இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கல்வாரிப் பலியின் தொடர்ச்சியாகிய திவ்ய பலிபூசை

கல்வாரிப் பலியுடன் தமது "இரட்சணியக் கடமை" முடிந்து விட்டதாக நம் நேச ஆண்டவர் நினைக்கவில்லை. தம் அன்பு மக்களை "ஆயனில்லா ஆடுகளாக" உலகில் விட்டுச் செல்ல அவர் விரும்பவில்லை. இதோ, உலக முடிவு பரியந்தம் எந்நாளும் நம்மோடு இருக்க அவர் ஏக்கம் கொண்டார். இவ்வாறு, மனித புத்திக்கெட்டாத பேரதிசயமான ஒரு வழியை அவர் கண்டுபிடித் தார். அதுவே திவ்விய பலிபூசை! திருச்சிலுவையின் மீது அவர் தமது தெய்வீகத்தைத் தமது திருப்பாடுகளுக்குள் மறைத்துக் கொண்டார். இப்போதோ, ஒரு சிறு துண்டு அப்பத்தின் சாயலுக் குள் தமது மனுஷீகத்தையே மறைத்துக்கொள்ள அவர் துணிந்து விட்டார்! ஆ ஆழங் காண முடியாத தேவசிநேகமே! இவ்வளவு கீழ்த்தரமான மனிதனுக்காக இவ்வளவு தூரம் தம்மைத் தாழ்த்த எல்லாம் வல்லவரால் எப்படி சாத்தியமாயிற்று?!

'சேசுநாதர் ஒரே முறையில் எக்காலத்திற்குமென தமது இரட்சணியப் பலியை நிறை வேற்றிய பின்னும், இந்த அனுதினப் பலி எதற்காக?' என்ற பதிதத்தனமுள்ள கேள்வி நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. இதற்கான பதில், ஏனெனில் கல்வாரிப் பலியில் சேசுநாதர்சுவாமி தாம் சம்பாதித்த இரட்சணியப் பேறுபலன்களை, அனுதின திவ்ய பலிபூசையில் தமது நேச மக்களுக்குத் தாராளமாகப் பகிர்ந்தளிக்கிறார் என்பதுதான். கல்வாரிப் பலி, ஒரு தந்தை தன் அன்பு மகனுக்காக வங்கிக் கணக்கில் சேர்த்து வைத்த செல்வத்திற்கு ஒப்பானது என்றால், பூசையின் திவ்ய பலி அந்தப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த மகன் உபயோகிக்கும் காசோலை போன்றது.

திவ்ய நற்கருணைப் பேழையில் இருந்தபடி "அவர் நம்மை நேசிக்கிறார், நம் அன்பைப் பெற நம்பியிருக்கிறார், நமக்காகக் காத்திருக்கிறார்" என்கிறார் அர்ச். ஜூலியன் எம்மார்ட். சேசுநாதர் சுவாமி அனுதினமும் திவ்விய பலிபூசையில் நம் பீடங்களின் மீது இறங்கி வராமல், தமது மகிமைக்குத் தகுந்தபடி, வருடத்திற்கு ஒரு முறை, கிறீஸ்துமஸ் திருநாளன்று மட்டும், வத்திக்கானிலுள்ள அர்ச். இராயப்பர் பேராலயத்தில் நடைபெறும் ஒரு பூசையில் இறங்கி வருவதாயிருந்தால், வாழ்வில் ஒரு முறையாவது அந்த மகா உன்னதப் பலியில் பங்குபெற நாம் எவ்வளவு ஏக்கமுள்ளவர்களாக இருப்போம்! ஆனால் இதோ அனுதினமும் நம் தேவாலயங்களில் அவர் நம்மைத் தேடித் தமது பரலோக இல்லத்தை விட்டு இறங்கி வந்தும், தம்மை நேசிக்கிற நல்ல ஆன்மாக்களை அவரால் காண முடிவதில்லையே! எவ்வளவு ஏமாற்றம்! மனிதனைப் பொறுத்த வரை, இது எவ்வளவு பெரிய நன்றியற்றதனம்! கடவுளின் பேரில் எப்பேர்ப்பட்ட அசட்டைத்தனம்!

இத்தனைக்கும் திவ்ய பலிபூசை நமக்கு எப்பேர்ப்பட்ட பொக்கிஷமாக இருக்கிறது! "உலகின் எல்லா நற்செயல்களையும் தராசின் ஒரு தட்டிலும், ஒரே ஒரு பூசையை மறு தட்டிலும் வையுங்கள். அப்போது, ஒரு மலைக்கு முன் அவை சிறு மணற்துகள் போல் இருப்பதைக் காண்பீர்கள்" என்கிறார் அர்ச். மரியவியான்னியார்.

