இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவப் பரிகாரம் விளைவிக்கும் பிற நன்மைகள்!

தேவசம்பந்தமான புண்ணியங்களில் வளர்ச்சி

விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் ஆகியவை தேவ சம்பந்தமான புண்ணியங்கள் என்பதை நாம் அறிவோம். ஞானஸ்நானத்தில் சர்வேசுர னால் இலவசமாக வழங்கப்படும் இந்தப் புண்ணியங்கள் பாவத்தால் அழிக்கப்படக் கூடியவையாக இருக்கும் அதே சமயம், பரிசுத்த ஜீவியத் தாலும், குறிப்பாக பரிசுத்த தவ ஜீவியத்தாலும் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இவை நம் ஆன்மாக்களில் வளர்ச்சி பெறுகின்றன. 

தேவ விசுவாசம்

தவ வாழ்வு நடத்துபவனுக்கு விசுவசிப்பது எளிதாக இருக்கிறது. ஏனெனில் தன் சிலுவையை அன்போடும், அமைந்த மனதோடும் சுமந்து கொண்டு ஆண்டவரைப் பின்செல்பவன், அவரால் முத்தமிடப்படும் அளவுக்கு அவரை நெருங்கிச் செல்கிறான். அவரது தெய்வீக ஒளியால் மூடப் படுகிறான். அந்த ஒளியில் முன்பு தான் விசுவாசத்தால் மட்டுமே அறிந்திருந்த தெய்வீகக் காரியங் களை மென்மேலும் அதிகத் தெளிவாகக் காண முற்படுகிறான். தம்மை நேசித்து, தம் நிமித்த மாகப் பரிகாரச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடவுள் அதிகமதிகமாகத் தம்மை வெளிப்படுத்து கிறார். உலக மனிதர்களுக்கு இருளாகவும், சாதாரண விசுவாசிகளுக்கு விசுவாசத்தின் பரம் இரகசியங்களாகவும் இருக்கும் தேவ காரியங்கள் தவ, பரிகார வாழ்வு வாழ்பவனுக்கு அதிகத் தெளிவாகத் தோன்றுகின்றன. 

தேவ நம்பிக்கை

அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுவதாவது: "துன்பங்களின் மத்தியில் கடவுளில் தன் முழு நம்பிக் கையையும் வைப்பவனைக் கடவுள் அன்போடு கண்காணிக்கிறார், ஒவ்வொரு ஆபத்தில் இருந்தும் அவனைக் காக்கிறார். தமது பாதுகாப்பில் இளைப்பாறும் ஆன்மாக்கள் மீது கடவுள் கொண் டுள்ள சிநேகம் அளவற்றதாக இருக்கிறது. நம்மை நம்பாதிருப்பதும், கடவுளில் நம்பிக்கை வைப்பதும் தராசின் இரு தட்டுகளைப் போன்றவை. ஒன்று உயரும் போது மற்றது தானாகவே தாழ்கிறது.. நம் சொந்த பலத்தில் நாம் நம்பிக்கை வைக்காதபோது, நம் நம்பிக்கை கடவுளையே தனது மைய மாகக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்." "அவன் நமது பேரிலே நம்பிக்கை வைத்ததால் நாம் அவனைக் காப்பாற்றுவோம்” என்கிறார் ஆண்டவர் (சங்.90:13)

கிறீஸ்துவைப் பின்செல்லும் ஆன்மா ஒருபோதும் மோட்ச பாதையை விட்டு விலக முடியாது. எனவே உண்மையான தவ, பரிகார வாழ்வு ஆன்மாவின் தேவ நம்பிக்கையை அளவற்ற விதமாய் அதிகரிக்கிறது என்பதே உண்மை. துன்பங்களும் வேதனைகளும் மெய்யாகவே மோட்சப் பேரின்பத்தைப் பற்றிய நம் உறுதிப்பாடாக இருக்கின்றன. 

