் காணாத சர்வேசுரனை எப்படி சிநேகிக்கக் கூடும்?" (1 அரு. 4:20) என்றும், "இவ்வுலக செல்வத்தை உடைய ஒருவன் தன் சகோதரன் இக்கட்டுப் படுகிறதைக் கண்டும், அவனுக்கு இரங்காமல் தன்னுள்ளத்தை மூடிக்கொண்டால், தேவசிநேகம் அவனிடத்தில் நிலைப்பதெப்படி?" (1 அரு.3:17) என்றும் நமக்குப் போதிக்கிறார்.

அப்படியிருக்க, தேவ/பிறர் சிநேகத்தில் வளர வேண்டிய கிறீஸ்தவர்களிடையே சாதிப் பிரிவினை என்ற ஒன்று எப்படி இருக்க முடியும்? நம் நாட்டில் ஜாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்றால், மேலை நாடுகளில் இனவெறி மனிதர்களை அடக்கியாள்கிறது. கிறீஸ்துவை அறியாத அஞ்ஞானிகளுக்குள் பிளவுகள் இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் "திவ்ய அப்பம் ஒன்றாயிருக்க, அந்த ஒரே அப்பத்தைப் பகிர்ந்து உட்கொள்வதால், அநேகராயிருந் தாலும் ஒரே சரீரமாயிருக்கிற" (1கொரி.10:17) கிறீஸ்தவர்களிடையே ஜாதி வெறியும், இனவெறி யும் எப்படிப் புரையோடிப் போயிருக்க முடியும்? கடவுள் மனிதரிடையே வேற்றுமை பாராட்டு வதில்லையே! கடவுளிடத்தில் பாரபட்சமில்லை (உரோ.2:11). அவர் முன், "யூதனென்றும், கிரேக்க னென்றும் வித்தியாசமில்லை. ஏனெனில் எல்லோருக்கும் ஆண்டவர் ஒருவரே" (உரோ. 10:12).

பலருக்கு இன்று ஜாதிவெறியில் உள்ள பிறர்சிநேகக் குறைபாடு ஒரு பாவமென்றே தெரிய வில்லை. ஒரே ஞானஸ்நானத்தில் பங்குபெற்று, ஒரே அப்பத்தைப் பகிர்ந்து, ஒரே வரப்பிரசாதங் களில் பங்குபெறும் நமக்குள் எப்படி ஜாதி வெறி இருக்க முடியும்? "கிறீஸ்துநாதர் பிரிவுப்பட்டிருக் கிறாரோ?" (1கொரி.1:12). ஜாதியின் பெயரால் எத்தனை படுகொலைகள், குடும்பச் சிதைவுகள், பிரிவினைகள்! இவற்றைத் தூண்டுவதில் குறியாயிருக்கும் சாத்தானுக்கு எவ்வளவு பெரிய வெற்றி!

ஒருவேளை சில குறிப்பிட்ட ஜாதிகளுக்கு மோட்சம் செல்ல கடவுள் முன்னுரிமை அளித் திருக்கிறாரோ? இது என்ன மூடத்தனம்? தீர்வைக்காகக் கடவுள் முன் நிற்கும்போது, உங்கள் ஜாதி உங்களை ஆதரிக்க முடியுமா? உண்மையில், அது உங்களுக்கு எதிரணியில் நின்று உன்னைக் குற்றஞ் சாட்டிக் கொண்டிருக்கும் என்பதை உங்களால் காண முடியவில்லையா?

கலப்புத் திருமணங்கள் சமாதானத்தைக் கொண்டு வர முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். என்றாலும் உண்மையில் தேவ வரப்பிரசாதம் மட்டுமே உண்மையான ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியும்.

