இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவம் தண்டிக்கப்படும் விதம்: பழைய ஏற்பாடு

கடவுள் பாவத்தை எவ்வளவு தூரம் வெறுக்கிறார் என்பதை விளக்கும் பகுதிகள் பழைய ஏற்பாடு முழுவதிலும் காணப்படுகின்றன. 

பெருவெள்ளம்

மனுக்குலத்தின் பாவம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தபோது, சர்வேசுரன் நோவேயையும் அவரது குடும்பத்தினரையும் தவிர மற்ற எல்லோரையும் பெருவெள்ளத்தால் அழித்தார். ஏனெனில் மனிதர்கள் கடவுளின் அளவற்ற அன்பைப் புரிந்து கொள்ளவில்லை. தேவசிநேகத்தை விட தங்கள் பாவங்களிலேயே அவர்கள் இன்பத்தைத் தேடினார்கள். அவர்களில் பாவத்திற்காக மனம் வருந்தியவனும், பாவத்திற்காகப் பரிகாரம் செய்தவனும் ஒருவனும் இருக்கவில்லை . 

சோதோம், கொமோரா

இங்கும் லோத்தின் குடும்பத்தாரைத் தவிர இயற் கைக்கு மாறான அசுத்தப் பாவங்கள் செய்தவர்களைத் தண்டிக்கும்படி சர்வேசுரன் அக்கினியையும், கந்தகத் தையும் மழையாகப் பொழிந்து இந்தப் பட்டணங்களை அழித்தொழித்தார். இங்கும், ஆபிரகாம் கேட்டுக் கொண்டது போல, கடவுளை நேசித்தவர்களும், தங்கள் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டவர்களும், கடவுளுக்குப் பிரதியன்பு செலுத்தும் வகையில் பாவப் பரிகாரம் செய்தவர்களுமான பத்துப் பேர் கூட இருக்கவில்லை! மனிதனுக்காக அனைத்தையும் செய்கிற ஆண்டவரை மனிதன் நேசிக்கவில்லை!

"பாவிகளாயிருக்கிற நமக்குக் கடவுள் காட்டுகிற அளவற்ற நன்மைத்தனம், நாம் இன்னும் நன்றாக அவரை நேசிக்கவும், அவருக்கு ஊழியம் செய்யவும் இடைவிடாமல் நம்மைத் தூண்ட வேண்டும்; அவர் நல்லவராக இருப்பதால், அவரைப் பிரியப்படுத்த நாம் கடமைப்பட்டிருக் கிறோம். ஆனால் அதற்குப் பதிலாக, அந்த நன்மைத்தனத்தை, அவருடைய அந்தப் பொறுமை யுள்ள அன்பை, பாவம் செய்வதற்கான ஒரு சாக்குப்போக்காக நாம் மாற்றிக் கொள்கிறோம். இது நிச்சயமாக இன்னும் மோசமான ஒரு தண்டனைத் தீர்ப்புக்கே வழிவகுப்பதாக இருக்கும்" என்று அர்ச். ஜெனோவா கத்தரீனம்மாள் சொல்வதை நாம் சிந்திக்க வேண்டும். பரிகாரத்தின் மூலமாக நன்மைத்தனமே உருவானவரை நேசிப்பது என்னும் உயர்ந்த கருத்து இதில் அடங்கியுள்ளது.

மேலும் ஒரே மொழி பேசும் ஒரே குடும்பமாயிருந்த மனிதர்கள் பல மொழி பேசுபவர்களாய் உலகமெங்கும் சிதறிப் போனதும் (ஆதி. 12:8, 9), இஸ்ராயேல் மக்கள் நானூறு ஆண்டளவாக எகிப்திற்கு அடிமைப்பட்டிருந்ததும் (யாத்திராகமம்), வனாந்தரத்தில் பொற்கன்றுக்குட்டியை ஆராதித்து, ஒரே நாளில் லேவியின் புத்திரரின் வாளுக்கு 23,000 பேர் இரையானதும் (யாத். 32:28), வாக்களிக்கப்பட்ட நாடு இஸ்ராயேலருக்குச் சொந்தமாகும்படி பல மக்க ளினங்கள் அழிக்கப்பட்டதும், இஸ்ராயேல் மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப் பட்டதும், இன்னும் ஏராளமான அழிவுகளும் ஏற்படக் காரணமாயிருந்தது மனிதர்களின் பாவமும், துன்பங்களைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கிருந்த வெறுப்புணர்வுமே.