தேவசிநேகம்

"தேவசிநேகத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதவன் கடவுளின் வரப்பிரசாதத்தில் நிலைத் திருப்பது மிகவும் அரிது, ஏனெனில் தண்டனை பற்றிய பயத்தின் வழியாக மட்டும் பாவத்தை விலக்குவது ஏறக்குறைய இயலாத காரியம்" என்று அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் கூறுகிறார். பாவத்தை விலக்குவதற்கான மிகச்சிறந்த வழி தேவசிநேகத்தைச் சம்பாதித்துக் கொள்வது ஆகும். இதற்கு, நம் அன்றாடத் துன்பங்களைப் பரிகாரமாக ஏற்றுக்கொள்வதை விட மேலான வழி எதுவுமில்லை. சிலுவையை அன்போடு சுமக்கும் ஆன்மா கிறீஸ்துவின் பாடுகளில் பங்குபெறுவதன் காரணமாக, அவரது தெய்வீக சாயலைப் பெற்றுக்கொள்கிறது. இதன் காரணமாக, சேசுவின் சாயலை அதனிடம் காணும் பிதா அதை அதிகமாக நேசிக்கிறார். அந்த ஆத்துமமும் அவரை அதிகமதிகமாக நேசிக்கும் வரத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.

"வேதனையும், துன்பமும் வரும்போது, அவை சேசுவின் நேச முத்தங்கள் என்று நினைத்துக் கொள்; அவர் உன்னை முத்தமிடும் அளவுக்கு, நீ அவரை மிக நெருங்கி வந்திருக்கிறாய் என்பதற் கான அடையாளமே உன் துன்பங்கள்'' என்று அர்ச். அவிலா தெரேசம்மாள் கூறுகிறாள். உண்மையில் கிறீஸ்தவன் தம் மீதுள்ள நேசத்திற்காகத் துன்பத்தை ஏற்றுக்கொள்வதையும் அமைந்த மனதோடு அதைத் தாங்கிக்கொள்வதையும், இன்னும் மேலாக, துன்பத்தில் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதையும் காண்பதை விட கிறீஸ்துநாதருக்குப் பெரிதான இன்பம் என்ன இருக்க முடியும்?

சுயநேசம் இன்றி துன்பங்களை ஏற்றுக்கொள்வதும், நம்முடையவும் பிறருடையவும் பாவங் களுக்குப் பரிகாரமாக அவற்றை ஒப்புக்கொடுப்பதுமே உண்மையான தேவசிநேகம் ஆகும். "என் குழந்தாய், துன்புறுவதன் மூலமாகத்தான் நீ மிக அதிகமாக என்னை மகிழ்விக்கிறாய். என் மகளே, உன் சரீரத்துன்பங்களிலும், மனத்துன்பங்களிலும், சிருஷ்டிகள் உன் மீது பரிதாபப்பட வேண்டும் என்று விரும்பாதே. உன் துன்பத்தின் நறுமணம் மாசற்றதாகவும், (சுய நேசத்தால்) கறைபடாத தாகவும் இருப்பதை நான் விரும்புகிறேன்... நீ எவ்வளவு அதிகமாகத் துன்பத்தை நேசிப்பாயோ, அவ்வளவுக்கு என் மீது உனக்குள்ள நேசம் மாசற்றதாக இருக்கும்” என்று ஆண்டவர் அர்ச். மரிய ஃபாஸ்டினாவிடம் கூறியதாக அவள் எழுதுகிறாள். 

சேசுகிறீஸ்துநாதர் தரும் சமாதானம்

"சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறேன்; என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன்" என்று தம் அப்போஸ்தலர்களிடம் கூறும் ஆண்டவர், தொடர்ந்து, "உலகம் கொடுக் கிறதைப்போல நான் (அதைக்) கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், அஞ்சா மலும் இருப்பதாக" என்றும் கூறுவதைக் கவனியுங்கள் (அரு. 14:27). உலகம் துன்பங்களை எதிர் கொள்ளும் போது, கலக்கமும் அச்சமும் கொள்கிறது; அவற்றை எதிர்த்துப் போராடுகிறது. அவற் றிலிருந்து விடுபட எல்லா வகையிலும் முயல்கிறது.

ஆனால் சேசுநாதர் தரும் சமாதானமோ, துன்பங்களின் வழியாகவே தரப்படுகிறது! ஏனெனில், துன்பங்களை அமைந்த மனதோடு ஆண்டவரின் அன்பின் நிமித்தம் ஏற்றுக்கொள்ளும் ஆன்மா, மோட்சப் பாதையில் உறுதியோடு முன்னேறிச் செல்கிறது. நித்தியப் பேரின்பத்தை இழந்து விடும் அச்சமோ, கலக்கமோ அதற்கு இல்லை . எனவே அது உலகம் தர முடியாத, ஆண்டவர் மட்டுமே தருகிற சமாதானத்தில் மூழ்கித் திளைக்கிறது, உலகமோ, சரீரமோ, பசாசோ அந்த சமாதானத்தை ஆத்துமத்திடமிருந்து பறித்துக் கொள்ளவே இயலாது. 