இவற்றை விசுவாசிகளுக்குப் போதிக்க வேண்டிய குருக்களே சாதிவெறிக்கு அடிமைப் பட்டிருப்பதைக் காண்பது எவ்வளவு வேதனை! மேற்றிராசனங்களில் எத்தனை பிரிவினைகள்! ஒவ்வொரு மேற்றிராசனத்திலும் இரண்டு, மூன்று முக்கிய ஜாதிகள். அவை ஒவ்வொன்றும் மற்றதை நசுக்கி ஒடுக்குவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கணமும் இந்த எண்ணம்தான் இந்த குருக்களின் மனங்களை அடக்கி ஆள்கிறது. தங்கள் மந்தையிலுள்ள ஆன்மாக்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடம் சுத்தமாக இல்லை. கிறீஸ்துவின் போதனைகள், திருச்சபையின் படிப்பினைகளைப் பற்றி இந்தக் குருக்களுக்கு எந்தக் கவலையுமில்லை. இவர்கள் ஆயருக்கு அடங்கியிருப்பதுமில்லை. மேய்ப்பர்கள் இவ்வாறு பிளவுபட்டுக் கிடக்க, ஆடுகள் ஓநாய்களால் மிக எளிதாக வேட்டையாடப்படுகின்றன. பசாசு இந்த மேய்ப்பர்களைக் குறித்து அக்களிப்புக் கொள்கிறது! இதனால் விசுவாசிகள் கத்தோலிக்க வேதத்தை விட்டு வெளியேறுகிறார்கள், அல்லது கிறீஸ்துவுக்குத் தம் வாழ்வில் இடமில்லை என்ற வகையில் பெயரளவு கிறீஸ்தவர்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்ச், போர்த்துக்கீசிய வேதபோதக குருக்கள் ஆத்தும் தாகம் மிக்கவர்களாய் நம் இந்தியாவுக்கு வந்து நமக்கு சத்திய வேதத்தைத் தராமல் போயிருந்தால் நாம் கிறீஸ்தவர்களாகவே இருந்திருக்க மாட்டோம். மேலும், எத்தனை கன்னியர் மடங்களிலும் கூட இந்த ஜாதி வெறியைக் காண முடிகிறது!

கிறீஸ்தவ மக்களும் ஒவ்வொரு மேற்றிராசனத்திலும் சாதியைத் தூக்கிப் பிடித்தபடி வாழ் கிறார்கள். ஒரு கையில் சிலுவையும், மறு கையில் ஜெபமாலையும், இருதயத்தில் தேவ, பிறர் சிநேகமும் கொண்டவர்களாய் இருக்க வேண்டியவர்கள், பிற மதத்தினருக்கு முன்மாதிரிகை யாய் வாழ்ந்து அவர்களையும் கிறீஸ்தவ வேதத்திற்கு மனந்திருப்ப வேண்டியவர்கள் சாதியின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.

சகலரும் இன்றே ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். வெறுமனே, வழக்கமான, நாளைக்கு மறந்து விடுகிற தீர்மானம் அல்ல, நம் ஞான வாழ்வையே மாற்றக் கூடிய உறுதியான பிரதிக்கினை எடுக்க வேண்டும். "நான் சாதி வெறியை பற்றை விட்டு விடுகிறேன்; மனிதர் அனைவரையும் கிறீஸ்துவில் என் சகோதரர்களாக மட்டுமே இனி காண்பேன்; ஒரு கிறீஸ்தவனாக, அவர்களை ஆண்டவர் நேசிப்பது போல நானும் நேசிப்பேன்.” இந்தப் பிரதிக்கினையும், அதைச் செயல்படுத்து வதும் இல்லாமல் நமக்கு மோட்ச பாக்கியம் இல்லை ! கடவுள் தமது வரப்பிரசாதத்தால் நம் குருக் களின் கண்களையும், விசுவாசிகளின் கண்களையும் திறக்கும்படி ஜெபிப்போம். சாதி வெறி, சாதிப் பற்று மறைந்தால் நம் மேற்றிராசனங்களிலும், பங்குகளிலும் கிறீஸ்துவின் சமாதானம் அரசாளும்.