ஐந்து வகை நிந்தைகள் - ஐந்து முதல் சனிக்கிழமைகள்

ஐந்து முதல் சனிக்கிழமைகள் ஏன் என்ற வினாவிற்கு சகோதரி லூசியா தனது ஆன்ம குரு சங். கொன்சால்வஸ் சுவாமிக்கு எழுதிய கடிதத்தில் பதில் கூறுகிறாள்: "இதோ எனக்கு வெளிப் படுத்தப்பட்டவை: "என் மகளே! அதன் காரணம் எளியது. மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராக ஐந்து வகையான பாவங்களும், தூஷணங்களும் கட்டிக் கொள்ளப்படுகின்றன..... என் மகளே, இவையே மரியாயின் மாசற்ற இருதயம் இந்தச் சிறு பரிகார பக்திமுயற்சியை நான் கேட்கும்படி என்னைத் தூண்டியதன் காரணம். இதனால் மாதாவை நோகச் செய்கிற ஆன்மாக்களை மன்னிக்கும்படி என் இரக்கம் தூண்டப்படும். நீயும் எப்போதும் உன் ஜெபங்களாலும், பரித்தியாகங்களாலும் இந்தப் பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களின் மேல் என் இரக்கம் தூண்டப்படும்படி தேடுவாயாக...'' என்று ஆண்டவர் என்னிடம் கூறினார்" (காண்க: Lucia Documentos, page 409 & The Fatima Crusader, Special Edition).


ஐந்து பரிகாரக் கருத்துக்கள்

இதே காட்சியில், முதல் சனி பக்தியின் ஐந்து மாதங்களுக்குரிய ஐந்து பரிகாரக் கருத்துக்களையும் சேசுவே லூஸியாவிடம் அறிவித்தார். அவை: 

1. மாதாவின் அமலோற்பவத்திற்கெதிரான நிந்தைகளுக்குப் பரிகாரம் ; 

2. மாதா கடவுளின் தாய் என்ற சத்தியத்திற்கு எதிரான நிந்தைகளுக்குப் பரிகாரம் ;

3. மாதா நித்திய கன்னிகை என்ற சத்தியத்துக்கு எதிரான நிந்தைகளுக்குப் பரிகாரம் ;

4. மாதா பக்தியை இளம் உள்ளங்களிலிருந்து அகற்றும் துரோகத்துக்குப் பரிகாரம்; 

5. மாதாவின் பக்திப் பொருட்களை அவமதித்து அகற்றும் நிந்தைக்குப் பரிகாரம்.


பாவங்களாகும் நிந்தைகள்!

எப்போதும் ஒருவரைப் பழிப்பதும், நிந்திப்பதும் பிறர்சிநேகத்திற்கு விரோதமான பாவம். இங்கே மாதாவின் தாயன்பு ஐந்து வகைகளில் மீறப்படுகிறது, அலட்சியப்படுத்தப்படுகிறது. அவையே மாதாவுக்கெதிரான பாவங்களாகக் கட்டிக்கொள்ளப்படுகின்றன. இதனையே நமதாண்டவர் சகோதரிலூசியாவுக்கு உணர்த்தினார்.

இதன்படி, தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிந்தைக்குப் பரிகாரம் செய்யும் கருத்தோடு முதல் சனி நிபந்தனைகளாகிய பரிகார நன்மை உட்கொள்ளுதல், பரிகார பாவசங்கீர்த்தனம், 53 மணி ஜெபமாலை சொல்லுதல், தேவ இரகசியங்களை தியானித்தபடி கால்மணி நேரம் மாதாவோடு செலவிடுதல் ஆகியவற்றை அனுசரிப்பதே முதல் சனி பக்தியாகும். இதுவே நரகத்தினின்று ஆன்மாக்களையும், பெரும் அழிவுகளினின்று உலகத்தையும், விசுவாசமறுதலிப்பினின்று திருச்சபையையும் காப்பாற்ற வல்ல பரலோக உபாயமாகத் தரப்பட்டுள்ளது. இதையன்றி நாம் காப்பாற்றப்பட வேறு வழியில்லை!

எனவே மரியாயின் மாசற்ற இருதய பக்தியை அனுசரித்து, ரஷ்ய ஐக்கிய அர்ப்பணத்தையும், அதனால் தொடர்ந்து வரும் திருச்சபையின் உண்மையான மறுமலர்ச்சியையும், உலக சமாதானத் தையும் துரிதப்படுத்த பிரதிக்கினை செய்வோமாக!

இனி வரும் பக்கங்களில் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் ஐவகை நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.