சகல புண்ணியங்களிலும் வளர்ச்சியடைதல்

துன்பப்படும் ஆன்மா கிறீஸ்துவைப் போல் ஆகிறது என்பதன் பொருள், அது கிறீஸ்துநாதரின் சகல புண்ணியங்களிலும் வளர்ச்சியடைகிறது என்பதுதான். அவர் சர்வேசுரனாயிருந்தும் மனிதர்களுக்குக் கீழ்ப்படிந்து, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குத் தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும் உள்ளவராயிருந்தார்; தம்மைக் கொலைப்படுத்துவோருக்காகப் பிதாவிடம் மன்றாடும் அளவுக்கு சாந்தமும், அளவற்ற பொறுமையும் உள்ளவராயிருந்தார்; அவரது வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவரது தெய்வீகப் புண்ணியங்களின் சாட்சியங்களாக விளங்கின. தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்லும் ஆன்மா, அவரில் வளர் கிறது, அவரது புண்ணியங்களில் வளர்ச்சியடைகிறது, அந்த ஆன்மா அவராகவே மாறுகிறது. 

பிறரை மனந்திருப்புவதில் வல்லமை

துன்பங்களின் மூலம் கிறீஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்ளும் ஆன்மா, ஆத்தும் தாகத்தோடு வெளியிடும் ஒரு பெருமூச்சும் கூட, ஆன்மாக்களை மனந்திருப்ப வல்லதாக இருக்கிறது. அது கடவுளை வலிமையோடு ஈர்க்கிற உன்னத ஜெபமாக இருக்கிறது. தவத்தோடும், உபவாசத்தோடும் இணைந்த ஜெபத்தால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.

இன்று அநேகர் கடவுளால் தங்கள் பொறுப்பில் விடப்பட்டுள்ள ஆன்மாக்கள் நரகப் பாதையில் செல்வதைக் காண நேரும்போது பதைபதைக்கிறார்கள்; கடவுளுக்குத் தாங்கள் கடுமையான கணக்குக் கொடுப்பது பற்றி நினைத்து நடுங்குகிறார்கள். இத்தகையவர்களுக்கு தவச் செயல்களோடு கூடிய ஜெபம் மிகப் பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. மிகக் கொடிய பாவிகளையும் கூட அது மனந்திருப்புகிறது. எனவே வார்த்தையின் மூலமும், தங்கள் உத்தம மாதிரிகையின் மூலமும் கூட தங்களால் திருத்த முடியாதவர்களை மனந்திருப்ப, அவர்கள் தப்சோடு கூடிய ஜெபத்தில் தஞ்சமடைவார்களாக. ஏனெனில் கிறீஸ்துநாதர் இவர்களுக்காக ஜெபிக்கிறார். "எவ்வளவுதான் பலவீனமுள்ளவனாக இருந்தாலும், எவனுக்கும் திருச்சிலுவை யின் வெற்றியில் ஒரு பங்கு ஒருபோதும் மறுக்கப்படுவதில்லை. எந்த மனிதனும் கிறீஸ்துவின் ஜெபத்தின் உதவியைப் பெற முடியாதபடி அவரிடமிருந்து தொலைவாக இல்லை. அவருடைய ஜெபம் அவருக்கு எதிராகக் கடுங்கோபத்தை வெளிப்படுத்திய மக்கள் கூட்டங்களுக்கும் கூட நன்மை செய்தது. அப்படியிருக்க, (தவச் செயல்களின் வழியாக) உத்தம மனஸ்தாபத்தோடு அவரிடம் திரும்புபவர்களுக்கு அது இன்னும் எவ்வளவு அதிகமாக நன்மை செய்யும்!" என்று அர்ச். பெரிய சிங்கராயர் கூறுகிறார். இந்த மனஸ்தாபத்தை நம்மைச் சேர்ந்தவர்களுக்குப் பெற்றுத் தர நம் தவச் செயல்கள் வல்லமையுள்ளவையாக இருக்கின்றன.