பூசைப் பலியில் மனிதன் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைப் பட்டியலிட எந்த மனித நாவாலும் இயலாது. அதில் "பாவி கடவுளுடன் மீண்டும் ஒன்றிக்கிறான்; நீதிமானோ அதிக நீதியுள்ளவனாகிறான்; பாவங்கள் போக்கப்படுகின்றன, துர்க்குணங்கள் வேரறுக்கப்படுகின்றன; புண்ணியங்களும், பேறுபலனும் அதிகரிக்கின்றன; பசாசின் திட்டங்கள் தவிடுபொடி யாக்கப்படுகின்றன'' என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார். திவ்விய நற்கருணை நாதர் இங்கே நம்மோடு ஒரு சகோதரராகவும், நண்பராகவும், நம் ஆத்துமங்களின் மணவாளராகவும் இருக்கிறார். நித்திய ஜீவியத்திற்கான நம் போஜனமாகவும், நம் நேசமாகவும், நம்மைத் தாங்குபவராகவும் இருக்கும்படியாக, அவர் நமக்குள் பிரவேசிக்க விரும்புகிறார். நம்மைத் தமது ஞான சரீரத்தின் உயிருள்ள பாகமாக ஆக்க அவர் விரும்புகிறார். அந்த ஞான சரீரத்தில் தான் அவர் நம்மை மீட்டு இரட்சிப்பார், நம்மை அன்பின் நித்தியப் பேரானந்த சந்தோஷத்தில் நிலைநிறுத்தும்படியாக, அந்த ஞான சரீரத்திலிருந்துதான் நம்மை அவர் மோட்ச இராச்சியத்திற்குள் கூட்டிச் செல்வார்.

ஆபிரகாம் சோதோம் கொமோராவைக் காப்பாற்றும்படி கடவுளிடம் கெஞ்சி மன்றாடி னார் (ஆதி. 18). மோயீசனும், இஸ்ராயேல் மக்களைக் கடவுள் தமது கடுஞ்சினத்தில் தண்டிக் காதபடி அவர்களுக்காக மன்றாடி, அவர்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தந்தார் (யாத். 32:11-14). அப்படியானால், அனுதினமும், ஒவ்வொரு திவ்ய பலி பூசையிலும் தம் பிதாவுக்குத் தம் திருக்காயங்களைக் காட்டி, தம் திருமரணத்தை நினைவுபடுத்தி, தாம் செய்த பரிகாரச் செயலின் பலனைத் தம் மக்களுக்கு வழங்குமாறு தம் பிதாவை மன்றாடும் தேவ சுதனின் பரிகாரப் பலி எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள பலன் மிக்கதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் !

கிறீஸ்தவன் தன்னை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்தும், தன்னைச் சேர்ந்தவர்களைக் கொடிய நரகத்தினின்றும் காப்பாற்ற விரும்பினால் அவன் தினமும் பூசை கண்டு, நன்மை வாங்கி அதைத் தனக்காகவும், அவர்களுக்காகவும் பாவப் பரிகாரமாகவும், இரட்சணிய மன்றாட்டாகவும் பிதாவுக்கு ஒப்புக்கொடுப்பானாக. ஏனெனில் பூசையை விட மேலான பாவப் பரிகாரச் செயல் எதுவுமில்லை. எத்தகைய பாவ நிலையிலிருந்தும் மனிதனை மனந்திருப்பக் கூடிய அற்புத தெய்வீக வல்லமையைக் கொண்ட காரியம் திவ்விய பலிபூசைக்கு மேலாக வேறு எதுவுமில்லை.

திவ்ய பலிபூசையில், பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தின் மீது நாம் கொண்டுள்ள சிநேகத்தில், நம் சர்வேசுர னுடையவும், சகல குருக்களுடையவும் தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரியின் நினைவும், நமக்கு அனுதினமும் நற்கருணை நாதரைத் தருகிற குருக்களின் நினைவும் கலந்திருக்க வேண்டும்; ஏனெனில் சேசுநாதரும், கன்னி மாமரியும், சுவிசேஷகரான அர்ச். அருளப்பரும் கல்வாரியின் மீது எப்படி பிரிக்கப்பட முடியாதவர் களாக இணைந்திருந்தார்களோ, எப்படி சேசுநாதரின் பலியில் மாதாவும், அருளப்பரும் பங்குபெற்றார்களோ, அப்படியே திவ்விய நற்கருணை நாதரும், நம் பரலோக அன்னையும், குருவானவரும் பிரிக்கப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். தேவ அன்னை யின் அருகில் இருந்தபடியும், அவர்களுடைய அன்பை சேசுவுக்கு ஒப்புக்கொடுத்தபடியும் பூசை காண்பது உன்னதமான அன்பின் வழியாக இருக்கிறது. இதை விட சேசுவை அதிகமாக மகிழ்விப்பது எதுவுமில்லை!