மனிதர்களின் பாவம் கடவுளால் இந்த அளவுக்கு வெறுக்கப்படுவதன் காரணமென்ன? ஏனெனில் அவர் தந்தைக்குரிய முறையில் அளவற்ற விதமாக மனிதர்களை நேசிக்கிறார்; பதிலுக்கு பிள்ளைகளுக்குரிய முறையில் அவரை நேசிப்பது மனிதர்களின் கடமை. அளவற்ற விதமாய்த் துன்பத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் மனிதன் மீது தாம் கொண்டிருக்கும் அன்பைக் கடவுளும் மனிதனுமானவர் நிரூபித்தார். பதிலுக்கு அவர் கேட்பதெல்லாம் நம் நேசம் மட்டுமே. ஆனால் மனிதனிடமிருந்து அவர் பெறுவதெல்லாம் நன்றியற்றதனமும், கேலி பரிகாசமும், நிந்தை அவமானங்களுமே! “மனிதர்களை அளவற்ற விதமாய் நேசிக்கிற என் இருதயத்தைப் பார். பதிலுக்கு அது பெற்றுக்கொள்வதெல்லாம் நன்றியற்றதனமும், அலட்சியமுமே" என்று ஆண்டவர் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அர்ச். மார்கரீத் மரியம்மாளிடம் முறையிடுகிறார். துன்பங்கள் நிறைந்த தவ, பரித்தியாக முயற்சிகளைக் கொண்டு நம்முடையவும், பிறருடையவும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதைத் தவிர வேறு எந்த முறையிலும் கடவுளை நேசிக்கவோ, அவருக்கு ஆறுதல் தரவோ நம்மால் ஒருபோதும் இயலாது.

துன்பத்தை மனமுவந்து ஏற்பதன் பலன் : பழைய ஏற்பாட்டு சூசை

மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படும் துன்பங்கள் ஆத்துமத்தில் விளைவிக்கும் நற்பலன்களும், பெற்றுத் தரும் வரப்பிரசாதங்களும், பேறுபலன்களும் அளவிட முடியாதவை. இதற்கு பழைய ஏற்பாட்டின் யாக்கோ பின் மகனாகிய சூசை ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். சொந்த சகோதரர்களால் அவர் வெறுக்கப் பட்டார்; பாழுங்கிணற்றில் உயிரோடு வீசப்பட்டார்; அதன்பின் அந்நியருக்கு அடிமையாக விற்கப்பட்டார்; எகிப்தில் தன் எஜமானியின் இச்சைக்கு இணங்க மறுத்து, தன் மாசற்றதனத்தைக் காத்துக்கொண்டதற்காக அவர் சிறையில் தள்ளப்பட்டார். பல மாதங்களாக அவர் அந்நிய நாட்டில் அனாதையாகச் சிறைப் பட்டிருந்தார். என்றாலும் இவை அனைத்தையும் ஆண்டவரின் திருக்கரங்களிலிருந்து வந்தவையாக அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

இதனால் அவருக்கு வந்த பலனைப் பாருங்கள்! அடிமையாக இருந்தவர் அரசனுக்கு இணையான ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார்; மனிதர்களால் காரணமின்றித் தண்டிக்கப்பட்டவர் ஒரு கொடிய பஞ்சத்திலிருந்து அவர்களைக் காப்பவராக உயர்த்தப்பட்டார்! "அவருடைய உத்தரவின்றி எகிப்தில் எவனும் கையையோ காலையோ அசைக்கலாகாது" என்று அரசனே உத்தரவிடும் அளவுக்கு அவர் மகிமைப்படுத்தப்பட்டார். அந்த உயர்ந்த நிலையிலும், அவர் நம் இரட்சகரைப் போல, தம்மைத் துன்புறுத்தியவர்களை நேசித்தார்; அரச மரியாதையை அவர்களுக்குப் பெற்றுத் தந்தார். ஆம்! சுய நேசம் கலக்காத துன்பம் இவ்வுலகிலும் கூட மகிமையைக் கொண்டு வருகிறது! காரணம், அது நம் ஆண்டவருக்கு மிக அதிக இன்பத்தையும், ஆறுதலையும் தருகிறது.