யோவேல் ஆகமம் - முகவுரை

யோவேல் எனுந் தீர்க்கவசனர், காத், ரூபன் கோத்திரத் திலகனான பத்துவேலின் புத்திரராவர்; ஓசே எனுந் தீர்க்கத்தரிசியரோடு சககால வாசியாய் ஒரு சதாப்தம் அளவாகக் காட்சியோதியுள்ளார் என்பது பொது அபிப்பிராயமாகும்.

இவர் யூதா பெஞ்சமீன் கோத்திரத்தவர்களைக் குறித்து மாத்திரந் தரிசன வாக்கியங்கள் செப்பலுற்றது நிமித்தம், ஏனைய பத்துக் கோத்திரங்களுஞ் சிதறுண்ட காலத்துக்குப் பிந்தியதாகிய, எசேக்கியாஸ் காலத்தில்தான் இவர் தோன்றியிருத்தல் வேண்டுமெனச் சிலர் அபிப்பிராயப்பட்டனர்; ஆயினும் ஓசியாஸ் அரசாட்சியில் சீவித்து வந்த தீர்க்கத்தரிசியாகிய ஆமோஸ் என்போருக்கு முந்தியவராகத் தோன்று கின்றனர்; எனெனில், இவர் வானம் வறண்டு பெரியதோர் பஞ்சந் தேசத்தை முழுதும் வாட்டுமென முன் கூறியிருக்கின்றனர்; ஆமோஸ் தீர்க்கத்தரிசியர் அதே சம்பவத்தைக் குறித்து, அந்தத் தேவதண்டனை பிரசைகளை ஆண்டவரிடம் மனந்திரும்பச் செய்யவில்லையென முறையிடுகின்றனர்; ஆதலின் யோவேல் என்போர் ஆமோசுக்கு முந்தினவரே என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கின்றது.

அப்பஞ்சம் ஓசியாஸ் அரசனின் இருபத்தோராம் வருடத்தில் தோன்றியது; அப்போது வான வறட்சி ஒருபுறமும், வெட்டுக்கிளிகள், கம்பளிப்பூச்சி, பயிர் நோய் முதலியவை மறுபுறமுமாய்த் தேசத்தை வாட்ட பயிர் பச்சையின்றி நிலங்கள் வறள, பூசைப் பலிக்கும் அப்பம், இரசம் கிடைப்பது அரிதாயின.

பின்னுந் தீர்க்கத்தரிசியர் யூதா நாட்டில் பிரதேசத்திய சனத்திரள் ஒன்றுகூடு மெனவும், அதினால் நாட்டுக்கு உண்டாகுந் தின்மைகள் எண்ணிறந்தவைகளென வும், அவைகளை நிவிர்த்திக்க மெய்யான தவமிழைத்தல்பாலதெனவுங் கூறுகின்றனர்; அவர் குறிப்பிடுஞ் சனத்திரள் அசீரியர் அல்லது கல்தேயர் சேனையே எனச் சிற்சிலர் அபிப்பிராயமும், போந்தெக்ஸனுக்கு அப்புறத்திய சாதிய சீத் சாதியாரே யூதா நாட்டை அழிக்க ஓசியாஸ் இராசரீகத்து இருபத்தாறாம் வருடத்தில் வந்தவர்கள் என ஏனையோர் அபிப்பிராயமுமாயிருக்கின்றது.

யோவேல் தீர்க்கதரிசியர் பயங்கரத்துக்குரிய தீர்க்கவசனங்களைப் புகன்றாலும் மன ஆறுதலான விசேஷங்களையும் அறிவிக்கின்றனர்; அப்படியே கடவுளர் தம் பிரசைக்குப் பொறுதி தருவரென்றும், அதனிடத்தினின்று சத்துராதிகளை விலக்கு வாரென்றும், தம் ஆவியை அதின் பிள்ளைகள் பேரிலும், விருத்தர்பேரிலும் பிரவாகிக்கச் செய்வர் எனவும், அதுக்குத் துன்புறுத்திவந்த சனங்களை அவர் தீர்மானிப்பர் எனவுங் கூறி, இச்சம்பவ உருவலங்காரத்தில் வார்த்தையானவரின் மனுஷாவதாரத்தையும், இஸ்பிரீத்து சாந்துவின் அவரோபணத்தையும், சுவிசேஷ போதகத்தையும், நடுத்தீர்வையையுங் குறிப்பிடுகின்றனர்.